ஹெமிங்வேயும் புதுமைப்பித்தனும்

புதுமைப்பித்தனின் துரோகம் என்றொரு சிறுகதையை ஆதவன் எழுதியிருக்கிறார்.

அந்தக் கதையில் இருவர், எழுதி என்ன பயன், எதற்காக எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும் என்பதைப் பற்றி உரையாடுகிறார்கள். அதில் எதிர்காலத்தில் வரப்போகும் ரசிகன் என்ற நம்பிக்கை மட்டுமே ஓர் எழுத்தாளனுக்குப் போஷாக்குத் தரமுடியாது என்கிறது ஒரு கதாபாத்திரம்.

யாருக்காக எழுதுகிறோம், எதற்காக எழுதுகிறோம் என்ற கேள்வியை நூற்றாண்டுகளாக எழுத்தாளர்கள் சந்தித்து வருகிறார்கள். இதற்குச் சொல்லப்பட்ட எல்லாப் பதில்களும் தற்காலிக சமாதானமே.

கதையின் மையப்பகுதி இது.

புகழும் பணமும் இருந்தும் ஹெமிங்வே தற்கொலை செய்து கொண்டானே! அதைப் பற்றியும் நினைத்துப் பார். அவனுக்கென்ன, ரசிகர்களுக்குப் பஞ்சமா!’

அதைப் பற்றி நான் யோசித்ததுண்டு’ என்று ராம் மறுபடி வேணுவை ஆச்சரியப்படுத்தினான். ஹெமிங்வே ஓர் அமெரிக்கர், here, how என்ற சித்தாந்தத்தைத் தொழுதவர். தன் ‘நம்பர் ஒன் எழுத்தாளர்’ என்ற பிம்பத்தைத் தொழுதவர். தன் நம்பர் ஒன் ஸ்தானம் சாஸ்வதமல்ல, யாரும் எக்கணமும் அதைப் பறித்து விடக்கூடும், என்ற இன்செக்யூரிட்டியை அவரால் தாள முடியவில்லை. அதுவே அவரைத் தற்கொலைக்கு விரட்டியது. புதுமைப்பித்தன் விஷயம் வேறே. அவர் ஒரு துறவி, அதாவது தோல்வி சார்ந்த துறவு அல்ல, ஞானத்துறவு. He was a mystic.’

ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்’, ‘கிலிமஞ்சாரோ பனிச்சிகரங்கள்’ ஆகிய படைப்புகளில் mystic சாயைகள் இல்லையா, என்ன?

தனிமை பற்றிய ஒரு தவிப்பு, ஒரு மருட்சி… ஆனால் ‘தான்’ சரணாகதியடைவதில்லையே! Surrender of the ego… you know what I mean?’

’புதுமைப்பித்தன் mystic தான். அதைப் பற்றிச் சந்தேகமில்லை’ வேணு இப்போது தானும் புதுமைப்பித்தனைப் படித்திருப்பதாகச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கும் நிர்ப்பந்தத்தில் சிக்கிக்கொண்டான். –

அப்பா! சாமியாராகப் போற கேரக்டர்ஸுக்குப் பஞ்சமேயில்லை… அன்று இரவு, உபதேசம், அவதாரம், சித்தி, …. கந்தசாமிப் பிள்லை என்னடான்னா, கடவுளை பிராட்வே பக்கத்தில் சந்திக்கிறாராம், காஷுவலா அவரைக் காப்பி ஹோட்டலுக்குக் கூட்டிப் போறாராம். தன் பத்திரிக்கைக்குச் சந்தா கேட்கிறாராம்… என்ன நையாண்டி, என்ன அனாயாசமான தத்துவவீச்சு! எமகாதகப் பேர்வழியப்பா, அந்த மனுஷன்…’

‘கயிற்றரவு…’

‘கிளாசிக்!’

அப்புறம் அமானுஷியக் கதைகள்… காஞ்சனை மாதிரி… புராண நிகழ்ச்சிகள்… சாப விமோசனம் மாதிரி...’

ஆதவன் சொல்வது போலப் புதுமைப்பித்தனுக்குத் துறவின் மீது மிகுந்த ஆசையிருக்கிறது. அவரது கதைகளில் நிறையச் சாமியார்கள் வருகிறார்கள். ஹடயோகியை வியந்து பேசுகிறார். துறவியான ஒருவர் மீண்டும் இல்வாழ்க்கைக்குத் திரும்புகிறார்.

கதையில் வரும் ராம் புதுமைப்பித்தனுடைய தத்துவ விசாரத்தின் ஊற்று, ஒருவேளை நிறைவற்ற திருமண உறவாக இருக்குமோ, என்று தோன்றியது என்கிறான் .

அவர்களின் உரையாடலின் வழியே புதுமைப்பித்தன் கதைகளின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சப்படுகிறது. இருவரது உரையாடலில் எவரது பார்வை சரியானது என்பதை விடவும் வேணு புதுமைப்பித்தனுடன் கொள்ளும் உறவும், ராம் கொண்டிருக்கும் உறவும் வேறுவேறாக இருப்பதை நம்மால் உணர முடிகிறது.

கதையின் முடிவில் தன்னையும் ஒரு புதுமைப்பித்தனின் கதாபாத்திரமாகவே வேணு உணருகிறான்.

வாழ்விலிருந்து கதை பிறப்பது போலவே கதை நிஜவாழ்க்கையாக மாறிவிடுவதைக் காண முடிகிறது.

இரண்டு நண்பர்களின் இலக்கிய உரையாடலின் வழியே புதுமைப்பித்தனைப் பற்றிய அபூர்வமான பார்வைகளை முன்வைத்திருப்பது ஆதவனின் சிறப்பு. இப்படி ஒரு கதையை அவரால் மட்டுமே எழுத முடியும்.

கதையின் சுவாரஸ்யம் புதிதாக இலக்கியம் படிக்க ஆரம்பித்தவருக்கும் எழுத்தாளருக்குமான உரசல். கருத்துமோதல். அதுவும் ராம் தானும் மனைவியும் சேர்ந்து புதுமைப்பித்தன் படிப்பதாகச் சொல்வது வேணுவிற்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. அவன் உரையாடலில் ராமை வீழ்த்திவிடவே முயலுகிறான். ராமின் சீண்டலை வேணு சரியாகவே உணர்ந்து கொள்கிறான்

எனக்கு மட்டுமே சொந்தமென்று நான் நினைப்பதாக அவன் நினைக்கிற இலக்கிய உலகம் தனக்கும்தான் சொந்தமென்று முழங்கி என் பிரத்தியேகத் தன்மையைச் சீண்டுதல், என் காலை வாருதல், என் அகந்தையை ஆழம் பார்த்தல்…

புதுமைப்பித்தனையும் ஹெமிங்வேயினையும் இப்படி யாரும் ஒப்பிட்டதில்லை. இருவரது எழுத்தும் வேறுவிதமானது. புகழின் உச்சத்தை அடைந்த ஹெமிங்வே தற்கொலை செய்து கொண்டதற்கு வெறுமையான மனநிலையே காரணம். அவரது படைப்புகளில் ‘தான்’ சரணாகதியடைவதில்லை என்பது சரியான மதிப்பீடு.

ஆனால் புதுமைப்பித்தனை இயக்கியது அவரது ஞானத்தேடல் அவர் ஒரு மிஸ்டிக் என்று விவாதிப்பது புதிய நோக்கு.

இந்தக் கதையின் வடிவம் ஹெமிங்வேயின் சிறுகதை பாணியில் உள்ளது. அவரது கதைகளில் கதாபாத்திரங்கள் இது போல பாரில் சந்தித்து உரையாடுவார்கள். பெரிதும் உரையாடலின் வழியே கதை விரிவு கொள்ளும். புதுமைப்பித்தனிடம் வெளிப்படும் எள்ளலையும் ஆதவன் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்.

கதை ஒரு உணவகத்தில் நடப்பதும். இட்லி வந்தவுடன் புதுமைப்பித்தனை விடவும் இட்லி முக்கியம் என்று கேலியாகச் சொல்வதும் காபியைக் கண்டதும் கடவுளும் கந்தசாமி பிள்ளை நினைவிற்கு வருவதும் சுவாரஸ்யம்

‘ரியலிசம் அல்ல, ஃபேன்டஸியும் மிதாலஜியும் தான் புஷ்டியான இலக்கிய ஊற்றுகள்னு ஜான் பார்த் ஒரு இண்டர்வியூவிலே சொல்லி இருக்கிறான், படித்தேன். புதுமைப்பித்தன் அன்றைக்கே இதை ஆன்டிசிபேட் பண்ணிட்டானே! அதை நினைச்சால் ஆச்சரியமாயிருக்கு.’

என்று கதையில் ஆதவன் சொல்லியிருப்பது முக்கியமான பார்வை.

இந்த உண்மையை அறிந்திருந்த ஆதவன், ஏன் இது போன்ற ஃபேன்டஸியும் மிதாலஜி எழுத்துப் பக்கம் திரும்பவேயில்லை.

இன்றைய, மேஜிகல் ரியலிசம், பின்நவீனத்துவம், தொன்மம், வரலாறு சார்ந்த புனைவுகளுக்குப் புதுமைப்பித்தன் முன்னோடியாக இருப்பது தற்செயல் அல்ல, அது ஒரு தேர்வு என்பதை ஆதவன் சரியாகவே நிரூபித்துள்ளார்.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 25, 2022 00:50
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.