வளையத்திற்கு வெளியே
புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரனின் வீழ்ச்சியைப் பேசுகிறது Requiem for a Heavyweight (1962) திரைப்படம். பெலினியின் La Strada படத்தில் ஆன்டனி குயின் மிகச்சிறப்பாக நடித்திருப்பார். அதற்கு இணையான படமாகவே இதைச் சொல்வேன்.

பதினேழு வருடங்கள் ஹெவிவெயிட் சேம்பியனாகயிருந்த, நாற்பது வயதான மவுண்டன் ரிவேரா என்ற குத்துச்சண்டை வீரனாக ஆன்டனி குயின் நடித்திருக்கிறார். மிக நேர்த்தியான நடிப்பு.
அடிபட்டு வீங்கிய கண்ணுடன், எதிர்காலம் பற்றிய குழப்பங்களுடன், குடிபோதையில் அவர் நடந்து கொள்வதும். உதவி செய்ய முன்வரும் பெண்ணுடன் பழகும் போது ஏற்படும் தயக்கமும், தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு நட்பிற்காக விரும்பாத விஷயத்தைச் செய்வதும் என அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்
படம் மவுண்டன் ரிவேராவின் குத்துச்சண்டை போட்டியில் துவங்குகிறது. காசியஸ் க்ளேயின் என்ற வீரனுடன் மோதுகிறார். ஏழாவது சுற்றில் கண்ணில் அடிபட்டு பார்வை மங்கித் தடுமாறுகிறார், க்ளேயின் குத்து அவரை நிலை குலையச் செய்கிறது. போட்டியில் தோற்ற அவரை மருத்துவச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்கிறார்கள்.

மருத்துவர் அவரைப் பரிசோதனை செய்துவிட்டு இடது கண்ணில் பலமான பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், மற்றொரு குத்து விழுந்தால் முற்றிலும் பார்வை இழப்பு ஏற்படும் அல்லது அல்லது நிரந்தர மூளைச் சேதத்திற்கு வழிவகுக்கும் ஆகவே இனிமேல் குத்துச்சண்டை போட்டிகள் எதிலும் கலந்து கொள்ளக்கூடாது என்கிறார்.

இதை மவுண்டனால் ஏற்க முடியவில்லை. குத்துச்சண்டை போட்டிகளைத் தவிர வேறு எதுவும் அவருக்குத் தெரியாது. உறவினர் என்று யாரும் கிடையாது. . அவரது மேலாளரும் பயிற்சியாளருமான மாஷ் மவுண்டனை வைத்துக் குத்துச்சண்டை போட்டியில் பந்தயம் கட்டியிருக்கிறார். மவுண்டன் தோற்றுவிடவே பணம் கேட்டு மோசடிகும்பல் அவரை மிரட்டுகிறார்கள்.
இனி தன்னுடைய பிழைப்பிற்கு என்ன செய்வது என மவுண்டனிற்குத் தெரியவில்லை. வேலை தேடி அலைகிறார்
அவருக்கு உற்றதுணையாக இருப்பது மவுண்டனின் உதவியாளராகவும் தந்தையைப் போல நேசிப்பவருமான ஆர்மி மட்டுமே. அவர் மாஷின் சுயநலத்தைப் புரிந்து கொண்டு கண்டிக்கிறார். ஆனால் பணக்கஷ்டத்தில் மாட்டிக் கொண்ட மாஷ் எப்படியாவது மவுண்டனை திரும்பப் போட்டிக்களத்திற்குக் கொண்டு வர முயலுகிறார்
ஆறாம்வகுப்பு மட்டுமே படித்துள்ள மவுண்டனிற்கு என்ன வேலை கேட்பது எனத் தெரியவில்லை. நடிக்கப் போவதாக இருந்தாலும் வேஷம் கிடைப்பதில்லை. இந்நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணியாற்றும் கிரேஸ் மில்லர் அவர் மீது பரிவு கொண்டு உதவி செய்ய முன்வருகிறாள்.

ஒரு நாள் கிரேஸ் மில்லர் குத்துசண்டைவீர்ர்கள் சந்திக்கும் மதுவிடுதிக்கு மவுண்டனைத் தேடி வருகிறாள். அது ஒரு அற்புதமான காட்சி. அவளுடன் பியர் அருந்தும் மவுண்டன் முதன்முறையாக இசை கேட்கிறார். தனது வாழ்க்கை முழுவதும் குத்துச்சண்டையிலே கழிந்துவிட்டது ஆகவே இனிமையான இசையைக் கேட்கும் வாய்ப்பே வரவில்லை என்கிறார். அந்தச் சந்திப்பில் மவுண்டன் தனது கடந்தகாலம் பற்றி ஆசையாகப் பேசுகிறார். இரவில் அவளுடன் வீதியில் நடந்து வரும் போது தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை மவுண்டன் காட்டிக் கொள்கிறான். அந்த இரவு அவரது வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
இன்னொரு காட்சியில் மவுண்டனை தேடி அவரது அறைக்கே கிரேஸ் மில்லர் வருகிறாள். அவளை முத்தமிடும் மவுண்டன் தான் எல்லை மீறி நடந்து கொள்ளக்கூடும் என அவளை விடைகொடுத்து அனுப்பி வைப்பது சிறப்பான காட்சி.
சிறார் முகாம் ஒன்றில் மவுண்டன் கவுன்சிலராக வேலைக்குச் சேருவதற்குக் கிரேஸ் ஏற்பாடு செய்கிறாள். குறிப்பிட்ட நாளில் இதற்கான நேர்காணலுக்கு மவுண்டன் செல்ல வேண்டும். அதை அறிந்த மாஷ் வேண்டுமென்றே அவரைக் குடிக்க அழைத்துச் சென்று நேர்காணலைத் தடுத்துவிடுகிறான். ஆனால் உண்மை அறிந்த மவுண்டன் போதையுடன் நட்சத்திர விடுதிக்குச் செல்கிறார். எந்த அறை எனத் தெரியாமல் எல்லா அறைக்கதவுகளையும் தட்டுகிறார். குழப்பம் விளைவிக்கிறார். அவரது முரட்டுத்தனத்தால் அந்த வேலை பறிபோகிறது

இந்நிலையில் வேடிக்கையான ஒப்பனை அணிந்து கொண்டு நடக்கும் குத்துச்சண்டை போட்டி ஒன்றில் மவுண்டன் கலந்து கொண்டு அடிவாங்கித் தோற்றால் பணம் கிடைக்கும் என்று தெரியவருகிறது. மாஷ் அதற்கு ஏற்பாடு கொள்கிறான். ஆரம்பத்தில் இதற்குச் சம்மதித்த மவுண்டன் அது தனக்கு அவமானத்தை ஏற்படுத்தும் என உணர்ந்து விலகிப் போகிறார். இதனால் மாஷ் கொல்லப்படும் சூழல் உருவாகிறது. முடிவில் நட்பிற்காக மவுண்டன் தனது சுயமரியாதையை விட்டுக் கொடுக்கிறார்
நான்கே கதாபாத்திரங்கள். அதுவும் கிரேஸ் மில்லர் சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். முக்கியக் கதாபாத்திரங்கள் மூவர் மட்டுமே. இவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகள் யாவும் நிஜமாக இருக்கின்றன. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மவுண்டன் தன்னைப் பற்றிச் சொல்வதும் மதுவிடுதியில் தனது கடந்தகால நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதும், வீட்டில் தன்னை மாஷ் ஏமாற்றியதை அறிந்து கோபம் கொள்வதும் மறக்கமுடியாத காட்சிகள்.
புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரனாக இருந்தாலும் மவுண்டன் தனக்கென எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளவில்லை, அவன் சுரண்டப்படுகிறான் அவமானப்படுத்தப்படுகிறான். ஆனால் முடிவில் தன்னை ஏமாற்றியவனை மன்னித்து உதவி செய்கிறான்.
குத்துச்சண்டை போட்டியில் பந்தயம் கட்டி பணம் சம்பாதிக்க முயலும் மாஷ் ஏமாற்றுக்காரனில்லை. அவனுக்கும் எதிர்காலம் குறித்த பயமிருக்கிறது. பணத்தேவை இருக்கிறது. அதை ஒரு காட்சியில் வெளிப்படையாகவே தெரிவிக்கிறான். சூழ்நிலை தான் அவனைத் தவறுகளை நோக்கித் தள்ளுகிறது.
கதாபாத்திரங்களின் அகவுணர்வுகள் ஒளி மற்றும் நிழல் வழியே அழகாக வெளிப்படுத்தப்படுகிறது. தனியே இரவில் மவுண்டன் வீதியில் சுற்றியலையும் காட்சிகளும், மதுவிடுதி சூழலும், குத்துச்சண்டை போட்டியும் Arthur Ornitz யால் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
மவுண்டனின் கடந்தகால வெற்றிகள் உலகிற்குப் பெரிய விஷயமில்லை. புதிய வீரன் உருவாகிவருவான். புதிய வெற்றிகளைப் பெறுவான். உலகம் கைதட்டி ஆரவாரம் செய்யும். இந்த முடிவற்ற பந்தயச்சுழல் மாறவே மாறாது. கைதட்டுகள் இல்லாத அரங்கின் அமைதி துயரமானது.
உருவத்தில் பலசாலியாக இருக்கும் மவுண்டன் உள்ளத்தில் சிறுவனைப் போலிருக்கிறான். ஓய்வு பெற்றபிறகே அவன் தன்னைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறான். தனக்கான மனிதர்களில்லை என்பதை உணருகிறான். அந்த ஏக்கம் தான் கிரேஸின் அன்பைப் பெறும் போது அவனை உணர்ச்சிவசப்பட வைக்கிறது
கிரேஸின் கடந்தகாலம் படத்தில் சொல்லப்படவில்லை. ஆனால் முதற்சந்திப்பிலே அவன் மீது இரக்கம் காட்டும் அவள் எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என நினைக்கிறாள். தேடி வந்து அன்பு செலுத்துகிறாள். அவர்கள் உறவு Beauty and the Beastயை நினைவுபடுத்துகிறது
குத்துச்சண்டை போட்டிக்கென விதிகள் இருக்கின்றன. அதன்படி தான் சண்டையிட வேண்டும். ஆனால் அன்றாட வாழ்க்கையில் இப்படி எந்த விதியும் கிடையாது. எந்தக் குத்து உங்களை நிலைகுலைந்து விழச் செய்யும் என்று அறிய முடியாது. மவுண்டன் சந்திப்பதும் இதையே.
.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
