உடன்நிற்றல்

அன்புடன் ஜெ அவர்களுக்கு,

வணக்கம். ஒரு சிறப்பு குழந்தையின் தகப்பனாக என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இந்த வரிகளை நீங்கள் கூற கேட்ட பொழுது என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. “ஒரு பிறவியில் ஒரு பாவமும் செய்யாமல் வாழ்ந்து செல்லக்கூடிய வாய்ப்பு ஒரு குழந்தைக்கு அளிக்கப்படுகிறது என்றால், அது ஓர் நிறைவை சென்றடைகிறது. பாவம் செய்யாத ஓர் வாழ்க்கை! பிழையிழைக்காத வாழ்வு! அதற்கு உதவி செய்ய வேண்டியது உனது கடமை – குரு நித்ய சைதன்ய யதி”

ஒரு சமயத்தில் இந்த தமிழ் இலக்கியத்தில் உள்ள சிறந்த படைப்புகளை எல்லாம் படித்து விட வேண்டும் என்ற பேராவல் கொண்டு வாங்கிய நூல்கள் எல்லாம் எனது வீட்டில் செல்லரித்து கொண்டு இருக்கின்றன. கடவுளின் குழந்தையாக எங்களுக்கு பிறந்த குழந்தை என்னை முற்றிலும் வேறு ஒருவனாக மாற்றிவிட்டது…

இந்த சமூகம் இன்னும் சிறப்பு நிலை குழந்தைகளுக்கான சமூகமாக மாறவில்லை என்பது என் எண்ணம். நமது சமூகம் பயணிக்க வேண்டிய தொலைவு மிக நெடியது..

மேற்கத்திய சமூகம் இதனில் பலபடி முன்னே சென்று விட்டது…

நமது சமூகம் இந்த குழந்தைகளை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை…நீங்கள் கூறிய படி இன்குளூசிவ் ஆக மாறியது என்றால் எங்களை போன்ற பெற்றோர்கள் நிம்மதியை அடைவோம்..

அன்புடன்,

திருநாவுக்கரசு

சென்னை

அன்புள்ள திருநாவுக்கரசு

ஒரு சமூகம் எதை மையப்படுத்துகிறதோ அதையொட்டியே அதன் மனநிலைகளும் அமைகிறது. நம் சமூகம் போரையும் உழைப்பையும் முன்னிலைப்படுத்தியது. இன்று அறிவுசார் உழைப்பை, பொருளியலை முன்னிலைப்படுத்துகிறது. ஆகவே அதற்கு வெளியே இருப்பவர்களை புறநிலையாளர்களாக கருதுகிறது. அது பிழை அல்ல, சமூகத்தின் இயல்பு. அப்படித்தான் அது வளர்ந்திருக்க முடியும், தாக்குப்பிடித்திருக்க முடியும்.

இன்றைய காலம் நாம் போரிலிருந்தும் உயிர்வாழ்தலின் கடும் போட்டியில் இருந்தும் கடந்து வந்து அமைத்துக்கொண்ட ஒரு பண்பாட்டாலானது. மனித வரலாற்றில் இதுவே மிகச்சிறந்த காலகட்டம். நம் சமூகம் தொடர்ச்சியான அறிவுச்செயல்பாடுகள் வழியாகவே தன் கருணையை, அறத்தை விரிவுபடுத்தி வருகிறது.

இத்தகைய மைந்தர்களைக் கொண்டவர்கள் அந்தத் துயரில் இருந்து வெளிவருவது அத்தகைய மைந்தர்களுடன் நிலைகொள்வது வழியாகவே. உடன்நிற்றல் என்பது எந்த உறவுக்கும் அடிப்படை.

சென்றகாலத்தில் இருந்து நாம் அடைந்து, நம் பொதுமனநிலையாகக் கொண்டிருக்கும் கருணையற்ற நெறிகள் மற்றும் நம்பிக்கைகளை நாம் கடக்கவேண்டியது நவீன அறங்கள் வழியாக. சமத்துவம், உயிர்ச்சமநிலை போன்ற கருத்துக்கள் வழியாகத்தான்.

அக்கருத்துக்களை முன்வைத்து அடுத்த தலைமுறையில் மேலும் நெகிழ்வான பார்வையை உருவாக்குவதே இத்தகைய பெற்றோரின் கடமை. துயருற்றுச் சோம்பியிருப்பதோ, உலகைப் பழிப்பதோ அல்ல. மேலைச்சமூகம் முன்னால் சென்றதற்குக் காரணமாக அமைந்தவர்கள் அச்சந்தர்ப்பங்களில் தன் துயரைக் கடந்து வருந்தலைமுறைக்காக எழுந்து பணியாற்றியவர்கள்தான்.

அவ்வாறு முன்னுதாரணமாகச் செயல்படும் யெஸ்.பாலபாரதி அவர் துணைவியார் லட்சுமி பாலகிருஷ்ணன் போல திறன்மிக்க பலர் இங்குள்ளனர். அவர்களே முன்னுதாரணங்கள்.

ஜெ

யெஸ் பாலபாரதி யெஸ்.பாலபாரதி யெஸ்.பாலபாரதி – தமிழ் விக்கி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 12, 2022 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.