பாகுலேயன் பிள்ளையும் நானும் அஜிதனும்
“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்”
இன்று இக்குறளை படிக்க நேர்ந்தது. உடன் உங்கள் நியாபகம் வந்தது. இப்பொழுது தங்கள் தந்தை இருந்திருந்தால், தன்னுடைய குழந்தைகளில் உங்களைப் பற்றி இவ்வாறான எண்ணம் இருந்திருக்குமா? இல்லை எனில் இக்குறளின் உண்மை நோக்கம் என்ன?
எனக்கு மிகத் தெளிவாக, கோர்வையாக இக்கேள்விக்கான நோக்கத்தை சொல்லத் தெரியவில்லை என்றாலும் கேட்க தோன்றிற்று. தங்களின் விளக்கத்தை எதிர்நோக்கி இருக்கிறேன்
இப்படிக்கு,
வினோத்
அன்புள்ள வினோத்
இது ஒரு சிக்கலான வினா. தந்தை– மகன் உறவு நாம் நினைப்பதைவிட அடர்த்தியான உட்சுழிப்புகள் கொண்ட ஒன்று. ஏனென்றால் அது இரண்டு தலைமுறைகள் சந்தித்துக்கொள்ளும் முனை. இரண்டு காலகட்டங்கள் சந்தித்துக்கொள்வதுதான் அது. குரு – சீடன் உறவு ஒன்றே அதற்கு இணையான இன்னொரு கூர்முனை. அங்கே உரையாடல் – மோதல் இரண்டும் சம அளவே உள்ளன.
குரு–சீடன் உறவில் நடுவே இருப்பது அறிவு அல்லது ஞானம். ஆகவே அந்த உறவு இனிதாகவே நிகழக்கூடும். அந்த உறவைப்புரிந்துகொள்ள அந்த ஞானமே உதவக்கூடும். தந்தை மகன் உறவில் நடுவே இருப்பது உலகியல். சூழ்ந்திருப்பதும் உலகியல். ஆகவே அங்கே பல விஷயங்கள் புரிந்துகொள்ளப்படுவதில்லை. பலசமயம் மிகப்பிந்தியே பிடிகிடைக்கின்றன.
என் அப்பா என்னை நினைத்து மிக அஞ்சினார். நான் படிப்பில் மேலே சென்று பெரிய வேலையில் அமரவேண்டும் என விரும்பினார். நான் ஊர்சுற்றினேன், அகமும் புறமும் அலைந்தேன். அதற்காக அவர் என்னிடம் மிகக்கடுமையாக நடந்துகொண்டார். அவரை நான் மேலும் வெறியுடன் மீறினேன். என் கனவு எழுத்தாளர் ஆகவேண்டும் என்பது. அதற்கு அவரே முதன்மைத்தடை என அன்று உணர்ந்தேன்.
என் அப்பா நல்லவேளையாக எனக்கொரு வேலை கிடைத்தபின் மறைந்தார். எனக்கு அரசுவேலை அமைந்தபோது ‘நல்லவேளை, இனி அவன் தெருவோரம் கிடக்கமாட்டான்’ என்றார். பின் தொடரும் நிழலின் குரல் நாவலின் வீரபத்ர பிள்ளை என்னும் எழுத்தாளர் அப்பாவின் நண்பர், அவர் தொடுவட்டி சந்தையில் அனாதையாக இறந்து கிடந்தபோது அடக்கம் செய்தவர்களில் அப்பாவும் ஒருவர். அப்பா என்னை எண்ணும்போதெல்லாம் அந்த பதற்றத்தையே அடைந்திருந்தார்.
ஆனால் மிகப்பிந்தி என் அப்பாவுக்கு என் எழுத்துக்கள் மேல் மதிப்பிருந்தது என என் அப்பாவின் நண்பர்களிடமிருந்து அறிந்தேன். என்னுடைய கதைகள் ஆனந்தவிகடன் போன்ற இதழ்களில் வெளிவந்தால் பல பிரதிகள் வாங்கி தன் நண்பர்களின் வீடுகளில் ‘கைமறதியாக’ விட்டுச்செல்வது அவர் வழக்கம். அவற்றைப்பற்றி அவர்கள் பேசினால் அக்கறையாக கேட்கமாட்டார், உதாசீனத்தை நடிப்பார். அவர்களுக்கும் அந்த விளையாட்டு தெரியும்.
எனக்கு என் அப்பா நான் எழுதிய எந்தக் கதையையும் வாசிக்கவே இல்லை என்னும் மனக்குறை அவர் மறைந்து எட்டாண்டுகள் வரை இருந்தது. அம்மா என் கதை வெளிவந்த இதழ்களை அவர் அருகே கொண்டு வைத்தால் எடுத்து புரட்ட மாட்டார். திரும்பியே பார்க்கமாட்டார். நாட்கணக்கில் அந்த இதழ் அங்கே இருக்கும். ஓரிரு நாளிலேயே உதவாக்கரையாக அலைவதைப்பற்றிய வசையும் எனக்குக் கிடைக்கும். பின்னர் நானே என் எழுத்துக்களை ஒளித்து வைக்க ஆரம்பித்தேன்.
அன்றெல்லாம் நான் வேறு பெயர்களில் எழுதுவது மிகுதி. என் அம்மாவுக்குக் கூட அவை நான் எழுதியவை என தெரியாது. என் அப்பாவின் நண்பர் குஞ்சுவீட்டு தம்பி என் கதை ஒன்றைப்பற்றி பேசினார். அது இளம்பாரதி என்ற பெயரில் நான் எழுதியது. அதை நான் சொன்னதும் தம்பி சிரித்தபடி ‘அவருக்கு நீ நாலு வரி எழுதினாலே உன் மொழிநடை தெரியும்’ என்றார். அந்த அளவுக்கு அம்மா என் எழுத்துக்களை கூர்ந்து படித்திருக்கவில்லையோ என இன்று தோன்றுகிறது.
என் அப்பாவை நான் முழுமையாகப் புரிந்துகொள்ள நீண்டநாட்களாகியது. அப்பா அபாரமான வாசிப்புச்சுவை கொண்டவர். அவர் நவீன இலக்கியம் வாசிப்பது அரிது, ஆனால் செவ்விலக்கியம் பற்றி அவர் சொன்ன எல்லா கருத்துக்களும் சுவைமிக்கவர் சொல்பவை. அவருக்கு கதகளி பிடிக்கும். இசையார்வம் உண்டு. யானைப்பைத்தியம். மாடுகள் மேல் பேரார்வம் கொண்டவர். நண்பர்களுக்கு இனிய உரையாடல்காரர். ஒருவகையான அப்பாவி, ஆனால் அதை ஒருவகை கெத்தாக வெளிப்படுத்தியவர்.
அப்பாவின் இடத்தில் இன்றிருப்பவர் என் அண்ணா. என் அப்பாவின் எல்லா இயல்புகளும் என் அண்ணாவுக்கு உண்டு. என் அண்ணா அபாரமான நகைச்சுவை கொண்டவர் என்பதை அவரிடம் அணுக்கமாக பழகியவர்கள் மட்டுமே அறிவார்கள். அவருடைய நண்பர்கள் அனைவருமே வாழ்நாள் தோழமை கொண்டவர்கள், அதற்குக் காரணம் அந்த நகைச்சுவை. அவர் வாசிப்பதில்லை, என் படைப்புகள் எதையும் வாசித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் வாசித்தால் அவருக்கு புரியும், அந்த நுண்ணுணர்வு அவருக்கு உண்டு.
என் அப்பாவிடமிருந்து அண்ணா வழியாக வந்த அந்த நுண்ணுணர்வு என் அண்ணா மகன் சரத்துக்கு வந்துள்ளது. அவன் பட்டப்படிப்பை முடிக்கும் வரை இலக்கியமே அறிமுகமில்லை. அவன் வீட்டுச்சூழலில் அது இல்லை. ஆனால் திடீரென இலக்கியத்தை வாசிக்க ஆரம்பித்து ஓராண்டிலேயே தேர்ந்த நுண்வாசகனாக ஆகிவிட்டான். அது பாகுலேயன் பிள்ளையின் சுவை. பாகுலேயன் பிள்ளை இருபது வயதில் அவனைப்போலவே இருந்திருப்பார். பாலசங்கரும் அப்படித்தான் இருந்தார்.
அப்பா என்னைப்பற்றி பெருமிதம் அடைந்திருப்பாரா? ஆம் என இன்று உறுதியாகச் சொல்லமுடியும். அவருடைய நண்பராக இருந்தவர் எம்.எஸ். (எம்.சிவசுப்ரமணியம்) அவரும் பத்திரப்பதிவுத்துறை ஊழியர். நானும் எம்.எஸும் நண்பர்களாகி 12 ஆண்டுகளுக்குப்பின் அஜிதன் எடுத்த ஆவணப்படத்தில் என் அப்பாவின் படத்தை எம்.எஸ். பார்த்தார் ”ஆ, இது நம்ம பாகுலேயன் பிள்ளைல்லா” என்றார். திகைப்புடன் “தெரியுமா சார்?” என்றேன். “ரொம்ப நல்லா தெரியும்…. அபாரமான படிப்பாளி. திருவிதாங்கூர் ஹிஸ்டரியிலே ஒரு எக்ஸ்பர்ட்” என்றார். அவரையும் என்னையும் எம்.எஸ் இணைத்தே பார்த்திருக்கவில்லை.
எம்.எஸ் தீரா வியப்புடன் சொன்னார். “அவரு தன்னோட ரெண்டாவது பையன் பெரிய ஆள்னு சொல்லிட்டே இருப்பார். அது நீங்கதானா? எங்கிட்டே பல தடவை சொல்லியிருக்கார்” பின்னர் எம்.எஸின் ஒரு நண்பரை நானும் அவரும் சந்தித்தபோது எம்.எஸ் என்னை அறிமுகம் செய்தார். “இது நம்ம அருமனை ஹிஸ்டாரியன் பாகுலேயன் பிள்ளைக்க பையன், பெரிய படிப்பாளின்னு அவரு சொல்லிக்கிட்டே இருப்பாரே” அவர் முகம் மலர்ந்து “ஆமா, உங்கப்பாவுக்கு ரொம்ப பெருமை அதிலே” என்றார். என்னிடம் ஒரு துளிகூட அது காட்டப்பட்டதில்லை.
ஏன் என்று இன்று புரிகிறது. இன்று என் மகன் அஜிதன் எழுத்தாளன், அறிஞன். எனக்கு அடுத்த தலைமுறையில் அவனளவுக்கு வாசித்த, இசையறிந்த, கலையறிந்த, நுண்ரசனை கொண்டவர்கள் மிகமிக அரிது. தமிழ்ச்சூழலில் வேறெவருக்கும் அவனுக்கான வாய்ப்புகளும் இல்லை. ஏனென்றால் வாசிப்பது, கலைகளை அறிவது தவிர அவன் இது வரை வேறேதும் செய்ததில்லை. முறையான படிப்பு,வேலை உட்பட. அவன் வாழ்க்கையே விரும்பியதை மட்டும் செய்வதற்காக அமைந்தது. அந்த ‘ஆடம்பரம்’ இயல்பாக ஒரு தமிழ் இளைஞனுக்கு இல்லை.
அவனிடம் எப்போதும் நான் மிகையாகவே எதிர்பார்க்கிறேன். எளிதில் நிறைவடைவதில்லை. நான் கொண்டிருப்பதிலேயே கடுமையான இலக்கிய அளவுகோல் அவனுக்காகவே. காரணம், அந்த வசதிகள் இன்னொருவருக்கு இல்லை என்பதே. ஒரு பேரிலக்கியவாதியிடம் எதிர்பார்ப்பதை மட்டுமே அவனிடம் எதிர்பார்க்கிறேன். இன்று அவன் எழுதுவது எனக்கு பெருமிதத்தை அளிக்கிறது. ‘இவன் எந்நோற்றான் கொல்’ என என்னைநோக்கி நானே சொல்லிக்கொள்கிறேன்.
ஆனால் எனக்கிருக்கும் அழுத்தங்கள் சாதாரணம் அல்ல. ஒவ்வொரு நாளும் என்னிடம் எவரேனும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவனை நான் ‘கெடுத்துவிட்டேன்’ என்று. அவனை நான் ‘முறையாக’ படிக்கச் செய்து கணிப்பொறி வல்லுநன் ஆக்கியிருக்கவேண்டும். அமெரிக்காவில் வேலைக்கு அனுப்பியிருக்க வேண்டும். ‘என் மகன் அமெரிக்காவில் இருக்கிறான். நீங்கள் கோட்டைவிட்டு விட்டீர்கள்’ இதைத்தான் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என் நண்பர்கள், வாசகர்கள்கூட.
அண்மையில்கூட ஒருவர் அவனுக்கு ஒரு கடை வைத்துக் கொடுக்கலாகாதா என என்னிடம் கேட்டார். ‘இல்லையென்றால் பெண் கிடைக்காது சார்’ என்றார். ‘அவனுக்கு பொருளாதாரச் சிக்கல் எல்லாம் வராது சார், அவன் வேலைசெய்து வாழ்நாள் முழுக்க ஈட்டும் சம்பளம் அவனிடம் இப்போதே இருக்கிறது’ என்று நான் சொன்னால் அவருக்கு அதுவும் புரியவில்லை. அவன் ‘சும்மா’ இருப்பதாகவே அவர் நினைக்கிறார். அப்படி இருக்கக்கூடாது, நான் அவனை போதிய அளவு கண்டிக்கவில்லை என்கிறார். பணம் இருந்தாலென்ன, மேலும் சம்பாதிக்கவேண்டியதுதானே?
அபாரமான நேர்மையாளரான பாகுலேயன் பிள்ளை எனக்கு எதுவும் சேர்த்துவைக்கவில்லை. (ஊழல்செய்ய அவருடைய பெருமிதப்போக்கு ஒத்துவராது. அவரால் எவரிடமும் குழையவோ பணம் பெறவோ முடியாது). அப்படி என்றால் அவர் எத்தனை அழுத்தத்தைச் சந்தித்திருப்பார்? அவருக்கு அந்தக் குற்றவுணர்வு இருந்தது. நண்பர்களிடம் ‘நேர்மையா இருந்ததனாலே பையனுக்கு கொஞ்சம் சொத்து சேர்க்க முடியாம போய்ட்டுது’ என்று புலம்பியிருக்கிறார். என்னை இந்த உலகம் கீழ்மைப்படுத்திவிடும் என அஞ்சியிருக்கிறார். அந்த அச்சமே என்மேல் கடுமையான பாவனைகளைக் காட்டும்படிச் செய்திருக்கிறது.
இத்தனை வெற்றியை நான் அடைந்த பின்னரும் எனக்கு அப்பா வடிவாக இன்றிருக்கும் என் அண்ணா என்னை இங்குள்ள உலகியல் ஏமாற்றிவிடும் என தீராத பதற்றம் கொண்டிருக்கிறார். எப்போதும் என்னிடம் அதை அண்ணா சொல்லிக்கொண்டே இருக்கிறார் அதே பதற்றம் அஜிதன் பற்றி எனக்கு இருக்கிறது.
மைத்ரி நாவலின் சில பகுதிகளில் மொழி வழியாக ஓர் எழுத்தாளன் சென்றடையும் உச்சத்தை நான் காண்கிறேன். அது பொருள்மயக்கம் வழியாக, அணிகள் வழியாக, மொழிக்குழைவு வழியாக மட்டுமே தொடத்தக்கது. தமிழில் மிக அரிதானது. நான் இலக்கியமென கருதுவது அந்த sublimation மட்டுமே. என் பார்வையில் வேறு எவையும் இலக்கியத்தில் உண்மையில் பொருட்டானவை அல்ல. சமூகவியல், வாழ்க்கைச்சித்திரங்கள், உறவுகளின் விவரிப்பு, காமம் மற்றும் வன்முறைச் சித்தரிப்பு எல்லாமே இரண்டாம்பட்சமே. அந்த நுண்தளம் வாசகர் அனைவருக்கும் உரியது அல்ல. மிக அரிதான கூர்ந்த ரசனை கொண்ட வாசகரை மட்டுமே நம்பி எழுதப்படுவது. அதை அவன் எழுத்தின் வாசித்தபோது முதல்முறையாக அவனைப்பற்றி பெரும் நிறைவை அடைந்தேன்.
ஆனால் கூடவே அச்சமும் வந்து கவ்வுகிறது. அவனுடைய இயல்பான எளிமை, உலகியலை மூர்க்கமாக மறுத்து அவன் அடையும் தனிமை, கலைஞனுக்குரிய அலைபாய்தல், மிகையுணர்வுநிலைகள் எல்லாமே எனக்கும் உரியவை. ஆகவே, அவை என்னை கலக்கமுறச் செய்கின்றன. உலகியலை அவன் எப்படி எதிர்கொள்வான் என திகைக்கிறேன். அவனுக்கு என் நண்பர்கள் உடனிருக்கவேண்டும் என எப்போதும் விரும்புகிறேன். அவனுக்கான சில நண்பர்கள் இன்று அமைந்துள்ளனர் என்பதை மட்டுமே ஆறுதலாக நினைக்கிறேன்.
ஏனென்றால் என் மகன் என்பதனால் அவனுக்கு பல சாதகநிலைகள் இருக்கலாம், கூடவே மிக வலுவான எதிர்நிலைகளும் உண்டு. என்மீதான எல்லா கசப்புகளையும் அவன்மேல் திருப்புவார்கள். அவன் வாழ்நாள் முழுக்க நான் சந்தித்த சிறுமைகளை தானும் சந்திக்கவேண்டியிருக்கும். என் மகன் என்பதனாலேயே அவனுடைய தனித்தன்மையை தொடர்ச்சியாக நிராகரிப்பார்கள். அது அவர்களின் உள்நோக்கமாக கூட இருக்கவேண்டியதில்லை, இயல்பாக அமையும் பார்வையின்மையே அப்படி அவர்களை ஆக்கலாம். எனக்கு வந்த உடனடி வரவேற்பு அவனுக்கு அமையாது, அவன் அழுத்தமாக தன்னை நிறுவிக்கொண்டாலொழிய அவனை ஏற்க மாட்டார்கள். அவனுக்கிருக்கும் வாய்ப்புகளே அவன்மேல் பொறாமைகளை உருவாக்கும். அவன் அதையெல்லாம் கடந்தாகவேண்டும்.
தந்தை என்னும் நிலை இந்த இரு எல்லைகளுக்கு இடையேயான ஊடாட்டமே. மைத்ரியின் பின்னட்டையில் அ.முத்துலிங்கம், தேவதேவன், அபி ஆகியோர் சொல்லியிருக்கும் வரிகள் எனக்கு பெரும்பரவசத்தை அளிக்கின்றன. அவர்கள் உபச்சாரம் சொல்பவர்கள் அல்ல என நான் அறிவேன் என்பதனால். அதேசமயம் இந்த பதற்றத்தில் இருந்து விடுபடவும் எளிதில் முடிவதில்லை.
இன்று, என் அப்பாவை மிக அருகே உணர்கிறேன். இந்த அறுபது வயதில் நான் எழுதும் கதைகளில் என் அப்பா உயிர்ப்புடன் எழுந்து வருகிறார். ஆனையில்லா தொகுப்பு முதலிய நூல்களின் கதைகளில் தோன்றும் தங்கப்பன் நாயர் (அப்பாவின் வீட்டுப்பெயர்) இனிய மனிதர். அவரை அவர் நண்பர்களுடன் சேர்த்தே எழுதமுடியும் என கண்டுகொண்டேன். அவர் குடும்ப மனிதர் அல்ல, சமூக மனிதர். ‘ஒரு ஆனைய மானம் மரியாதையா சீவிக்க விடமாட்டீங்களாடே?’ என்ற தங்கப்பன் நாயரின் குரல் கேட்டு அக்கதையை எழுதிக்கொண்டிருந்த நான் கண்ணீருடன் வாய்விட்டு நெடுநேரம் சிரித்தேன். எனக்கு மிக அந்தரங்கமான கதை அது. வீட்டுக்குள் மாட்டிக்கொண்டு, அவஸ்தைப்பட்டு, பின்னர் மந்திரத்தால் சின்னக்குழந்தையாக மாறி வெளியேறிய அந்த யானை பாகுலேயன் பிள்ளையேதான்.
ஜெ
newest »
Very moving post Sir. Looking back I feel the same towards my father. We understand their responses & emotions only after certain time, mostly when we reach their age. Thanks to Vinod for this question.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


