எழுதுக.. விலையில்லா  ஐந்நூறு பிரதிகள்.


இதில் ஒரு பிரதியை தன்னறத்திற்கு எழுதிப் பெற்றேன். இதற்குமுன் தன் மீட்சி பிரதியொன்றை விலையுடன் பெற்றேன். அழகான வடிவமைப்பு நூல்கள். நூல்களின் கட்டமைப்பும் வாசிக்கத் தூண்டும் என்பதை மெய்பிக்கும் பணி.. தன்னறம் அமைப்பினருக்கு என் மரியாதையும் அன்பும்..

தன்மீட்சியை ஒருமுறை வாசித்து, பிறகு மறுவாசிப்பை ரேண்டமாக செய்தேன். இந்நூல் கிடைக்கும் முன்னே இதன் பல பகுதிகளை ஜெமோ இணையத்தில் வாசித்திருந்தேன். இந்நூல் வாசிப்பு பகிர்தலில் என்னையும் தன்னறம் மதுரை நிகழ்விற்காகத் தேர்ந்தெடுத்திருந்தது.. கோவிட் அச்சம், உடல்நலம் கருதி வர இயலவில்லை.. ஜெமோ வின் அருகாமைக்கான ஒரு வாய்ப்பை இழந்தேன்..

எழுதுக வாசித்தேன்.. இதிலும் பல ஜெமோ இணையக் கொடையால் முன்பே வாசித்துவிட்டேன்.. வாசிக்காதப் பகுதிகளை தேர்ந்து ஒருமுறை வாசித்து விட்டேன்.

எழுதுதல், வாசித்தல் இவைகளில் எதிர்கொள்ளும் நுண்ணியத் தடைகளை அநாயசமாக உடைக்கிறது இந்நூல். ஒரு எளியப் பயிற்சி மூலம் வாழ்நாளெல்லாம் துன்புறும் பிரச்சனையிலிருந்து ஒருவர் வெளிவந்திடலாம் என்பார் பயிற்சித் தொடர்பான கட்டுரையொன்றில் ஜெமோ. அத்தகையப் பயிற்சி போன்ற ஒரு நல்வாய்ப்பு இந்த நூல்.. தன்மீட்சியும் அப்படியே.

எனது  தோழமை  வட்டத்தில் அனுபவக் குறிப்புகள் எழுதி அதை மின்னூலாக வெளியிட்டு, தற்போது சிறுகதை எழுதும் முயற்சியில் உள்ள ஒருவருக்கு எழுதுக  நூலைப் பற்றி கூறியுள்ளேன்… வாசித்து விட்டு அவருக்கு வாசிக்க கொடுக்க உள்ளேன். இது தன்னறத்தின் சேவை நிறைக் கோரிக்கையும் கூட..

தன்மீட்சி நூல் வாசித்த போது, நம் அருகிலேயே வாசிப்பவர்களிலும் பலர் இந்நூல் வாசிக்காது உள்ளனரே என்றொரு ஆதங்கம் வந்தது.. எழுதுக வாசித்த போதும் அதே ஆதங்கம் எழுகிறது.. வாசிப்பு பற்றி பேசுவோர்களிடமெல்லாம் இந்நூல்கள்  தொடர்பான செய்திகள் இடம் பெறுகின்றன என்பதை முழு மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நூல்களில் தன்னறம் தரும் முன்னுரைகள் சுவாரஸ்யமானவை. வார்த்தையைக் கோர்த்து அவர்கள் பயன்படுத்தும் லாவகம், அதே நேரம் சொல்ல வந்ததை அதிகபட்சமாக வாசிப்பவருக்கு கடத்துவது அருமை.

நூலிலிருந்து ஒரு செய்தி.. தாங்கள் எழுதுவது இலக்கிய நயம் இல்லாமல் ஆகிடுமோ என அஞ்சுவோர் உண்டு. எழுத்திற்கு முதன்மை தேவை உண்மையே.. சொல்ல வருவதை உண்மையோடு பாசாங்கின்றி சொல்லுவது முக்கியம் என எழுதுக கூறுகிறது.. இந்த வகையில் எழுதப்பட்ட நூல்கள் பல , இலக்கியக் குணம் கூடிய நூல்கள் போல காலம் கடந்து  நிற்கின்றன என கூறுகிறது.. இப்படி நிறைய தெறிப்புகள்..

எழுத  முனைவோர், ஆரம்ப நிலை எழுத்தாளர்கள் மேலும் வாசிப்பில் ஆர்வமும் அதே நேரம் தடுமாற்றமும் உள்ளவர்களுக்கு  எழுதுக நூல்  உற்றத் தோழன்

முத்தரசு

வேதாரண்யம்

நூல் : “எழுதுக”

ஆசிரியர் : ஜெயமோகன்

வெளியீடு : தன்னறம் நூல்வெளி, குக்கூ காட்டுப்பள்ளி

அலைபேசி : 9843870059

www. thannaram.in

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 27, 2022 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.