பனிமான்கள் -லோகமாதேவி

[image error]அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்

பனி நிலங்களில் உங்கள் குடும்பத்து பயண அனுபவங்கள் வாசிக்க வெகு சுவாரஸ்யமாக இருந்தன.  பொதுவாக உங்கள் பயண அனுபவக்கட்டுரைகள் அப்படி நானும் செல்ல வேண்டும் என்னும் ஆசையையும்,  சென்றிருக்காத ஏக்கத்தையும், சமயங்களில் கொஞ்சம் பொறாமையையும் உண்டாக்கும் குறிப்பாக மழை பயண அனுபவங்கள் கடும் பொறாமையை உண்டாக்கின..

ஆனால் இந்த பனி நிலப்பயண அனுபவங்கள் ‘’நல்ல வேளை நான் இங்கெல்லாம் எப்படியும் போகப் போவதில்லை’’என்னும் ஆசுவாசத்தை அளித்தன. டேராடூனில் இருந்த சிலநாட்களில் 9 அல்லது 10 பாகை வெப்ப நிலைக்கே நான் திணறினேன். ஒரு நாள் அறையின் வெப்பமூட்டி அரைமணிநேரம் பழுதான போது அந்த அரைமணியில் நானும் உறைந்து, இறந்து 8 பின் பிறந்தேன்.

 கட்டுரைகளின் வழியே  தெரிந்துகொண்ட  அங்குள்ள வாழ்க்கை பெரும் பிரமிப்பை அளிக்கிறது.     ஆழ்துயில் நிலை, சோர்வு கடுங்குளிர், உணவு பண்பாடு, கல்வி, பெற்றோரின் சிக்கல்கள், நிலப்பரப்பு, தொன்மம்,  உல்லாச கப்பல் பயணம் பனிப்பொழிவு,தீவுகள்,சிவப்பிந்தியரின் இல்லங்கள்  பனிமான்கள் என அப்பகுதியை குறித்த ஒரு ஆவணப்படம் பார்த்த உணர்வும் நிறைவும்

புகைப்படங்களின் வழி அந்நிலத்தை கற்பனை  செய்கையில்  அங்கிருப்பதாக தோன்றிய  வெறுமை மிகக்குறைந்த வண்ணங்களால் ஆன  சூழலால்தான் என்று எனக்கு பட்டது . பசுமையே இல்லை மரங்கள் எல்லாம் சாம்பல் போர்த்தி எலும்புக்கூடு போல் பனிமூடி அசைவின்றி துக்கித்து நிற்கின்றன.  அப்பகுதியின் வாழ்க்கை அத்தனை கடினம்  என இங்கிருப்போரால் கற்பனை செய்து பார்க்கவும் முடியாது.  அங்கும் காதல் மணம் புரிந்து சென்று, முழுக்க மகிழ்ச்சியுடன் இருக்கும் மனிதர்கள் இருப்பது உற்சாகமும் நம்பிக்கையும்  அளிக்கிறது.நானும் ஸாமி ஆகி பனிமானால் இழுத்து செல்லப்படும் வண்டியில் அமர்ந்திருப்பதாக கற்பனை செய்ய முயன்றேன், குளிர் தாங்க வில்லை. எனவே  துவங்கிய புள்ளியிலேயே கற்பனையை நிறுத்திக்கொண்டேன்

பொள்ளாச்சியில் மழை அதிகமென்பதால் பெண்கொடுக்க யோசிக்கிறவர்களையும், வால்பாறை என்பதால் கிடைத்த அரசுவேலையை மறுத்தவர்களையும்  அங்கு ஒரு பத்து நாள் அனுப்பி வைக்க வேண்டும்.

பனிமான்களை குறித்த தகவல்கள்  ஆர்வமூட்டியது. போக்குவரத்து, உணவு, பொழுதுபோக்கு, கேளிக்கை, சுற்றுலா முக்கியத்துவம் என ஒரே விலங்கு எத்தனை பயன்பாடுகளை கொண்டிருக்கிறது.

 மிக இளம் வயதில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் கண்காட்சி பள்ளியில் நடந்த போது 2 ரூபாய்க்கு ஒரு வண்ண கதை புத்தகம் வாங்கினேன். அந்த சில பக்க கதையில் வண்ண ஓவியங்களில்  இப்படி பனிமூடிய ஒரு நிலமும், பனிமான்களும் இருந்தன.அதிலிருந்தே இந்த பனிமான்களின் மீது எனக்கு தனித்த பிரியம் உண்டு.

 இவற்றின் அறிவியல் பெயரான   Rangifer tarandus  என்பதின் பேரின, சிற்றின பெயர்கள் இரண்டுமே பனிமான் என்றே லத்தீன மொழியில் பொருள் கொண்டவை.Rein என்னும் ஆங்கிலச் சொல் நார்ஸ் மொழியில் விலங்குகளின் கழுத்தில் கட்டி இருக்கும், அவற்றை கட்டுப்படுத்தும் தோல்பட்டையை குறிக்கும் சொல், பிற்பாடு ’இழுத்துப் பிடித்து நிறுத்தல்’ என்னும் பொருளில் அச்சொல் புழங்கப்பட்டது அப்படியே Der என்னும் காட்டு விலங்குகளை குறித்த பொதுவான சொல் deer ஆகிவிட்டிருந்தது.

 வாழ்வு மரத்தின் இலைகளை தின்ற நான்கு மான்கள், அவற்றை அடிப்படையாக கொண்ட நான்கு பருவங்களும், இதயத்தின் நான்கு அறைகளும், மான் கொம்புகளை கொண்டிருக்கும் வளமையின் தெய்வம், பச்சை குத்திக் கொள்ளும் மான் வடிவங்கள் என, இந்த வேர்ச்சொல்லை தேடிக் கொண்டிருக்கையில் நார்ஸ் தொன்மங்களின் மான் குறித்த இத்தகைய சுவாரஸ்யமான விஷயங்களை கொண்ட  சில கட்டுரைகள் வாசிக்க கிடைத்தது.

பனிமான்களுக்கு  உணவாக கொடுத்த கருகிப்போன பனிப்பாசியை புகைப்படம் எடுத்தீர்களா என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. அவற்றை காண வேண்டும் என எனக்கு நெடுநாட்களாக விருப்பமுண்டு.

அவை லைக்கன்கள் என்னும் கூட்டுயிர்கள். பாசிகளும் பூஞ்சைகளும் இணைந்து வாழும்  இரட்டை உயிர்கள். தோற்றத்தினால் ஆங்கிலத்தில் இவை ரெயின்டீர் மாஸ் என்றழைக்கப்பட்டாலும் இவை மாஸ் எனும் படுவ பாசிகள் அல்ல லைக்கன்கள் தான். இந்த பனிமான் லைக்கனின் (Rein deer Lichen) அறிவியல் பெயரான Cladonia rangiferina என்பதின் சிற்றினப்பெயரான rangiferina வில் பனிமான்களின் பெயர் இணைந்திருக்கிறது.Cladonia என்றால் கிளைத்த என்று பொருள்.

அசாதாரண குளிர் நிலவும் மாசற்ற தூய பகுதிகளில் மட்டுமே வளரும் இவை  சாம்பல், இளம்பச்சை, வெள்ளை அல்லது பழுப்பு நிற  கிளைத்த உடலம் கொண்டவை. மிக மிக மெதுவாக வளரும் இயல்புடையவை இந்த லைக்கன்கள், ஒரு வருடத்திற்கு 3 லிருந்து 10 மி மீ அளவுதான் இவை வளரும்.  100 வருடங்களுக்கு மேலும் உயிர்வாழும்,  இவற்றின் கிளைத்த உடலத்தின் பிரதான கிளைகளின்  எண்ணிக்கையை வைத்து இவற்றின் வயது கணக்கிடப்படுகிறது. இந்த மிகச் சிறிய உடலங்களில் ஆண் பெண் இனபெருக்க உறுப்புக்கள் இருப்பதும் இவைபால் இனப்பெருக்கம் செய்வதும் ஆச்சரியம்.

அழிந்துவரும் இனங்களிலொன்றாக இவை  சிவப்பு பட்டியிலடப்பட்டிருப்பதால்  இவற்றை பாதுகாக்க இங்கிலாந்தில் சட்டம் இருக்கிறது

கடும் பனிப்பொழிவிலும் பனிமான்கள்  மாவுசத்து சுமார் 70 சதவீதம் இருக்கும் இந்த லைக்கனை நுகர்ந்து அடையாளம் கண்டு தேடி சென்று உண்கிண்றன பனிமான்களுடன் மனிதர்களும் இவற்றை உண்கிறார்கள். ஸ்கேண்டினேவியாவில் இந்த லைக்கனை நொதிக்க வைத்து அகுவாவிட் ( Aquavit)  என்னும் மது உருவாக்கப்படுகிறது,  .1800களில் ஸ்வீடன் இந்த லைக்கன் மது உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக இருந்தது

அமிலம் கொண்டிருக்கும் இவற்றை சாம்பலில் புதைத்து வைத்து, கசப்பு நீக்கி பாலில் கலந்தும், கொதி நீரில் இட்டு மென்மையாக்கி அப்படியே உணவில் கலந்தும் உண்கிறார்கள். துருவப்பகுதிகளில் இவற்றை உலர செய்து சட்டமிட்டு சுவர்களில் மாட்டி வைப்பதும், ஜன்னல்களில் அழகுக்கு தொங்க விடுவதும் வழக்கம்.

Dene என்னும் ஆர்க்டிக் பகுதி பழங்குடியினர் பனிமான்களை வேட்டையாடி அவற்றின் வயிற்றில் இருக்கும் பாதி ஜீரணமாயிருக்கும் லைக்கன்களை எடுத்து பனி மான்களின் ரத்தத்திலேயே ஊறவைத்து நொதிக்க செய்து பின்னர் உண்ணுவார்கள்.  இந்த லைக்கன்களில் இருக்கும் அமிலம் இப்போதும் பனி மான் தோலை பதப்படுத்த  உபயோகபடுத்தபடுகிறது அமெரிக்க பழங்குடியினர் இந்த லைக்கனில் தேநீர் தயாரித்து அருந்துகிறார்கள

இவற்றை  துருவப்பகுதி மக்கள் பலவகையான சிகிச்சைகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். பழங்குடியின தலைவர் இறந்துபோகையில்,இறந்தவரின் நினைவுகளும், அனுபவங்களும் அவர் கொடிவழியில் இருப்பவர்களுக்கு கிடைப்பதன் பொருட்டு,இறந்தவரின் மூளையை பங்கிட்டு உண்ணும் நியூ கினி பழங்குடியினருக்கு  உண்டாகும்  ‘குரு’ என்னும் நோய்க்கு காரணமான பிரையான் (prion) எனப்படும் புரத கிருமியை அழிக்கும் தன்மை கொண்டவை  இந்த பனிமான் லைக்கன்கள் என  சமீபத்தில் நடந்த ஆய்வுகள் தெரிவித்தன.

பனி மான்களும் அழியும் ஆபத்திலிருப்பதாக 2015 ம் ஆண்டின் சிவப்பு பட்டியல் தெரிவிக்கிறது.

மிக்குறைவான வளங்களை கொண்டிருக்கும்,  அசாதாரண பனிச்சூழலில் கண்ணுக்கு தெரியாத அளவில் இருக்கும் இந்த லைக்கன்களுக்கும், முரட்டு தோற்றம் கொண்ட பனிமான்களுக்குமிடையே இருக்கும் இந்த சார்பு வாழ்வும் ,  இவையிரண்டையும் சார்ந்த அங்குள்ள மக்களின் வாழ்வும் வியப்பளிக்கிறது.

ஆஃபன்பெர்கில் இருக்கும் சரண் இன்று காலை சாலையில் நின்று கொண்டு காணொளி அழைப்பில் அந்நகரின் முதல் பனித்தூவலை காண்பித்தான். ’பொழிபனி’  என  அழகிய சொல்லொன்று இந்த கட்டுரைகளில் இருந்தது  நினைவுக்கு வந்தது

உங்கள் பயண கட்டுரைகள் வழி அறிந்துகொள்ளும் உலகப்பகுதிகள் அற்புதமானவை.

நன்றிகளுடன்

லோகமாதேவி

பனிநிலங்களில் -8

பனிநிலங்களில்- 7

பனிநிலங்களில்-6

பனிநிலங்களில்- 5

பனிநிலங்களில்-4

பனிநிலங்களில் -3

பனிநிலங்களில்- 2

பனிநிலங்களில்- 1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2022 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.