Stories of the True – கடிதங்கள்
அன்புள்ள ஆசிரியருக்கு,
அறம் தொகுப்பின் ஆங்கில மொழியாக்கம் வெளி வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அசலான இந்திய பிராந்திய இலக்கிய படைப்புகள் மொழி பாகுபாடின்றி மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். தமிழிலிருந்து ஒரு சிறந்த எழுத்தாளரின் படைப்பு மொழிபெயர்க்கப்பட்டு நல்ல பதிப்பகத்தால் வெளியிடப்படுவது கூடுதல் சிறப்பு. இது போன்ற முயற்சிகள் நிஜமான இந்தியத் தன்மை மற்றும் ரசனையை வெளி உலகத்திற்கும் இந்தியாவின் ஆங்கில வாசகர்கள் மத்தியிலும் கொண்டு செல்லும். அது உலகின் கூர்மையான விமர்சகர்களால் முன்வைக்கப்படும் நிலைக்கு வந்தால் சினிமா மற்றும் பிற கலைகளிலும் இந்திய ரசனை மற்றும் பேசுபொருளுக்கான இடத்தை அதிகரிக்க வாய்ப்பளிக்கும். அசலான இந்திய கலைஞர்கள் உருவாகவும் வெளிப்படவும் உதவக்கூடும்.
மேற்கின் ரசனைக்கு ஏற்ப நம்மை புனைந்து கொள்வதை கொஞ்சம் குறைக்கும். ஜெயமோகன் வாசகனாக இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு முயற்சிகள் மேலும் தொடர வேண்டும் என்பது விருப்பம். உங்கள் புனைவுகள் மட்டுமல்ல ஜெயமோகன் இணைய தளத்தில் உள்ள பெரும்பாலான கட்டுரைகளும் ஆங்கில மொழியாக்கத்திற்கான தரத்தை கொண்டுள்ளன. குறிப்பாக இந்திய ஞான மரபு, பண்பாடு, அரசியல், வரலாறு, பயணம், கலை, இலக்கியம் பற்றிய கட்டுரைகளும் அவற்றை சார்ந்து நீங்கள் வைக்கும் விமர்சனங்களும் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டால் இந்திய இளைஞர்களுக்கு பெரிய கொடையாக இருக்கும். தமிழ் இலக்கியம் பண்பாடு சார்ந்த கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டால் கூட ஒரு எழுத்தாளன் அவன் சார்ந்த சமூகத்துடன் எப்படி உரையாடினான் என்பதற்கு ஒரு முன்மாதிரியாக விளங்கும்.
உங்களுக்கும் அறம் மொழிபெயர்ப்பினை செய்த பிரியம்வதாவுக்கும் வாழ்த்துக்கள்!
ஜெயராம்
***
அன்புள்ள ஜெ
அறம் ஆங்கில மொழியாக்கம் பற்றிய செய்திகளைப் பார்த்தேன். நம் குழந்தைகளுக்கு நாம் வாங்கிக்கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த பரிசு அந்நூல் என்பது என் எண்ணம். தமிழ் அறியாத நம் குழந்தைகளுக்கும் தமிழர் அல்லாதோருக்கும் அது நல்ல பரிசாக இருக்கும். அதன் உணர்ச்சிகரம் எந்த சாமானிய வாசகனையும் ஈர்க்கக்கூடியது. கூடவே அக்கதைகளின் சாராம்சமாக உள்ள கவித்துவம். எனக்குப் பிடித்த கதை உலகம் யாவையும். அந்தக் கதையில் ஒருவருக்கு உலகம் போதாமலாகிறது என்பது சாதாரணமான விஷயம் அல்ல.
அ. நவம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

