பெயர் தெரியாத ஞானி.
The Unknown Saint அலா எடின் அல்ஜெம் இயக்கிய 2019 மொராகோ திரைப்படம்

தான் திருடிய பணத்தை எங்கே ஒளித்து வைப்பது என்று தெரியாமல் யாருமற்ற பாலைவன மணல்மேடு ஒன்றில் புதைத்துவைத்துவிட்டு அடையாளத்திற்காகப் புதைமேடு போல ஒன்றை உருவாக்கி விட்டு சிறைக்குப் போகிறான் யான்ஸ்.
சிறை வாழ்க்கையை அனுபவித்துவிட்டு வெளியே வந்து தான் புதைத்த பணத்தை எடுக்க வருபவன் அங்கேயுள்ள காட்சியைக் கண்டு அதிர்ச்சி அடைகிறான். காரணம் அவனது புதைமேட்டினை ஒரு ஞானியின் சமாதி என நினைத்து பெரிய நினைவிடம் கட்டி மக்கள் வழிபடுகிறார்கள். அந்த இடம் அற்புதங்கள் நடைபெறும் ஆலயமாகக் கருதப்படுகிறது. கிராமத்து மக்கள் தங்கள் நோய் தீர ஞானியை வழிபடுகிறார்கள்.

தனது பணத்தை எப்படி மீட்பது என்று தெரியாமல் அந்த ஊரில் ஒரு இரவு தங்குகிறான் யான்ஸ். மறுநாள் தன்னை ஒரு விஞ்ஞானி என்று சொல்லிக் கொண்டு அந்தப் பகுதியை ஆராய்கிறான்
பழமையில் ஊறிப்போன அந்த ஊர் மிகவும் சலிப்பானது. அந்த ஊரில் வசிக்கும் மருத்துவர் மற்றும் அவரது உதவியாளர் அழகான கதாபாத்திரங்கள். அவர்கள் சலிப்பின் உச்சத்திலிருக்கிறார்கள். அவர்களின் உரையாடல் மற்றும் செயல்கள் அபத்த நாடகம் போலவே உணர்த்தப்படுகின்றன
வறட்சியால் பாதிக்கப்பட்ட பாலைவன கிராமத்தில் வயதான விவசாயி ஒருவர் தனது மகன் இடம்பெயர்ந்து போய்விடலாம் என்ற அழைப்பினை நிராகரித்துக் கட்டாயம் மழை பெய்யும் என்கிறார். அதற்காகப் பிரார்த்தனையில் ஈடுபடுகிறார். இறந்தும் போகிறார்.

ஞானியின் சமாதியினுள் உள்ள தனது பணத்தைக் கொள்ளையிட யான்ஸ் பல்வேறுவிதங்களில் முயலுகிறான். அந்த ஊரும் அதன் விசித்திரமான மக்களின் நம்பிக்கை மற்றும் செயல்பாடுகளும் படத்தைத் தனித்துவமானதாக்குகின்றன.
தனது காயம்பட்ட நாயிற்குப் பல்கட்டுவதற்காக ஒருவன் முயலுவது, ஊரின் முடிதிருத்துபவர், அவரது வாடிக்கையாளர்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே இருமல் வரும் பெண்மணி, சலிப்பைப் போக்கிக் கொள்ளத் திருடும் கிழவர் என்று விநோதமான கதாபாத்திரங்கள்.

படத்தின் முடிவு எதிர்பாராத ஒன்று. ஆனால் கச்சிதமாகக் கதைக்குப் பொருந்திப் போகிறது.
கதை நிகழும் நிலப்பரப்பும் அதன் விசித்திர மனிதர்களும் நமக்குப் புதிய அனுபவத்தை உருவாக்குகிறார்கள். ஒரு நாவலைப் போலவே அனுபவம் ஆழ்ந்துவிரிந்து நமக்குள் பரவுகிறது. இதுவே படத்தின் வெற்றி.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
