கூடங்குளம் – சில கடிதங்கள்

அன்புள்ள ஜெ.,


சமீபத்திய காந்தியப் போராட்டங்களின் பின்னடைவுக்குப் பின்வரும் காரணங்களை என்னால் ஊகிக்க முடிகிறது:


௧) நீங்கள் சொன்னது போல, ஊடகங்களின் லாபகர நோக்குத் தன்மை… காந்திய நோக்குடைய ஊடகங்களின் பற்றாக்குறை


௨) காந்தியப் போராட்டத்தை நடத்துபவர் காந்தி போல இருக்க வேண்டியுள்ளது – அன்னா ஹசாரே கிட்டத்தட்ட அதை நெருங்கினார். ஆனால், உதயகுமாரால் அப்படி ஒரு நம்பிக்கையைப் பெறமுடியவில்லை என்பதே உண்மை.


௩) மூன்றாவது முக்கியக் காரணம், நல்லெண்ணத்துடன் காந்தி அளவு ராஜதந்திரமும், மக்கள் நாடியைப் பிடித்துப் பார்க்கத் தெரிந்த ஒரு தலைவர் வரலாற்றின் அபூர்வம் என்று கருதுகிறேன்.


௪) காந்தி, மண்டேலா, லூதர் கிங் – "செய் அல்லது செத்துமடி" என்பதை வலுவாக நம்பும் மனநிலையும் அதற்கான காரணங்களும் இவர்களின் போராட்டத்தில் இருந்தது. உயிரைப் பணயம் வைத்துப் போராடும் அளவுக்கு, ஊழலும், அணுசக்தியும் மக்கள் மனதை இன்னும் உசுப்பேற்றவில்லை.


ஆனால், ஜனநாயகம் என்பது மக்களின் கோபத்திற்கு ஒரு மிகப்பெரிய வடிகாலைத் தருகிறது. ஹசாரேயின் பின்னடைவு வருத்தத்தைத் தருகிறது. ஆனால், இதே மத்தியவர்க்க மனநிலைதான் பல்வேறு வன்முறைப் புரட்சிகளையும் இந்தியாவில் வேரறுத்து இருக்கிறது அல்லவா?


நீங்கள் சொன்னதுபோல காந்தியம் என்பது நம்முன் உள்ள ஒரே வழி என்கிற அளவுக்கு ஜனநாயகத்தில் மக்கள் விழிப்புடன் இருந்தாலே அது மிகப்பெரிய சாதனை என்று நினைக்கிறேன்.


நன்றி

ரத்தன்


அன்புள்ள ஜெ,


உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் எழுதியுள்ள இந்த உருக்கமான கடிதத்தை ஃபேஸ்புக்கில் நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்தார் (கீழே).


என்ன சொல்ல வருகிறார் உதயகுமார்? மீனவர், தலித்கள், முஸ்லிம்கள் ஆகியோர் lower classes & lower castes… மற்றவர்கள் அனைவரும் தில்லியிலும் சென்னையிலும் உட்கார்ந்து கொண்டு கோடிகளில் புரளும் upper classes & upper castes. இதில் இவர் கூறும் சமூக பிரிவினைக்கு என்ன அர்த்தம்? உண்மையில் இந்தப் போராட்டம் இந்த இரண்டு சமூகப் பிரிவினருக்கும் நடக்கும் போராட்டம் என்று அவர் பகர்ந்திருக்கிறார்.


இந்தக் கடிதத்தில் இவர் பயன்படுத்தும் சொல்லாடல்கள் அனைத்தும், இந்திய சமூகத்தை பிளவுபடுத்தி பகுப்பாய்வு செய்யும் (fragment & deconstruct) மேற்கத்திய பல்கலைக் கழகக் கல்வியாளர்களும் கிறிஸ்தவ மிஷனரிகளும் கூறும் அதே வகையில் உள்ளன.


இதனை எப்படி அண்ணா ஹசாரேயின் போராட்டத்துடன் ஒப்பிட முடியும்?


அண்ணாஜி அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளே கொண்டு வர வேண்டும் என்பதற்காக பலவித சமரசங்களைச் செய்தார்.. அவரது வாழ்நாள் ஆதர்சமான விவேகானந்தரின் படத்தை சின்னதாக மேடையில் போட ஒத்துக் கொண்டார், வந்தே மாதரம் என்ற தேசிய முழக்கத்தைக் கூட அடக்கி வாசிக்கச் சொன்னார். அவற்றையெல்லாம் காந்திய சமரச வழிமுறைகளின் ஒரு பகுதி என்று பலர் உண்மையிலேயே நம்பினார்கள். நீங்கள் கூட அவ்வாறு குறிப்பிட்டிருந்தீர்கள். அந்தப் போராட்டம் உண்மையான, காந்திய ரீதியிலான மக்கள் போராட்டம்.


ஆனால் இந்தப் போராட்டத்தின் தலைவரான உதய்குமார் நாட்டு மக்களுக்கு தனது நிலையை விளக்கும் வாக்குமூலம் இப்படி இருக்கிறது. காந்தி ஒருபோதும் இத்தகைய பிளவுகளை முன்வைத்ததில்லை. உதயகுமாரை காந்தியவாதி என்று கருதுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை (அவரே அப்படி சொல்லிக் கொள்வதும் இல்லை என்பது வேறு விஷயம்), இது காந்திய போராட்டமும் அல்ல. அப்படி நினைப்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.


இன்றைய செய்தி:


கூடங்குளப் பிரச்சினையை சர்வதேசப் பிரச்சினையாக முன்வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து, உலக அளவில் அழுத்தம் தந்து தடை வாங்குவேன் என்று சொல்லியிருக்கிறார் உதயகுமார். இது காந்திய போராட்டத்தில் கட்டாயம் வராது என்றே நினைக்கிறேன்.


அன்புடன்,

ஜடாயு


அன்பின் ஜெயன்,


நலமா? நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுடன் தொடர்பு கொள்கிறேன். உங்கள் எழுத்துக்களை வாசித்துக் கொண்டேதான் உள்ளேன். ஆறாத துயரத்தை சுமக்கும் இதயத்தின் ஆறுதல் அவை.


உதயகுமாரைப் பற்றிய தகவல்களை வாசித்து கொண்டு இருக்கிறேன். அது திலீபனின் உண்ணாவிரதத்தை நினைவுபடுத்தி மனதை பதறச் செய்கிறது. தியாகம் என்ற சொல்லுக்கு அர்த்தம் உள்ளதா தெரியவில்லை. திலீபன் உயிர் பிரிவதை மனம் பதற கண்ணீர் பெருக பார்த்து இருந்தோம். இன்றோ அதன் பயன் என்ன என்று மனம் பேதலிக்கிறது. திலீபனின் அம்மா சிறு வயதிலேயே இறந்து விட்டார். அவரின் தந்தை ஒரு ஆசிரியர். பள்ளிக்கூடத்தில் ஒரு கையால் தொட்டிலில் அவனை இட்டு ஆட்டியவாரே படிப்பித்தாராம். என்னுடைய அப்பாவிடம் இதை மட்டுமே அவர் சொன்னார். தளர்ந்து போன நடையுடன் நடந்து போன அந்தத் தந்தையின் முகத்தை என்னால் மறக்கவே முடியவில்லை. உதயகுமாரின் குடும்பம் இதனை எவ்வாறு எதிர் கொள்கிறது?


அன்புடன் கலா


முடிந்தால் இதை உங்களது இணையத்தில் போடவும் . எல்லோரையும் இந்தச் சுட்டியில் உள்ள லெட்டரை அனுப்பும்படி சொல்லவும்.


http://org2.democracyinaction.org/o/5...


உதயகுமாரை நான் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் போய் புகுஷிமா நினைவுநாள் அன்று சந்தித்து வந்தேன், அவருடன் 5 நிமிடங்கள் பேச வாய்ப்புக் கிடைத்தது, நான் அவர் நன்றாக தலைமை ஏற்று புத்தி கூர்மையாக போராட்டத்தை நடத்தி வருகிறார் என்று அவரிடம் சொன்னேன். அப்பொழுதே பெரும்பாலான மக்கள் இதை ஒரு மீனவ கிராம போராட்டம் அதுவும் ஒரு கிறிஸ்துவ மீனவ மக்களின் போராட்டமாகவே இன்னும் கண்டு கொள்கிறார்கள் அதனை மாற்றுவதற்கு நீங்கள் இன்னும் சமயோசிதமாக இருக்கணும்னு சொன்னேன். சில யுக்திகளை சொன்னேன், அவரும் புன்னகை புரிந்தார் .


புகுஷிமா நிகழ்ந்த பொழுது நம்ப ஊரு மக்கள்தாம் தொலைக்காட்சியை, ஏதோ ஒரு ஹாலிவுட் படம் பார்ப்பது போல் கண்கொட்டாமல் பார்த்தார்கள். அப்பொழுது சிலர் "ஏன் இந்த அபாயமான அணுஉலைகளை மனுஷங்க பயன்படுத்தறாங்கன்னு கேள்வி கேட்டாங்க " அவங்க தான் இப்போ இது ஒரு கிருஸ்துவ மீனவ போராட்டம்னு அயோக்யத்தனமா பேசுறாங்க.


ஒரு கவலை அளிக்கும் விஷயம் என்னவென்றால் கூடம்குளம் போராட்டத்தில் சில பிரிவினைவாத பேச்சுக்கள் இருந்தன. சம்மந்தமே இல்லாமல் வசை மேடையாகமாறி இருந்தது. சிலர் நன்றாக சமநிலையில் உரையாடினார்கள். ஆனால் பெரும்பாலும் இன பேச்சுக்கள், மேடைக்கும் இந்தப் போராட்டத்திற்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லை. சில ஐயங்கள் இருந்தன, ஆனாலும் இவையெல்லாம் இந்தப் போரட்டத்தின் விளிம்பு நிலை மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள்.


அதனை நான் அங்குள்ள கேரளா நண்பர் காந்தியவாதி சஹாதேவன் என்பவரிடம் கூறி விடை பெற்றேன். அவர் உதயகுமாரின் நண்பர். இந்தப் போராட்டம் இந்த விளிம்பு நிலை சந்தர்ப்பவாதிகளை வைத்து எடைபோடக்கூடாது என்று அங்கு வந்திருந்த மக்களிடம் உரையாடிய பிறகு உணர்தேன். எந்த ஒரு சமூகப் போராட்டத்தையும் கைப்பற்ற காத்துக்கொண்டு இருக்கிறார்கள் சித்தாந்த வெறியர்கள். இந்தத் தருணத்தில் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படக் கூடாது என்று ஒரு நண்பரிடம் சொன்னேன். போராட்டத்தின் மையம் நிலையான ஒரு அஹிம்சைவாதி கையில் இருந்தால் போதும் என்றேன்.


எந்த ஊரில் எந்த மக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அவர்கள்தான் போராடுவார்கள். நாளை மயிலாப்பூரில் கபாலி கோவில் பக்கத்தில், அல்லது ஸ்ரீரங்கத்தில் ஒரு போராட்டம் நடந்தால் அது ஒரு இந்து போராட்டமாக மாறிவிடுமா? அப்படிச் சொன்னால் ஏற்பார்களா? எவ்வளவு மோசடி, தனக்கு ஒரு நியாயம், பிறருக்கு ஒன்று.


எதையும் ஒரு மத நோக்குடன் சமநிலை இல்லாமல் பார்ப்பதும், மத்திய வர்க்கத்தின் கையாலாகாத தனமும்தான் நம் நாட்டின் சுரண்டல்களுக்குக் காரணம் என்று அரசியல் பேசும் பல நண்பர்களிடம் கூறினேன். நானும் ஒரு வலது சார்ந்த கட்சி குடும்பத்தில் வளர்ந்தவன்தான். அவர்கள் இன்னமும் ஒரு இரு அரசியல் கட்சி சார்ந்த பிரசார பீரங்கிமாதிரி மாதிரியே பேசுகிறார்கள். அல்லது சம்பந்தம் இல்லாமல் சயின்ஸ் பேசும் இளைஞர்கள். நம்ப இத எதிர்க்கலைன்னா நம்ப வரும்கால சந்ததியினர் காறி நம்ப மூஞ்சில துப்புவாங்கன்னு சொல்லி வாதாடி ஓய்ந்துவிட்டேன்..


எதுவும் உதவவில்லை என்றால் உணர்ச்சியைக் கையாள வேண்டும் போல. இதும் ஒருவிதமான சயின்ஸ்தான் என்று தோணுது. சங்கரன்கோவில் முடிவுக்கு பிறகு இது வரும் என்று எதிர் பார்த்ததுதான். கீழ்த்தனமான அப்பட்டமான அரசியல் – கார்ப்போரேட் கூட்டுக் களவாணிகள் . அண்ணா ஹசாரே போராட்டத்திற்கு எப்படி துணையாக இருந்தேனோ அப்படி இந்தப் போராட்டத்திற்கும் முடிந்தளவுக்கு போகும் இடத்தில் இதைப் பற்றி விவாதங்களைத் தெரிந்தவர்கள், அந்நியர்களிடம் எழுப்பிப் கொண்டே இருக்கிறேன்.


அறத்தைச் சீண்டவேண்டும்,பேசிப்பேசி சாகணும், அதுவே ஒரே வழி போல. எத்தனைக் கதைகளில் மனிதன் சிக்குகிறான், அவன் தானாக போய் தேட அவனுக்கு பயம். எதையாவுது பற்றிக்கொண்டு "நான் இதான், என்னைப் பற்றிப் பேசாதே" என்று ஒரு வலையைப் பின்னிக்கொள்கிறான். தொழில்நுட்பம் ஒரு நம்பிக்கையாக மாறிவிட்டது. அது மத நம்பிக்கையைப் போலத்தான் . மனிதனுக்கு வாழ்வதுமேல், இந்த பூமிமேல் நம்பிக்கை இல்லை போல. இருந்தால் இப்படியா பூமியை கற்பழிப்பான்?


எனக்கு என்றைக்குமே எனது மூதாதையர்கள் மேல் ஒரு பிரியம் உண்டு. ஆனால் எனது சமகால மக்கள் மூதாதையராகத் தகுதியானவர்களா என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது. எனது தாத்தா எனக்களித்த வாய்மொழி/செயல் வழி ஞான விதைகள் ஒரு மரபின் ஆழம்.. அதையெல்லாம் வரும் மனிதர்கள் இழந்து விடுவார்கள் போலிருக்கிறது .


நன்றி

லட்சின் என்கிற லக்ஷ்மி நரசிம்ஹன்


தொடர்புடைய பதிவுகள்

கூடங்குளம் — கடிதங்கள்
கூடங்குளம் உண்ணாவிரதம்
கூடங்குளம் — இரு கடிதங்கள்
கூடங்குளம் — ஒரு கடிதம்
கூடங்குளம்
கூடங்குளமும் கலாமும்
நிலக்கரியும் அணுசக்தியும்-கடிதம்
அனலும் அணுவும்
கூடங்குளம் இரு கடிதங்கள்
கூடங்குளம்-கடிதம்
கூடங்குளம் அனுபவப்பதிவு
கூடங்குளம் செய்திகள்
ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை
கூடங்குளம் கடிதங்கள்
அணுமின்சாரமின்றி வேறு வழி இல்லையா?
கூடங்குளம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2012 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.