அம்மாவின் பேனா – ஒரு கடிதம்

அம்மாவின் பேனா – கடிதம்

மதிப்பிற்குரிய ஜெ,

தினமும் காலையில் கல்லூரி பேருந்தில் பயணிக்கும் போது தங்கள் கட்டுரைகளைப் படிப்பது வழக்கம். அதில் ஏதாவது ஒன்று அன்று முழுவதும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.

 கவிஞர் சதாரா மாலதியை பற்றி அவரது தாய் எழுதிய கட்டுரையை தங்களது “அம்மாவின் பேனா ” மூலம் அறிந்தவுடன் உடனடியாக அதனை படிக்க வேண்டும் என ஆர்வம் மேலிட்டது.

திண்ணையில் தேடினால் கிடைக்கவில்லை. அது என்னவாக இருக்கும், அந்த வயது முதிர்ந்த தாய் அப்படி என்ன எழுதி இருப்பார் என என்னுள் எழுந்த எண்ண ஓட்டங்களுக்கு அளவேயில்லை.

பிறகு ஒருவழியாக அந்த பக்கத்தை தேடி கண்டுபிடித்துவிட்டேன்.

https://old.thinnai.com/?p=20904021

என்னவென்று சொல்வது. அந்த தாயின் சோகத்தை,  இழப்பை எத்தனை அற்புதமாக வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

“என் மாலாவின் பல வித உருவங்களை நினைத்து நினைத்து மருகுகிறேன். சின்ன வயதில், ஐந்து வயதிருக்கும். சிவப்பு பைஜாமாவும், மாம்பழக் கலர் குர்தாவும் போட்டு, இரட்டைப் பின்னல் போட்டு போட்டோ எடுத்தோம். மிக அழகாயிருப்பாள். அது ப்ளாக் அண்ட் வொயிட் போட்டோதான். எந்த உடை போட்டாலும் பொம்மை போலிருப்பாள். அவள் பெரியவளானபோது மயில் கழுத்துக் கலரில் பாவாடை சொக்காய், நைலான் தாவணி மிகமிக அழகாயிருக்கும். போட்டோ இல்லாவிட்டாலும் என்கண் முன்னே இன்னமும் அந்த உடையில் நிற்கிறாள்.”

“இன்னமும் நம்ப முடியவில்லை. போனில் பேசுவாள் என்றும் வெளியூருக்குப் போயிருப்பதாகவும், கடிதம் எழுதுவாள் என்றும் மனம் ஏமாற்றுகிறது.

எழுது, எழுதாவிட்டால் எழுத வராது என்பாள். இப்படி அவளைப்பற்றிப் புலம்பி எழுத வைத்துவிட்டாள்.

சுற்றிக் கொண்டே இரு, படுத்துவிட்டால் எழுந்திருக்க முடியாது என்று என்னைச் சொல்வாள். அவள் எழாமலேயே போய்விட்டாள்.”

பெற்றோரை இழந்து துயருறும் மக்களுக்கு இப்படி மகளை இழந்த தாயின் துயரம் நிச்சயமாக மிகந்த வருத்ததையே அளிக்கும். இன்றைய நாள் சதாரா மாலதியின் அம்மாவிற்கே சமர்ப்பணம்.

நன்றியுடன்,

பாபி முருகேசன்.

7.12.2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2022 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.