ரகசிய நூலகம்
The Library Of Mabel Mogaburu என்றொரு சிறுகதையை ஃபொ்னான்டோ ஸோரன்டினோ எழுதியிருக்கிறார். அதில் அவரது நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் பட்டியலிடுவதைப் பற்றிச் சொல்கிறார். அந்தப் புத்தகங்களை எப்படி வகைப்படுத்துவார். அதில் எவ்வாறு குறிப்புகள் எழுதுவார் என்பதையும் வேடிக்கையாக விவரிக்கிறார்

ஒரு நாள் தற்செயலாகப் புத்தக் கடை ஒன்றில் பழைய புத்தகங்களைத் தேடும் மேபல் என்ற மாணவியைச் சந்திக்கிறார். அவள் ரிக்கார்டோ குய்ரால்டெஸ் எழுதிய டான் செகுண்டோ சோம்ப்ரா என்ற 1926 ஆம் ஆண்டு வெளியான நாவலைத் தேடுகிறாள். புத்தகம் அவளுக்குக் கிடைக்கவில்லை.
தன்னிடமிருக்கும் பழைய புத்தகத்தை அவளுக்கு இரவல் தரமுடியும் , ஆனால் அதை அவள் கவனமாகப் படித்துவிட்டுத் திருப்பித் தர வேண்டும் என்று ஸோரன்டினோ சொல்கிறார்.
பத்திரமாக ஒப்படைப்பேன் என்மீது நம்பிக்கையிருந்தால் கொடுங்கள் என்கிறாள் மேபல்.
தனது புத்தகத்தில் அவள் எதையும் எழுதக்கூடாது. படித்து முடித்தவுடன் திருப்பித் தந்துவிட வேண்டும் என்று கண்டிப்புடன் சொல்கிறார்.
அவள் உறுதி அளித்தபடியே டான் செகுண்டோ நாவலை வாங்கிச் செல்கிறாள். ஆனால் சில வாரங்களுக்கு மேலாகியும் அவள் புத்தகத்தைத் திருப்பித் தரவில்லை. ஆகவே அதைத் திரும்பப் பெறுவதற்காக அவளது வீட்டிற்குத் தேடிப்போகிறார்.
அங்கே மேபலின் தந்தையைச் சந்திக்கிறார். மேபல் வீட்டில் இல்லை என்று தந்தை சொல்கிறார். தான் கடன் கொடுத்த புத்தகம் பற்றிச் சொன்னதும் உள்ளே போய் அவளது அறையில் தேடச் சொல்கிறார். மூன்று அலமாரிகள் கொண்ட அறையில் நிறையப் பழைய புத்தகங்கள் தூசி அடைந்து கிடக்கின்றன. இதை எல்லாம் அவள் படித்திருக்கிறாளா என்று வியப்புடன் அந்த நூல்களைப் பார்க்கிறார். ஆனால் அவர் கடன் கொடுத்த புத்தகம் மட்டும் அங்கேயில்லை. ஏமாற்றத்துடன் வெளியே வரும் அவரிடம் மேபலின் இன்னொரு நூலகம் வேறு இடத்திலிருக்கிறது. வாருங்கள் போகலாம் என காரில் அழைத்துக் கொண்டு போகிறார் அவளது தந்தை.
அவர்கள் போய் சேருமிடம் ஒரு மயானம். அங்குள்ள கட்டிடம் ஒன்றினுள் இரண்டு சவப்பெட்டிகள் இருக்கின்றன. ஒன்று மேபலின் அம்மாவுடையது. மற்றது மேபலின் சவப்பெட்டி
மேபல் தனது 15 வயதில் இறந்துவிட்டாள் ஆனாலும் புத்தகம் படிப்பதை அவளால் நிறுத்த முடியவில்லை. இங்கே அவளது இன்னொரு நூலகம் இருக்கிறது எனச் சுவரைக் காட்டுகிறார் தந்தை.
அங்கே தரையிலிருந்து கூரைவரை நூற்றுக்கணக்கான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. வலது பக்க அடுக்கில் ஸோரன்டினோ கடன் கொடுத்த டான் செகுண்டோ புத்தகம் உள்ளது. அதன் முதல் பக்கத்தில் அவள் தன் பெயரையும் தேதியினையும் எழுதியிருக்கிறாள். அதைக் கண்டு ஸோரன்டினோ எரிச்சல் அடைகிறார்.
‘நீங்கள் புத்தகத்தை எடுத்துச் செல்கிறீர்களா அல்லது மேபலின் நூலகத்திற்கு நன்கொடையாக விட்டுவிடுகிறீர்களா? என அவளது தந்தை கேட்கிறார்.
நான் புத்தகத்தை எடுத்துக் கொள்கிறேன். எனது புத்தகங்களை விட்டுக் கொடுக்கும் வழக்கம் கிடையாது என்று சொல்லி அதைக் கையோடு எடுத்துக் கொள்வதாகக் கதை முடிகிறது
எளிய கதையாகத் துவங்கி திகில் கதையாகி மறுபடியும் எளிய கதையாக மாறிவிடுகிறது. சத்யஜித்ரே இது போன்ற பாணியில் தான் சிறுகதைகள் எழுதினார்.
யதார்த்தமான திரைப்படங்களை உருவாக்கிய ரே ஏன் இது போன்ற விசித்திர கதைகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார் என்பது புதிரானது.
ஸோரன்டினோ கதையில் வரும் மேபல் மரணத்திற்குப் பிறகும் புத்தகங்களைத் தேடிப் படித்துக் கொண்டிருக்கிறாள்.
இந்தக் கதை எட்கர் ஆலன் போவின் கதைகளை நினைவுபடுத்துகிறது. ஆனால் அவரது கதையில் வரும் இருண்மை இக்கதையில் இல்லை. கதையின் முடிவில் ஏற்படும் திகிலை எழுத்தாளரே கேலி செய்கிறார். புனைவின் பாதையில் எதுவும் விசித்திரமாக மாறிவிடலாம் என்பதையே கதை விளக்குகிறது. ஸோரன்டினோவின் சிறுகதைகள் தனித்த கதைமொழியைக் கொண்டிருக்கின்றன.
கடன் கொடுத்த புத்தகங்களைத் திரும்ப வாங்க ஒருவர் மேற்கொள்ளும் முயற்சி எளிதாக வாசகரை உள்ளிழுத்துக் கொண்டுவிடுகிறது. வழக்கமான கதையாக முடிந்திருக்கக் கூடியதை இன்னொரு நூலகம் இருக்கிறது காட்டுகிறேன் என்று தந்தை அழைத்துச் செல்வதில் மாறிவிடுகிறது.
ஸோரன்டினோவின் சிறுகதை இளம்படைப்பாளிக்குப் புனைவின் ரகசியங்களைக் கற்றுக் கொடுக்கிறது. வாசகருக்கு புதிய அனுபவத்தைத் தருகிறது. முடிவில்லாத வாசிப்பின் இனிமையை எடுத்துக் காட்டுகிறது.

இந்தக் கதை HOW TO DEFEND YOURSELF AGAINST SCORPIONS தொகுப்பில் இடம்பெற்றுள்ளது
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
