ஒரு கனவிலிருந்து மறுகனவிற்கு.
மனிதர்கள் கனவைத் துரத்திச் செல்பவர்கள். எவ்வளவு நெருக்கடியிலும் அவர்கள் கனவுகளைக் கைவிடுவதில்லை. ஒரு கனவிலிருந்து இன்னொரு கனவிற்கு மாறிவிடுவார்களே அன்றிக் கனவுகளற்ற வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதுவும் இயற்கைக்கு மிக நெருக்கமாக. தனித்து வாழுகிறவர்கள் எதையும் துணிச்சலோடு சந்திக்கக் கூடியவர்கள். இடர்களை எதிர்கொண்டு வெல்லக்கூடியவர்கள். அப்படி ஒரு மனிதனின் கதையைத் தான் துருக்கியின் சிறந்த படமான COLD OF KALANDAR விவரிக்கிறது. முஸ்தபா காரா இயக்கிய படமிது.

1980 இல் பிறந்த முஸ்தபா காரா, கும்ஹுரியேட் பல்கலைக்கழகத்தில் வானொலி மற்றும் தொலைக்காட்சித் துறையில் பட்டம் பெற்றிருக்கிறார். 2006 இல் வெளியான ஹோப் ஐலண்ட் அவரது முதல் படமாகும். அவரது இரண்டாவது திரைப்படம் கோல்ட் ஆஃப் கலந்தர்.
இயக்குநர் முஸ்தபா காரா சிறுவனாக இருந்தபோது, மெஹ்மத் போலவே இருந்த ஒருவரைக் கண்டிருக்கிறார். அவரது வாழ்க்கையின் சாயலிலே இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.
ஜாக் லண்டனின் கதாபாத்திரத்தை நினைவுபடுத்துகிறார் மெஹ்மத். தங்கம் தேடி அலாஸ்காவில் அலைந்த ஜாக் லண்டனின் மனநிலை கொண்டே மெஹ்மத்தும் இயங்குகிறார். அறியப்படாத மலைக்குகைகளில் ஏதேனும் அரிய கனிமங்கள் இருக்கக்கூடும் என்று அவர் நம்புகிறார். அதைத் தேடித் தனி ஆளாக மலையேற்றம் செய்கிறார். குகைகளில் தவழ்ந்து சென்று கனிமங்களைத் தேடுகிறார். ஆனால் அவரது கனவு நிறைவேறவில்லை.

குரூரமான யதார்த்தம் அவரை மண்டியிடச் செய்கிறது. தோற்றுப் போய் வீடு திரும்புகிறார். வீட்டில் அவரது அம்மா மட்டுமே அவரைப் புரிந்து கொண்டிருக்கிறார். மனைவி பிள்ளைகள் மீது அன்பு கொண்டிருந்த போதும் அவரால் குடும்பத்தின் சுமையை முழுமையாக ஏற்க முடியவில்லை. நிறையக் கடன் வாங்கியிருக்கிறார். வேலையில்லாத நெருக்கடியும் தோல்வியும் அவரைக் கசப்பான மனநிலையில் வைத்திருக்கிறது. இதிலிருந்து மெஹ்மத் மீளுவதற்கு ஒரேயொரு வழி கிடைக்கிறது. அது காளைச்சண்டை. அதற்காக அவர் தனது காளையைத் தயார்ப் படுத்துகிறார். முடிவு என்னவானது என்பதே படத்தின் கதை.

துருக்கியின் சார்பில் சிறந்த அயல்மொழி படத்திற்கான ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட இப்படம் சர்வதேச அளவில் நிறைய விருதுகளைப் பெற்றிருக்கிறது. மிகச்சிறந்த ஒளிப்பதிவு. தேர்ந்த நடிப்பு. என நிறைவான அனுபவத்தைத் தருகிறது.
கருங்கடல் பகுதியிலுள்ள மலைக் கிராமத்தில் தனது இரண்டு குழந்தைகள், மனைவி மற்றும் தாயுடன் வசிக்கும் மெஹ்மத்தின் வீடும் சூழலும் வேறு நூற்றாண்டில் வாழ்வது போலவே இருக்கிறது. நவீன வாழ்க்கையின் எந்த அடையாளமும் இல்லை. மரத்துண்டுகளைச் சேகரித்துக் கொண்டு. கால்நடைகளுக்கான புல்லைச் சேகரித்துக் கொண்டு கிடைக்கும் உணவுப் பொருளைக் கொண்டு சமைத்து வாழுகிறார்கள்.
படத்தில் நாம் இரண்டு உலகங்களைக் காணுகிறோம். ஒன்று மெஹ்மத்தின் உலகம். மற்றது அவனது மனைவி, குழந்தைகள். அம்மாவுடையது. அவர்கள் மெஹ்மத்தினைப் போலக் கனவுலகில் சஞ்சரிக்கவில்லை. மாறாகக் கடினமான வாழ்க்கையைச் சந்திக்கிறார்கள். பாறையில் முளை விடும் தாவரம் போலக் கிடைத்த வாழ்விற்குள் மகிழ்ச்சியை உருவாக்க முனைகிறார்கள்.

தொலைவில் உள்ள மலையின் குறுகிய குகையினுள் கடினமான பாறைச் சுவர்களில் மெஹ்மத்தின் கோடாரி கற்களை உடைக்கிறது. கிடைத்த மாதிரிகளைச் சேகரித்துக் கொண்டு சுரங்க அதிகாரிகளிடம் பரிசோதனை செய்யும்படி தருகிறார். புதிதாக ஏதாவது கனிமம் அல்லது தங்கம் கிடைத்துவிட்டால் தனது வாழ்வில் அதிர்ஷ்டம் வந்துவிடும் என மெஹ்மத் நம்புகிறார். ஆனால் அவரது முயற்சி தோல்வியடைகிறது. சோர்வுடன் வீடு திரும்புகிறார்.
நள்ளிரவில் வீடு திரும்பும் மெஹ்மத்தின் பசி அறிந்து அவருக்கு உணவு அளிக்கிறார் அம்மா. எத்தனை காலம் இப்படி அதிர்ஷ்டத்தைத் துரத்திக் கொண்டிருப்பது என்று அம்மா வருத்தப்படுகிறார். தன்னால் முடிந்தவரைக் கடினமாக உழைக்கிறேன். எப்படியாவது வாழ்க்கையில் மாற்றம் வந்துவிடும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் மெஹ்மத். உறங்கும் மனைவி குழந்தைகளை அவர் வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது அழகான காட்சி.
விடிகாலைக் குளிரில் எழுந்து கொள்ளும் அவரது மனைவி கால்நடைகளைக் கவனிக்கிறாள். வீட்டு வேலைகள் செய்கிறாள். அவள் குடும்பத்தின் பொறுப்புகளை மொத்தமாகச் சுமந்து கொண்டிருக்கிறாள் என்பது புரிகிறது.

மெஹ்மத்தின் வருகை அவளுக்கு மகிழ்ச்சி தரவில்லை. இப்படிப் பொறுப்பில்லாமல் மலைக்குகைகளில் அலைந்து கொண்டிருக்கிறாரே எனச் சண்டையிடுகிறாள்.
மெஹ்மத்திற்கு நிலையான வேலை இல்லை, ஆகவே அவர் கடனில் அவதிப்படுகிறார். தினக்கூலிக்குச் சுரங்கத்தில் வேலை செய்தால் போதும் என மனைவி ஆலோசனை சொல்கிறார்.
இனி பொறுப்பாக நடந்து கொள்கிறேன் என்று மெஹ்மத் உறுதி அளிக்கிறார் ஆனால் கனிமங்களைத் தேடும் அவரது ஆர்வம் திரும்பவும் அவரை மலையை நோக்கியே திருப்புகிறது. ரகசியமாக அவர் வீட்டை விட்டுப் புறப்படும் காட்சி அழகானது. தொடரும் தோல்விகள் அவரைச் சஞ்சலம் கொள்ளவைக்கின்றன.

இனி அதிர்ஷ்டத்தை நம்பி பயனில்லை என உணரும் மெஹ்மத் காளை சண்டையில் தனது காளையைப் பங்கேற்கச் செய்து போட்டியில் வென்று பரிசுப் பணத்தை அடையலாம் என்று நினைக்கிறார்.
ஆனால் அவரது மனைவி காளையை விற்றுக் கடனை அடைப்போம் என்கிறார். இதை மெஹ்மத்தால் ஏற்க முடியவில்லை. எப்படியாவது போட்டியில் வெல்ல வேண்டும் எனத் தனது காளைக்கு நிறையப் பயிற்சிகள் அளிக்கிறார். மெஹ்மத்தின் கனவுகள் நிறைவேறியதா என்பதே படத்தின் இறுதிப்பகுதி.
நகரங்களில் வசிப்பவர்களுக்கும், இயற்கையோடு இணைந்து மலைப்பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கும் தினசரி வாழ்க்கையின் போராட்டங்கள் ஒன்று போல இருப்பதில்லை. எளிய விஷயங்களுக்குக் கூடப் போராட வேண்டியிருக்கிறது என்பதைப் படம் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது
படம் முழுவதும் பனிக்காற்று வீசுகிறது. பனிபடர்ந்த நிலவெளியும் மலையும் சிறிய மலைக்கிராமமும் அங்குள்ள மரவீடும் கடந்து செல்லும் மேகங்களும் விநோதமான சூழலாக விவரிக்கப்படுகின்றன. பனி அவரது தனிமையை அதிகமாக்குகிறது. அவரது மனநிலையின் அடையாளம் போலவே உணர்த்தப்படுகிறது.

மூடுபனி, மழை, தூரத்து மலைகள். கடந்து செல்லும் வெண் மேகங்கள். நீண்டபனிப்பாதைகள் என அருமையான, அழகான ஒளிப்பதிவு. சில காட்சிகள் ரெம்பிராண்டின் ஓவியம் போலவே ஒளிருகின்றன. மெஹ்மத்தின் மனநிலையையும் பருவகாலங்களையும் படம் அழகாக ஒன்றிணைத்துள்ளது. பல இடங்களில் தார்கோவெஸ்கியின் Mirror படத்தை நினைவுபடுத்துகிறது.
அழகாகப் படமாக்கப்பட்டு எடிட் செய்யப்பட்டுள்ள இப்படம், நான்கு பருவங்களில் ஒரு குடும்பத்தைப் பின்தொடர்ந்து, நிகழ்வாழ்விற்கும் எதிர்காலத்தின் நிச்சயமற்ற தன்மைக்கும் இடையிலான ஊசலாட்டத்தைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது.
••
.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
