கிழவனின் கடல்

 

கிழவனும் கடலும் வாங்க

இனிய ஜெ,

இம்முறை புத்தக கண்காட்சிக்கு சென்றேன்.  மற்ற மொழி நாவல்களை படிக்கலாம் என்ற எண்ணம்,

தங்களின் கண்ணீரை பின் தொடர்தலை படித்த பிறகு அடைந்திருந்தேன். 

“கடலும் கிழவனும்” குறுநாவல் பற்றி கு. சிவராமன் குறிப்பிட்டது ஞாபகம் வந்து வாங்கினேன். The old man and the sea யின் தமிழ் மொழியாக்கம். நாவலாசிரியர் எர்னெஸ்ட் ஹெமிங்வே.  ச.து.சு. யோகியார் தமிழ் மொழியாக்கம்.  79 பக்க குறுநாவல்.

வீட்டிற்கு திரும்பியவுடன் ஒரிரு மணிக்குள் படித்து முடிக்கும்படி இச்சிறு கதையாக்கம் தூண்டியது. 

கிழவன் ஒரு பெரிய மீனை பிடித்து விடுவது போல் கனவு காண்கிறான்.  அவன் கனவுகளில் சிங்கம் அடிக்கடி வருகிறது.  பையன் கிழவனை அன்புடன் ஊக்கப்படுத்துகிறான். கிழவனுக்கு வேண்டுவன செய்கிறான்.  எண்பத்தேழு நாட்களுக்கு பிறகு, பெரிய சுறா அகப்படுகிறது.  

அதை காக்க தன்னிடம் உள்ளவற்றை இழக்கிறான் – ஈட்டி, கத்தி, துடுப்பு, தூண்டில், கயிறு.   

மற்ற சுறாகள் அகப்பட்ட சுறாவை சூறையாடுகிறது.  பெரும் போராட்டத்திற்கு பின் கடைசியில் மிஞ்சுவது தான் கதை.

கிழவனிலுள்ள, போராடும்  மிருகமும் ஆணவ மனிதனும் சேர்ந்து அச்சுறாவை கரைக்கு எடுத்து செல்ல போராடுகிறார்கள்.   ஆனால், அவனில் உள்ள ஆத்மா அவ்வப்போது வெளிப்பட்டு, மனித வாழ்வின் இயல்பை அவனுக்கு நினைவூட்டுகிறது. தன் பிரிய பையனை அடிக்கடி நினைத்துக் கொள்கிறான்.  ஒரு ஆன்மா தனக்கு பிடித்த இன்னொரு ஆன்மாவை தேடுவது போல.  

கதையில் கிழவன், தனக்குள்ளே கூறுகிறான், “பாவம், அது(அகப்பட்ட சுறா) எனக்கொரு கெடுதியும் செய்ய வில்லை. எனக்கும் அதற்கும் வித்தியாசமென்ன – நான் அதை விட தந்திரசாலி – அவ்வளவுதானே?”.   வேறொரு இடத்தில்,  “காற்று நம் நண்பணே – சில சமயங்களில் கடலும் கூடத்தான். பல நண்பர்களும் பகைவர்களும் இருந்தாலும், படுக்கை – ஆம், படுக்கையே என் நண்பண். வெறும் படுக்கை. அவ்வளவுதான்; படுக்கை மிகமிகப் பெரிய நண்பண்; தோல்வியுற்றவனுக்கு அடைக்கலம் படுக்கையே. தோல்வியா? யாரிடம்,  எதற்கு நீ தோற்றாய்?”.

சாண்டியாகோ என்ற கிழவனின் பெயரையும் மனோலின் என்ற பையனின் பெயரும் கதையின் இறுதியிலேயே அறிமுக படுத்த பட்டுள்ளது.   செயல்களின் அனுபவங்களே நினைவுகளே எஞ்சும். பெயர்கள் அதை தொக்கியே இருக்கும்.  நாவலாசிரியர் இதை தான் என் அனுபவங்களில் கடத்துகிறாரோ?

ஒரு செயல்,  ஆணவ வெளிப்பாடாக இருக்கும் போது,  வெறுமையே வெல்லும், என்பதை முடிக்கும் போது அடைந்தேன்.  பையன் கிழவனுக்காக உருகும் போது,  இனிமையான மனித உறவுகளின் பாதிப்பையும் அடைந்தேன்.  

ஜானகிராமன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 18, 2023 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.