மேற்கத்திய இசைரசனைப் பயிற்சி முகாம், அறிவிப்பு

நண்பர்களே,

கடந்த சில ஆண்டுகளாக என்னிடம் இளம் இலக்கிய வாசகர்களும் நன்பர்களும் மேற்கத்திய செவ்வியல் இசையை எப்படி அணுகுவது, எப்படி அதை புரிந்து கொள்வது, அதற்கு ஏதாவது புத்தகங்கள் படிக்கலாமா என்றெல்லாம் கேட்கிறார்கள். அவ்வினாக்களுக்கு என்னுடை பதில் எப்போதும், நல்ல இசையை நேரிடியாக கேட்க துவங்குவதுதான் அதற்கான வழிமுறை என்பதுதான். ஒரு நல்ல தரமான பட்டியலை எடுத்துக்கொண்டு அதில் ஒவ்வொன்றாக அமைதியாக உங்கள் காதுகளை ஒப்புக்கொடுத்து கேட்பதுவே சிறந்த அறிமுகமாக இருக்கும். அடிப்படையில் எழுத்துக்களும் சொற்களும் இசைக்கு அந்நியமானவை, அதனால்தான் பல சமயங்களில் நாம் இசை கேட்கிறோம். ஆனால் அப்படி சொற்களும் எண்ணங்களும் இன்றி அமர்வதற்கு ஒரு சிறு பயிற்சி வேண்டும்.

நானும் மேற்கத்திய செவ்வியல் இசைக்குள் பலமுறை நுழைய முயன்றிருக்கிறேன். அதில் பிரச்சனை என்னவென்று நான் பின்னர் உணர்ந்தது, நான் எப்போதும் அதை ஒரு விதமான பின்னணி இசையாக பாவித்திருந்தேன் என்பதுதான். நாம் கேட்ட எண்ணற்ற திரையிசை கோர்வைகள் நம்மை அவ்வாறு பழக்கப்படுத்தி விட்டன. திரையிசையின் அம்சம் காட்சிக்கு பின் கவனம் கோராமல் ஒலித்து ஒரு உணர்ச்சியை தீவிரப்படுத்துவதாகவே பெரும்பாலும் இருக்கிறது. அதை எதிர்பார்த்து செவ்வியல் இசைக்குள் செல்லும்போது அங்கு இசை முன்னால் வந்து பல பாவங்களை அளிக்கையில் ஒருவித திகைப்பில் நாம் அதன் நுண்ணிய சலனங்களை தவறவிடுகிறோம்.

இது ஒரு சிறிய ஆரம்பக்கட்ட பிழை, ஆனால் எனக்கு இது தெளிய வெகு காலமானது. பின் ஒரு நாள் ஒரே மூச்சில் உள்ளே நுழைந்தேன். முதலில் கேட்டது பீத்தோவனின் ஐந்தாவது சிம்பொனி. பின் அடுத்த ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட ஐம்பது வெவ்வேறு இசைக்கோர்வைகளை கேட்டிருந்தேன். பரவசம் மிகுந்த நாட்கள் அவை. ஆறு மாதங்களுக்குள் நான் எனக்கான, என் வாழ்நாள் முழுவதும் துணைவரப்போகும் நான்கு இசைமேதைகளை கண்டடைந்திருந்தேன். (பீத்தோவன்/Beethoven, வாக்னர்/Wagner, ப்ரூக்னர்/Bruckner, மாஹ்லர்/Mahler)     

மேற்கத்திய செவ்வியல் இசை என்பது குறைந்தது பத்து நூற்றாண்டுகளாக தொடர்ந்து வரும் மரபு. நம் செவ்வியல் இசைபோல அல்லாமல் அம்மரபு முழுக்க பதிவுசெய்யப்பட்ட இசை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கிரிகோரியன் சாண்ட்–களை (Gregorian chant) அவற்றின் எழுத்துவடிவில் இருந்து வாசித்து இன்றும் அதே போல நம்மால் மறுவுருவாக்கம் செய்ய முடியும். அது மட்டுமல்லாமல் பின்னால் உருவான மேற்கத்திய இசையின் பல பிரத்யேக அம்சங்களான கொர்ட்(chord), ஹார்மனி (harmony), கௌண்டர் பாயிண்ட் (counter point) போன்றவை எழுதப்படுவதால் உருவானவை. இசை எழுதப்படும்போது முன்கூட்டியே தீர்மானித்து பலர் சேர்ந்து ஒரு செறிவான பல்குரல் (polyphonic) இசையை எழுப்ப முடியும்.

இந்த பரந்த இசை மரபை அறிவது ஒருவரது தனிப்பட்ட இசை தேடலை சார்ந்தது. பாக்–கையோ (Bach), விவால்டி– யையோ(Vivaldi), மோட்ஸார்ட்–ஐயோ(Mozart) நீங்கள் அவ்வாறு கேட்டு கண்டுகொள்ளலாம். ஆனால் ஒரு அறிவுத்தளத்தில் இயங்குபவர் கண்டிப்பாக பரிச்சயம் கொண்டிருக்க வேண்டிய மேற்கத்திய இசை உண்டு. அது பீத்தோவனில் துவங்குவது. நவீன சிந்தனையாளனுக்கு எப்படி ரெம்ப்ராண்டோ, டா வின்சியோ, மைக்கலாஞ்சலோவோ அறிமுகமாகியிருக்க வேண்டுமோ அப்படி. ஏனெனில் இவர்கள் அனைவருமே தங்கள் கலைக்குள் மட்டுமல்ல, சிந்தனையின் தளத்தில் உரையாடியவர்கள், சிந்தனைக்குப் பெரும் பங்காற்றியவர்கள். ஐரோப்பிய இலக்கியத்துக்கும், தத்துவத்துக்கும், சிந்தனைக்கும் பீத்தோவனின் கொடை மிகப்பெரியது.

ஆகவே பீத்தோவனை கேட்காமல் ஒருவர் ஐரோப்பிய கற்பனாவாதம், மானுடநேய சிந்தனை, இயற்கை வழிபாடு, செவ்வியல் மீட்டுருவாக்கம் கடைசியாக ஆழ்மன வெளிப்பாட்டு யுக்தி போன்ற எதையும் முழுதாக புரிந்து கொள்ள முடியாது. அதற்கு முக்கியமான காரணம் பீத்தோவனின் படைப்புகளில்தான் தான் இசை முதல்முதலாக இசையல்லாத பிரிதொன்றை உணர்த்த, பேசத்துவங்குகிறது. இன்னும் சொல்லப்போனால் எரோய்கா (Eroica) என்றழைக்கப்படும் பீத்தோவனின் மூன்றாவது சிம்பனிதான் அதன் துவக்கம். ஒரு நாயகனின் போராட்டமிகு வாழ்க்கை, அவனது மரணம், அவனது உணர்வு மக்களில் மீண்டெழல், பின் அச்சமூகத்தின் எழுச்சியும் கொண்டாட்டமும் என்று செல்லும் அந்த சிம்பொனி வார்த்தைகளே இல்லாமல் இவற்றை நிகழ்த்திக்காட்டியது.

என் வரையில் ஒரு திரைத்துறையினனாக இதைச் சொல்வேன், நவீன ஊடகமான சினிமாவை கண்டுபிடித்தது பீத்தோவனே. சினிமாவின் உத்திகள் பீத்தோவன் உருவாக்கியவை. (dissolves, cuts, flash cuts, slow motion, focus shifts). அதே போல ஒரு இலக்கியவாதியோ சிந்தனையாளனோ வார்த்தை கடந்து அனுபவமாக பதினேட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டிம் மாபெரும் மானுட சிந்தனை எழுச்சிகளை அடைய பீத்தோவனின் இசை ஒரு பெரும் வாசல்.

பீத்தோவனின் இசையில் இரு எல்லைகள் உண்டு. பலரும் அறிந்திருக்க வாய்ப்பிருக்கும் மூன்லைட் சொனாட்டா (Moonlight Sonata) ஓர் எல்லை எனில் அதிகம் பொதுவில் அறிந்திருக்காத க்ரோஸ்ஸெ ஃபுகெ (Grosse Fuge) மற்றொரு எல்லை. அதன் ஆரம்பத்து ஐந்து நிமிடங்கள் என்னை உச்சக்கட்ட வெறுப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது, ஏன் ஒருவன் இத்தனை வலியை அடைய வேண்டும், அதை ஏன் பிறனுக்கு கடத்தவேண்டும் என்று. ஆனால் இப்போது கேட்கும் போது அது உச்சக்கட்ட இன்பம் எனவும் தோன்றுகிறது, ஷிஸொபெர்னியாவை நெருங்கும் நிலை, ஹிஸ்டீரியா (இவ்வார்த்தைக்கு மேற்கில் பெரிய மரபு உண்டு) என்னும் நிலை.

ஆனால் பீத்தோவனின் சாதனைகள் அவரது சிம்பனிகள் தான். அவர் இசைக்கும் அதுவே சிறந்த துவக்கப்புள்ளி.

எனவே இம்மாதத்தின் கடைசி வார இறுதியான 23, 24, 25 (வெள்ளி,சனி,ஞாயிறு) மூன்று தினங்கள், பீத்தோவனின் முக்கியமான் சிம்பனிகளான 3,5,6,7,9 மற்றும் அவரது வயலின் கான்செர்டோ ஆகியவற்றை கூட்டாக கேட்கும் ஒரு அமர்வை நடத்தலாம் என எண்ணம் கொண்டுள்ளேன். இசை பற்றிய சிறு விளக்கங்களும், அதை கவனிப்பதற்கான வழிகாட்டுதல்களும் அடங்கிய பயிற்சி வகுப்பு இது.

மேற்கத்திய இசையை கேட்க துவங்கிய போது நான் செய்த தவிக்கக் கடினமான ஆனால் தவிர்க்க வேண்டிய சிறு பிழைகள், சில அடிப்படை புரிதல்கள் (காலப் பிரிவினைகள், முக்கிய கலைஞர்கள், இசை வகைமைகள், இசை வாத்தியங்கள், இசை நடத்துனரின் பங்கு) ஆகியவற்றையும் பகிர்ந்து கொள்வேன். ஆர்வமிருப்பவர்கள் கூடிய விரைவில் தங்கள் பெயர், வயது, ஊர், தொலைபேசி ஆகிய செய்திகளைக் குறிப்பிட்டு இந்த இணைய முகவரிக்கு (ajithan.writer@gmail.com) தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

(தங்குமிடம், உணவு உட்பட மூன்றுநாட்களுக்கு ரூ 3000 ஆகும். செலவு செய்யமுடியாத நிலையில் உள்ள மாணவர்கள் போன்றவர்கள் அதை தெரிவித்தால் அவர்களுக்குரிய நன்கொடையாளர்களை ஏற்பாடு செய்ய முடியும்

பெண்களும் கலந்துகொள்ளலாம். அவர்களுக்கு தனியான வசதியான தங்குமிடம் உண்டு)

பிகு: கொஞ்சம் இசை ஆர்வமும், புதியவை மீதான ஏற்பு மனநிலையும் இருக்குமென்றால் இது உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும் என்று என்னால் உறுதியளிக்க முடியும். இளைஞர்கள், கலைகளில் ஆர்வம் உள்ளவர்களை எதிர்பார்க்கிறேன். இம்முயற்சி வெற்றிபெறும் எனில் மேலும் மாஹ்லர் துவங்கி வாக்னர் வரை இவ்வாறு அறிமுகம் செய்ய எண்ணமிருக்கிறது

நன்றி

அஜிதன்   

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 09, 2022 05:46
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.