பகிரங்க சித்தரிப்பு, ஸீரோ டிகிரி-ஆஸ்டின் சௌந்தர்

முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் வெளியேறிச் சென்றவனாக, எனது ஆன்டெனாவை தமிழ்நாட்டை நோக்கித் திருப்பி வைக்க, நவீனத் தமிழ் இலக்கியத்தில் எனக்கு மூன்று மும்மூர்த்திகள் தெரிந்தார்கள் –ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் சாரு நிவேதிதா. இதில் யார் சிவன், யார் விஷ்ணு, யார் பிரம்மன் என்ற வாதத்திற்கு செல்லவில்லை. ஒவ்வொருவரது பங்கும் முக்கியம் என்றுதான் இலக்கிய வாசகனாக நான் பார்த்தேன். படைப்புகளை படித்ததன் மூலம் எஸ். ராமகிருஷ்ணனையும் ஜெயமோகனையும், கண்டடைந்தேன், அல்லது அவர்கள்பால் ஈர்க்கப்பட்டேன்.

ஒரு காணொளியைப் பார்த்ததன் மூலம் சாரு நிவேதிதாவைக் கண்டடைந்தேன். அவரது தோற்றத்தாலும் (எழுத்தாளர்களில் இப்படி ஒரு ஸ்டைலான ஆளா?), வெளிப்படையான பேச்சாலும் ஈர்க்கப்பட்டேன். நான் பெரிதும் போற்றும் அசோகமித்தரனை அவரும் பாராட்டி சீராட்டுவதையும், உலக இலக்கியங்கள் பற்றி அவர் பேசுவதையும் கேட்டு அவரது ரசிகனாகவும் ஆனேன். அவரது கட்டுரைகளை , குறிப்பாக அவரது தளத்தில் வாசித்திருக்கிறேன். ஆழமாக அதிகம் அவர் படைப்புகளை வாசித்திராததால், அவருக்கு கடிதம் எழுதி தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளவில்லை.

‘ஸீரோ டிகிரி’ நாவல் எனது வாசிக்கவேண்டிய நூல்களில் பல வருடங்களாக இருந்தது.  நான், எப்பொழுதும் ஒரு எழுத்தாளனை நானாக வாசித்து ஒரு அவதானிப்பை ஏற்படுத்திக்கொளும் வரை அவரை தொடர்பு கொள்வதில்லை. இந்த வருடத்திற்கான விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் விருது சாரு நிவேதிதாவிற்கு என்று அறிவித்த பிறகு, அவரது நூல்களை அமேசானில் வாங்குவதற்காக பார்த்தவன், ‘ஸீரோ டிகிரி’ ஆங்கிலப் பதிப்பின் முதல் சில பக்கங்களை வாசித்தேன். பெண் வாசகியை அவர் விழித்து நீ இதைச் செய்துகொண்டிருக்கலாம். அதைச் செய்துகொண்டிருக்கலாம் என அவர் சொன்ன ஒவ்வொன்றும் உண்மையாக வெளிப்படையாக இருந்தது. ஆங்கிலத்தில்தான் வாசித்தேன் என்றாலும், அதன் தீவிரத்தால், இரண்டு முறை வாசித்தேன். Transgression, பின் நவீனத்துவம் என்ற இலக்கியக் கோட்பாடுகள் , பயிற்சிகள் என எதுவும் யோசிக்காமல் என்னால் நாவலினுள் இயல்பாக நுழைய முடிந்தது.

‘ஸீரோ டிகிரி’ நாவலில் 4-ம் அத்தியாயத்தில், கதைசொல்லி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வதே, என்னுடைய விமர்சனமாக / வாசிப்பனுபவமாக முதலில் வைக்கிறேன்.

இந்நாவலில், குறிப்பிடப்பட்டிருக்கும், லத்தீன் அமெரிக்க நாவல்களைப் படிப்பது அவசியம் என்று கருதுகிறாயா?

இல்லை. ( இந்த நாவலைப் புரிந்துகொள்வதற்காக வேண்டியதில்லை)

ஆம்  (இலக்கிய வாசகனாக வேண்டும் என்றால் சொல்லலாம்).

இந்த நாவல் தமிழ் நாவல்களில் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என நம்புகிறாயா?

ஆம்.

(ஜெயமோகன் சொல்வது செவ்விலக்கியம் வாசிக்கும்பொழுது ஒரு  நிறைவு வரும்.  நவீன இலக்கியம் தொந்தரவு செய்யும். இந்த நாவல் சரியான தொந்தரவு செய்கிறது. அப்புறம் என்ன?)

இந்நாவலை எழுதியவன் தண்டிக்கப்படவேண்டுமா?

இல்லை (இந்தக் கேள்வி எனக்கு அபத்தமாகப் படுகிறது)

இந்த நாவலில் ஒரிஜானலிட்டியை  நீ காணமுடிகிறதா ?

ஆம்.

(பால் கறக்கும் பெண்ணையும் குறிப்பிடுகிறீர்கள், தோழியுடன் புணர்ச்சியில் இருப்பவளையும் குறிப்பிட்டு என் நூலை வாசிக்கலாம் என்று எல்லோரையும் சம நிலையில் பார்க்கிறீர்கள். பதினெட்டு நிமிடங்களில் பதினெட்டு இடங்களில் குண்டு வெடித்திருக்கிறது. பதினெட்டு பேர் சாவு என்று அரசுத் தரப்பிலும், நூற்றியெட்டுபேர் என்று எதிர்க்கட்சிகள் சார்பிலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது   என்று அரசியல் நியாயங்களை சொல்கிறீர்கள். கடல் ஆமை தொண்ணூறு முட்டையிட்டாலும் கடலில் சேர்வது என்னவோ பதினெட்டுதான் என்ற நிதர்சனத்தையும் சித்தரிக்கிறீர்கள். அவந்திகாவின் டி.என்.சி. அனுபவங்களை வாசிக்கும்பொழுது என் உடம்பெல்லாம் இரத்தம். நீங்கள் எழுத்தாளன் எனும் பித்து நிலையில் இல்லாமல் இதையெல்லாம் எப்படி எழுதமுடியும்?)

மஸாக் மற்றும் மார்க்கி தெ ஸாத் இவர்களை வாசிக்காமல் இந்த நாவலை வாசிக்க வேண்டாம் என்கிறான் முனியாண்டி.

ஒத்துக்கொள்கிறாயா?

இல்லை (இதை வாசித்துவிட்டுக்கூட அவர்களை வாசிக்கலாம் இல்லையா?)

***

நல்ல சிறுகதை /  நாவல் வாசித்து முடித்தபிறகு தரிசனம் கிடைக்கலாம். அதில் வரும் பாத்திரங்கள் மனதில் அழிந்துவிடா ஓவியங்களாக (தொந்தரவாக ?) நின்றுவிடலாம். ஜெயமோகனது தேவகிச் சித்தியின் டைரியின் தேவகி, அசோகமித்தரனின் தண்ணீர் நாவலின் ஜமுனா,  எஸ். ராமகிருஷ்ணனின்,‘உனக்கு முப்பது வயதாகிறது’ சுகந்தி, இவர்களுடன் ‘ஸீரோ டிகிரி’ நாவலில் வரும் அவந்திகாவும், ஆர்த்தியும் எனக்கு அறிமுகமான பெண்களின் நிரையில் நிற்கிறார்கள். ஆர்த்தியின் கதை என்று ஸீரோ டிகிரியில் வர, அவளின் முன்கதையை அறிந்துகொள்ள, ‘எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்’  நாவலையும் வாங்கி வாசித்தேன்.

கி.ரா அவர்கள், நாட்டுப்புற பாலியல் கதைகள் அடங்கிய ‘வயதுவந்தவர்களுக்கு மட்டும்’ தொகுப்பு நூலில் , பாலியல் கதைகள் படிப்பதால் யாரும் கெட்டுப்போகமாட்டார்கள். அது சிரிப்பைத்தான் வரவைக்கும் என்று சொல்லியிருப்பார். ஸீரோ டிகிரி நாவலில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு செத்த மூளையின் கதையும் கதைக்குள் வரும் கதைகளும் அவ்வகைக் கதைகள்.

கி.பி.ஒ.நூ.செ.மூ-யின் நண்பன் குள்ளச் சித்தன் வைத்திருந்த ஓலை இப்படி இருந்தது என்று இரண்டு பக்கங்களுக்கு ஒற்று எழுத்துக்களை மேலே புள்ளியில்லாமல் எழுதியிருக்கிறார், சாரு. பழுப்பு நிறப் பக்கங்களில், உ.வே. சாமிநாத ஐயரைப் பற்றிய கட்டுரையில், “உ.வே.சா எழுதிய மகா வைத்தியநாதர் என்ற நூலை உஸ்மானியா பல்கலைக்கழக நூலகத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார் என் நண்பர் ஒருவர். அதிலும் புத்தகம் நெடுகிலும் ஒற்றெழுத்துக்களுக்குப் புள்ளியே காணோம்.” என்று கூறியிருப்பார். சாரு, அந்த அனுபவத்தை இங்கே வாசகனுக்கு கொடுக்கிறார்.

நாவல் வெளிவந்த சமயம் இருபத்து நான்கு வருடங்களுக்கு முன்னால் வாசித்திருந்தாலும், இந்த நாவலை இப்பொழுதுபோலவே வாசித்திருப்பேன் எனவே தோன்றுகிறது. வாழ்க்கையையும் நல்ல நாவல்களையும் ஒன்றென பார்க்கும் வாசகனாக நான் சொல்வது இதுதான். தெரியாமல் மலத்தில் கால் வைக்கும் அருவருப்பையல்ல கையூன்றீ குப்புற விழுந்துவிட்ட அனுபவத்தை, வாழ்வில் சந்தித்தவர்களும், அல்லது அப்படி விழுந்தவர்களை தானாக நினைத்து (empathy) துக்கப்படுபவர்களும் இந்த நாவலை எந்தவிதமான அயர்ச்சியுமில்லாமல் வாசிக்கமுடியும் என்பதே என் அனுமானம். வாழ்க்கை நாம் நினைத்தவாறா செல்கிறது? வாழ்வைச் சொல்லும் நாவலும் நினைத்தபடி இந்தக் கட்டுப்பாட்டில் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கவேண்டும்? வாழ்வில்  என்றோ ஒரு நாள் நடந்ததற்கும், இன்று நடப்பதற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்று பார்த்தால்தானே இருப்பதுபோல் இருக்கிறது. தொடர்பு இல்லையெனப் பார்த்தாலும் அப்படித்தான் இருக்கப் போகிறது. எப்படிப் பார்த்தாலும், குறைந்தபட்ச பாத்திரங்களை எடுத்துக்கொண்டு அபத்தமான வாழ்வைச் சித்தரிப்பதில் அதுவும் பகிரங்கமாக கூச்சமில்லாமல் விவரிப்பதில் ‘ஸீரோ டிகிரி’ வெற்றி பெற்றிருக்கிறது.

2022-ற்கான விஷ்ணுபுரம் விருது பெறும் எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களை வாழ்த்துகிறேன். அவரிடம், இனி நான் அவரது எழுத்துக்களை வாசித்தவனாக அணுக முடியும். விவாதிக்க முடியும்.

ஆஸ்டின் சௌந்தர்

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2022 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.