பூமணியின் பிறகு…

அன்பின் ஜெ,

நலம்தானே?

இந்த தீபாவளி சமயத்தில் பூமணியின் “பிறகு” படிக்க வாய்த்தது நற்செயல். சொந்த ஊர்விட்டு பல்லாயிரம் கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தாலும், “பிறகு” ஊரில் நிலைக்க வைத்தது. படித்து முடிக்கும்வரை ஊரில் வெயிலின் வெம்மையில் சுற்றியலைந்ததுபோல் ஒரு நிறைவு. புத்துணர்ச்சி.

#தாத்தா தாத்தா அங்க ஊர்ல அனயம்பேரு தொப்பிவச்ச போலுசா வந்தாக. நான் பத்துப் படிச்சுட்டு பட்டாளத்துக்குப் போவென். அங்கயும் தொப்பி தருவாகல்ல.”

அழகிரிக்குச் சூடு கண்ணை முட்டியது. எச்சைக் கூட்டி விழுங்கினான்.

அதக்காட்டி பெரிய வேலைக்குப் போகணுண்டா.”

ஆவடையின் கைக்குள்ளிருந்து திமிறி ஓடிய சுடலை மந்தையில் அருகடைவரை எழும்பியிருந்த தீப்பெட்டியாபீஸ் சுவரில் ஏறிச் சுற்றி விளையாடத் தொடங்கினான்.

மரத்தடியிலிருந்து அழகிரி சத்தங்கொடுத்தான்.

அடேய் கீழ வுழுந்துறாதடா.”#

எத்தனை அழகான இறுதிக் காட்சி! பூமணிக்கு/அப்படைப்பு மனத்திற்கு இந்த இடத்தில் நாவலை நிறைவு செய்ய வேண்டும் என்று எப்படித் தோன்றியது?. “வுட்றாதடா. உன் தலைமுறையாவது நல்லாப் படிச்சி நல்ல வேலைக்குப் போகணுண்டா” அழகிரியின் கண்ணீர் பேரன் சுடலையிடம் சொல்லாமல் சொல்வது இதைத்தானே?.

துளியும் எழுத்தாளன் தலைநீட்டாத, பிரச்சாரத்தின் வாசம் சிறிதும் எழாத, இயல்பின் அழகியலோடு மண்ணிலிருந்து கிளைத்த மற்றுமொரு மகத்தான நாவல் “பிறகு” என்பது என் அனுமானம்.

நான் பிறந்த கிராமத்திலும் (மதுரை திருமங்கலம் கள்ளிக்குடி அருகே ஓடைப்பட்டி), எங்கள் வீட்டிலும் பேச்சு மொழி தெலுங்குதான். சுத்த ஆந்திரா தெலுங்கல்ல. கலந்து கட்டிய கதம்ப மணத் தெலுங்கு. தெலுங்கு பேச மட்டும்தான் தெரியும் எனக்கு. எழுத, படிக்கத் தெரியாது. இப்போது கூட வீட்டில் ஒரு சுவாரஸ்யம் உண்டு. அம்முவுடன் நான் பேசுவது தமிழில். ஆனால் அம்முவும், நானும் இயலுடன் உரையாடுவது தெலுங்கில்.

சில வருடங்களுக்கு முன் நானும், இயலும் திருப்பூர் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தோம். தமிழினி அரங்கில் புத்தகங்களை பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது நாங்கள் பேசும் தெலுங்கைக் கேட்டு வசந்தகுமார் சார் புன்னகைத்தார். பின்னர் கண்காட்சி வளாகத்தின் வெளியே தேநீர் அருந்தியபடி அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது எங்களின் பூர்வீகம், மூத்த தலைமுறைகள் அநேகமாக ஆந்திரா தெலுங்கானாவின் ஒரு பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றார். பால்யத்தில் தம்பிகளுடனும், நண்பர்களுடனும் உரையாடல் மொழி தெலுங்கென்றாலும், சண்டை வந்தால் வார்த்தைகள் தமிழுக்கு மாறிவிடும். அச்சிறு பிராயத்தில் மனம் சிணுங்க வைக்கும் காரணங்களையும், வாக்குவாதங்களையும்,  சண்டைகளையும் இப்போது நினைத்துப் பார்த்தால் விரிந்த புன்னகை எழுகிறது.

“பிறகு” நாவலில் இடையிடையில் வரும் பேச்சுத் தெலுங்கின் வரிகள் மனதைப் பரவசம் கொள்ள வைத்தது. என் மண்ணையும், நிலத்தையும், வேர்களையும், பால்யத்தையும், கிராமத்தையும், மனிதர்களையும் எழுத்தில் கண்டால் எப்போதும் மனது மிகு நெகிழ்வு கொண்டு கரைந்து விடுகிறது. என் மண்ணின் மணம் கமழும்/நினைவூட்டும் எந்த எழுத்தும் மனதிற்கு மிக நெருக்கமாகி விடுகிறது. கி.ரா என் அய்யன். பூமணியின் பள்ளிக்கூடங்களில் நான் படித்திருக்கிறேன். இமையத்தின் ஆரோக்கியமும், செடலும் என் ஊர்க்காரர்கள். பெருமாள் முருகனின் கூளமாதாரி நடந்து திரிந்தது என் கிராமத்தில். “பிறகு”-ன் மஞ்சனத்தி மரங்களும், வேம்பும், ஆடு புலி ஆட்டமும் என் கிராமத்தையும் (கிராமத்தில் வீட்டிற்கு எதிரிலிருக்கும் முத்தியாலம்மன் கோயிலின் கல்தரையில் ஆடுபுலி ஆட்டக் கட்டங்கள் வரையப்பட்டிருக்கும்), பால்ய நண்பர்களுடனான என் இனிமையான நினைவுகளையும் மேல் கொண்டுவந்தன.

“பிறகு” பெரும்பாலும் உரையாடல்களால் ஆன நாவல். பேச்சுக்கள் முழுதும் மண்மணக்கும் வட்டார வழக்கு மொழியில்.இவ்வார்த்தைகளும் வரிகளும் பேச்சும்தான் என்னை நாவலோடு மனம் நெகிழ்த்தி ஒன்றவைத்தன.

நாவலின் ஒவ்வொரு பக்கத்தையும், ஒவ்வொரு மனிதர்களையும் மனதில் அருகாமையாய் உணர்ந்தேன். அழகிரி, ஆவுடை, முத்துமாரி, கருப்பன், சக்கணக் கிழவன், சித்திரன், கந்தையா, லெச்சுமி, முத்துமுருங்கன், மாடசாமி, வீரி, சுப்பையானாசாரி, அப்பையா, முனியாண்டி…எல்லோரையும்.

முத்துமாரியின் மீதான கருப்பனின் காதல் வார்த்தைகளற்ற ஒரு இசைக் கவிதை. முத்துமாரியின் மீதான ஆவுடையின் அன்பு ஆழமான தாய்மையின் சாரல். கிராமத்தில் முத்துமாரியின் திருமணக் காட்சிகள் அழகோவியங்கள். திருமணமாகிச் செல்லும் முத்துமாரியை ஊர் எல்லையில் வழியனுப்பி விட்டு மகள் சென்ற பாதையை வெகுநேரம் ஆவுடை பார்த்துக்கொண்டிருக்கும் அக்காட்சி அபாரமான ஒன்று (நீங்கள் சங்கப்பாடல் ஒன்றுடன் இக்காட்சியை ஒப்பிட்டிருந்தீர்கள் என்று ஞாபகம்).

இந்தியா சுதந்திரம் பெற்ற வருடத்தில், தன் மனைவி காளியுடனும், இரண்டு வயது மகள் முத்துமாரியுடனும் துரைச்சாமிபுரத்திலிருந்து கிளம்பி மணலூத்திற்கு பஞ்சம் பிழைக்க வரும் அழகிரிப் பகடையுடன் நாவல் துவங்குகிறது. மணலூத்து ஊருணியின் மருகால்துறைக்கரையில் அடர்ந்து நின்ற புன்னை மரங்களையும், வடக்குக் கரையில் தலைவிரிகோலமாக விழுதுகள் தொங்கும் ஒற்றை ஆலமரத்தையும், அதுக்குக் கீழாக ஊருணிப் பாலத்தையும் தாண்டி களத்துமேட்டோரம் காளியம்மன்கோயில்முக்கில் நின்றுகொண்டு கிழக்கே குடியைப் பார்க்கிறான் அழகிரி.

கோயில்மேடையில் கட்டைவேம்பு நிழலில் உறங்கிக்கிடந்த கிழடுகளில் ஒண்ணு கண்சொருகலிலிருந்து மெல்ல விடுபட்டுக் கேட்டது.

ஏவூருப்பா

தொரச்சியாவரஞ்சாமி

தொரச்சியாவரத்தில யாரு

அழகிரிப்பகடங்க சாமி

இட்ட ஏமி குடியிருக்கவாரா

அவ்வுசாமி

ஓகோநேண்டு வாளு கந்தையா செப்பித்தி. போத்தம் போத்தம்

நானும் அழகிரியுடன் மணலூத்திற்குள் நுழைந்தேன். மணலூத்தின் வேம்பு காலாதீதத்தில் நின்று எல்லாவற்றையும் சாட்சியாய் பார்த்துக்கொண்டிருக்கிறது.

வெங்கி

பிறகு ” – பூமணி

நற்றிணை பதிப்பகம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2023 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.