விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்

இம்முறையும் விஷ்ணுபுரம் விருதுவிழாவின் எல்லா உத்வேக மனநிலைகளும் மாற்றமின்றி தொடர்ந்தன. நானும் அருண்மொழியும் சைதன்யாவும் 16 காலையிலேயே வந்து இறங்கினோம். சில குடும்பச் சந்திப்புகள். மாலையிலேயே நண்பர்கள் வந்து கூடத் தொடங்கினர். ராஜஸ்தானி பவன் மண்டபத்திலேயே அறை. வழக்கமான அறை, 101 .

வழக்கமான டிசம்பர் குளிர். மதிய வெயிலில் கூட இதமான வெப்பம் மட்டுமே இருந்தது. விருந்தினர்களில் கனிஷ்காவும் மேரியும் வந்து அருகே விடுதியில் தங்கியிருந்தனர். அங்கே சென்று அவர்களை பார்த்துவிட்டு நடந்தே வரமுடிந்தது. டிசம்பரில் தமிழகத்தில்  சென்னையே கூட அழகானதாகத் தெரியும்.

17 காலையில் எழுந்து கீழே வந்தால் ராஜஸ்தானி அரங்கை ஒட்டிய மூன்றடுக்கு மாளிகையின் எல்லா அறைகளும் நிறைந்துவிட்டிருந்தன. குஜராத்தி பவன் மாளிகையும், டாக்டர்ஸ் பங்களா மாளிகையும் விரைவாக நிறைந்துகொண்டிருந்தன. வழக்கமான ஊர்வலநடையாகச் சென்று வழக்கமான டீக்கடையில் கடைநிறைய அமர்ந்து டீ குடித்தோம்.

10 மணி அரங்கில், ஐநூறுபேர் அமர்ந்து அவை நிரம்பிவிட்டது. தன்னறம், சீர்மை, தமிழினி, விஷ்ணுபுரம், யாவரும், பாரதி புத்தகநிலையம் புத்தகக்கடைகளில் நூல்கள் அடுக்கப்பட்டு விற்பனை தொடங்கிவிட்டிருந்தது. நூற்பு கடையில் கைத்தறி சட்டைகள்.

சுற்றிலும் தெரிந்த முகங்கள். நாஞ்சில்நாடன், தேவதேவன், எம்.கோபாலகிருஷ்ணன், சு.வேணுகோபால், காலப்பிரதீப் சுப்ரமணியம், லக்ஷ்மி மணிவண்ணன் எல்லாம் ஆண்டுதோறும் வருபவர்கள்.தமிழினி கோகுல்பிரசாத், கார்த்திகை பாண்டியன், ராஜ சுந்தரராஜன், தேவிபாரதி, எஸ்.ஜே.சிவசங்கர், பேரா.முஜிப் ரஹ்மான் என எழுத்தாளர்கள். கோவையின் இலக்கிய முகங்களான செந்தமிழ்த் தேனீ, சி.ஆர்.ரவீந்திரன் என பலர்.

இம்முறையும் இலக்கிய அரங்கு வழக்கம்போல கலவையானது. இளம்படைப்பாளிகளான கார்த்திக் பாலசுப்ரமணியன், அகரமுதல்வன், கார்த்திக் புகழேந்தி,  கமலதேவி என ஓர் அணி. மொழிபெயர்ப்பாளர் மு.யூசுப், பதிப்பாளர் விஜயா வேலாயுதம் என இன்னொரு அணி. இவர்களுடன் மூத்தபடைப்பாளியான அ.வெண்ணிலா.

எல்லா அரங்குமே நிறைந்திருந்தன. நான் உலக இலக்கிய விழாக்களை நிறையவே பார்த்திருக்கிறேன். இத்தனை நிறைந்த அரங்கை எங்கும் கண்டதில்லை. இந்த இலக்கிய விழா ஒரு fair அல்ல ஒரு தீவிரமான இலக்கிய உரையாடற்களமும் கூட. நிகழ்வை நடத்துபவர் கேள்விகளை பெரிதாக தயாரிக்க வேண்டியதில்லை, அரங்கில் இருந்து எழும் கேள்விகளே தீவிரமான வாசிப்பின் வெளிப்பாடாகவே அமையும். ஒரு மாதகாலம் வாசிப்புக்காக அளிக்கப்படுவதன் விளைவு அது.

ஆனால் எந்த விவாதமும் நட்பின் எல்லையை கடக்கலாகாது என்பது எங்கள் நெறி. உவப்பத் தலைகூடி உள்ளப்பிரிதல் – அதுவே மாறாத கொள்கை. ஆகவேதான் ஒவ்வொரு ஆண்டின் நிகழ்வுகளும் இனிய நினைவுகளாக சேர்ந்தபடியே உள்ளன. அரங்குகள் நிறைந்து வழியும் கூட்டம் ஒவ்வொரு நிகழ்வுக்கும் பெருகிக்கொண்டே இருக்கிறது.

இம்முறை அமர்வுக்ளை ஏழுடன் நிறுத்திக்கொண்டோம். ஆகவே இரண்டு முறையாக மொத்தம் மூன்றரை மணிநேரம் இடைவெளி விட முடிந்தது. அது நிகழ்வுக்கு வருபவர்கள் ஒருவரோடொருவர் சந்தித்து, பேசி , உளம்பரிமாற பொழுதளித்தது. அத்துடன் கூட்டம் மிக அதிகம். ஒவ்வொரு வேளையும் ஐநூறுபேருக்குமேல் உணவருந்தினர். நான்கு பந்திகள் நிகழவேண்டியிருந்தது.

ஒவ்வொரு அரங்கிலும் ஒருவகையான தீவிரம். அகரமுதல்வனின் குரலில் ஈழப்போராட்டத்தின் களத்தில் இருந்து வந்த ஒருவருக்குரிய தீர்மானத்தன்மை. கமலதேவியின் குரலில் தனக்குரிய உலகை தெளிவாகவே வகுத்துக்கொண்ட ஒருவரின் திட்டவட்டத் தன்மை. அ.வெண்ணிலாவின் பேச்சில் கள ஆய்வு செய்து எழுதுபவரின் விரிவு. எவர் பேச்சிலும் தயக்கங்கள் இல்லை.

 

ஒன்று கவனித்தேன். என் தலைமுறையில் சிற்றிதழ்சூழலைச் சேர்ந்த இலக்கியவாதிகள் மேடையில் பேச தடுமாறுவார்கள். சந்திப்புகளில் குழறுவார்கள். எதையுமே சொல்லாமல், சொல்லமுடியாமல் பொதுவாகவே பேசிக்கொண்டிருப்பார்கள்.அதுவே இலக்கியத்தின் இயல்பு என்றும் சொல்ல முயல்வார்கள். அரசியலியக்கம் சார்ந்த எழுத்தாளர்களே பேசுவார்கள், ஆனால் அது வேறொருவகை பேச்சு.

இந்த தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாரிடமும் மேடைக்கூச்சமோ தயக்கமோ இல்லை. காரணம், இன்று மேடைகள் பெருகியுள்ளன. எப்படியோ எல்லாருமே பேசவேண்டியிருக்கிறது. இலக்கியத்திற்கு வெளியேகூட இன்று எழுந்து நாலு வார்த்தை சொல்ல தெரிந்திருப்பது ஓர் அவசியமாக ஆகிவிட்டிருக்கிறது.

எந்த அரங்கிலும் எதையும் சொல்லி நிலைகொள்ள, கவனம்பெறத் தெரியாதவர்கள் அரங்கக் கவனத்திற்காகச் செய்யும் உத்திகள் சென்றகால தீவிர இலக்கிய அரங்குகளில் நிகழும். அதற்கு ஓர் ஏற்பும் சூழலில் இருந்தது-மீறல், தீவிர என்றெல்லாம் சிலரால் அது புரிந்துகொள்ளவும் பட்டது. இன்று பார்வையாளர்களே நல்ல கேள்விகள் வழியாக கவனம்பெறும் சூழலில் அந்த வகையான செயல்பாடுகள் எளிய கோமாளித்தனங்களாக கருதப்படுகின்றன.

மதிய உணவுக்கு கூடம் நிறைந்து இரைந்துகொண்டிருந்தது. 2010 முதல் விழாவில் தயிர்சாதம் – புளிசாதம் பொதிகள் வரவழைத்து சாப்பிட்டோம். அதைத்தான் சிறப்பு விருந்தினரான மணி ரத்னத்திற்கும் கொடுத்தோம். 2014 நிகழ்வில் அரங்கசாமி அன்று சாப்பிட்டுக்கொண்டிருந்த நீண்ட வரிசையை பார்த்து கண்கலங்கி ‘இதான் சார் கனவு, இலக்கியத்தை ஒரு பெரிய குடும்பமா ஆக்குறது’ என்றார். இன்று ஐந்து மடங்குபேர் ஆகிவிட்டனர்.

இரவு 830க்கு அரங்குகள் முடிந்தன. 930 முதல் ஒரு மணிநேரம் இலக்கிய வினாடிவினா. விஷ்ணுபுரம் அமைப்பாளர்களில் ஒருவரான குவிஸ் செந்தில் நடத்துவது. விளையாட்டாக ஆரம்பித்த நிகழ்வு இன்று ஒரு நல்ல கொண்டாட்டமாக ஆகிவிட்டது.

நல்ல வினாடிவினா நிகழ்வில் எல்லா கேள்வியும் கடினமானதாக இருக்கலாகாது, பார்வையாளர் விலகிவிடுவார்கள். எல்லா கேள்வியும் எளிதாக இருந்தால் சுவாரசியம் இருக்காது. செந்திலின் கேள்விகள் கலவையானவை. ஆனால் மிகமிக சிக்கலான, அரிய தகவல்களால் ஆன கேள்விகளுக்குக் கூட பதில்கள் வந்தன.

காரணம் தேர்ந்த வாசகர்களால் ஆன அவை அது என்பதே. ஒருவேளை தமிழகத்தின் அத்தனை நல்ல வாசகர்களும் அடங்கிய அவை.ஆகவேதான் ஏதோ ஒரு அமெரிக்க கவிஞரின் குரலை மட்டும் போட்டு யார் என்று கேட்டால் நான்குபேர் கையை தூக்குகிறார்கள். ஒரு பாடலின் ஒரு வரி தவறாக கேட்கப்பட்டு அது ஒரு நூலின் தலைப்பாக ஆனது என்று கேட்பதற்குள் பதில்கள் முளைத்தெழுந்துவிடுகின்றன.

இரவு அறைக்குச் சென்று 12 மணி வரை மேலும் பேசிக்கொண்டிருந்தோம். அது சிரிப்பும் கொண்டாட்டமும் நிறைந்த அமர்வு. விஷ்ணுபுரம் அரங்குகளில் இருக்கும் தனித்தன்மை, வாசகர்கள் பெருகிக்கொண்டே இருப்பதற்கான காரணம் அதுவே.

மறுநாள் காலை ஏழு மணிக்கு எழுந்து வந்தபோது டீ குடிக்கப்போவதற்காக பெரும் கும்பல் காத்து நின்றது. டீ குடித்துவிட்டு வருவதே ஓர் இலக்கிய ஊர்வலம். போக்குவரத்து நின்று தயங்கும் அளவுக்கு.

முதல் அரங்கில் நூல் பதிப்பின் இன்றைய சூழல் பற்றிய உரையாடல். கனிஷ்கா குப்தா மேரி . இரண்டாம் அரங்கில் அருணாச்சல பிரதேச எழுத்தாளர் மமங் தாய் அவர்களுடன் ஒரு நேருக்குநேர் சந்திப்பு. சிறப்பு விருந்தினர்களில் போகன் ஏற்கனவே எங்கள் அரங்கில் வாசகர்களைச் சந்தித்துவிட்டார்.

உணவுக்குப்பின் சாரு நிவேதிதாவுடன் ஒரு சந்திப்பு. நான் அதை மட்டுறுத்தினேன். அதாவது மேடையில் பெரும்பாலும் சும்மாவே இருந்தேன். கேள்விகள் வந்துகொண்டே இருந்தன. சாரு நிவேதிதாவின் புனைவுகளை வெவ்வேறு கோணங்களில் அணுகும் தீவிரமான வாசிப்பு சார்ந்த கேள்விகள் மட்டுமே வந்தன. சாருவுடன் சம்பந்தப்படும் முகநூல் விவாதங்கள் சார்ந்த ஒரு கேள்விகூட இல்லை. அது சாருவுக்கு ஆச்சரியமாக இருந்தது, எனக்கு ஆச்சரியமேதுமில்லை.

காரணம் விஷ்ணுபுரம் அரங்குக்கு வருபவர்களில் முகநூலர் மிகமிகச் சிலரே. பலருக்கு அந்த சலம்பல்கள் பற்றிய செய்திகளே தெரிந்திருக்கவில்லை. அவர்களுக்கு சாரு நிவேதிதா எக்ஸிஸ்டென்ஷலியசமும் ஃபேன்சி பனியனும் முதல் ஔரங்கசீப் வரையிலான நூல்களை எழுதிய ஆசிரியர் மட்டுமே.

அந்தி விழாவுக்கு முன் இரண்டரை மணிநேர இடைவெளியில் அந்த பகுதியே நூற்றுக்கணக்கான இலக்கியக் குழுக்களாக ஆகி முழங்கிக்கொண்டிருந்தது. அப்பகுதியினூடாக செல்கையில் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்த வெடிச்சிரிப்புகளே ‘ஆம், எண்ணியது இதையே’ என என்னை பெருமிதம் கொள்ளச் செய்தன.

மாலை அமர்வு நிகழ்வுகள் முழுமையாகவே சுருதி டிவியால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அராத்து இயக்கிய தி அவுட்சைடர் என்னும் ஆவணப்படம் திரையிடப்பட்ட பின் நிகழ்வு இரண்டு மணிநேரத்தில் கச்சிதமாக நிறைவுற்றது. அதன்பின் முதன்மை ஆளுமைகளை வழியனுப்பி வைத்தல், சிற்றுரையாடல்கள்.

விஷ்ணுபுரம் விழாவின் முகப்பில் நூல்விற்பனை அரங்கில் வழக்கம்போல நூல்கள் வெளியிடப்பட்டன. சுனில்கிருஷ்ணனின் ‘மரணமின்மை என்னும் மானுடக்கனவு’ லெ.ரா.வைரவனின் இரண்டாம் சிறுகதைத்தொகுதியான இராம மந்திரம் , அவருடைய தம்பி இவான் கார்த்திக்கின் முதல்நாவலான பவதுக்கம், , சுஷீல்குமாரின் மூன்றாம் சிறுகதை தொகுதியான அடியந்திரம்  கா.சிவாவின் மூன்றாம் சிறுகதை தொகுதியான கரவுப்பழி . ஸ்ரீனிவாசன் மொழியாக்கம் செய்த அனிதா அக்னிஹோத்ரியின் உயிர்த்தெழல் என்னும் நாவல்.மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்களின் ‘ஆழம்.

இவான் கார்த்திக்கின் பவதுக்கம் அண்மையில் தமிழில் வெளிவந்த அற்புதமான நாவல் என்று அதை மெய்ப்பு நோக்கிய ஸ்ரீனிவாசன் பதினைந்துமுறைக்குமேல் பரவசத்துடன் சொல்லிக்கொண்டிருந்தார்.

இரவு பத்து மணிக்கு கூட்டமாக சென்று மீண்டும் ஒரு டீ. வழக்கமான அதே படிக்கட்டில் அமர்ந்து நையாண்டியும் சிரிப்புமாக ஓர் உரையாடல். ஒருங்கமைப்பாளரான செந்தில்குமாருக்கு பொன்னாடை போர்த்துதல். மீண்டும் அறைக்குள் சென்று இரவு 2 மணி வரை அரட்டை. விழாவின் நிறைவு உடல் அளவிலேயே தாளமுடியாத எடையாக ஆகும் வரை நீண்ட நாள்.

இந்த விழாவின் உரையின் இறுதியில் நான் சொன்ன ஒன்று உண்டு. இதன் மூலம் நன்மைபெறுபவர்கள் முதன்மையாக இலக்கியவாதிகள். சாரு நிவேதிதா முதல் நான் வரை, அரங்கில் ஏதேனும் வகையில் வெளிப்பட்ட படைப்பாளிகள் அனைவரும்தான். ஆனால் எந்த பயனும் பெறாதவர்கள் இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள். பலநாட்கள் இரவுபகலாகப் பணிபுரிந்து இதை நிகழ்த்தியவர்கள்.

இதை வழக்கமான ஒரு உபச்சாரமாகச் சொல்லவில்லை. இதே விழாவை எந்த பெரிய உழைப்பும் இல்லாமலும் நடத்திவிட முடியும் – மூன்று மடங்கு செலவாகும் அவ்வளவுதான். இந்தியாவின் முக்கியமான இலக்கிய விழாக்களில் ஒன்றாக ஆகிவிட்டிருக்கும் இந்நிகழ்வு இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் நிகழும் மிகச்சிறிய இலக்கிய விழாவுக்கு ஆகும் செலவில் பத்தில் ஒரு பங்கு செலவில் நிகழ்கிறது. அதுதான் உழைப்பை கோருகிறது.

இங்கே பெரும்பகுதி பணிகள் இலவசமாக நிகழ்கின்றன. நிகழ்வில் ஓடிக்கொண்டிருக்கும் கார்கள் அனேகமாக எல்லாமே நண்பர்களுடையவை. ஓட்டுநர்களும் அவர்களே. ஒவ்வொரு விருந்தினரையும் உபசரித்து திருப்பியனுப்பும் வரை பொறுப்பேற்றுக்கொள்பவர்கள் வாசகர்களே. அந்த நிதியையும் வாசகர்களிடமிருந்தே பெற்றுக்கொள்கிறோம்.

அந்த உழைப்பை வழங்குபவர்கள் பெரும் வாசகர்கள், முழுக்க முழுக்க இலக்கியம் மீதான பற்றில் இருந்தே அதைச் செய்கிறார்கள். திரும்ப எதையும் பெற்றுக்கொள்வதில்லை. அத்தகைய தீவிரமான பற்றை இலக்கியம் உருவாக்குகிறது என்பதே இலக்கியத்துடன் ஏதேனும் வகையில் தொடர்புகொண்டிருக்கும் ஒவ்வொருவரும் பெருமைகொள்ளவேண்டிய விஷயம். நாம் நம்பும் ஒன்றின் ஆற்றலுக்கான சான்று. நாம் செய்வன உகந்தவையே என நாமே உறுதிசெய்துகொள்ளும் நிகழ்வு அது.

இந்த விழாவை ஒருங்கிணைப்பதில் செந்தில்குமாருடன் விஜய்சூரியன் (சூரியன் சொல்யூஷன்ஸ்) நடராஜன் (டைனமிக் மெட்டல்ஸ்) மீனாம்பிகை (விஷ்ணுபுரம் பதிப்பகம்) ராம்குமார் (இ.ஆ.ப, மேகாலயா) செல்வேந்திரன் (அர்த்தமண்டபம்  மக்கள் தொடர்பகம்) என ஒவ்வொருவர்பங்களிப்பும் பெரியது. விருந்தினர் உபசரிப்பு மற்றும் பயணங்களை  நரேன் (மொழிபெயர்ப்பாளர்) சுதா ஸ்ரீனிவாசன், ஸ்ரீனிவாசன் ஆகியோர் பார்த்துக்கொண்டார்கள்.  சுஷீல்குமார் (சிறுகதை ஆசிரியர்) ஆனந்த்குமார் (கவிஞர்) ஆகியோர் எல்லா பணிகளிலும் இருந்தனர்

ஜா.ராஜகோபாலன் அரங்கை ஒருங்கிணைத்தார். அவருக்கு உதவியாக ஷாகுல் ஹமீது இருந்தார். ஷாகுல் இருப்பது ஒரு பெரும்பலம். இயற்கையாகவே சேவைமனநிலை அமைந்தவர். அரங்கை ஒருங்கிணைப்பதில் உதவிய யோகேஸ்வரன், அனங்கன், கதிர் முருகன் ஆகியோர். அத்தனை பேரையும் ஒருங்கிணைக்கும் ஆற்றலாக இலக்கியம், நல்ல இலக்கியம் மட்டுமே இருக்கமுடியும் என்பது அளிக்கும் நம்பிக்கை போல இத்தருணத்தில் ஆற்றலின் ஊற்று பிறிதில்லை.

ஒவ்வொரு விஷ்ணுபுரம் அரங்குக்குப் பின்னரும் ஒரு பெருமுயற்சிக்கான முடிவை எடுப்பதன் காரணமே அந்த ஆற்றல்தான். 2021 டிசம்பரில் விழா முடிந்தபின் தமிழ்விக்கி தொடங்கும் முடிவை திடீரென எடுத்தேன். இம்முறை அப்படி இன்னொரு பெரிய அமைப்பை தொடங்கும் முடிவை எடுத்திருக்கிறேன்

எல்லாம் கைகூடும், ஏனென்றால் நான் என் ஆசிரியரின் கனவின் எளிய சேவகன்.

 

புகைப்படங்கள் மோகன் தனிஷ்க் பார்க்க இரண்டாம் நாள் புகைப்படங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 19, 2022 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.