காப்பியங்கள் தமிழில்

தமிழில் பிறமொழிக் காப்பியங்கள் அரிதாகவே மொழியாக்கம் செய்யப்படுகின்றன. மகாபாரதத்திற்கே சரியான உரைநடை மொழியாக்கம் என்பது நீண்டநாட்களாக இல்லை என்பதே சூழல். தி.ஈ.ஸ்ரீனிவாசாச்சாரியாரின் கும்பகோணம் மொழியாக்கம் வெளிவந்த காலகட்டத்திலேயே புதுமைப்பித்தன் போன்றவர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. முதல்பதிப்புக்குப்பின் அரைநூற்றாண்டுக்காலம் மறுபதிப்பு வெளிவரவில்லை. இன்றும் அந்நூல் வாசிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது.

ஆனால் பாகவதம் உட்பட வெவ்வேறு புராணங்களின் மொழியாக்கங்கள் தொடர்ந்து வாசிக்கப்படுகின்றன. வால்மீகி ராமாயணத்துக்கு சிறந்த மொழியாக்கம் உள்ளது. ரகுவம்சத்திற்கு வே.ஸ்ரீ. வேங்கடராகவாச்சார்யர் மொழியாக்கம் தமிழில் ஒரு சாதனை என்றே சொல்லத்தக்கது. காவிய ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ளும் மொழியாக்கம் அது. (ரகுவம்சம் )

மேலைக்காவியங்களில் மிகச்சிலவே தமிழில் வெளிவந்துள்ளன. ஒப்புநோக்க அவற்றில் சிறந்த மொழியாக்கம் நாகூர் ரூமி மொழியாக்கத்தில் வெளிவந்த இலியட் மொழியாக்கம். நவீன உரைநடையில் செறிவாக அமைந்த அந்த மொழியாக்கம் பரவலாக வாசிக்கப்பட்ட ஒன்று.

முற்றிலும் வீண் எனச் சொல்லத்தக்க இரு மொழியாக்கங்கள் உள்ளன. ஒன்று ஆர்.சிவலிங்கம் (உதயணன்) மொழியாக்கம் செய்த பின்னிஷ் மொழி காவியமான  கலேவலா. அந்த மொழியாக்கத்தின் அச்சு, அதன் படங்களின் தரம், அனைத்தையும் விட அதன் மலிவான விலை (பின்லாந்து அரசின் நிதிக்கொடையுடன் அச்சானது) காரணமாக அதை பலர் வாங்கியிருப்பார்கள். நானும் வாங்கினேன். வாசிக்க வாசிக்க மண்டையில் கல்லால் அறைந்த உணர்வை நான் அடைந்ததையே பலரும் அடைந்திருப்பார்கள்.

கலேவலா பின்னிஷ் மொழியின் முதற்காப்பியம். பலவகையிலும் இந்திய இதிகாசங்களுடன் ஒப்பிட்டு ஆராயவேண்டியது. சீவகசிந்தாமணி முதலிய தமிழ் காப்பியங்களுடனும் ஒப்பிடப்படலாம். ஆனால் தமிழ் நாட்டார் காப்பியங்களான உலகுடையபெருமாள் கதை, சுடலை மாடன் கதை போன்றவற்றுடன் ஒப்பிடப்பட்டு மிக விரிவான ஆய்வுகள் நடைபெற்றிருக்கலாம். கிரேக்க, கிறிஸ்தவ செவ்வியலால் தொடப்படாத நாட்டார் காவியமான இது இந்தியாவின், தமிழகத்தின் தொன்மையான காவியங்களை புரிந்துகொள்ளும் பல வழிகளை திறக்கக்கூடியது. ஆனால் அத்தகைய எந்த ஆய்வும் நிகழவில்லை. கலேவலா பற்றிய எந்த உரையாடலும் தமிழ்ச்சூழலில் நிகழவில்லை.

அவ்வண்ணம் வாசிக்கப்படாமல் போனமைக்கு ஆர்.சிவலிங்கம் அவர்களின் மொழியாக்கம் ஒரு முதன்மைக்காரணம். தமிழக நாட்டாரிலக்கியம் சார்ந்த அறிதலோ, செவ்வியல் மரபில் பயிற்சியோ இல்லாத அவர் இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பயிற்சியற்ற மொழியில் இக்காவியத்தை மொழியாக்கம் செய்தார்.பின்னர் உரைநடையில் மொழியாக்கம் செய்யப்பட்டபோதும்கூட அந்நடை தேர்ச்சியற்றதாக, தேவையற்ற சொற்களும் சொற்றொடர்க்குழப்பங்களும் கொண்டதாகவே அமைந்தது. தமிழக எழுத்து- வாசிப்புச் சூழலில் இருந்து பலகாலம் அகன்றிருந்த ஆர்.சிவலிங்கம் அவர்களுக்கு தமிழின் ஓட்டம் கைவரவில்லை.

புதுக்கவிதைக்கு அண்மையான அல்லது தமிழ்நாட்டார்ப் பாடல்களுக்கு அணுக்கமான ஒரு வடிவில் இக்காவியம் மீண்டும் மொழியாக்கம் செய்யப்படவேண்டும், அஸ்கோ பர்ப்போலாவின் முன்னுரைகூட வாசிப்புக்கு உகந்த தமிழில் மீண்டும் மொழியாக்கம் செய்யப்படவேண்டும் . அதன்பின் சில வாசிப்பரங்குகளுடன் இது மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டால் நம் காப்பிய வாசிப்பில் பெரிய விளைவுகள் உருவாகலாம்

நான் ஆங்கிலச் சுருக்கத்தில் மிக ஈடுபட்டு வாசித்த காப்பியம் தாந்தேயின் டிவைன் காமெடி. பல கட்டுரைகளில் அதை குறிப்பிட்டிருப்பேன். ஏனென்றால் அது சித்தரிக்கும் ஆன்மாவின் மீட்புப்பயணம் ஒரு காலகட்டத்தில் நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு மிக அண்மையானதாக இருந்தது.

டிவைன் காமெடியை விண்ணோர் பாட்டு என்ற பெயரில் கே.சுப்ரமணியம் மொழியாக்கம் செய்து விடியல் பதிப்பகம் வெளியிட்டது. பெரிய நூல்கள். விடியல் சிவா எனக்கு அவற்றை ஒரு சிறு குறிப்புடன் அனுப்பிவைத்து அந்நூலைப்பற்றி நான்கு வரி எழுதும்படி கோரினார். நானும் எழுதவேண்டும், பாராட்டவே வேண்டும் என்னும் எண்ணத்துடன் அந்நூலை வாசிக்க முற்பட்டேன்.

மிகக்கொடுமையான மொழியாக்கம். மரபார்ந்த யாப்பில் அமைந்த நடை. யாப்பு என்பது இயல்பாக, பேச்சுபோல தன்னியல்பாக, ஒருவருக்கு வருமென்றால்தான் அது வாசகனுக்கு உகந்ததாக இருக்கும். செய்யப்படும் யாப்பு என்பது ஒருவர் முக்கி முக்கிப் பேசுவதுபோன்றது.

கே.சுப்ரமணியம் தங்குதடையின்றி யாப்பை கையாளும் அளவுக்கு தமிழ்ப்புலமை கொண்டவர் அல்ல. ஆகவே செய்யுள்நடை மிகமிக செயற்கையாக உள்ளது. யாப்பு தன்னியல்பாகவே அடைமொழிகள் மற்றும் அணிமொழிகள் வழியாக இயங்கக்கூடியது. எனென்றால் அதில் பொருள் அமைவதைவிட சந்தம் அமைந்தாகவேண்டும். ஆகவே சரியாக யாப்பு அமையாவிடில் சுற்றிச்செல்லும் நடையும், தேய்வழக்கான அணிகளும் செய்யுளில் நிறைந்திருக்கும். கே.சுப்ரமணியத்தின் மொழியாக்கம் அத்தகையது.

டிவைன் காமெடியை இன்றைய நவீன மொழிநடையில். செறிவாக எவரேனும் மீண்டும் மொழியாக்கம் செய்யலாம். அது பொதுவாசகர் இயல்பாக வாசித்துச்செல்லத்தக்க நூல் அல்ல. ஆனால் ஆய்வாளர்களுக்கு இந்திய காவியங்களை ஐரோப்பியக் காவியங்களுடன் ஒப்பிட்டு வாசிக்க மிக உதவியானது. ஐரோப்பாவின் வரலாறென்ன, அதன் சாராம்சமான விழுமியங்களும் உணர்வுகளும் என்ன என்பதை ஐரோப்பியப் பெருங்காவியங்கள் வழியாகவே நாம் உணர்ந்துகொள்ளமுடியும். நவீன ஐரோப்பிய ஆக்கங்களை வாசிக்கவும் இன்றியமையாதது அந்த வாசிப்பு.

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2015 

கலேவலா தமிழ் விக்கி உதயணன் தமிழ் விக்கி  
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 15, 2022 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.