உளத்திட்பம் என்பது…

அன்புள்ள ஜெ,

எனக்கு 24வயதாகிறது. மிகுந்த மனக்குழப்பத்தில் தவித்த நாட்களில் தான் உங்கள் வலைத்தளத்திற்கு வந்தடைந்தேன்.

அப்பொழுது என்மீதே எனக்குச் சுய காழ்ப்பு இருந்தது. ஏன் நான் கண்ட கனவுகள் ஒன்றையும் செயல்படுத்தவில்லை, ஏன் காதல் எனக்குச் சாத்தியப்படவில்லை? முக்கியமாக வேலையின்றி நகரத்தில் சுற்றிக்கொண்டிருந்த நாட்களில் இரண்டாவது கேள்வி என்னை வதைத்துக்கொண்டே இருந்தது.போதாக்குறைக்கு Political Correctness கும்பல்களில் சிக்கிக்கொண்டு, எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்கும் Cancel Culture மனநிலையில் இருந்தேன்.

அப்பொழுது தான் சமூக வலைதள நண்பர் ஒருவர் உங்களின் “காதலைக் கடத்தல்” கட்டுரையை எனக்கு அனுப்பினார். அக்கட்டுரை அப்பொழுது இருந்த அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து என்னை ஆசுவாசப்படுத்தியது.
அவரின் பரிந்துரையின் பேரில் உங்கள் புனைவுலகத்தில் நுழைய அனல்காற்றை வாசித்தேன், பின்பு அறம்.துவங்கினால் முடிவு வரை பிசிரில்லாமல் ஓடைபோல் செல்லும் நடையைக் கொண்டு தற்கால எழுத்தில் உங்களைப் போன்று எழுதுபவர் அரிது என்று உணர்ந்தேன். முக்கியமாக இந்த வலைத்தளம்; தியானம், யோகம், இலக்கியம் என்று பல்வேறு விசயங்களில் எனக்கு அறிவைக்கொடுத்தது. தன்மீட்சி எனக்குப் புதிய திறப்புகளை அளித்தது.இப்பொழுது ஓரளவுக்கு வாழ்வு சீராகி, உயர்கல்வி பயின்று வருகிறேன்.

ஒரு சந்தேகம், பல ஆண்டுகளாகச் செயலின்மைக்குப் பழகிப்போன ஒருவர், திட்பமான செயலாற்றும் மனநிலைக்கு வருவது எப்படி? செயலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு இருந்தாலும், ”வாழ்க்கை அதுவாக மாறிவிடும், ஓடைபோல் வாழ்வின் போக்கில் செல்வோம்.” போன்ற எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் சாக்குகள் என்னை நத்தை வேகத்தில் நகர வைக்கின்றன.

இப்படிக்கு,
PK

அன்புள்ள பிகே

‘எண்ணிய எண்ணியாங்கெய்துவர் எண்ணியார் திண்ணியர் ஆகப்பெறின்’ என்று வள்ளுவர் கூற்று. பல தருணங்களில் நம்மை பொருள்குழப்பத்திற்கு தள்ளும் ஒரு வரியும் கூட. குறள் போன்ற நூல்களை ஆசிரியர் முன் நெடுவிவாதமின்றி பயிலக்கூடாது என்பதற்கான சான்றும் கூட.

பெரும்பாலானவர்கள் ‘எண்ணியவற்றை எண்ணியாங்கு எய்துபவர்’ எவரென்றால் அவ்வாறு எண்ணியவர்களில் எவர் உளத்திட்பமுடையவரோ அவர் மட்டும்தான்’ என்று பொருள் கொள்வார். அதாவது இயல்பிலேயே உளத்திட்பம் வாய்ந்தவர்கள் மட்டுமே எண்ணியதை எய்தமுடியும் என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

அவ்வாறு இளமையிலேயே உளத்திட்பம் ஒருவருக்கு வர முடியுமா என்ன? எவராயினும் தான் எவரென்றும், தன் ஆற்றல் என்னவென்றும், தன் இலக்கென்னவென்றும், செல்வழி என்னவென்றும் எண்ணி மயங்கிச்சுழலும் ஒருமுதிரா இளமைக்காலம் அவர்களுக்கு உண்டு அல்லவா? அப்போது உளத்திட்பம் இருக்க முடியுமா என்ன? அந்நிலையில் ஒருவர் தான் எண்ணியவற்றை எப்போதுமே எய்த இயலாது என்ற சலிப்பையும் சோர்வையும் தானே அடைவார்.

நம் வாழ்க்கையில் உளத்திட்பம் உடையவர்கள் என்று பலரைப்பார்க்கிறோம். எத்தகையவர் அவர்? முதலில் கண்ணுக்குப்படுபவர்கள் செல்வவளம் உடையவர்கள். செல்வம் அளிக்கும் தன்னம்பிக்கையும் துணிவும் என்னவென்று நான் தொடர்ந்து கண்டுகொண்டிருக்கிறேன்.

பலசமயம் பெருஞ்செயலாற்றியவர்கள் தந்தையர் ஈட்டிய பொருளை இளமையிலேயே பெற்றவர்கள். அதனால் உயர்கல்வியும் உயர்குடிச்சூழலின் பழக்கமும் அடைந்தவர்கள். தொடக்கத்திற்கான முதலீடு கையில் இருக்கும். தன் உயிர்வாழ்தலுக்காக மட்டும் எதையும் செய்யவேண்டியதில்லை என்னும் சூழல் இருக்கும். தன் ஆற்றலை தன் இலக்கற்ற வேறு விஷயங்களில் சிதறடிக்க தேவை இருக்காது. எதிர்காலம் குறித்த அச்சம், எதிர்பாராமை குறித்த பதற்றம் இருக்காது. உளத்திட்பம் என நாம் காணும் பெரும்பாலான ஆளுமைப்பண்பு, செல்வத்திலிருந்து வருவது.

அதற்கு அடுத்தபடியாக அறிவு அளிக்கும் உளத்திட்பம். அறிவு தெளிவென ஆகும்போதுதான் அந்த உளத்திட்பம் வருகிறதே ஒழிய அறிவு மட்டுமே ஒருவனை வந்தடைந்துகொண்டிருக்கையில் அத்திட்பம் வாய்ப்பதில்லை. பல தருணங்களில் பகுதியான அறிவு, ஒத்திசைவற்ற அறிவு ஒருவனுக்கு பதற்றத்தையும் மிகையார்வத்தையும், விளைவாக எதிர்நிலை பண்புகளையும், இறுதியாக கடும் உளச்சோர்வையும் அளிக்கும். அறிவுச்சூழலில் இருப்பவர்களில் இன்று பெரும்பாலானவர்கள் இந்தநிலையில் தான் இருக்கிறார்கள்.

ஏனெனில் இன்று அறிதல் பலமுனைப்பட்டு ஒருவனை வந்து தாக்குகிறது. தேடி, கற்று அடையும் அறிவல்ல இன்று ஒருவனிடம் இருப்பது. ஒவ்வொருவரையும் தேடிவந்து அருவியென அவர்கள் மேல் பொழியும் அறிவு அவர்களின் தெரிவுக்கு அப்பாற்பட்டது. அத்தனை அறிவையும் உள்வாங்கி அமைப்பென ஒருங்கிணைத்து கூர்கொள்ளச்செய்து தன் வினாக்களை அவற்றின்மேல் ஏவி, விடைகளை பெற்று தெளிவு கொள்பவர் மிக அரிதானவர்.

கல்வி தெளிவென ஆவதற்கு முறையான ஆசிரியர்கள் தேவை. அந்த ஆசிரியர் மாணவர்களிடம் தெளிவை உருவாக்கும் நோக்கம் கொண்டிருக்கவேண்டும். தனது அரசியல் அல்லது அதிகாரம் அல்லது பற்று சார்ந்த நோக்கங்களை மாணவர்களிடம் திணிக்கக்கூடாது. அத்தகையோர் இன்று மிக அரிதாகவே கிடைக்கிறார்கள். ஆகவே தெளிவு கொண்ட அறிவென்பது காணக்குறைவானது.

அத்தகைய அறிவுத்தெளிவு இருக்குமெனில் அது உளத்திட்பத்தை அளிக்கிறது. தன் இலக்கென்ன என்று, தன் பணி என்ன என்று, அதில் எஞ்சுவதென்ன என்று முன்னரே அறிந்தவற்றின் விளைவாக வரும் உளத்திட்பம் அது. அதுவே

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்

என்று கூறும் ஒருமை நிலைக்கு ஒருவரை இட்டுச் செல்கிறது.

நான் பார்த்த வரை கல்வியையும் அக்கல்வியைப் பயன்படுத்தும் களத்தையும் ஒருங்கே கண்டடைந்தவர்கள், கற்பவற்றை செயலென்று அக்கணமே ஆக்கிக்கொண்டிருப்பவர்கள், செயல் வழியாகக் கல்வியையும் கல்வி வழியாக செயலையும் முழுமை செய்து கொள்பவர்கள் மட்டுமே அந்த தெளிவுடன் உளத்திட்பத்துடன் இருக்கிறார்கள்.

நம் சூழலில் பெரும்பாலும் அத்தகையோர் மீதுதான் தெளிவிலாக் கல்வி கொண்டவர்களின் வஞ்சமும் காழ்ப்பும் வசையும் ஏளனமும் பெருகிக்கொண்டிருக்கும். ஏனெனில் தெளிவு பிறரை அச்சுறுத்துகிறது. அது ஓர் அறைகூவல் போன்றது. தெளிவற்றவர்கள் அத்தெளிவுடன் மோதியே தங்களை நிரூபிக்க முயல்வார்கள். தெளிவு கொண்டவர்களை சிதைத்து தன்பக்கம் இழுக்க இடைவிடாது எல்லாத்தரப்புகளும் முயலும். அதைக்கடந்து தெளிவு நின்றிருக்கும் என்பதனால் அம்முயற்சிகள் அனைத்தும் ஒவ்வொரு முறையும் தோல்வியில் முடியும். தோல்வியிலிருந்து மேலும் வஞ்சம் மேலும் சீற்றம் உருவாகிறது. ஆனால் அவ்வஞ்சங்களைக் கடக்க தெளிவால் இயலும்

செல்வமும் அறிவும் அளிக்கும் திட்பம் உலகியல் சார்ந்தது எனில் அதற்கப்பால் உள்ளது ஆன்மீகம் அளிக்கும் திட்பம். நான் இங்கு மதம் சார்ந்த பற்றை ஆன்மீகம் என்று சொல்லவரவில்லை. பக்தியையோ அல்லது வெவ்வேறு வகையான பயிற்சிகளையோ மதம் என்று கூறவில்லை. ஆன்மீகம் என்று நான் சொல்வது முழுதறிவை அடைந்தவனின் நிலைபேற்றை. தன் வாழ்விலிருந்து, இப்பிரபஞ்சத்திலிருந்து, தன் ஆசிரியர்களிடமிருந்து ஒருவர் அடையும் சமநிலை கொண்ட அறிவு ஆன்மீகம் எனப்படுகிறது.

அது அறிதலால் நிகழ்வதல்ல, உணர்ந்து ஆதலால் நிகழ்வது. அது ஒன்றைச்சார்ந்து நிலைகொள்ளாதது. ஒன்றில் மட்டும் குவியாமல் அனைத்தையும் ஒருங்கிணைத்த, தனக்கென ஒரு மையத்தை சமைத்துக்கொள்வது. கலை, இலக்கியம், தத்துவம் ஆகிய மூன்றும் அடிப்படையில் ஆன்மீகத்தை நோக்கிச் செல்பவை. ஆன்மீகத்தால் மட்டுமே ஆழமும் அழுத்தமும் பெறுபவை.

மீண்டும் முதல் வினா. இந்த உளத்திட்பத்தை அத்தனை பேரும் அடையமுடியுமா என்ன? செல்வம் மூதாதையரால் ஈட்டித்தரப்பட்டிருக்க வேண்டும். அறிவும் ஆன்மீகமும் ஒருவன் தன் பயணத்தில் காலப்போக்கில் எய்துவது அப்பயணத்தை நிகழ்த்துவதற்கே உளத்திட்பம் தேவைப்படுகிறது. எனில் உளத்திட்பம் ஓர் இளையோனுக்கு எவ்வாறு அமையமுடியும்?

உளத்திட்பமின்மை என்பது ஒரு குறைபாடோ ஆளுமைச்சிக்கலோ அல்ல. உளத்திட்பமில்லாத ஒரு காலகட்டத்தை கடந்து வராத எவரும் இருக்க இயலாது. அது ஓர் ஆளுமையின் வளர்ச்சிக்காலகட்டம் மட்டுமே.  ஒரு மரம் செடியென்றாகி கிளை விரியும்போது எப்பக்கம் சூரிய ஒளி இருக்கிறது, எங்கே நீரிருக்கிறது என்று தன் வேர்களாலும் கிளைகளாலும் கண்டடையக்கூடிய காலகட்டம் அது. அது திட்பத்தை அது அடிமரம் பெருத்து வானில் கிளை விரித்த பின்னரே அடையமுடியும். அதுவரை காற்றிலாடி திசைகள் தோறும் நெளிந்து அது உருவம் கொள்கிறது.

காற்றில் பெருமரங்களைப் பார்க்கையில் அவை அனைத்துமே ஒரு நடனவடிவ உடல் கொண்டிருப்பதைப் போலிருக்கிறது. அந்த நடனம் அவற்றின் வளர்ச்சிப்போக்கில் நிகழ்ந்தது. அவை அடைந்த போராட்டத்தின் கண்கூடான வடிவம் இது. எந்த ஓர் ஆளுமையையும் எடுத்துப்பார்த்தாலும் அவருடைய போராட்டத்தின் வழியாகவே அவர் தன்னுடைய வடிவத்தை அடைந்திருப்பதை பார்க்க முடியும்.

அந்த தேடல்காலகட்டத்தில் முன்நகர்வதற்கான உளத்திட்பத்தை எப்படி அடைவது என்பது தான் நீங்கள் கேட்கும் வினா. அது எவரும் எங்கிருந்தும் கொண்டு வருவதல்ல. எங்கிருந்தும் அளிக்கப்படுவதல்ல. ஒருவர் தன்னால் ஈட்டிக்கொள்ளப்படுவதென்று உணர வேண்டும். ஈட்டிக்கொள்வதற்கான வழிகள் என்ன? உளத்திட்பம் என்பது இன்றைய சூழலில் மிக அரிதான ஒன்று.

சென்ற தலைமுறையில் இளமைப்பருவம் என்பது மிகக்குறுகியது. பதினெட்டு பத்தொன்பது வயதுக்குள் மரபு வகுத்து வைத்திருக்கும் வாழ்க்கை ஓடைக்குள் ஒருவன் வசதியாகச் சென்று சேர்ந்து விடுகிறான். எவரை மணப்பது, எத்தொழில் செய்வது, எங்கு வாழ்வது, என்னென்ன கடமைகளை ஆற்றுவது என்பது எல்லாமே அவனை மீறி முன்னரே தீர்மானிக்கப்பட்டு அவனுக்கு ஒரு பொட்டலமாகவே அளிக்கப்பட்டுவிடுகிறது. அவனுக்கு தெரிவுகளில்லை. ஆகவே அது சார்ந்த பதற்றங்களில்லை.

சுதந்திரமின்மை என்பது ஒரு வகையான சுதந்திரம். முடிவெடுக்கும் பொறுப்பிலிருந்து அது நம்மை விடுவிக்கிறது. சுதந்திரம் என்பது இருத்தலியல் பதற்றத்தை (பறதி, angst) அளிக்கக்கூடியது என்று மிக விரிவாக சார்த்தர் விளக்குகிறார்.

இருத்தலியல் பதற்றம், பறதி என்பது ஒருவனுக்கு சமூகம் அளிக்கும் சுதந்திரத்தால், அதை பயன்படுத்திக்கொள்ளும் அறிவோ ஆளுமையோ இல்லாத நிலையில் உருவாவது. சென்ற தலைமுறையில் இல்லாத பறதி இன்று உள்ளது. இன்று நம்முன் வாய்ப்புகள் திறந்து கிடக்கின்றன. முடிவற்ற வாய்ப்புகள். அவற்றில் எங்கு செல்லவும் முழு சுதந்திரம் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நம்மால் தெரிவு செய்ய முடியவில்லை. நாம் யார் என்று நமக்கு தெரியவேண்டும் நம், திறனென்ன என்று நாம் புரிந்துகொண்டிருக்க வேண்டும். அவ்வாறில்லாத நிலையில் திறந்திருக்கும் ஆயிரம் வழிகளுக்கு முன் எங்கும் செல்லமுடியாமல் திகைத்து அங்கேயே நின்று நம் இளமைப்பருவத்தை முற்றிலும் இழக்கிறோம்.

இப்பறதி பற்றி எனக்கு வரும் கடிதங்கள் எல்லாமே இருபதிலிருந்து முப்பது வயதுகளுக்குள் இருப்பவர்களால் எழுதப்படுபவை. தங்கள் இளமைப்பருவத்தை கிட்டத்தட்ட அவர்கள் கடந்துவிட்டார்கள், கடந்துவிட்டோம் என்று உணர்கிறார்கள். அதிலிருந்து எழுகிறது இந்தப் பதற்றம்.

என் பதில் ஒன்றே. நீங்கள் யார் என்று நீங்கள் கற்பனை செய்து கொண்டிருக்க வேண்டாம். அந்தக்கற்பனை என்பது பெரும்பாலும் உங்களுடைய தன்விருப்பிலிருந்து உருவாவது. தன் விருப்பென்பது ஆணவத்தின் ஒரு இனிய வடிவம். அது உங்களை நீங்களே மதிப்பிட உதவாது.

தன்முன்னேற்ற நூல்கள் திரும்பத்திரும்ப இந்த ஆணவத்தை தன் விருப்பாக மாற்றிக்கொள்ள கற்பிப்பவை மட்டுமே. ‘நம்பு நீ ஆற்றல் மிக்கவன், அரியவன் என எண்ணு. உன்னால் முடியும்’ என்று அவை திரும்ப திரும்பச் சொல்கின்றன. அந்த மந்திரத்தை நீங்கள் திரும்பத்திரும்ப சொன்னால் விடுபட்டுவிடுவீர்கள் என்று அவை கற்பிக்கின்றன. உண்மையில் நம்பிக்கை இழந்து தன்முனைப்பிழந்து இருப்பவரிடம் அந்த தன்விருப்பு ஒருவகை ஆற்றலாக செயல்படும். அவர்களை அது முன்னகர்த்தும், சற்று விடுவிக்கவும் செய்யும். ஆகவே நான் ஒருபோதும் தன்முன்னேற்ற நூல்களை முற்றிலும் மறுத்துரைக்கமாட்டேன்.

ஆனால் தானாகவே சற்று சித்திக்கும் ஒருவருக்கு அந்நூல்கள் பயனற்றவை .ஏனெனில் அவற்றைப் படிக்கும்போது அவற்றுக்கு எதிரான தர்க்கங்களையும் சிந்திக்கும் இளைஞன் உருவாக்கிக்கொள்வான் அதன்பிறகு தன்முனைப்பு நூலுக்கும் அவனுக்குமான ஒரு உரையாடலும் அதன் விளைவான ஒரு குழப்பமும் மட்டுமே அவனுக்கு இருக்குமே ஒழிய அந்நூல்களின் வழியாக இம்மி கூட முன்னகர்ந்திருக்கமட்டான். அத்தகையோருக்காகவே இந்தக்கட்டுரையை எழுதுகிறேன். அத்தகையோர் ஆற்றவேண்டியது என்ன ?

அதையே மீண்டும் சொல்கிறேன், செயல். செயலெனில் என்றோ ஒருநாள் வென்றெடுக்கப்போகும் கோட்டை அல்ல. அதன் மேல் நீங்கள் பறக்கவிடப்போகும் அந்த வெற்றிக்கொடி அல்ல. அது வரட்டும் அதை சென்றடையலாம். ஆனால் இப்போது இங்கு என்ன செய்கிறீர்கள் என்பதை முக்கியமானது. செய்யத்தொடங்குவதே முக்கியமானது. முதற்செயல் அறுதி வெற்றியைவிட ஒருபடி மேலானது. மிகச்சிறிதாக இருக்கட்டும். மிக மிக எளியதாக இருக்கட்டும். ஒருவேளை முற்றிலும் பயனற்றதாகக்கூட இருக்கட்டும். ஆனால் செயலாற்றத்தொடங்கி செயலின் வழியாக நம் ஆற்றலை நாமே கண்டுகொள்வது தான் உளத்திட்பத்தை அடைவதற்கான முதல் வழி.

நீங்கள் ஒரு ஈருளியில் செல்கிறீர்கள் அது திடீரென்று நின்றுவிடுகிறது. முன்பொருமுறை அந்த ஈருளியை கழற்றிப் பார்த்திருந்தீர்கள் என்றால் நீங்கள் அடையும் பதற்றம் எந்த அளவுக்கு குறைந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். தன்னம்பிக்கையும் உளத்திட்பமும் கொண்டவர்கள் எல்லாருமே செயலாற்றி அதன்வழியாக பெற்ற அனுபவம் வழியாகவே அவற்றை அடைந்திருக்கிறார்கள். ஆகவே துளித்துளியாக செயலனுபவத்தை ஈட்டிக்கொள்ளுங்கள் என்றே சொல்வேன்.

இன்று உங்களால் இயன்ற மிக எளிதில் செய்யத்தக்க ஒரு செயலைச்செய்யுங்கள். அதன் வெற்றியைச்சுவையுங்கள். அது அளிக்கும் நம்பிக்கையை ஈட்டிக்கொள்ளுங்கள். அது ஒரு படி. இயல்பாகவே நீங்கள் அடுத்த படிக்கு தான் கால் வைப்பீர்கள். அது எச்செயலாகவும் இருக்கட்டும் கற்றல், சேவை செய்தல், உழைத்தல் எதுவாக இருப்பினும் அதில் உங்கள் ஆற்றல் செலவிடப்படவேண்டும். உங்கள் ஆளுமை அதில் முழுமையாக ஈடுபடவேண்டும். அதனூடாக நீங்கள் எதையோ கற்றுக்கொண்டிருக்க வேண்டும். அந்தக்கற்றல் அளிக்கும் இன்பம் உங்களை விடுதலை செய்வதை நீங்களே பார்ப்பீர்கள். அதனூடாக நீங்கள் முன்னகர்வதை உணர்வீர்கள்.

மனத்திட்பம் என்பது ஒட்டுமொத்தமாக ஒருவரிடம் வந்து சேரும் பெருஞ்செல்வம் அல்ல. அது ஒவ்வொரு ரூபாயாக ஈட்டிக்கொள்வது. ஒரு செயல் வழியாக ஒரு நாணயத்தை பெறுகிறீர்கள். உங்கள் களஞ்சியத்தில் செல்வம் நிறையத்தொடங்குகிறது. ஒருநாள் பெருஞ்செவ்லவந்தராக அதன்மேல் ஆம்ர்ந்திருப்பீர்கள். அதன் நிமிர்வுடன் நம்பிக்கையுடன். அந்த செயல் நோக்கிச் செல்லும் விசையை வேறெவரும் அளிக்க முடியாது. அதை நீங்களே உங்களிடமிருந்து பெறவேண்டும்.

ஒவ்வொருவரும் அவ்வண்ணம் செயல்நோக்கி செல்லமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. நான் ஏராளமானவர்களை பார்க்கிறேன். செயல் என எதிலுமே ஈடுபடாமல், செய்யநேர்ந்தவற்றை மட்டுமே செய்துகொண்டு, முழு வாழ்க்கையும் வாழ்ந்து முடிப்பவர்கள் பலகோடிபேர் இங்குள்ளனர். அவர்கள் வாழ்ந்து மடிவதும் இவ்வியற்கையின் ஒரு நிகழ்வே. சற்றேனும் அகவிசை கொண்டு தன்னைத்தானே செலுத்திக்கொள்ள முடியும் ஒருவரிடம் மட்டுமே நான் பேச விரும்புகிறேன்.

நான் அவர்களிடம் சொல்வது முதற்செயல் தொடங்குக என்றே.

ஜெ

பிகு :நான் சொல்வன எவையும் புதியவை அல்ல. இன்றைய தன்முன்னேற்ற நூலாசிரியர்கள் அனைவருக்கும் முன்னோடியான எமெர்ஸன் அவருடைய Self-Reliance என்ற புகழ்பெற்ற கட்டுரையில் கூறியவையே. நூறாண்டுகளுக்கும் மேலாக உலகமெங்கும் சென்று இளைஞர்களின் செவிகளில் ஒலிக்கும் பெருங்குரல் அவருடையது

ஜெ

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 30, 2022 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.