நன்றிகளும் வணக்கங்களும்

சாய் வில்லா உரையாடல்

 

சியமந்தகம் தொகைநூல் வாங்க கோவையில் ஜெ 60 விழா- ஒரு நிறைவான நாள்

கோவையில் நிகழ்ந்த மணிவிழா உண்மையில் எனது விருப்பம் சார்ந்ததாக இருக்கவில்லை. ஆகவேதான் இத்தனை பிந்தியது. நண்பர் நடராஜன் மற்றும் கோவை நட்புச் சூழலில் இருந்து அழுத்தம் இருந்துகொண்டே இருந்தது. ஒருவகையில் அவர்கள் அதை ஒரு குறையாக நினைக்கக்கூடும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆகவே ஒப்புக்கொண்டேன்.

விழா முழுநாள் கருத்தரங்கமாக நிகழும் என்றெல்லாம் முதலில் கூறினார்கள். ஆனால் ஏற்கனவே சியமந்தகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கடிதங்கள் கட்டுரைகள் எழுதிவிட்டதனால் மீண்டும் ஒரு கருத்தரங்கம் தேவையில்லை என்று நான் கூறினேன். ஆகவே ஒரு அந்தி நேர விழாவாக ஒருங்கிணைக்கப்பட்டது.

இவ்விழாவுக்கு எவரையும் தனிப்பட்ட முறையில் நான் அழைக்கவில்லை. நான் ஒருங்கிணைக்கும் விழா அல்ல என்பது முதன்மைக் காரணம். இன்னொன்று உணர்வுரீதியான கட்டாயத்தை எவருக்கும் அளிக்கவேண்டாம் என்று எண்ணினேன்.

என்னுடைய திரைப்பட வேலைகளில் தலைகால் புரியாமல் சுற்றிக்கொண்டிருந்ததனால் விழா நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் அதைப்பற்றிய பிரக்ஞையை அடைந்தேன். அருண்மொழிதான் அவ்வப்போது நினைவுபடுத்திக் கொண்டே இருந்தாள்.

கோவைக்கு சனிக்கிழமை காலை வந்து சேர்ந்தது முதல் நண்பர்கள் வந்து சந்தித்துக்கொண்டே இருந்தார்கள். வழக்கம் போல அரட்டை சிரிப்பு. எல்லா விழாக்களும் பின்னர் நினைவுகூரப்படுவது இந்தச் சந்திப்புகள் வழியாகத்தான். ஞாயிறு முழுக்க சாய் வில்லாவில் நண்பர்களுடன் உரையாடினேன். அறைச்சந்திப்பிலேயே இருநூறுபேர் வரை இருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை பட்டீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றிருந்தோம். அபிஷேகம் முடிந்ததும் பட்டிப்பெருமானை தரிசனம் செய்தோம். அங்கே அவர் சன்னிதியில் எவரோ ஒரு பெண்மணி திருமுறைகளை இனிய குரலில் பாடிக்கொண்டிருக்க மீண்டும் ஒருமுறை அருண்மொழியை மணந்தது உற்சாகமான நிகழ்வு.

சடங்குகளுடன் எப்போதும் எனக்கு ஒட்டுதலும் விலக்கமும் உண்டு. பிறருக்கு நான் சடங்குகளை எப்போதும் பரிந்துரைப்பேன்.ஆனால் சடங்குகளுடன் எனக்கு ஒரு அறிவார்ந்த விலக்கமும் இருக்கும். அதே சமயம் சடங்குகள் நிகழும்போது அவற்றின் குறியீட்டுத்தன்மையும் அவற்றின் தொன்மையும் என் உள்ளத்தில் ஆழ்ந்த உணர்வுகளை உருவாக்குவதை கண்டிருக்கிறேன். இந்நாளும் அத்தகைய ஒன்று.  இதன் திரளில் ஒரு விலக்கமும், இதன் களியாட்டில் ஓர் ஈடுபாடுமாக இருந்தேன்.

இந்நிகழ்வின் தனிச்சிறப்பென்று நான் நினைப்பது வெவ்வேறு ஊர்களிலிருந்து என்னை வாழ்த்துவதற்காகவும் சந்திப்பதற்காகவும் தேடிவந்திருந்த நண்பர்கள் மற்றும் பெரியவர்கள். வண்ணதாசன் இதன்பொருட்டே உடல்நிலைச்சிக்கல் கொண்ட நிலையிலும் திருநெல்வேலியிலிருந்து ரயிலில் கிளம்பி வந்திருந்தார். விழா அரங்கில் அவரைப் பார்த்ததும் மிகவும் நெகிழ்ந்துவிட்டேன்.

விழா முடிந்து திங்கள் கிழமை கிளம்பும்போது நான் வந்த அதே ரயிலில் தான் நெல்லைக்கு சென்றார். அவர் இருந்த பெட்டியில் சென்று அவரைச் சந்தித்து கைகளைப் பற்றிக்கொண்டேன்.

எனக்கு வண்ணதாசனுடனான உறவென்பது கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளை கடந்து வந்திருக்கிறது. 1985ல் அவருடைய ’தோட்டத்திற்கு வெளியிலும் சிலபூக்கள்’ என்னும் கதை வழியாகத் தொடங்கியது. மிக இளம் வயதில் அந்தக்கதையைப் படித்து அடைந்த பரவசமும் பதற்றமும் நினைவிலிருக்கிறது.

எனக்கு வண்ணதாசன் எவ்வகையில் முக்கியமென்பது பல்வேறு வழிகளில் திரும்பத்திரும்ப எழுதியிருக்கிறேன். என் இளமை முதலே நெடுங்காலக்கனவுகள், பெரிய தத்துவ வினாக்கள் ,பெரிய வரலாற்று புரளல்களில் ஆர்வம் கொண்டவன். பெரிய ஆளுமைகளைத் தேடித் தேடி சந்தித்து வந்திருந்தவன். ஆனால் ஒரு சிறுமலர் ஒரு காட்டுக்கு எவ்வளவு முக்கியமென்பதை எனக்குக் காட்டியவர் வண்ணதாசன்.

ஒவ்வொரு சின்ன விஷயமும் எந்தவகையில் இப்பிரபஞ்சத்தின் பெருநிகழ்வாகவும் திகழ்கிறது என்பதை அவரது படைப்புகளின் வழியாகவே உணர்ந்தேன். அது அறிதல் அல்ல ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் அக்கதைகளில் உணர்ந்துகொண்டிருப்பது. ஒவ்வொரு பெரிய தத்துவ நூலுக்குப் பிறகும் இப்போதும் ஒரு வண்ணதாசன் கதையை எடுத்துப்படிப்பது என்னுடைய வழக்கமாக இருக்கிறது.

ஒருமுறை ஆற்றூர் ரவிவர்மா சொன்னார். ஒரு நிகழ்வில் சரோட் கலைஞர் அம்ஜத் அலி கான் நான்கரை மணிநேரக் கச்சேரி முடிந்தபிறகு அந்தக் கருவியை முடுக்கும்போது அவருடைய சுட்டுவிரல் பட்டு ஒரு மெல்லிய நாதத்தை அது எழுப்பியது. அந்தக்கச்சேரிக்கு நிகரான பெரும் திகைப்பையும் நெகிழ்வையும் அந்த ஒலி எழுப்பியது.

பெரிதும் சிறிதுமென இப்புவி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அவற்றை பெரிதும் சிறிதுமென நம் பிரக்ஞையே வடிவமைக்கிறது. அதற்கப்பால் பிறிதொன்று இவை அனைத்தின்மேல் மௌனப்பெருவெளியென கவிழ்ந்திருக்கிறது. பெரிதென்றும் சிறிதென்றும் எதையும் காணாத விரிவு. அதன் ஒரு தருணத்தை ஒரு சின்னஞ்சிறு மலரில் காண முடிவது என்பது ஒரு தரிசனம்.

வண்ணதாசன் வருகை எனக்கு சென்ற பல ஆண்டுகளில் அவர் கதைகளினூடாக நான் கடந்து வந்த பல நினைவுகளைப் பெருக்கியது. இந்த உணர்வை வேறு எவராவது அடைந்திருக்கிறீர்களா என தெரியாது. எனக்கு இதுவரை வந்த தொலைவை உதறிவிட்டு திரும்பச் சென்று வண்ணதாசன் கதைகளை, மகாராஜபுரம் சந்தானம் பாட்டை நான் முதன்முதலாக அடைந்த கணங்களை மீண்டும் வாழவேண்டும் என்னும் ஏக்கம் அவ்வப்போது எழும்.

எனது நெடுங்கால நண்பர்கள் வந்திருந்தனர். இடப்பெயர்வால் வாழ்க்கை நகர்வால் சில ஆண்டுகளாக நான் சந்திப்பது நின்றுவிட்டிருந்த நண்பர்கள் கூட இந்த விழாவுக்கு வந்திருந்தார்கள்.  அவர்களில் உடல்நிலை சரியில்லாதவர்கள் சிலர் வந்திருந்தமை வருத்தத்தையும் நெகிழ்வையும் அளித்தது.

பட்டீஸ்வரம்

என் நெகிழ்வை வெளிக்காட்டலாகாது என என்னை இறுக்கிக் கொண்டிருந்தேன். உற்சாகத்தை உருவாக்கிக் கொண்டிருந்தேன். நடுநடுவே வந்துகொண்டிருந்த வெந்து தணிந்தது காடு வெற்றி குறித்த செய்திக்ள் வேறொருவகை உற்சாகத்தை அளித்துக் கொண்டிருந்தன.

விழாவில் ஒவ்வொருவரும் சிறப்பாகப் பேசினர். இயல்பான உணர்ச்சிநிலைகளுடன் அமைந்த உரைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் எனக்கு அணுக்கமானவை. அரங்கில் அமர்ந்து அவையை நோக்கியபோது ஆயிரத்தி இருநூறுபேர் அமரும் அந்த அரங்கின் மறுஎல்லை வரை நிறைந்திருந்ததை, வெளியேயும் ஓரத்திலும் பலர் நின்றுகொண்டிருந்ததைக் கண்டேன்.

என் நண்பர்கள், வாசகர்கள், சக எழுத்தாளர்கள், மூத்த படைப்பாளிகள். ஒவ்வொரு முகமும் எனக்கு அணுக்கமானது. அவை அனைத்தும் திரண்டு ஒற்றைமுகமென்றாயின. தமிழ்ச்சமூகம் அளிக்கும் ஏற்பு அது. அதற்கு நான் என்னை தகுதிப்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

கோவையில் மட்டுமே காணக்கிடைக்கும் காட்சி, பெருந்தொழிலதிபர்களும் தொழில்நுட்பத்துறையில் சாதனைகள் புரிந்தவர்களும், புகழ்பெற்ற ஆளுமைகளும் எல்லாம் இதைப்போல ஓர் இலக்கியக் கூட்டத்திற்கு வந்து அவையில் பார்வையாளர்களாக அமர்ந்து முழுமையாகக் கவனிப்பது. வேறெங்கும் எழுத்தாளன் இன்று இந்த கௌரவத்தைப் பெறமுடியுமென தோன்றவில்லை.

ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லவேண்டும். இத்தகைய ஒரு நிகழ்ச்சி பலருடைய உழைப்பும் ஒத்திசைவும் இல்லாமல் அமைந்திருக்க முடியாது. இருப்பினும் முதன்மையாக இருவர். டைனமிக் நடராஜன் முன்முயற்சி எடுத்து இதைச் செய்து முடித்தார். சியமந்தகம் என்னும் இணையதளம் வழியாக கட்டுரைகளை தொகுத்து சியமந்தகம் என்னும் நூல்வடிவமாக்கியவர் சுனில் கிருஷ்ணன். இருவருக்கும் அன்பு.

கல்பற்றா நாராயணன் சொன்னார். சென்ற நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசர் கவிஞர்களுக்குச் சிறப்பு செய்யும் பொருட்டு ஒருங்கிணைத்த சில நிகழ்வுகளே இத்தகைய பெருவிழவுகளாக அமைந்திருந்தன என்று. இன்று இந்திய அளவில்கூட இன்னொரு படைப்பாளிக்கு இத்தனை ஏற்பு அமைந்ததில்லை என்று.

டைனமிக் நடராஜனுடன்

மெய்தான். இது அரசர்களுக்கு நிகரானவர்களும், இவ்விழாவுக்கென நெல்லையில் இருந்தும் சென்னையில் இருந்தும் கைப்பணம் செலவிட்டு வந்த கல்லூரி மாணவர்களும் அடங்கிய பெருந்திரள் உண்மையில் ஓர் அரசுதான்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வணக்கமும் நன்றியும். இந்த ஏற்பு நான் எதன் பிரதிநிதியாக என்னை உணர்கிறேனோ, எதன் குரலென நின்று பேசுகிறேனோ அந்த மரபுக்கு உரியதென்றே கொள்கிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 20, 2022 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.