கனவு இல்லம், கடிதம்அன்புள்ள ஜெ
குளச்சல் மு யூசுப் அவர்கள் கனவு இல்லம் பற்றி எழுதியிருந்த கடிதம் வாசித்தேன். இந்த கனவு இல்லம் என்னும் சொல் புதிதே ஒழிய இந்த செயல் முன்பும் நடந்து வருவதுதான். பத்திரிகையாளர்கள், தமிழறிஞர்கள் ஆகியோருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பலகோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாக்களில் வாழ்பவர்களுக்கு அடுக்குமாடியில் குடியிருப்பு அளித்தால் அவர்களின் வேலைக்காரர்களுக்கே அதெல்லாம் சென்றுசேரும். அல்லது வாடகைக்கு கொடுக்கப்படும். யூசுப் போன்றவர்கள் மிக வறிய சூழலில் வாழ்பவர்கள். அவர்களுக்கு நாகர்கோயிலில் வீட்டுவசதி வாரியத்தில் ஓர் இல்லம் அளிப்பதொன்றும் சிரமமான விஷயம் அல்ல. ஒரு கலெக்டரேகூட முடிவெடுக்கலாம். அவ்வாறு எல்லாருக்கும் அளிக்கமுடியாதுதான். ஆனால் யூசுப் போன்ற சாகித்ய அக்காதமி விருது போன்றவை வாங்கியவர்களுக்காவது அளிக்கலாம்.
ஜி. அருணாச்சலம்
அன்புள்ள ஜெ
கனவு இல்லம் பற்றிய கட்டுரை வாசித்தேன். அந்த பரிசு தகுதியற்றவர்கள் போட்டிபோட்டு பிடுங்கிக்கொள்ள வழிவகுக்கும் என்பது உண்மை. தமிழக அரசு விழிப்பாக இருக்கவேண்டும். யூசுப் போன்ற கஷ்டப்படும் எழுத்தாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.
ராம்குமார்
Published on December 01, 2022 10:31