காந்தி, கிலாஃபத், தேசியம்

அன்புள்ள ஜெயமோகன்,


காந்தியும் சனாதனமும் குறித்து எனது சில கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.


அடிப்படைவாதம் என்பது உண்மையில் முழுக்க முழுக்க ஓர் அரசியல் கோட்பாடு – அதாவது, அரசியல் தளத்தில் செயல்படும் இந்துத்துவத்தை அடிப்படைவாத இந்துத்துவம் என்று வரையறுத்து, இதன் தொடக்கம் ஐரோப்பிய தேசியவாதத்தில் உள்ளது என்று விளக்கியிருக்கிறீர்கள். ஆனால் இது உண்மையில் அதற்கு முன்னமேயே இஸ்லாமியப்படையெடுப்புகளின் எதிர்விளைவாகத் திரண்ட ஒன்று என நான் நினைக்கிறேன். விஜயநகரப்பேரரசு, சிவாஜியின் மராட்டியப்பேரரசு, குரு கோவிந்த சிங்கின் கால்சா ஆகியவை இதன் தொடக்ககால விசைகள். ஏன் இப்படி நினைக்கிறேன் என்றால், இஸ்லாமியப்படையெடுப்புகள் தொடங்கி வாள்முனை மதமாற்றங்களும், மதத்துக்காக கோவில்களை அழிப்பதும், மதவாத பயங்கரவாதங்களும் அறிமுகமாகாதவரை -அதாவது இந்துக்களுக்குள் இருக்கும் உட்பிளவுகள் எல்லாம் பொருட்டாகவே இல்லாமல் போகும் ஒரு மூர்க்கமான எதிர்த்தரப்பை சந்திக்காதவரை – அரசியல் என்கிற தளத்தில் இந்துத்துவம் தன்னை ஒரு மதத்தரப்பாகத் திரட்டிக் கொண்டதில்லை. ஏனெனில் அதற்கான அவசியம் இருக்கவில்லை.


தன் சமூகம் பாடுபடுத்தப்படுவது அவர்கள் இந்துவாக இருக்கிறார்கள் என்கிற காரணத்தால் என்று ஆகிப்போன வரலாற்றுத்தருணத்தில் அடிப்படைவாதம் என்று நீங்கள் சொல்லும் அரசியல் இந்துத்துவம் பிறந்தது. பிற அரசியல் மதங்களின் தாக்குதல்களிலிருந்து இந்து சமூகத்தைக்காக்க வேண்டி உருவானது அது. பழமைவாத ஆசாரவாதிகளிடத்திலோ, சடங்கு இந்துத்துவர்களிடத்திலோ புதிய அரசியல் மதங்களின் படைகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளும் அணுகுமுறை எதுவும் இல்லை. இந்துக்களின் தெய்வ நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் பாதுகாக்க, தெய்வச்சிலைகளைத் தூக்கிக்கொண்டு பதுங்கி ஓடுவது தவிர வேறு செயல்திட்டம் எதுவும் அவர்களிடத்தில் இருக்கவில்லை. அந்தப் பொறுப்பை இந்துப்பழமைவாதம் ஏற்றிருக்க வேண்டுமென எதிர்பார்ப்பதும் நடைமுறைக்கு ஒவ்வாதது. சிவாஜியும், ஹரிஹரரும் புக்கரும் உருவானது இத்தகையதொரு வரலாற்றின் அவசியமாகத்தான். கால்சா உருவானது இத்தகைய "அடிப்படைவாத" சீக்கியத்தை உறுதியாய் அமைக்கும் பொருட்டுத்தான்.


அதே சமயம் இந்தவகை அரசியல் இந்துத்துவம் பிறமதங்களின் நுழைவுக்கே எதிரான ஒன்றாக உருவான விஷயமல்ல. யூதர்களும், சிரியன் கிறித்துவர்களும் நுழைந்தபோதோ அராபியர்கள் வணிகம் செய்தபோதோ அது உருக்கொள்ளவில்லை. ஆனால் பிறமதங்களால் தாக்கப்பட்டு, தனது இருப்பே கேள்விக்குள்ளாக்கப்படும் நிலை உருவாகும்போது, தன் வாழ்வுக்கான இடத்தைப்பாதுகாக்க அரசியல் தளத்தில் தன்னைத்திரட்டிக்கொள்ள வேண்டி அது உருப்பெற்றது. இந்து என்பதனாலேயே அழிவும் ஆபத்தும் அடக்குமுறையும் என்கிற நிலையை எதிர்க்க, இந்து என்கிற அடையாளத்தின் அடிப்படையில் திரள்வது என்பதனை அது தன் அரசியலாய் முன்வைத்தது.


xxx


திலகருக்கு முன்னமேயே இருந்து வந்த இத்தகைய இந்து அரசியல் ஓட்டத்தை திலகர் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகத் திருப்ப எண்ணினார். இது தவறா சரியா என்று விவாதிக்கலாம். ஆனால் நூறாண்டுகளுக்கு முன்னால் இருந்த இந்திய வரலாற்றைப் பேசுகிறோம் என்பதால், அன்றைய அரசியல் நிலையில் பெரிய அளவில் மக்களைத்திரட்டத் தம்முன் இருக்கும் அத்தனை உபாயங்களையும் கைக்கொள்ளத் தலைவர்கள் முயன்றனர் என்றே இதனைப்பார்க்க வேண்டும், என்பது என் கருத்து.


ஆச்சர்யகரமாக காந்திஜியும் இதே போன்ற ஒன்றைச் செய்திருக்கிறார். அடிப்படைவாத அரசியல் இஸ்லாமியர்களை கிலாஃபத் இயக்கத்தின் வழியாக பிரிட்டிஷாருக்கு எதிரான இந்திய தேசிய நீரோட்டத்துக்குள் கொண்டு வர முடியும் என்று கணக்கிட்டார். அடிப்படைவாதத் திலகரை அரசியலில் நிராகரிக்கும் காந்திஜி, அடிப்படைவாத இஸ்லாமியரை ஏற்றார் என்பது மிகவும் விநோதமான ஒன்று. பழமைவாதம் என்றால் சமரசம் செய்வது என்று கொண்டு இதைப்பார்க்கையிலும்கூட மேலும் குழப்பமே மிஞ்சுகிறது. ஏனெனில் அடிப்படைவாத அரசியல் இந்துக்களோடு சமரசம் இல்லை என்று நிராகரிக்கும் காந்திஜி, அடிப்படைவாத அரசியல் இஸ்லாமியர்களோடு சமரசம் செய்யத் தயாராக இருந்தார் என்று ஆகிவிடுகிறது. இன்னும் மேலெடுத்தால் பின்னாட்களில் அடிப்படைவாத இஸ்லாமிய ஜின்னாவுக்காக நவீனவாத நேருவை விட்டுக்கொடுக்கச்சொன்னார் என்றும் ஆகிவிடுகிறது. அடிப்படைவாதத்திற்கு எதிரான தரப்பில் சனாதன காந்தி இயங்கினார் என்று சொல்வதை வைத்து எப்படி இந்த முரண்களை எப்படிப் புரிந்து கொள்வது? சனாதன பழமைவாதம் Vs அரசியல் அடிப்படைவாதம் என்கிற அடிப்படையில் காந்தியின் நிலைப்பாட்டைப்புரிந்து கொள்வதென்பது அவ்வளவு நேரடியான விஷயமாய் எனக்குத்தெரியவில்லை.


காந்தி தன்னை இந்துவாகவே உணர்ந்தவர். பழமைவாதம், அடிப்படைவாதம் என்று கட்டம் பிரித்துப்பார்த்து இந்து அரசியல் அடிப்படைவாதிகளை மட்டும் துல்லியமாக நிராகரிப்பது என்பது அவரது சிந்தனையில் இருந்திருக்கிறதா என்கிற கேள்வி எனக்கு இருக்கிறது.


பிரிட்டிஷாருக்கு எதிரான ஒன்றுபட்ட குரலாக காங்கிரஸைக் கட்டியெழுப்ப எண்ணினார் காந்திஜி. பின் ஏன் திலகரை நிராகரித்து அலி சகோதரர்களை ஏற்றார், ஜின்னாவுக்காக நேருவை விட்டுத்தரச்சொன்னார் என்றால் அவரது செயல்பாட்டிற்கு நமக்கு கிடைக்கும் நேரடி விடை ஒன்றிருக்கிறது: காந்தி கறாரான அஹிம்சாவாதியாக இருந்தாலும் பிரிட்டிஷாரை எதிர்க்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் என்கிற வகையில் சிறந்ததொரு நடைமுறைவாதியும்கூட. இலக்கின் அளவுக்கே வழிமுறைக்கும் முக்கியம் தந்தவர். களையை விதைத்து ரோஜாவைப்பெற முடியாது என்றவர். அதனால் தீவிரவாதத்தை நிராகரித்து மிதவாத அஹிம்சையைத் தன் போராட்ட வழிமுறையாகக்கொண்டவர். பிரிட்டிஷாரை எதிர்த்து விரட்டக்கூடிய தீவிர செயல்பாடுகள் வெற்றிபெறும் வாய்ப்பு குறைவு என்பதையும், அவ்வாறு தோல்வியடையும் தீவிர செயல்திட்டங்கள் மக்களை மேலும் விரக்தியிலும் நம்பிக்கையின்மையிலும் ஊக்க இழப்பிலும் தள்ளி விடும் என்பதையும் தெளிவாக அவர் உணர்ந்திருந்தார்.


அதேசமயம் மிதவாத அஹிம்சைப்போர் எதிரித்தரப்பை அசைக்க வேண்டுமென்றால் பரந்துபட்ட இயக்கமாக காங்கிரஸ் உருவெடுக்க வேண்டும் என்கிற தெளிவும் அவருக்கு இருந்தது. தென்னாப்பிரிக்க செயல்பாடுகள் அந்தத்தெளிவை அவருக்கு உறுதி செய்திருந்தன. ஆக மிதவாத அஹிம்சை வழி, அது வெற்றிபெறத்தேவையான பரந்துபட்ட மக்கள் பங்கெடுப்பு, அதற்கான இயக்கமாக காங்கிரஸைக் கட்டியெழுப்புவது என்று வரும்போது மிக அதிகமான மக்களை உள்ளிழுக்க என்னென்ன சமரசம் செய்ய முடியுமோ அத்தனையையும் அவர் கைக்கொண்டார் என்ற அளவிலேயே இதைப்பார்க்கத்தோன்றுகிறது. இது மிகவும் நடைமுறையான பார்வை. அரசியல் இஸ்லாத்துடன் அனுசரித்துப்போக விரும்பியதற்கும் அவரது இந்த நடைமுறைப்பார்வைதான் காரணம். காந்தி இந்திய அரசியலுக்குள் நுழைவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்னதாகவே அரசியல் இஸ்லாம் உருவாகவும் வலுப்பெறவும் பிரிட்டிஷார் அனுமதித்திருந்தனர். எனவே அதனைத் தன் தேசிய இயக்கத்துக்கு ஆதரவாக்க முடியுமா என்று முயன்றார். அடிப்படைவாதம் பழமைவாதம் போன்ற வரையறைகளையெல்லாம் அவர் கணக்கில் கொண்டார் என்பதைவிட சமரசம் மூலம் தனது இயக்கம் விரிவடைய எது தேவையோ அதை அவர் கைக்கொண்டார். அந்த வகையில் அன்றைய அரசியல் களத்தில் அவர் பழமைவாதியுமல்ல, அடிப்படைவாதியுமல்ல- அவர் ஒரு யதார்த்தவாதி.


xxx


வந்தே மாதரம் என்ற கோஷத்தை காந்திஜி மிக உயர்வாக மதித்தற்கான சான்றுகளும் உள்ளன. வந்தே மாதரம் என்கிற கோஷத்தை குறிப்பாக காந்தி தேர்வு செய்திருக்கிறார். ஒத்துழையாமை இயக்கத்தின்போது சவுக்கத் அலியுடன் ஒரே மேடையில் சென்னையில் பேசினார் காந்தி. அப்போது சவுக்கத் அலி மூன்று கோஷங்களை இயக்கத்தின் கோஷமாக முன்வைக்கிறார். முதல் கோஷம்: "அல்லாஹு அக்பர்". இரண்டாவது: "வந்தே மாதரம்" அல்லது "பாரத் மாதா கி ஜே", மூன்றாவது: "ஹிந்து-முசல்மான் கி ஜே". காந்தி இந்த யோசனையை ஒப்புக்கொள்கிறார். அதே நேரத்தில் இரண்டாம் கோஷம் "வந்தே மாதரம்" என்றே இருக்க வேண்டும் என்று சிபாரிசு செய்திருக்கிறார். தனது சில கடிதங்களில் Yours sincerely என்பதற்குப் பதிலாக வந்தே மாதரம் என்று எழுதிக் கையெழுத்திட்டிருக்கிறார். ஆனால் கிலாஃபத் இயக்கத்திற்குப்பின் இஸ்லாமியர்கள் அந்த கோஷத்தை விரும்பவில்லை என்று புரிந்துகொண்டு இந்துக்களும் இஸ்லாமியர்களும் சேர்ந்து இருக்கும் கூட்டங்களில் வந்தே மாதரம் பாடலைப்பாட வேண்டாமென்று அறிவுறுத்தினார்.


அன்புடன்


அருணகிரி.



அன்புள்ள அருணகிரி,


தெளிவாக உங்கள் தரப்பைச் சொல்லியிருந்தீர்கள்.


நான் ஒரு சிந்தனைக்கோணத்தை முன்வைத்திருக்கிறேன், அவ்வளவுதான். அது நம் வரலாற்றைப் புரிந்துகொள்ள சிலவாசல்களைத் திறக்கலாம்.


கிலாபத் இயக்கத்தை காந்தி புரிந்துகொண்டதில் மட்டுமல்ல, நாம் இன்று புரிந்துகொள்வதிலும் சிக்கல்கள் பல உள்ளன. கிலாஃபத் இயக்கம் நீங்கள் சொல்வது போல 'சீர்திருத்த' இயக்கம் அல்ல. அது ஒரு 'மரபார்ந்த இஸ்லாமிய' இயக்கம்தான். பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தால் உலகமெங்கும் மரபான இஸ்லாமிய அமைப்புகள் அழிவதற்கு எதிராகவே அது போராடியது.


இந்தியாவிலும் அதன் கோரிக்கை மரபுசார்ந்ததுதான். அப்போது இஸ்லாமில் இன்றைய சீர்திருத்தக்குரல்கள் ஒலிக்க ஆரம்பிக்கவில்லை. இஸ்லாமின் மரபுசார்ந்த தன்மையில் உள்ள ஆசாரநோக்குகளை காந்தி ஏற்கவில்லை என்றாலும் மன்னித்திருக்கலாம் – இந்து ஆசாரவாதிகளை மன்னித்தது போல. அது ஓர் அரசியலியக்கமாக ஆகும் என எதிர்பார்த்திருக்கலாம்.


கிலாஃபத் பற்றி நான் முன்னரும் எழுதியிருக்கிறேன். இந்து-இஸ்லாமியப் பிரிவினை வழியாகவே பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டனர். இஸ்லாமிய உயர்மட்டத்தினருக்கு அரசுப் பதவிகளில் இடஒதுக்கீடு போன்ற சலுகைகளை அளித்து அவர்களைத் தங்களுடன் வைத்துக்கொண்டனர். நவாப்களை குஷிப்படுத்தினர். அதன்மூலம் சாமானிய இஸ்லாமியர் பிரிட்டிஷாருக்கு ஆதரவானவர்களாக இருந்தனர்.


பதினெட்டாம்நூற்றாண்டின் இந்து மறுமலர்ச்சியின் விளைவாகவே இந்திய மறுமலர்ச்சி உருவானது. அதுவே இந்திய விடுதலைப்போராட்டத்தின் விதை. ஆகவே இந்திய விடுதலைப்போரின் உள்ளடக்கமாக இந்து எழுச்சி இருந்தது. இந்திய விடுதலைப்போராட்டத்தின் முன்னுதாரண பிம்பங்கள் அனைவருமே இந்துக்கள்தான்.


இந்த இயல்பை பிரித்தாளும் கலையில் மேதைகளான பிரிட்டிஷார் பயன்படுத்திக்கொள்வதை, எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதை, காந்தி உணர்ந்தார். இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர் நிறுத்தப்பட்டால் ஒருபோதும் இந்தியாவில் விடுதலை சாத்தியமல்ல என உணர்ந்தார்.


ஆகவே சாமானிய இஸ்லாமியரை அரசியல்படுத்தி பிரிட்டிஷாருக்கு எதிராகத் திருப்ப அவர் விழைந்தார். அதற்காகவே காந்தி கிலாஃபத்தை ஆதரித்தார். கிலாஃபத் வழியாக அடித்தள இஸ்லாமிய சமூகத்தை காங்கிரஸுக்குள் கொண்டுவந்து காங்கிரஸை முழுமையான மதச்சார்பின்மை கொண்ட ஜனநாயக அமைப்பாக ஆக்கமுடியும் என நினைத்தார். இஸ்லாமியர்களுக்குக் காங்கிரஸில் சரிசமமான இடம் கிடைக்குமென ஆசைப்பட்டார். அவரது தேசியக்கனவே அதுதான்.


கிலாஃபத்தின் பிழைகள் பல உள்ளன. இஸ்லாமிற்குள் உள்ள உலகளாவிய மத அதிகார அரசியலை காந்தி சரியாக புரிந்துகொள்ளவில்லை. அம்பேத்கர் எடுத்துச் சொல்லிக்கொண்டே இருந்தாலும் அவரால் உள்வாங்கவும் முடியவில்லை.


ஆனால் இந்திய வரலாற்றில் முதல்முறையாக கிலாஃபத் இயக்கத்தில்தான் சாமானிய இந்துக்களும் சாமானிய இஸ்லாமியரும் தோளோடு தோள்நின்று ஒரு போராட்டத்தை முன்னெடுத்தனர்.காந்தி விழைந்தது அந்தத் தொடக்கமே. காந்தி விரும்பியது போலவே லட்சக்கணக்காக இஸ்லாமியர் காங்கிரஸுக்குள் புதுவெள்ளம் போல வந்து நிறைந்தனர்.


கிலாஃபத் இயக்கம் கட்டுமீறிப்போன இடங்களை, கிலாஃபத்தில் ஊடுருவிய இஸ்லாமிய மதவெறியர்களின் பேச்சுக்களை மட்டுமே முதன்மைப்படுத்தும் ஒரு போக்கு இன்று ஓங்கியிருக்கிறது. இதற்காக ஆதாரங்களை அள்ளி அள்ளி வைக்கலாம். ஆனால் இந்திய அரசியல் வரலாற்றில் கடைசிவரைக்கும் காந்திய இயக்கத்திலும் இந்தியதேசியத்திலும் காலூன்றி நின்ற பல முக்கியமான இஸ்லாமியத் தலைவர்கள், லட்சக்கணக்கான இஸ்லாமியத் தொண்டர்கள் கிலாஃபத்தால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது.


அவர்கள்தான் இந்திய தேசிய இயக்கத்தில் முஸ்லீம் பங்களிப்பாக இருந்தார்கள். அவர்களின் பங்களிப்பு இருந்தமையால்தான் சுதந்திரம் பெற்றபின்னரும்கூட இந்தியா மதச்சார்பற்ற நவீன நாடாக ஆகமுடிந்தது. காங்கிரஸ் ஒரு மதச்சார்பற்ற அமைப்பாக நீடிக்கிறது. ஆகவே நான் கிலாஃபத் இயக்கத்தை காந்தி ஆதரித்தது ஒரு பெரும் பிழை என நினைக்கவில்லை.


கிலாஃபத்தை காந்தி ஆதரித்தது ஒரு நல்ல முயற்சிதான். ஆனால் அது நினைத்த பயனை அளிக்கவில்லை. அதற்குப் பல காரணங்கள். இஸ்லாமியர்களிடம் இருந்த மதகுருக்களின் செல்வாக்கையும், ஆளும்சாதிகளின் செல்வாக்கையும் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் வழியாக பிரிட்டிஷார் இஸ்லாமிய எளிய மக்களைக் கைப்பற்றினார்கள்.


அத்துடன் காங்கிரஸுக்குள் கணிசமாக இருந்த இந்துஆசாரவாதிகள் இஸ்லாமியருக்கு இடமளிக்க விரும்பவில்லை. வரலாற்றுப்பின்புலம் சார்ந்த ஒரு வெறுப்பும் சந்தேகமும் இந்துக்களிடம் இருந்தது.காங்கிரஸுக்குள் இந்து உயர்சாதியினரல்லாதவர் தங்களுக்குரிய இடத்தைப் பிடித்ததே நாற்பதுகளுக்குப்பின்னர், கடுமையான போராட்டங்களின் வழியாகத்தான். அந்நிலையில் உள்ளே வந்த இஸ்லாமியர் எப்படி நடத்தப்பட்டிருபபர்கள் என்பது ஊகிக்கத்தக்கதே.


மெல்லமெல்ல இஸ்லாமியர் ஒதுங்கிக்கொள்வதை நாம் இருபதுகளின் இறுதியிலேயே காண ஆரம்பிக்கிறோம். அது காலப்போக்கில் பெரிய பிளவாக ஆகியது. அதை பிரிட்டிஷார் பயன்படுத்திக்கொண்டார்கள்.


ஆகவே கிலாஃபத்தை முழுக்கமுழுக்க எதிர்மறையாகப் பார்ப்பதும் சரி, அதை காந்தியின் பெரும்பிழையாக மதிப்பிடுவதும் சரி, என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாதவை. அந்தப் பிழைகளுக்கும் பிளவுக்கும் நம்முடைய சரித்திரப்பின்புலம் நமக்களித்த ஐயங்களுக்கும் கோபங்களுக்கும்தான் பெரும் பொறுப்பு. அதை மீறி இஸ்லாமியரும் இந்துக்களும் இன்றும் ஒரே நாடாக நீடிப்பது காந்தியால்தான்.


கடைசியாக ஒன்று. தேசியம் என நான் சொல்வது நவீன தேசியத்தைத்தான். அதாவது நவீன தொழில்நுட்பமும் நவீன போக்குவரத்தும் நவீனக் கல்வியும் உருவான பிற்பாடு உருவான தேசியத்தை. அது ஒரு நிலப்பகுதியின் அனைத்து மக்களும் தங்களை ஒரே தேசிய அடையாளம் கொண்டவர்களாக உணர்ந்து கொள்வதில் ஆரம்பிக்கிறது.


அந்த தேசியத்துக்குக மக்கள் சமமான கல்விமூலம் சமானமாக ஆக்கப்படவேண்டும். அவர்களிடையே சீரான தொடர்புறுத்தலும் தேவை. அது பழங்காலத்தில் சாத்தியமல்ல. அத்தகைய தேசியம் நம் நாட்டில் பிரிட்டிஷார் வரவுக்குப் பின்னரே ஆரம்பித்தது.


அதற்கு முன்னால் விஜயநகரோ, மராட்டியரோ, சீக்கியர்களோ உருவாக்கிய அதிகாரங்கள் அரச அதிகாரங்களே. ஆதிக்கத்துக்கு எதிரான அரசாங்க எதிர்ப்புகள் அவை. அதற்கான மனநிலைகளும் அன்று உருவாகி வந்தன. தேசிய உருவகங்கள் என அவற்றைச் சொல்லமுடியாது. அவற்றை தேசியத்தின் தொடக்கங்களாகவும் நான் நினைக்கவில்லை.


இந்தவிஷயங்களையும் நான் கட்டுரையில் விரிவாக விவாதித்திருந்தேன்.


ஜெ


பாதுஷா கான் ஒரு பேட்டி


தொடர்புடைய பதிவுகள்

சந்திரசேகர சரஸ்வதி
காந்தியும் விதவைகளும்
காந்தியின் சனாதனம் — கடிதங்கள்
காந்தியும் சந்திரசேகர சரஸ்வதியும்
காந்தியின் சனாதனம்-6
காந்தியின் சனாதனம்-5
காந்தியின் சனாதனம்-4
காந்தியின் சனாதனம்-3
காந்தியின் சனாதனம்-2
காந்தியும் சனாதனமும்-1
இந்திய நிர்வாகம் — கடிதம்
அதிகாரமும் கலங்கலும் — கடிதம்
கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] — 3
காந்தியும் கடவுளும்
காந்தியும் லோகியாவும்
கடிதங்கள்
பாரதி விவாதம் 8 — விமர்சனம் எதற்காக ?
காந்தி-சுபாஷ் , கடிதம்
கேள்விகள்
காந்தி,அனந்தமூர்த்தி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2012 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.