அறிவியக்கத்தில் இணைதல் – கடிதம்

பெருமதிப்பிற்குரிய ஆசான் ஜெயமோகன் அவர்களுக்கு,

இது நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம்.அறம் வாசித்த போது,இங்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்  டொரோண்டோ வில் திரையிடப்பட்ட  வெண்முரசு ஆவணப்படம் சென்று பார்த்த போது, கொற்றவையை வாசித்த போது, கொற்றவையின் நீலியை கண்டடைந்தபோது என்று எத்தனையோ முறை தங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்று எண்ணியிருக்கேன்.ஆனாலும் ஒரு சிறு தயக்கம்.கடல் போல் விரிந்திருக்கும் தங்கள் படைப்புகளில் சிறு துளிகளைப் போல் மிகக் குறைவாக தானே வாசித்திருக்கிறோம் ,இன்னும் கொஞ்சம் வாசித்து விட்டு எழுதுவோம் என்று கடிதம் எழுதுவதற்கு  உள்ளூர ஒரு சிறுதயக்கம் இருந்து கொண்டே இருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஈரோடு தூரன் விருது விழாவில் தங்களை சந்தித்த ஆத்மதிருப்தியோடு இக்கடிதம் எழுதுகிறேன்.சமீப காலங்களில் எனக்குள் ஒரு rejuvenation நிகழ்ந்திருக்கிறது.அது தங்களையும்,தங்கள் எழுத்தையும், தங்கள் தளத்தையும் கண்டடைந்தபின். தாங்கள் அளிக்கும் பதில்களின் விளக்கங்களும் வாழ்க்கை சார்ந்து தேடல் சார்ந்து ஒரு தெளிவும் வெளிச்சமும் ஏற்படுத்தியிருக்கிறது .எப்படியாவது தங்களை ஒருமுறையாவது சந்தித்துவிடவேண்டுமென்ற ஆசையும் தூரன் விருது விழாவில் நிறைவேறியது.

முதன்முறையாக ஆகஸ்ட் 13 மாலை  விழா மண்டபத்தில்  தூணருகே மஞ்சள் நிற சட்டையில் உங்களைப்  பார்த்தது ஒரு தரிசனம் போல் இருந்தது.என் வாழ்வின் உச்சகட்ட மகிழ்கணமது.பொக்கிஷமாய் அந்த தருணத்தை மனதில் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.அப்போது வாசித்துக் கொண்டிருந்த ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ புத்தகத்திலேயே தங்களிடமிருந்து கையெழுத்து வாங்கியது மிக்க மகிழ்ச்சி.தூரன் விருது விழாவில் தங்களருகே  இருநாள் இருக்கக் கிடைத்தது பெருவரம்.ஜெவென்னும் விசையால் இணைக்கப்பட்டு அந்த ஒளியின் பாதையில் ஒருங்கே பயணிக்கும் அத்தனை பேரையும் அங்கு ஒருசேர  பார்க்கக் கிடைத்தது .இது எத்தகைய அறிவியக்கம் என்பதை உணர முடிந்தது.

இவற்றிற்கெல்லாம் இத்தனை  தாமதாக வந்துவிட்டோமே என்று வருத்தமிருந்தாலும் ‘எதுவுமே மிகமிகப் பிந்திய காலம் அல்ல.எந்தக் காலத்திலும் எதையும் செய்யமுடியும்.எதையும் தொடங்க  முடியும்’ என்ற தங்களது தன்மீட்சி வரிகளையே நினைத்துக் கொள்கிறேன்.விடுமுறை முடிந்து இந்தியாவிலிருந்து திரும்பிவிட்டதால் தங்கள் மணிவிழாவில் கலந்து கொண்டு தங்களையும் அருண்மொழி நங்கை அவர்களையும் நேரில்  சந்திக்க முடியவில்லையே என்று ஏக்கமாக இருந்தாலும்  பாரதி பாஸ்கர் அவர்கள் கூறியது போல் நிகழ்வில் பங்கெடுக்கமுடியாத சூழல் கொண்ட என்னைப்போன்ற அத்தனை பேருக்கும் இங்கு இருப்பு கொள்ளாமல் அன்றைக்கு அகம் முழுவதும் விழா நிகழ்விடத்திலேயே தான் சுற்றிக் கொண்டிருந்தது.

இங்கு செப்டம்பரில் மீண்டும்  கனடா திரும்பிய போது maple இலைகள் fall சீசனிற்காக  நிறம் மாறத் துவங்கியுள்ளது. சங்கச் சித்திரங்களில் algonquin பற்றி தாங்கள் எழுதிய வரிகளை அது  நினைவுபடுத்தியது.தங்கள் எழுத்தில் நான் வாசித்த முதல் புத்தகம் சங்கச்சித்திரங்கள்.மிகவும் அணுக்கமானது.நீங்கள் செய்யும் அத்தனைக்கும் உங்களுக்கு ஆத்மார்த்தமான நன்றி .’குரு மட்டுமே நிறைக்கும் ஓர் அகவெற்றிடம் நம் எல்லோருக்குள்ளும் உண்டு’ என்று சியமந்தகக் கட்டுரையில் சிவராஜ் அவர்கள் எழுதிய வரிதான் எத்தனை உத்தமமானது.

கொற்றவையின் நிலம் பகுதியை வாசித்த போது அந்தக் கண்டடைதலை என்னால் உணர முடிந்தது.எப்படி புகாரிலிருந்து மதுரை நோக்கி கிளம்பிய கண்ணகி வேறோ, எப்படி  மீண்டும் அவள்  புகாரிலிருந்த புறப்பட்ட அதே பழைய கண்ணகியாக முடியாதோ, எப்படி நீலி அவளுக்கு பயணத்தின் பாதையெங்கும் அத்தனை கண்கள் கொடுத்து உண்மையாய் உள்ளதை காணக்கொடுத்தாளோ அதுபோல் தான் எங்களுக்கு நீங்கள்.அவரவர் இருப்புக்கான உண்மையான தேடலைத் தேட, கண்டடைய கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

வாசகர்களாக, மாணவர்களாக ஆத்மார்த்தமாய் உங்களைக் கண்டடைந்து சரணடைந்த யாருமே இனி பின்செல்ல முடியாது. செயலின் முழுவடிவமாக மட்டுமே திகழும் தங்கள்முன், தங்கள் அறிவியக்கத்தில் ஒருவராக திகழும் தகுதியையே அனுதினமும் வளர்த்துக் கொள்ளவேண்டுமென்பது மட்டுமே எங்கள் எல்லோரின் தீர்க்கமாக இருக்கும்.

இம்முறை இந்தியா வந்தபோது தங்களையும், விஷ்ணுபுர நண்பர்களையும் சந்தித்தது வாசிப்பிற்கும்,கற்றலுக்கும்  மிகுந்த உற்சாகம் கொடுத்திருக்கிறது.ஆத்மார்த்தமாக மனதில் தோன்றியதை அப்படியே எழுதிவிட்டேன்.ஏதேனும் பிழையிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.நீங்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் அத்தனைக்கும் மீண்டும் மனமார்ந்த நன்றி.

பணிவன்புடன்
இந்துமதி
டொரண்டோ.

*

அன்புள்ள இந்துமதி,

நன்றி.

அறிவியக்கம் என்று சொன்னீர்கள். அது உண்மை. இப்போது பார்க்கையில் இந்த செயல்பாடுகளுடன் தொற்றிக்கொண்ட ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் தங்களுக்கான செயற்களத்தை கண்டுகொண்டதை, அங்கே சாதனைகளைச் செய்வதை காணமுடிகிறது. இதை எழுதும்போது இதைப்போல ஓர் எளிய கடிதத்துடன் அறிமுகமான ரம்யா நடத்தும் பெண்களுக்கான இணைய இதழான நீலி யை வாசித்துக் கொண்டிருக்கிறேன். எங்கிருந்து எங்கு அவர் வந்து சேர்ந்திருக்கிறார் என்னும் திகைப்பும் நிறைவும் உருவாகிறது.

உங்கள் செயற்களத்தைக் கண்டுகொண்டால் உங்களிடமும் இந்த விலக்கமும், தயக்கமும் இருக்காது. உங்கள் நிறைவை நீங்களும் அடையக்கூடும். வாசிப்பு அதை கண்டடைவதற்கான வழி மட்டுமே.

ஜெ

 

ஜெயமோகன் நூல்கள்

வாசிப்பின் வழிகள் வாங்க

வாசிப்பின் வழிகள் மின்னூல் வாங்க

வணிக இலக்கியம் வாங்க

வணிக இலக்கியம் மின்னூல் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் மின்னூல் வாங்க

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 18, 2022 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.