கு.ப.ராவின் கடைசி நாட்கள்
கு.ப.ரா பற்றிக் கரிச்சான்குஞ்சு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இலக்கியச் சிந்தனையின் சார்பில் எழுதப்பட்ட இந்த நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அதில் கு.ப.ராவின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்துச் சிறப்பாக எழுதியிருக்கிறார்

கரிச்சான் என்ற பெயரில் கு.ப.ரா எழுதியிருப்பதால் அவரது சீடனாகத் தனது பெயரைக் கரிச்சான் குஞ்சு என்று மாற்றிக் கொண்டிருக்கிறார் நாராயணசுவாமி.

கு.ப.ராவின் துயர்மிகுந்த வாழ்க்கையைப் படிக்கும் போது கண்ணீர் வருகிறது.

இன்று நிகரற்ற சிறுகதையாசிரியராகக் கொண்டாடப்படும் கு.ப.ரா அன்று கண்டுகொள்ளப்படாத படைப்பாளியாக இருந்திருக்கிறார். ஆண் பெண் உறவு பற்றிப் பச்சையாக எழுதுகிறார் என்று அவரைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். அவரது கதைகள் வெளியிடத்தகுதியற்றவை என்று பத்திரிக்கைகளில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
மாதவருமானதில்லை. கஷ்ட ஜீவனம். விரும்பிய புத்தகங்களை வாங்க முடியவில்லை. மருத்துவச் செலவு செய்யக்கூடப் பணமில்லை. ஆனால் மனம் முழுவதும் எழுத வேண்டிய கதைகள். இலக்கியம் குறித்த கற்பனைகள். 32 வயதில் எதிர்பாராமல் அவரது கண்பார்வை மங்கிப் போனது. நண்பர்களின் உதவியால் மட்டுமே குடும்பத்தை நடத்த முடிந்திருக்கிறது. 42 வயதில் கு.ப.ரா இறந்து போனார். இன்னும் கொஞ்சம் பணமும் வாழ்க்கை வசதிகளும் இருந்திருந்தால் நீண்ட காலம் வாழ்ந்திருப்பார். நிறைய எழுதியிருப்பார் என்கிறார் கரிச்சான் குஞ்சு.
தமிழ் இலக்கிய முன்னோடிகள் தங்கள் சொந்தவாழ்க்கையைப் பலிகொடுத்து எப்படி இலக்கியத்தை வளர்த்தெடுத்தார்கள் என்ற உண்மையை அறிந்து கொள்ள இந்த நூலைக் கட்டாயம் வாசிக்க வேண்டும்
••

1902 ஜனவரியில் பிறந்த கு.ப.ராஜகோபாலன் தந்தையின் ரயில்வே வேலை காரணமாகக் கொடுமுடி மற்றும் திருச்சியில் வாழ்ந்திருக்கிறார். கு.ப.ரா.வின் ஆறு வயதில் அவரது குடும்பம் திருச்சிராப்பள்ளிக்குச் சென்றது. அங்கே உள்ள கொண்டையம் பேட்டைப் பள்ளியில் அவருடைய ஆரம்பக் கல்வி தொடங்கியிருக்கிறது.
1918-ஆம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேர்வில் கு.ப.ரா. தேர்ச்சி பெற்றார். அவரது பதினெட்டு வயதில் தந்தை இறந்து போகவே குடும்ப பொறுப்பினை ஏற்க வேண்டிய சூழல் உருவானது. அந்த நிலையில் பி.ஏ. படிப்பதற்காகக் கும்பகோணம் வந்த கு.ப.ரா பிள்ளையார் கோவில் தெருவிலிருந்த பூர்வீக வீட்டில் குடியிருந்திருக்கிறார். இவரது பக்கத்து வீட்டில் வசித்தவர் கவிஞர் ந.பிச்சமூர்த்தி. இலக்கியத்திலும் வாழ்க்கையிலும் சிறந்த தோழமையாக இருந்தவர் பிச்சமூர்த்தி.
கும்பகோணம் இரட்டையர் என்றே அவர்களை அழைத்திருக்கிறார்கள். தமிழ் ஆங்கிலம் வங்கம் தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய ஐந்து மொழிகளை அறிந்த கு.ப.ரா மகாகவி தாகூரை நேரில் கண்டிருக்கிறார். அவர் மீதான அபிமானத்தால் ஆங்கிலக் கவிதைகள் எழுதியிருக்கிறார்.
1921ம் ஆண்டுத் தனது கல்லூரியில் கு.ப.ரா ஷேக்ஸ்பியர் சங்கம் ஒன்றை உருவாக்கி அதில் ஆங்கிலத்திலே கதை கவிதை கட்டுரைகள் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டுவந்திருக்கிறார். அந்தச் சங்கத்தில் ந.பிச்சமூர்த்தி தான் எழுதிய ஆங்கிலக் கதைகள் மற்றும் கட்டுரைகளை வாசித்திருக்கிறார். ஞாயிறு தோறும் அந்தச் சங்கம் தவறாது கூடுவது வழக்கம். அங்கே ஷேக்ஸ்பியர் அல்லது வேறு நாடக ஆசிரியர்களின் சில பகுதிகளை நடித்துக் காட்டுவார்கள். அந்தச் சபையில் கு.ப.ரா வாசித்துக் காட்டிய ஆங்கிலக் கவிதைகளில் குறைவானதே தமிழில் வந்துள்ளன. மற்றவை அப்படியே மறைந்துவிட்டன.
1926ல் திருமணம். மனைவி அம்மணி அம்மாள். மூன்று பிள்ளைகள்.
மேலூர் தாலுகா அலுவலகத்தில் சில காலம் கு.ப.ரா பணியாற்றியிருக்கிறார். ஆகவே மதுரை மண் சார்ந்த வீரம்மாளின் காளை போன்ற சிறுகதைகளை எழுதியிருக்கிறார். இது போலவே பதவி உயர்வு பெற்று ரெவின்யூ இன்ஸ்பெக்டராகக் கொங்கு மண்டலத்தில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு பண்ணை செங்கான் போன்ற கொங்கு வட்டாரக் கதைகளை எழுதியிருக்கிறார். முப்பத்திரண்டாம் வயதில் கண்பார்வையில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக அவரது வேலை திடீரெனப் பறிபோனது. அந்த நாட்களில் அவர் சொல்லச் சொல்ல அவரது கதைகளைக் கு.ப.ராவின் சகோதரி சேது அம்மாள் எழுதிக் கொடுத்திருக்கிறார். இந்தப் பழக்கம் காரணமாகப் பின்னாளில் அவரே சிறந்த சிறுகதைகள். நாவல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். சேது அம்மாளின் நூல்களும் நாட்டுடமையாக்கபட்டிருக்கின்றன
சில காலம் தமிழ்நாடு என்ற தினசரியில் வ.ரா ஆசிரியராகவும் கு.ப.ரா மற்றும் சி.சு. செல்லப்பா உதவி ஆசிரியர்களாகவும் பணியாற்றியிருக்கிறார்கள். சுதந்திரச் சங்கு மணிக்கொடி போன்ற சிறுபத்திரிக்கைகளில் எழுதிக் கொண்டும் பத்திரிக்கைகளில் கிடைத்த வேலையைப் பார்த்துக் கொண்டும் இலக்கியக் கனவுகளுடன் இயங்கியிருக்கிறார் கு.ப.ரா.
கும்பகோணத்திலிருந்த மகாலிங்கம் என்ற கண்மருத்துவர் செய்த அரிய சிகிச்சையால் கு.ப.ராவின் பார்வை திரும்பியிருக்கிறது. தனது மொழிபெயர்ப்பு நூல் துர்க்கேஸநந்தினி முன்னுரையில் டாக்டருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
1937ல் எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்துவிடலாம் என்று நம்பி சென்னைக்கு வந்து நிறையத் துன்பங்களை அனுபவித்திருக்கிறார். எழுதுவதன் மூலம் மாதம் ஐம்பது ரூபாய் கிடைப்பதே பெரியதாக இருந்திருக்கிறது. அதுவும் பலநேரம் கிடைக்கவில்லை. பறிபோன தனது அரசாங்க வேலையைத் திரும்ப வழங்கும்படி ரெவின்யூ மந்திரி பிரகாசத்திற்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அந்த வேலை கடைசிவரை கிடைக்கவில்லை.
கும்பகோணத்தில் பிழைப்பிற்கு ஏதாவது செய்யவேண்டுமே என்று புத்தக விற்பனை நிலையம் ஒன்றைத் துவங்கியிருக்கிறார். அவரது வீட்டுத்திண்ணை தான் புத்தகக் கடை. சில பதிப்பகத்தார் அவருக்குத் தர வேண்டிய பணத்திற்குப் பதிலாகத் தாங்கள் வெளியிட்ட புத்தகங்களை விற்றுப் பணம் எடுத்துக் கொள்ளும்படி தந்திருக்கிறார்கள்.
அவரது வீட்டிற்கு வரும் நண்பர்கள் திண்ணையிலிருந்த புத்தகங்களைப் புரட்டுவார்கள். அங்கேயே அமர்ந்து படிப்பார்கள். சிலர் படிப்பதற்கு இரவல் வாங்கிப் போய்விடுவார்கள். ஆகவே அவரால் கடையை நடத்த முடியவில்லை. நிறைய நஷ்டம். தொண்டர் என்ற அன்பர் தான் அவருக்கு உதவி செய்வதாகக் கூறி தனது கடையில் வைத்து புத்தகங்களை விற்றுக் கொடுத்திருக்கிறார்.
கும்பகோணம் டவுன்ஸ்கூலுக்கு எதிரில் இருந்த தொண்டர் கடை முக்கியமான இலக்கிய மையமாகச் செயல்பட்டிருக்கிறது. அங்கே தினமும் கு.ப.ரா சென்றிருக்கிறார். இலக்கிய நண்பர்கள் ஒன்றுகூடியிருக்கிறார்கள். கு.ப.ரா முன்பாகத் தொண்டர் உட்கார மாட்டார். நின்று கொண்டேயிருப்பார் என்கிறார் கரிச்சான் குஞ்சு.
கு.ப.ரா உலகப்புகழ் பெற்ற படைப்பாளிகளைத் தேடித்தேடிப் படித்திருக்கிறார். அறுபது ஆண்டுகளுக்கு முன்பே 600 பக்கமுள்ள டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றை வாங்கி வாசித்து அதைச் சக்தி காரியாலயத்திற்காக மொழியாக்கம் செய்ய முயன்றிருக்கிறார். மொழிபெயர்ப்புக்கான பணம் சரியாகத் தரப்படாத காரணத்தால் அந்த மொழிபெயர்ப்பை அவரால் தொடர முடியவில்லை. ஆனால் டால்ஸ்டாய் சிறுகதைகளை மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். ஆர்.எல். ஸ்டீவன்சனை மொழியாக்கம் செய்திருக்கிறார். ஷெல்லி கீட்ஸ் வால்மீகி, காளிதாசனையும் பாசனையும் ஆழ்ந்து படித்து வியந்திருக்கிறார்.

இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட கு.ப.ரா தன்னைச் சந்திக்க வரும் தி.ஜானகிராமனை பாடச் சொல்லிக் கேட்பது வழக்கம். குறிப்பாக ராகங்களைத் தி.ஜா சிறப்பாகப் பாடிக்காட்டுவார். இருவரும் இசை மற்றும் இலக்கியம் குறித்து விரிவாக விவாதம் செய்வார்கள் என்கிறார் கரிச்சான் குஞ்சு. இதில் ஜானகிராமனின் குரலைப் பற்றிக் கரிச்சான் குஞ்சு எழுதியிருப்பது சிறப்பு. தி.ஜானகிராமனின் குரலை இதுவரை நான் கேட்டதில்லை. அவர் பாடுவதைப் பற்றிய இந்த வரிகள் ஆழமான ஏக்கத்தை உருவாக்குகின்றன.
1942ல் கு.ப.ரா கும்பகோணத்தில் வசிக்கிறார் என்பதாலே தி.ஜானகிராமனும் கரிச்சான் குஞ்சுவும் சென்னையிலிருந்த தங்கள் வேலையை விட்டுவிட்டுக் கும்பகோணம் வந்திருக்கிறார்கள். தி.ஜா BA LT என்பதால் கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் உடனே வேலை கிடைத்துவிட்டது. ஆனால் கரிச்சான் குஞ்சு போராடி ஒரு பள்ளி ஆசிரியர் வேலைக்குப் போயிருக்கிறார். சொற்ப சம்பளம். அவருக்கும் குடும்பக் கஷ்டம் அதிகம்.. குறைந்த வருமானத்திற்குள் குடும்பத்தை நடத்தப் போராடியிருக்கிறார்.
அப்போது கு.ப.ராவிற்கு வயது நாற்பதுக்கும் மேல். தி.ஜானகிராமனுக்கு வயது 22, கரிச்சான் குஞ்சிற்கு வயது 23.
தினமும் மாலையில் கு.ப.ராவைத் தொண்டர் கடையில் சந்திப்பது, காந்தி பார்க்கில் உட்கார்ந்து பேசுவது, இருட்டிய பிறகு கணபதி விலாஸ் காபி கிளப்பில் இட்லி சாப்பிடுவது, பின்பு கு.ப.ரா வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பது அவர்களின் வழக்கம். ஜானகிராமனுக்குத் தாகூர் கவிதைகளில் விருப்பம் கிடையாது. அவற்றை வெறும் போலி என்று சொல்லுவார். ஆனால் கு.ப.ராவின் தாகூர் மீது மிகுந்த விருப்பமிருந்தது. வட மொழி இலக்கியங்களைப் பற்றி அவர்கள் தீவிரமாக விவாதித்துக் கொள்வார்கள். கவிதை பற்றி உரையாடல்களில் தி.ஜானகிராமன் கலந்து கொள்வது கிடையாது. சிட்டியோடு நிறைய விவாதிப்பார் கு.ப.ரா. வங்க மொழியை தனது சுய விருப்பத்தின் படி தானே கற்றுக் கொண்டு நிறைய வங்காளப் படைப்பாளிகளை கு.ப.ரா படித்திருக்கிறார். மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். கு.ப.ராவின் இறுதி வருஷங்களில் அவர் அனுபவித்த வறுமை தான் அவரது உடலும் உள்ளமும் நலிந்து போக முக்கியக் காரணமாக இருந்தது. கு.ப.ராவும் ந.பிச்சமூர்த்தியும் வறுமையுடன் போராடியே செத்துப் போனார்கள் என்கிறார் கரிச்சான் குஞ்சு.
கு.ப.ரா கையில் கொஞ்சம் பணம் இருந்திருந்தால் நிச்சயமாக இப்படி அற்ப ஆயுளில் மறைந்து போயிருக்க மாட்டார். அவரது உடல்நலம் சீர்கெட்டுப் போன நிலையில் வைத்தியம் செய்யக்கூடப் பணமில்லை
இதைப்பற்றிக் கண் டாக்டர் மகாலிங்கம் சொல்வதாக ஒரு குறிப்பு நூலில் இடம்பெற்றிருக்கிறது
கு.ப.ரா இத்தனை வறுமையுடன் போராடுகிறார் என்று எனக்குச் சத்தியமாகத் தெரியாது. தெரிந்து கொள்ளாமல் இருந்தது என் தவறு
கு.ப.ராவால் அன்றாடம் தி ஹிண்டு பத்திரிக்கை வாங்கும் அளவிற்குக் கூட வசதியில்லை. ஆகவே சந்தானம் என்ற கல்லூரி மாணவர் தினமும் தங்கள் வீட்டிற்கு வரும் பேப்பரை படித்து முடித்துவிட்டு கு.ப.ராவிற்கு அனுப்பி வைப்பார்.
அவர் பெரிதாக நம்பியிருந்த கிராம ஊழியன் பத்திரிக்கையும் அவருக்கு உரியதைச் செய்யத் தவறிவிட்டது. தி.ஜானகிராமன் மட்டும் பிறர் அறியாமல் கு.ப.ராவிற்குப் பலமுறை உதவி செய்திருக்கிறார். அது ஒரு அன்புக் கொடை. இன்னும் அதிகமாகக் கு.ப.ராவிற்குச் செய்யத் தன்னிடம் வசதியில்லையே என்று ஜானகிராமன் ஏங்கியிருக்கிறார்.
அந்தக் காலத்தில் ரேடியோவில் இரவு 7 30 மணிக்கு நல்ல கச்சேரிகள் ஒலிபரப்பு ஆவது வழக்கம். கு.ப.ரா அதைக் கேட்பதற்காகச் சந்தானம் வீட்டிற்குச் செல்வார். சந்தானம் வீட்டில் அவருக்கு ஒரு டம்ளர் பால் கொடுப்பார்கள். அதைக் குடிக்கும் போது வீட்டில் தனது பிள்ளைகள் குடிக்கப் பால் இல்லையே என்று வேதனையுடன் நினைத்துக் கொள்வார். தனது வறுமையைப் பற்றி ஒரு போதும் கு.ப,ரா புலம்பியதில்லை. உண்மையில் வறுமை தான் அவரைக் கொன்றது.
1944ம் ஒரு திருமணத்திற்குச் சென்று திரும்பி வந்த போது அவரால் ஒற்றை மாட்டுவண்டியில் ஏற முடியவில்லை. ஆட்கள் கைதாங்கலாகப் பிடித்து ஏற்றி அமர வைத்து வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.
சில நாட்களில் ஒரு காலில் வீக்கம் ஏற்பட்டு ரத்தம் கட்டிக் கொண்டது, அவர் மருத்துவரிடம் சென்று காட்டவேயில்லை. கடுகு அரைத்து பத்து போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.
சில நாட்களில் கால் வீக்கம் மிகவும் அதிகமாகவே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் அங்கே சர்மா என்ற மருத்துவர் அவரது கால்களைக் காங்கரின் பாதித்துள்ளதால் சதைகள் உயிரற்றுப் போய்விட்டன. இரண்டு கால்களையும் முழங்காலுக்குக் கீழே துண்டித்து விட வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதை விரும்பாத கு.ப.ரா Let me die a peaceful death என்று நனைந்த கண்களுடன் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு தனக்குக் குடிக்க ஒரு டம்ளர் காவிரி தண்ணீர் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். கொண்டு வந்து தரவே அதை ஒரு வாய் குடித்துவிட்டு வீட்டிற்குச் செல்ல கார் ஏறியிருக்கிறார். வரும் வழியிலே அவரது உயிர் பிரிந்துவிட்டது.
•••
கு.ப.ராவின் கதைகளை ஆராயும் கரிச்சான் குஞ்சு அது எழுதப்பட்டதன் பின்புலத்தைத் தெளிவாக விளக்கி கதையின் சிறப்புகளை நுட்பமாக விவரிக்கிறார். ஆற்றாமை, விடியுமா, கனகாம்பரம் போன்ற கதைகளின் பின்புலத்தைப் பற்றிச் சொல்வது சுவாரஸ்யம்.
கு.ப,ராவின் கதைகளில் இரண்டு நண்பர்கள் அடிக்கடி இடம்பெறுகிறார்கள். தனது ஆசையை மறைத்துக் கொள்ளும் பெண்களும் ஆண்களுமே அவரது உலகம். அவரது கதைகள் உருவ அமைதி கொண்டவை. விடியுமா சிறுகதை அபூர்வமானது. ஒரு பெண்ணின் தவிப்பை, சஞ்சலமான மனதை இதைவிடச் சிறப்பாகச் சொல்லிவிட முடியாது. எதையும் சொல்லாமலே சொல்ல வேண்டும் என்பதே கு.ப.ராவின் பாணி.
கு.ப.ராவின் கதைகளில் வரும் பெண்கள் எளிமையானவர்கள். அந்தக் கால வறுமையின் சின்னங்களாகவே அவர்கள் காணப்பட்டார்கள். அவர் படைத்த ஒரு பெண்ணாகிலும் ஓலமிட்டு அழுததேயில்லை. மௌனமாகக் கண்ணீர் வடிக்கும் பெண்களைத் தான் எழுதியிருக்கிறார். ஏழ்மை நிறைந்த நடுத்தர வர்க்கத்து மனிதர்களைப் பற்றித் தான் அவரது கதைகள் பேசுகின்றன. கு.ப.ராவின் கதைகள் முழுவதையும் ஆராய்ந்தால் அனேகமாக அவர் பெண்களுக்காக மட்டுமே எழுதினார் என்று எண்ணத் தோன்றுகிறது என்கிறார் கரிச்சான் குஞ்சு. அது உண்மையே. கு.ப.ராவின் கதைகளில் தான் பெண்ணின் அகம் உண்மையாகப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கு,ப,ராவின் நாடகங்கள். கவிதைகள் மொழியாக்கங்கள், இலக்கியம் குறித்த எண்ணங்கள். நேரு மற்றும் காந்தி மீதான கு.ப.ராவின் பற்று. தான் குருவாகக் கொண்ட கு.ப.ராவின் மீதான அன்பும் ஆசியும் பற்றிக் கரிச்சான் குஞ்சு மிகவும் அற்புதமாக எழுதியிருக்கிறார்.

கு.ப.ராவின் மொத்த சிறுகதைகளின் தொகுப்பை எழுத்தாளர் பெருமாள் முருகன் பதிப்பித்திருக்கிறார். மிகச்சிறப்பான தொகுப்பு. காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது.
••
கு.ப.ராவை பற்றிய நூலாக இருந்தாலும் இது கரிச்சான்குஞ்சுவின் வாழ்க்கை மற்றும் குடும்பச் சூழல் அவரது இலக்கிய நண்பர்கள் மற்றும் கும்பகோணத்தின் கதையாகவும் எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் எவ்வளவு கனவுகளுடன் செயல்பட்டிருக்கிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது. எழுத்திற்காக எவ்வளவு துயரங்களை அடைந்திருக்கிறார்கள் என்று வேதனையாகவும் இருக்கிறது
காலத்தின் திரைகள் இந்த உண்மைகளை மறைந்துவிட்டிருக்கின்றன. கு.ப.ரா தன்னை ஏமாற்றிய பதிப்பாளரின் பெயரைக் கூட வெளியே சொல்லவில்லை. தன்னை அவமதித்த பத்திரிக்கை ஆசிரியரின் பெயரைக் கூடச் சொல்லாமலே வருந்துகிறார். யாரைப் பற்றியும் அவரிடம் புகாரில்லை.
“புதுமைப்பித்தனின் வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம்: உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை“ என்று புதுமைப்பித்தன் பற்றிய நூலின் முன்னுரையில் தொ.மு.சி. ரகுநாதன் எழுதியிருக்கிறார்.
அதே வரிகள் கு.ப.ராவைப் பற்றிய இந்த நூலுக்கும் பொருந்தக்கூடியதே
•••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
