பாண்டிச்சேரியில்…

பாண்டிச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக வெண்முரசு விவாதக்கூட்டத்தை தன் இல்லத்தில் நடத்தி வருகிறார். தாமரைக்கண்ணன், கடலூர் சீனு, மணிமாறன், திருமாவளவன், சிவாத்மா, நாகராஜன் என பல நண்பர்கள் அவருக்கு உடனுதவி செய்து வருகிறார்கள். அந்நிகழ்வின் ஐம்பதாவது சந்திப்பு சென்ற 30 ஜூலை 2022 ல் நடைபெற்றது. அதில் நான் பங்கெடுக்கவேண்டும் என்று அரிகிருஷ்ணன் விரும்பினார்.

நான் ஒரு திரைப்பணிக்காக சென்னை சென்றிருந்தேன். சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு காரில் சென்றேன். காரில் தூங்குவது என்னைப்போன்ற அறுபது அகவையினருக்கு பிடித்தமானது. தாடை தளர்வதனால் உருவாகும் குரட்டையால் நாங்களெல்லாம் ஒருக்களித்து படுத்தே தூங்க முடியும். காரில் மல்லாந்து அமர்ந்தே தூங்கலாம்.  அரை விழிப்பில் எங்கோ பறந்துகொண்டிருப்பதுபோன்ற உணர்வு உருவாகி இனிமை கூட்டும்.

29 மாலையிலேயே பாண்டிச்சேரி சென்றடைந்தேன். விடுதியறைக்கு நண்பர்கள் வந்திருந்தனர். பாண்டிச்சேரி அமைச்சர் லட்சுமிநாராயணன் வந்திருந்தார். இலக்கியம், ஆன்மிகம் என பேசிக்கொண்டிருந்தோம். அரிகிருஷ்ணனுக்கு பிரியமான வைணவம் பற்றிப் பேசினோம். நான் 12 மணிக்கெல்லாம் தூங்கிவிட்டேன். கடலூர் சீனு அதன்பிறகுதான் பேச ஆரம்பித்ததாகச் சொன்னார்கள்.

மறுநாள் காலை நகரில் ஒரு நடை சென்றோம். சிவாத்மா நகரின் தொன்மையான கட்டிடங்களையும் மரங்களையும் சுட்டிக்காட்டி விளக்கிச் சென்றார். பாண்டிச்சேரியின் பிரெஞ்சு ஆட்சிக்கால நகர்மன்றக் கட்டிடம், பள்ளிகள்,வீரர்கள் தங்குமிடங்கள்….பழைய இல்லங்கள் பலவும் இன்று விடுதிகள். பல கட்டிடங்களின் அதே அமைப்புள்ள வீடுகளை பாரிஸில் கண்டிருக்கிறேன் என்று தோன்றியது. முகப்புவாசல், உள்ளே நேராக ஒரு தோட்டம், பக்கவாட்டில் பெரிய தூண்கள்கொண்டவிரிந்த வராந்தா, நேரடியாக சாலைநோக்கி திறக்கும் சாளரங்கள்…

பாண்டிச்சேரியின் இரண்டு தேவாலயங்களுக்குச் சென்றோம். இம்மாக்குலேல் ஆலயம் ( Immaculate Conception Cathedral) லேடி ஆஒ ஏஞ்சல்ஸ் தேவாலயம் (Our Lady of Angels Church) இரண்டுமே மகத்தான கட்டிட அமைப்பு கொண்டவை. உள்ளிருக்கும் விரிவின் அமைதியும், ஐரோப்பியத் தூய்மையும், இந்திய பிரார்த்தனையின் இறையமைவும் கொண்டவை. ஐரோப்பாவில் பல புகழ்பெற்ற தேவாலயங்கள் இன்று வெறும் சுற்றுலா மையங்கள். அவற்றில் பக்தி மட்டுமே உருவாக்கும் இறையமைவை உணரமுடிவதில்லை. ஒவ்வொரு தேவாலயத்திலும் ஐந்து நிமிடம் வேண்டிக்கொண்டேன்.

இம்முறை ரமேஷ் பிரேதனுக்காகவும் வேண்டிக்கொண்டேன். அறைக்குச் சென்று குளித்துவிட்டு அவரைச் சந்திக்கச் சென்றோம். ரமேஷ் நான் எதிர்பார்த்ததற்கு மாறாக நலமாகவே இருக்கிறார். முகத்தில் தெளிவு உள்ளது. எடை மற்றும் பக்கவாதத்தால் நடக்கமுடியாது என்பதொன்றே பிரச்சினை. அவரை பார்த்துக்கொள்ளும் பிரேமாவைச் சந்திக்க விரும்பினேன். பிரேமா வந்ததும் அவரிடம் மலர்க்கொத்து கொடுத்து தமிழ் இலக்கியச் சூழலின் சார்பில் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்தேன்.

சென்ற ஆண்டுகளில் ரமேஷ் கடந்துவந்த பாதை கடினமானது. அனைத்திலும் ஒரு தேவதை போல பிரேமா உடனிருந்திருக்கிறார். யோசித்துப் பார்க்கையில் விந்தையானது இது. இதற்கிணையான சூழல்களில் குடும்பம், உடனிருக்கும் நண்பர்கள், உதவிகளைப் பெற்றுக்கொண்டோர் எல்லாம் விலகிச் செல்வதே நாம் பொதுவாகக் காண்பது. இதேபோன்ற நிலையில் மனைவியால் பார்த்துக்கொள்ளப்படாமல் நிராதரவாக இருக்கும் ஏழெட்டுபேர் இப்போதே என் அறிதலில் உண்டு. அதுவே மானுட இயல்பு.

ஆனால் கவிஞர்கள் கைவிடப்படுவதில்லை. ஏதோ ஓர் ஆன்மிகம் அவர்களுக்கு சாமானிய மனிதர்களின் உதவியை பெற்றுத் தருகிறது. நகுலனை பிறுத்தா என்னும் பெண்மணி எந்தக் கைமாறும் இல்லாமல் இறுதிவரை பார்த்துக்கொண்டார். இன்னொரு குடும்ப ஆணுக்கு அந்த கௌரவமும் கவனிக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. பிரமிள் அவர் இறுதிக்காலத்தில் கவிதை, இலக்கியம் எதையும் அறியாத சோதிட மாணவர் ஒருவரால் அரசனைப்போல் கவனித்துக்கொள்ளப்பட்டார். அது கவிதையின் ஆற்றல் என்றே நினைக்கிறேன்

மாலையில் அரிகிருஷ்ணன் வீட்டில் நிகழ்ச்சி. எழுபதுபேர் வந்திருந்தனர். அமைச்சர் லட்சுமிநாராயணன் சிறப்பு அழைப்பாளர். நண்பர் ராம் ரிக்வேதத்தின் சிருஷ்டிகீதத்தை ஓதியபின் அரங்கு தொடங்கியது. திருமாவளவன், தாமரைக்கண்ணன், கடலூர் சீனு, வளவதுரையன், பேரா.நாகராஜன், விஜயன், ஜெயந்தி, ஆகியோர் பேசினர். கரசூர் பத்மபாரதி வந்திருந்தார். வெண்முரசின் மீதான விமர்சனங்கள், வாசிப்புகள். நான் கண்களை மூடி கூடுமானவரை அந்த பேச்சுகளில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். உண்மையில் அடுத்ததாக ஷாஜி கைலாஸுக்குச் சொல்ல்ப்போகும் சினிமாவின் கதையை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தேன்

ஏனென்றால், வெண்முரசு என்னுடையது அல்ல. அது எனக்களித்த தெளிவுகள் மட்டுமே எனக்குரியவை. அந்நாவலின் புகழை என் தலையில் ஏற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை. முடிந்தவரை விலகிச்செல்லவே முயல்கிறேன். இல்லையேல் நான் அடித்துச்செல்லப்படுவேன். அற்பன் ஆகிவிடுவேன். அப்படி ஒன்றை எழுதிவிட்டு அருகே காத்திருக்க நான் இங்கே வரவில்லை.

திருமதி பிரேமாவுக்கு ஒரு மலர்ச்செண்டு

நான் வெண்முரசு பற்றி பேசும்போது அதன் முழுமையான தத்துவ- வரலாற்றுப் பின்புலம் பற்றிப் பேசினேன். மகாபாரதத்தை மீண்டும் மீண்டும் கண்டடைவதை வேண்டியதன் தேவையைப் பற்றி. இந்திய மெய்யியல் காலந்தோறும் விரிந்து, தொகுக்கப்பட்டு, மீண்டும் விரிந்துகொண்டிருக்கும் சித்திரம் பற்றி விளக்கினேன்.

அரிகிருஷ்ணனின் இல்லத்தில் அவர் சகோதரிகள் அனைவருமே வெண்முரசின் வாசகர்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம். அப்படி பலரை சந்தித்திருக்கிறேன். வெண்முரசு ஒரு பக்கம் செறிவான இலக்கியப்படைப்பு. மறுபக்கம் மெய்யியல் தேடலும் உணர்ச்சிகரமான கற்பனையும் கொண்ட எவருக்கும் அது இனிய வாசிப்புக்கு உரியதும்கூட.

நான் பேசும்போது வெண்முரசு 25000 பக்கம் கொண்டிருந்தாலும் அது மிகச்சுருக்கமாக எழுதப்பட்ட ஒரு படைப்பு என்று சொன்னேன். ஏனென்றால் இன்று எழுதியிருந்தால் இன்னும் சேர்க்கவேண்டிய பல உண்டு என்னும் உணர்வால் அந்நாவல் இரு மடங்கு விரிந்திருக்கும்.

ஏராளமான நண்பர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். உரையாடல்கள், வணக்கங்கள். தெரிந்த முகங்கள், தெரியாத புதிய முகங்கள். தமிழ்விக்கியின் மூலக்கல் என சொல்லத்தக்க மகேந்திரராஜன் வந்திருந்தார் (கனடாவில் இருக்கிறார்) அவர் அப்பாவும் உடன் வந்திருந்தார். நான் தமிழ்விக்கி ஒன்றை தொடங்கினாலென்ன என அறிவித்த மறுநாளே டொமெய்ன் பதிவுசெய்து அனுப்பியவர் மகேந்திரன்

விழுப்புரத்தில் இருந்து மதுரைக்கு ரயில். இரவு பதினொரு மணிக்கு. கடலூர் சீனு உட்பட நண்பர்கள் விழுப்புரம் வரை வந்திருந்தனர். ரயில் கிளம்பும்வரை பேசிக்கொண்டே இருந்தோம்.அரிய நாட்களில் இன்னும் ஒன்று. எல்லா நாட்களையும் அவ்வாறு ஆக்கிக்கொண்டிருக்கிறேன்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 01, 2022 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.