கோவை விழா, கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

கோவை மணி விழாவில் கலந்து கொண்டேன். மிகவும் சிறப்பாக நடந்தது. அது ஒரு குருவை காண பல சீடர்களின் கூடுகை. வாசகர்கள் சிறகடித்துக் கொண்டிருந்தார்கள்.

இருத்தலுக்கும் வாழ்தலுக்குமான வேறுபாட்டை உணர்ந்து தேடத் தொடங்குகையில் உங்கள் எழுத்துக்களை கண்டடைகிறோம். அது பல சாத்தியங்களை திறக்கிறது. இலக்கிய பார்வையிலும், அறத்தின் பார்வையிலும்.

அறத்தின் மீதான சந்தேகம் எனக்கு நெடுநாட்களாக உண்டு. அது உண்மையில் உள்ளதா அல்லது புனைவா என்பதே அது. சமீபத்தில்  கரையான் புற்று குறித்து நீங்கள் பேசிய ஒரு காணொளியை கண்டேன். அதில் அறத்தை குறித்து நீங்கள் அருமையாக  விளக்கியிருந்தீர்கள். அது அறம் குறித்த நம்பிக்கையை உறுதி செய்தது. இன்னும் பற்பல.

ஒரே நாளில் வந்து திரும்பியதால் உங்களோடு பேச நேரம் கிடைக்கவில்லை. விழா முடியும் வரை இருந்து விட்டு திரும்பினேன். என் மனைவி, விழாவை வீட்டிலிருந்தே ரசித்திருக்கலாமே அவரையும் சந்திக்காமல் சென்று வந்தீர்களே என்றாள். சேமித்து ஒலி பரப்பப்படும் மங்கல இசைக்கும் அது உருவாகும் பொழுதுக்கான மங்கல இசைக்கும் பெரிய வித்தியாசம் உண்டு.

அடுத்து வாய்க்கும் சந்தர்ப்பங்களில் உங்களை சந்தித்து ஆசி பெற எண்ணம் கொண்டிருக்கிறேன்.

நன்றி, வணக்கம்

 

நாதன்

சென்னை

 

அன்பின் ஜெ

சியமந்தகம் சிறப்பாக நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உச்சமாக நீங்கள் இரயிலில் வண்ணதாசன் அவர்களுடன் கைகோர்த்து அமர்ந்திருக்கும் படம் பார்த்த போது சொல்லமுடியாத ஒரு உனர்வெழுச்சி என்னுள் எழுந்தது. என்  இருபெரும் இலக்கிய ஆதர்சங்கள் நீங்களும் வண்ணதாசனும். என்னுள் அன்பு என்றும் மனிதம் என்றும் சில பண்புகள் மிச்சம் இருக்கிறதென்றால் அது வண்ணதாசன் அவர்களின் எழுத்தால் வந்தது. இன்று எனக்கு எல்லாமுமே வெண்முரசு தான். வண்ணதாசன் படித்த பின்பு தான் தொடுதலுக்கு ஒரு அருமையான சக்தி உண்டு என்று கண்டுகொண்டேன் . அதன் பிறகே சக மனிதர்களை தொட்டு பேச ஆரம்பித்தேன் . அப்படிப்பட்ட வண்ணதாசன் உங்கள் கையை தழுவி கொண்டிருப்பது  பார்த்ததும் சட்டென  கண்ணில் ஒரு துளி நீர் வந்துவிட்டது. ஏண் என பொது அறிவினால் சொல்லகூடவில்லை. சமீபகாலமாக என் வாழ்வில் பார்த்த உச்ச உணர்வாக இருந்தது.

மென்மேலும் வாழ்க நீங்கள் இருவரும். என்றேனும் உங்களிருவரின் கைகளை தழுவும் சந்தர்ப்பம் அமைய ஊழிடம் வேண்டி கொள்கிறேன்.

 

முத்து

வணக்கம்.என்றும் நலமுடன் இருக்க பிராத்ததனைகள்.

கோவையில் நடந்த ஜெ60 விழாவில் உங்களை நேரில் வந்து சந்தித்த தருணங்கள் கனவு போல் இருக்கிறது. நான் இதுவரை இலக்கியத்திற்கென இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்ததில்லை.சூழ்நிலை,உடல்நலன் பற்றிய பயம் இவையெல்லாம் என்னுடைய பயணத்தை விலக்கி வைத்திருந்தன.ஆனால் உங்களுக்கு 60 வயது வந்தவுடன் அதற்கான விழா எங்கு நடந்தாலும் செல்ல வேண்டுமென உறுதி எடுத்துக்கொண்டேன்.நண்பர்களுடன் இணைந்து கோவை வந்தது மிகப்பெரிய அனுபவம்.இந்தப்பயணம் என்னை வேறொரு பெண்ணாக என்னைக்காட்டியது.நானே ஒதுங்கி நின்று என்னைக்கவனித்து வியந்தேன்.உங்களை அருணா அக்காவுடன் பார்த்தபோது மிகவும் சந்தோசமாக இருந்தது.எங்களுடைய குரலாக பாரதிபாஸ்கர் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.எங்கள் ஆசான் என்றும் வையத்துள் வாழ்வாங்கு வாழ பிராத்ததனைகள்.

என்றும் அன்புடன்

கவிதா

சியமந்தகம் தொகைநூல் வாங்க

*

கோவையில் ஜெ 60 விழா- ஒரு நிறைவான நாள் நன்றிகளும் வணக்கங்களும் 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 26, 2022 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.