தலையசைக்கும் மலர்
கவிஞர் க.மோகனரங்கன் நீரின் திறவுகோல் என்ற பிறமொழிக் கவிதைகளின் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். இந்நூலை தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

மோகனரங்கனின் தேர்வும் மொழிபெயர்ப்பும் மிகச்சிறப்பாக உள்ளது. சமகால உலகக் கவிதைகள் மற்றும் இந்தியக் கவிதைகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளைத் தேர்வு செய்து மொழிபெயர்த்திருக்கிறார்.
காட்சித்தன்மையும் நேரடியான விவரிப்பு மொழியையும் கொண்ட கவிதைகளே எனது விருப்பத் தேர்வாக இருந்தது என்கிறார் மோகனரங்கன். அப்படியில்லை. சில எளிய கவிதைகள் போலத் தோற்றம் தரும் சிக்கலான, ஆழ்ந்த கவிதைகளையும் தேர்வு செய்து மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். அதைத் தமிழில் கொண்டு வருவது ஒரு சவால். கவிதையை ஆழ்ந்து புரிந்து கொண்டு கச்சிதமான சொற்களைத் தேர்வு செய்து மொழிபெயர்த்திருக்கிறார்.

கவிதையின் மீது தீவிரமான பற்றும் தேடலும் கொண்ட ஒருவரால் மட்டுமே இது போன்ற தொகை நூலைச் சாத்தியப்படுத்த இயலும். பிரம்மராஜன் தொகுத்த உலகக் கவிதைகளின் தொகுப்பு மிக முக்கியத் தொகைநூல். அந்த வரிசையில் வைத்துக் கொண்டாட வேண்டிய தொகுப்பாகவே நீரின் திறவுகோலைக் கருதுகிறேன்.
மோகனரங்கன் தேர்வு செய்துள்ள கவிஞர்களின் பெயர்களைப் பாருங்கள். அத்தனை பேரும் சிறந்த கவிஞர்கள். தேர்வு செய்துள்ள கவிதைகளும் சிறப்பானவை. நோபல் பரிசு பெற்ற கவிஞரும் இதில் இடம்பெற்றிருக்கிறார். கபீர் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன.

இணையத்தில் கவிதைகள் கொட்டிக்கிடக்கின்றன. மின் புத்தகங்களாகவும் எளிதில் கிடைக்கின்றன. ஆங்கிலத்தில் கவிதைக்கென்றே பிரத்யேக இணைய இதழ்கள் வெளியாகின்றன. புகைப்படங்களுக்கு அடுத்த இடத்தில் கவிதைகளே அதிக எண்ணிக்கையில் இணையத்தில் பகிரப்படுகின்றன என்கிறார்கள். இந்தக் குவியலுக்குள் நல்ல கவிதையை, நல்ல கவிஞரை அடையாளம் காணுவது எளிதானதில்லை. தேர்ந்த வாசிப்பின் வழியே மட்டுமே இது சாத்தியம்.
புதிய சொல்முறைகளை அறிந்து கொள்ளும்விதமாக இந்தக் கவிதைகளை மொழிபெயர்த்தேன் என்று மோகனரங்கன் கூறுகிறார். ஏன் இந்தத் தேவை ஒரு கவிஞனுக்கு ஏற்படுகிறது.
இன்றைய தமிழ் கவிதை தானாக ஒரு சட்டகத்தினுள் சிக்கிக் கொண்டிருக்கிறது. கவிதையின் மொழி, கூறுமுறை, பாடுபொருளில் மாற்றம் தேவைப்படுகிறது. இதற்கு அயல்மொழிக் கவிதைகளின் வாசிப்பும் புரிதலும் அவசியமானது.

பிரெஞ்சு கவிஞர் ழாக் ப்ரெவெர் கவிதைகள் தமிழுக்கு அறிமுகமானதன் காரணமாகத் தமிழ்க் கவிதையின் பாடுபொருட்களும் மொழிதலும் மாறியிருப்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.
ஒரு வனத்திற்குள் செல்லும் போது நமக்கேற்படும் புதிய அனுபவம் வேறுவேறு குரல்களைக் கேட்பதாகும். அறிந்த அறியாத காட்சிகளின் வழியே நம்மை இழக்கத் துவங்குகிறோம். அன்றாட உலகிலிருந்து விடுபட்டு வேறு உலகில் சஞ்சரிக்க ஆரம்பிக்கிறோம். வனத்தினுள் காலம் குழம்பிக்கிடக்கிறது. சில வேளைகளில் காட்சியும் ஓசையும் தொடர்பில்லாதபடி துண்டிக்கப்பட்டிருக்கின்றன. அது போன்ற ஒரு அனுபவத்தைத் தான் மொழியாக்கக் கவிதைகளைத் தொகுப்பாக வாசிக்கும் போதும் அடைகிறோம்.
வேறுவேறு மொழியில் வேறுவேறு காலங்களில் எழுதப்பட்ட இந்தக் கவிதைகள் தமிழ் வாசகனுக்கு நெருக்கம் தருவதற்கு முக்கியக் காரணம் அதில் வெளிப்படும் கவித்துவ மொழி மற்றும் தருணங்களே. இந்தக் கவிதைகளின் வழியே முற்றிலும் புதிய மொழியுலகம் வெளிப்படுகிறது. புதிய படிமங்கள், பிம்பங்களை அறியத் துவங்குகிறோம். இதுவரை நாம் கொண்டிருந்த மனப்பிம்பங்கள், அடையாளங்கள் இதனால் மாறத் துவங்குகின்றன.

ரோலர்ஹோஸ்டரில் பயணம் செய்வது போல நம்மை மேலும் கீழுமாகக் கவிதை சுழற்றிவிடுகிறது. கவிதைகளின் வழியே நமது அகம் உருமாற்றம் கொள்கிறது. புறப்பார்வைகள் மாறுகின்றன. கேமிராவின் லென்ஸை மாற்றுவதன் மூலம் காட்சிகளை நெருக்கமாகப் படமாக்குவது போலக் கவிதை சில சொற்களைக் கொண்டு பொருட்களை, மனிதர்களை, இயற்கையை நமக்கு நெருக்கமாக்குகின்றன. நமக்குள் இருப்பது ஒரு கோணல் உலகம் என்பதைச் சில கவிதைகள் உணர்த்துகின்றன. சமூகத்தால் கைவிடப்படுதல், அரசியல் மற்றும் அதிகாரத்தால் வேட்டையாடப்படுதல், அகதியாக தன்னுடைய அடையாளம் இழப்பது. விவரிக்க முடியாத வன்முறைகள், துயர நிகழ்வுகள், தற்கொலை போன்றவற்றைக் கவிதை தொட்டுப் பேசும் போது அது தனிநபரின் அனுபவமாகச் சுருங்கிவிடாமல் பொது அனுபவமாக, எதிர்ப்பின் அடையாளமாக மாற்றப்படுகிறது. கவிதை ஒரு மாற்று உலகை, மாற்று மெய்மையை உருவாக்கவே முனைகிறது.
Auto Mirror by Adam Zagajewski
In the rear-view mirror suddenly
I saw the bulk of the Beauvais Cathedral;
great things dwell in small ones
for a moment.

வாகனக் கண்ணாடி
பின்னோக்கு ஆடியில் திடுமென
போவாயிஸ் தேவாலயத்தின்
பெரும்பகுதியைக் கண்டேன்
பெரிய விஷயங்கள்
ஒரு கணம் தங்குகின்றன
சிறியவற்றுள்
என்ற ஆடம் ஜகாஜெவ்ஸ்கியின் கவிதை எளிமையாகத் தோன்றினாலும் தாவோ வெளிப்படுத்தும் ஞானம் போன்ற அனுபவத்தைத் தருகிறது.
பனித்துளியில் ஆகாயம் பிரதிபலிப்பது போன்றது. இடம் மாறுவது பொருட்கள் மட்டுமில்லை. நாம் இதுவரை வைத்திருந்த மதிப்பீடு தான்.
பெரிய விஷயங்கள்
ஒரு கணம் தங்குகின்றன
சிறியவற்றுள்
என்ற கச்சிதமான சொற்களின் வழியே நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட கவிதை போன்ற அனுபவத்தை மொழிபெயர்ப்பாளர் உருவாக்குகிறார்.
••
நெப்போலியன்
மிரோஸ்லாவ் ஹோலூப்

குழந்தைகளே
நெப்போலியன் போனபார்ட் எப்போது பிறந்தார்
வினவுகிறார் ஆசிரியர்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், குழந்தைகள் சொல்கின்றனர்
நூறு வருஷங்களுக்கு முன்
குழந்தைகள் சொல்கின்றனர்
கடந்த வருடம் தான்
குழந்தைகள் சொல்கின்றனர்
யாருக்கும் தெரியவில்லை
குழந்தைகளே
நெப்போலியன் போனபார்ட் என்ன செய்தார்
வினவுகிறார் ஆசிரியர்
போரில் வெற்றி பெற்றார், குழந்தைகள் சொல்கின்றனர்
போரில் தோல்வியுற்றார், குழந்தைகள் சொல்கின்றனர்
யாருக்கும் தெரியவில்லை
நமது கறிக்கடைக்காரர்
நெப்போலியன் எனும் பெயருடைய
நாய் ஒன்றை வைத்திருந்தார்
பிரான்சிஸ் சொன்னான்
அவர் அதை அடித்துத் துன்புறுத்துவார்
போனவருடம் அது பட்டினியால் இறந்து போனது
எல்லாக் குழந்தைகளும்
இப்போது நெப்போலியனுக்காக வருந்தினார்கள்.
வரலாற்றினால் உருவாக்கப்படும் பிம்பத்திற்கும் வாழ்க்கை உருவாக்கும் பிம்பத்திற்குமான வேறுபாட்டினை கவிதை மிக அழகாக எடுத்துக் காட்டுகிறது. எளிய உயிர்களின் துயரமே நம்மைப் பரிவு கொள்ள வைக்கிறது. வரலாற்று நாயகர்களின் வெற்றிகள் யாவும் வெறும் செய்திகளே. பட்டினியால் இறந்து போன நெப்போலியன் எனும் நாய் வரலாற்றில் ஒரு போதும் இடம் பெறாது. ஆனால் அது குழந்தைகளின் மனதில் இடம் பிடித்துவிடுகிறது. குழந்தைகளின் வேறுவேறு பதில்கள் மூலம் எப்படி நடந்திருந்தாலும் பெரிய மாற்றம் ஒன்று ஆகியிருக்காது என்ற உணர்வைக் கவிஞர் ஏற்படுத்துகிறார். வினவுகிறார் ஆசிரியர் என்ற மொழியாக்கம் சிறப்பானது.
•••
சிங்கம்
கல்பற்றா நாராயணன்.

நிஜமான சிங்கம்
தன் ஆகிருதியை
எப்போதும்
காட்டியவாறே இருக்காது
சிற்பங்களிலும்
சித்திரங்களிலும்
கண்ணால் கண்டிராதவர்களின்
கற்பனைகளிலும்
இருக்கும் சிங்கமோ
எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது
சிங்கமாகவே
இது சிங்கத்தை மட்டும் குறிக்கும் கவிதையில்லை. சிங்கம் ஒரு அடையாளம் மட்டுமே. மிகை வெளிப்பாடு நமது பண்பாட்டின் இயல்பாகியிருக்கிறது. கற்பனையில் நாம் கொள்ளும் உருவங்களே நமக்குப் போதுமானதாக இருக்கின்றன. அதையே நாம் நிஜமாகவும் நினைக்கிறோம். பகிர்ந்து கொள்கிறோம்.
••
ஒரு மலர்
ஜாக் கெரோக்
ஒரு மலர்
மலையுச்சியினின்றும்
தலையசைக்கிறது
பள்ளத்தாக்கினைக் நோக்கி
One Flower
on the cliffside
Nodding at the canyon.
-Kerouac
அச்சமற்ற மனதின் குறியீடாகிவிடுகிறது மலர். நிஜம் தானே. மலருக்கு முகடு என்றோ பள்ளத்தாக்கு என்றோ பேதமில்லை. வீழ்வதைப் பற்றி எந்த மலரும் கவலை கொள்வதில்லை. பயந்து நடுங்குவதில்லை. மலர்வது போலவே உதிர்வதும் அதன் ஒரு நிலையே
மலையுச்சியிலிருந்து ஒரு மலர் பள்ளத்தாக்கினை நோக்கித் தலையசைப்பது காதலின் அடையாளமாகவும் தோன்றுகிறது. பள்ளத்தாக்கு மலரை ஒரு போதும் கையில் ஏந்திக் கொள்ளாது. என்றாலும் பள்ளத்தாக்கு வசீகரமாக இருக்கிறதே.
வேறுவிதமாக வாசித்தால் இந்தத் தலையசைப்பை மறுப்பாகவும் எடுத்துக் கொள்ளலாம். பள்ளத்தாக்கின் ஏதோ ஒரு வேண்டுகோளை மலர் மறுத்தும் தலையசைத்திருக்கலாமே.
பௌத்த மடாலயங்களில் துறவிகள் வெண்கலமணியைச் சுழற்றுவார்கள். அதிலிருந்து இனிமையான நாதம் விரிந்து பரவும். அது போன்ற ஒரு உணர்வு அலையைத் தான் இந்தக் கவிதையும் ஏற்படுத்துகிறது.

ஜாக் கெரோக் ஹைக்கூ கவிதைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர். இது போன்ற ஹைக்கூ கவிதைகளை நிறைய எழுதியிருக்கிறார். Book of Haikus என்ற பெயரில் தனித்தொகுப்பாக வெளியாகியுள்ளது
மஞ்சள் பறவை நிறைந்த நிலப்பரப்பு
ஷண்டாரோ தனிகாவா

பறவைகள் உள்ளன
அதனால் வானம் இருக்கிறது. வானம் உள்ளது
அதனால் பலூன்கள் இருக்கின்றன
பலூன்கள் உள்ளன
அதனால் குழந்தைகள் ஓடுகிறார்கள்
குழந்தைகள் ஓடுகிறார்கள் அதனால் சிரிப்பு இருக்கிறது
சிரிப்பு உள்ளது
அதனால் சோகம் இருக்கிறது. ஆகவே பிரார்த்தனை இருக்கிறது
மேலும் மண்டியிடுவது இருக்கிறது
நிலம் உள்ளது
அதனால் தண்ணீர் ஓடுகிறது. இன்றும் நாளையும் இருக்கிறது
ஒரு மஞ்சள் பறவை உள்ளது. எனவே அனைத்து வண்ணமும்
மரங்களும் இயக்கங்களும் இருக்கின்றன
உலகம் இருக்கிறது
உலகம் எந்த அடுக்கில் உள்ளது. எந்த வரிசையில் இயங்குகிறது என்பதைப் பற்றிப் பொதுப்புத்தியிலிருந்து மாறுபட்ட வரிசையை, அனுபவத்தைக் கவிதை உருவாக்குகிறது. பறவைகள் இருப்பதால் வானம் இருக்கிறது என்று கவிதை துவங்குகிறது. வாசித்தவுடன் சட்டென நமது பார்வை மாறிவிடுகிறது. சிரிப்பு இருப்பதால் சோகம் இருக்கிறது என்ற வரியின் மூலமாக மகிழ்ச்சியின் அடியில் எப்போதும் சோகம் மறைந்திருப்பதை உணர முடிகிறது. பிரார்த்தனை என்பதே ஒரு பக்க உரையாடல் தானே.
ஒரு மஞ்சள் பறவை உள்ளது. எனவே அனைத்து வண்ணமும்
மரங்களும் இயக்கங்களும் இருக்கின்றன
உலகம் இருக்கிறது
என்ற வரிகளை வாசித்து முடிக்கையில் மஞ்சள் பறவை விநோதமாகிவிடுகிறது. எது அந்த மஞ்சள் பறவை. நெருப்பின் சுடருக்குள் சதா பறந்து கொண்டிருக்கிறதே ஒரு பறவை அது தானா. இல்லை காற்று தான் மஞ்சள் பறவையா. அல்லது உயிரியக்கம் தான் பறவையாகச் சிறகடிக்கிறதா. உலகம் இருக்கிறது என்பதே அதன் இயக்கத்தால் தான் அறியப்படுகிறது. இந்த இயக்கத்தினை நாம் தான் நமது வசதிக்காக வரிசைப்படுத்திக் கொள்கிறோம். மனித உணர்வின் தனித்துவமான ஒளிரும் இடமாகக் கவிதை விளங்குகிறது. கவிதை சிலவற்றை வெளிக்காட்டுவதைப் போலவே சிலவற்றை மறைத்துக் கொள்கிறது. ஆகவே ஒற்றை வாசிப்பில் ஒருவர் கவிதையை முழுமையாக உள்வாங்கிக் கொண்டுவிட முடியாது. கவிதை தனக்கெனச் சொந்த விதிகளைக் கொண்டிருக்கிறது. பயணப்படாத பாதைகளில் பயணிக்கிறது.
காலியான வீட்டில் ஒலித்துக் கொண்டிருக்கும் தொலைபேசி போன்றது எனது கவிதை என்கிறார் ஆனி கார்சன். அந்தத் தொலைபேசியை யார் எப்போது எடுத்துப் பேசுவார்கள் என்பது புதிரானது. அதே நேரம் அந்தத் தொலைபேசி அழைப்பு இன்னமும் வீடு உயிரோட்டத்துடன் இருப்பதையும் நினைவுபடுத்துகிறது. சுழலும் மின்விசிறியின் இறக்கைகள் காற்றைத் துண்டிப்பது போன்றது தான் கவிதை எழுதுவது என்கிறார் மிலான். இன்மையில் சுழலுவது கவிதையின் இயல்புதானே.
இந்தத் தொகுப்பில் அகத்தேடலை முதன்மைப்படுத்தும் கவிதைகள் நிறைய இருக்கின்றன. அது போலவே கவிதை குறித்து எழுதப்பட்ட சில தனித்துவமான கவிதைகளும் இருக்கின்றன. சில கவிதைகள் வாழ்க்கையின் புறச்சூழல் மற்றும் நிகழ்வுகளைச் சார்ந்து ஏற்படும் மாறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.
பொதுவாக அயல்மொழிக் கவிதைகளின் தொகைநூல்களைத் தொகுக்கும் போது கவிஞர்களை முதன்மைப்படுத்தியதோ, அல்லது நாடுகளை வரிசைப்படுத்தியோ தொகுப்பார்கள். அது மரபான முறை. சிறந்த கவிதைகளை மட்டுமே மோகனரங்கன் முதன்மைப்படுத்தியிருக்கிறார். அதுவும் தனக்கு விருப்பமான முறையில் விருப்பமான கவிஞர்களை மட்டுமே தொகுத்திருக்கிறார். அதுவே இத்தொகுப்பினைத் தனித்துவமாக உணரச் செய்கிறது. இளம் கவிஞர்களும் கவிதை வாசகர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகமிது.
•••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers
