ஆனந்த் குமார் – கடிதம்

டிப் டிப் டிப் வாங்க ஆனந்த்குமார் தமிழ் விக்கி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம்.

முதுகலை படித்துவிட்டு வேலைகிடைக்காமல், ஆண்டிபட்டிக்கோட்டை பாண்டியன் டீ கடைக்கு வரும் தினத்தந்தியில் எனக்கேன்று ஒரு வேலைவாய்ப்பு வருமா என காத்திருக்கும் காலத்தில், உறவினர்கள் வீட்டுக்கு போவதேன்றால் கூச்சமாக இருக்கும். ‘இன்னுமா தம்பி வேலை கிடைக்கவில்லை’ கேள்விகளை சந்திப்பதற்கான கஷ்டகாலம் அது. ஆனால், அந்த உறவுக்கார வீடுகளிலிருக்கும் குழந்தைகளை பார்க்காமல் இருக்கமுடியாது. அவர்களுக்காக போயே ஆகவேண்டும். கொடுக்கின்ற வரக்காப்பியை குடித்துவிட்டு, கொஞ்ச நேரம், அந்தக் குழந்தைகளுடன் விளையாடிவிட்டு வந்துவிடுவேன். இப்பொழுது முகநூலின் பக்கம் செல்வதற்கு இன்னொரு வகை கூச்சம். யார் வேண்டுமென்றாலும் பிடித்துக்கொண்டு நலம் விசாரித்து குறுஞ்செய்தி அனுப்பலாம். இதுவரை என்னை பார்த்திராதவர் கூட இன்னாருடன் எனக்குத் தொடர்பு உண்டு என்று வார்த்தைகளால் என் தலையில் மண்ணை வாரிக் கொட்டலாம். இதையெல்லாம் கடந்து என்னை முகநூலை நோக்கி இழுப்பவர்கள் இருவர். ஒன்று லக்ஷ்மி மணிவண்ணன், இன்னொன்று ஆனந்த்குமார்.  அவர்கள் இருவரும் முகநூலில் பகிரும் கவிதைகள் என்னை ஈர்த்தன. ‘டிப் டிப் டிப்’ வெளிவரும் முன்னரே, ஆனந்தின் கவிதைகளுக்கு, ரசிகனாகியிருந்தேன். குழந்தைகளின் கண்களில் உலகைப் பார்த்து ஞானத்தை வழங்கிக்கொண்டிருந்தது அவரது கவிதைகள்.  சில கவிதைகள்   அனுபவமாக மனதில் வந்தமர்ந்திருந்தன. புத்தகத்தை வாங்கிப் பார்த்தால், அவற்றில் சிலவற்றை காணோம். அப்புறம்தான் தெரிந்தது, “மரணம் அவ்வளவு எளிமையில்லை  நிறைய காத்திருக்கவேண்டும்” வரிகளுக்கு சொந்தக்காரர் நிறைய வடிகட்டிவிட்டார் என்று.   பரவாயில்லை இன்னும் 97 கவிதைகளுக்கு அவர் முத்திரை வைத்திருக்கிறார் .

திருச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரியில் NCC-யிலிருந்த என் நண்பனை NCC ஆஃபிஸர்  அழைத்து, மாணவர்களுக்கு அனுப்பவேண்டிய இன்லேண்ட் கடிதங்களை அகரவரிசைப்படி அடுக்கச் சொன்னார். அவன் அடுக்கி முடித்ததும், இதையெல்லாம் கொண்டுபோய் தபால் பெட்டியில் போடு என்றார்.  ஆனந்த்குமாரின், ஒழுக்கவாதி என்ற கவிதை, அன்று வந்த அதே புன்முறுவலையும், முட்டாள்தனங்களில் வெளிப்படும் வாழ்வின் அழகையும் மீட்டெடுக்கிறது.

ஒழுக்கவாதி
நாளிதழ்களை
அடுக்கி வைக்கிறார்
ஒன்றின் மீது ஒன்றாக
அவர் நாட்களை அடுக்கி வைக்கிறார்.
மூன்று மாதங்கள் சேர்ந்ததும்
கட்டித்தூக்கி மேலே போடுகிறார்
பரணில் கொஞ்சம்
தூசி சேர்கையில்
எடைக்குப் போட மேலே ஏறுகிறார்
ஒவ்வொரு கட்டாய்
கீழே போட்டு
பெருமூச்சுடன் இறங்கியவர் தலையில்
ஆடி ஆடி வீழ்கிறது
போன வருடத்திற்கு இடையிலிருந்து
அவர் திறந்து பார்த்திராத
ஒரு ஞாயிற்றுக்கிழமையின்
வண்ணப்பக்கம்.

ஆனந்த்குமார் ஒழுக்கமின்மையை வைத்தே உலகையும், வாழ்வையும் அழகெனப் பார்க்கிறார். இங்கே ஒழுக்கமின்மை என்பது நன்னடத்தை சார்ந்ததல்ல. ஒருவகையான நிறைவின்மை. நிறைவின்றி இருப்பதே நிறைவு என்கிறார்.

பௌர்ணமிக்குப் பிந்தைய தினம்
நிலவுக்கென்ன குறை என்கிறான்
நிரம்பித் ததும்பும் காபியை
கொஞ்சம் சிந்திவிட்டே குடிக்கிறான்
பாதி கேட்ட பாடலைத்தான்
அன்று முழுதும் பாடுகிறான்.

ஒவ்வொரு குறையும்
மிகச்சரியாய் இருக்கிறது
அவன் அவனைப்
பொருத்தி நிரப்பும்
சிறுபள்ளமென.

கவிஞர் அபி, ‘கோடு’ கவிதையில், ‘ கோடு வரைவதெனில் சரி வரைந்து கொள்’ என்றார். ‘எதுவும் எவ்வாறும் இல்லை என்று சலிப்பாய்’ என்று சொல்லிப் பார்த்தார். ஆனந்த்குமார், சலிக்கவெல்லாம் இல்லை, முற்றிலும் நேரான கோடுகள் ஆர்வமிழக்க வைக்கிறன என்று கோடுகளை வளைத்து அழகு பார்க்கிறார். கோடுகளை கோடுகளால் வரைய வைக்கிறார். கணிதம் படித்தவன் புள்ளிகளை இணைத்து கோடுகள் வரைவான். இவரோ அபியின் பரம்பரை. புள்ளிகளை உடைந்து கோடுகள் பிறக்கின்றன என்கிறார்.

புள்ளிகள் உடைந்து
கோடுகள் பிறக்கின்றன
முற்றிலும் நேரான கோடுகள்
ஆர்வமிழக்க வைக்கின்றன
ஒவ்வொரு அடியையும்
மிகச்சரியாய் திசைமாற்றும் கோடு
முடித்துக்கொள்கிறது தன்னை
ஒரு வட்டமென.
நிலையழிந்த கோடு
வளைகிறது
வளையும் கோடு வரைகிறது
கண்டுகொண்டேயிருக்கும்
கனவென தன்னை
வரைந்து வரைந்து
எல்லைகள் தாண்டி
அழியும் பாவனையில்
எழுகிறது மேலே

ஆனந்த்குமார் வாழ்வை ரசிப்பவர். அது கொடுக்கும் இனிமையை முழுதாக ரசிக்கவேண்டும் என்று, நிறைய பணம் கொடுக்கும் அமெரிக்க வேலையை விட்டுவிட்டு, தாயகம் திரும்பி தனக்குப் பிடித்த புகைப்படத்தொழிலையும், கவிதை எழுதுதலையும் ஏற்றுக்கொண்டவர். ‘முகங்களை’ புன்னகையுடன் தனது கேமராவிற்குள் அடக்குபவர். புன்னகை ஒன்று போதும் எந்தப் பெரிய பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்கிறார்.

நெரிசலின் இடையில்
எதிரெதிர் மோதிக்கொண்டோம்
அவர் இடதென்க
நான் வலதென்றேன்
நான் இடதென்க
அவர் வலதென்றார்
அது ஒரு பெரிய பிரச்சினை
ஆகிவிடலாம் போல
நான் அவர் முகத்தை பார்த்தேன்
அவர், அப்படி ஒன்றும்
பெரிய பிரச்சினையில்லை
என்பதுபோல்
ஒரு புன்னகை செய்தார்

அது

வியர்த்த ஆடைக்குள்
காற்றைப்போல்
எனதிந்த நாளிற்குள்
புகுந்துகொண்டது

கசப்பு, வெறுப்பு, சலிப்பு என்று எதுவுமில்லாமல், வளைதலையும், பள்ளங்களையும், ஏற்றுக்கொண்டு, எதுவும் இனிமையென வாழ்வை அனுபவிக்கச் சொல்லும் ஆனந்த்குமாரின் கவிதைகளை வாசித்து, ஒரு மலர்ந்த முகத்துடன், மொத்த நட்சத்திரங்களையும் அவர் ஒரு அறையில் பூட்டிவைத்திருக்கிறார் என்பதை நம்புகிறேன்.  இந்த வருடம், 2022-ற்கான விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது அவருக்கு கிடைப்பதில் மகிழ்கிறேன். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

ஆடல்வெளி- பாலாஜி பிருத்விராஜ்

எளிய கவிதையின் இன்றைய குரல்- கடலூர் சீனு

கவிதை விதைத்தல்- பாலாஜி ராஜு

நீந்தி வந்த குட்டிமீன் – கடிதங்கள்

நிச்சலனமாய் ஏந்திக்கொள்ளும் நீண்ட மடி

குழந்தைகளின் தந்தை- டி.கார்த்திகேயன்

விளையாடும் ஏரி- கடிதங்கள்

ஒருதுளி காடு- கடிதங்கள்

பலாப்பழத்தின் மணம் – பாவண்ணன்

ஒரு மலரை நிமிர்த்தி வைத்தல்- சுஜய் ரகு

டிப் டிப் டிப் வாங்க டிப் டிப் டிப் தன்னறம் நூல்வெளி
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 09, 2022 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.