அடிப்படைகளில் அலைதல்

Jean Cormier

இனிய ஜெயமோகன் அவர்களுக்கு,

நோயை குணப்படுத்த நோயைஆராய்வதை விட நோயின் ஊற்று முகப்பை ஆராய்ந்து அதை சரி செய்வதே சிறந்த. இதை உங்கள் கட்டுரை ஒன்றில் நான் வாசித்தது. இந்த கடிதம் என் மனதில் பல நாட்களாக இருந்து வரும் ஒரு கேள்வியை பற்றியது.  அந்த கேள்வியை நான் பலவாறாக அணுகியது உண்டு, அதிலிருந்து பல்வேறு வழிகளில் விலகியதும் உண்டு. அந்த கேள்வியை இங்கு தொகுத்து கொள்ளவும் மேலும் அதை அணுகும் பொருட்டும் இந்த கடிதம் உங்களுக்கு எழுதுகிறேன்.

நான் யார்? இந்த வாழ்கையின் பொருள் என்ன? எஞ்சுவது என்ன?இந்த கேள்வி என்னை பல்வேறு கோணங்களில் கடல் அலைகளை போல என்னை அலைக்கழிக்கிறது, நிலை குலைய வைக்கிறது. என்னில் அந்த கேள்வி எப்போது எழத் தொடங்கியது?

சிறு வயதில் எனக்கு பேச்சு குறைபாடு இருந்த காரணத்தினால் அதை போக்க  அம்மா எனக்கு கதைகள் சொல்வார். அவர்கள் கேட்கும் கதையை கேட்டு நானும் திருப்பி சொல்வேன். ராமாயணம் மஹாபாரதம் முழுவதும் நான் சொல்வேன். எனக்கு தோன்றும் கேள்விகளை கேட்பேன். ஒருநாள் நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது பெருமாளின் தசாவதார கதை கூறினார்கள். பெருமாள் பல்வேறு யுகங்களில் பல பிறப்பு எடுத்து தர்மத்தை நிலை நாட்டுவார் என்று கூறினார்கள்.  ‘பெருமாள் பல ஜென்மம் எடுப்பது போல நாமளும் பல ஜென்மம் எடுக்க முடியாதா, நமக்கு எத்தன ஜென்மம்?’ என கேட்டேன். அம்மா  மனிதருக்கு ‘ஒரு ஜென்மம் தான் மீண்டும் பிறக்க மாட்டான் அவன் நல்லது செய்தால் பெருமாள் அவரை வைகுண்டம் கூட்டிகொள்வார், இல்லை என்றால் நரகத்தில் தள்ளி விடுவார்’ என்று சொன்னார்கள். ஏன் என்று அறியாத ஒரு படபடப்பு என்னுடல் முழுவதும் பரவியது.  வரமுடியாத இடம் எனக்கு பிரமிப்பாக இருந்தது.

அம்மாவின் அந்த விளக்கம் அப்போது எனக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் சில மாதம் கழித்து என் கொள்ளு பாட்டி இறந்து போனார்கள். அவர்களின் அந்திம சடங்கிற்காக நாங்கள் எங்கள் ஊரான தாரமங்கலதிற்கு சென்றிந்தோம்  நடு ஹாலில் பாட்டியை படுக்க வைத்திருந்தார்கள். எப்போது நான் போனாலும் என்னை அழைத்து அவர்கள் அருகில் அமர்த்தி கொஞ்சுவார்கள். கருவேப்பிலை பிரியாணி கொண்டுவருவேன் என்று ஒருமுறை கூறியிருந்தேன். நான் வரும்போதெல்லாம் என்னை அழைத்து அதைகேட்பார்கள், நானும் கொண்டு வருவேன் என சொல்வேன். அன்று அவர்கள் நான் வந்தது கூட அறியாமல் கைகட்டி மாலை அணிந்து முகம் முழுதும் பூசி படுத்து இருந்தார். அவர்களை சுற்றி அனைவரும் அழுதுகொண்டு இருந்தனர்.

தாத்தா வெளியில் சோகமாக அமர்ந்து இருந்தார். என்னை அவர்களை கும்பிட சொன்னார்கள். பாட்டியெப்போதும் ஒரு ஆளை பிடித்து தன் நடப்பார்கள். அன்று அவர்களை பலர் சேர்ந்து வெளியே தூக்கி போனார்கள். நாங்கள் சிறுவர்கள் எதையும் கண்டுகொல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தோம். அவர்கள் திரும்ப வரும்போது பாட்டி அவர்களுடன் இல்லை. அப்பாவிடம் பாட்டி எங்கே என்று கேட்டேன், அப்பா பாட்டி சாமியிடம் சென்று விட்டதாக கூறினார். பாட்டி கட்டில் இருந்த இடத்தில் அவர்களின் புகைப்படத்திற்கு மாலைபோட்டு இருந்தனர்.

நாங்கள் அடுத்தநாள் சேலத்திற்கு கிளம்பினோம். பேருந்தில் ஏறியதும் பஸ் கிளம்பியது. எங்கள் ஊரின் எல்லைப்புறத்தில் இரண்டு பெரிய ஏரிகள் உள்ளன. அவற்றை தாண்டி தான் சேலம் செல்லும்போதே உள்ளது. நான் ஜன்னல் ஓரத்தில் வேடிக்கை பார்த்து கொண்டு வந்தேன். அப்பா அம்மாவிடம் எங்கோ சுட்டி காட்டினார். நான் என்ன வென்று கேட்டேன். அவர் ஏரியை ஒட்டிய சிறு காலி நிலத்தை காட்டினார், அங்கு பல மண் மேடுகள் இருந்தன. என்ன என்று மீண்டும் கேட்டேன். ஒரு மண் மேட்டை காட்டி அங்குதான் காட்டம்மாபாட்டியை புதைத்தார்கள்  என்று சொன்னார். மீண்டும் உடல் முழுவதும் ஒரு நடுக்கம். பாட்டி சாமியிடம் போய்விட்டார்கள் என்றால் குழிக்குள் யார்? நான் பின்பு வேறு எதுவும் பேச வில்லை.

பின்னர் நான் வளர வளர விளங்க ஆரம்பித்தது. இந்த கேள்வியை பலரிடம் நான் கேட்டுள்ளேன் பலரும் பலவாறு பதில் அளித்து உள்ளனர். அறிவியல் ரீதியாக பல விளக்கங்களை பெற்றேன். ஆனால் எதுவும் என்னை நிறைத்தது இல்லை. ஒவ்வொரு மரண செய்தியும் என்னை நிலைகுலைய வைக்கும், ஏன்? எதனால்? என்ன பொருள்?

முடிந்தவரை அனைத்திலும் இருந்து நான் தள்ளிநிற்க ஆரம்பித்தேன். கார்ட்டூன்கள் பார்த்தேன், தேவை அற்ற பொய்கள் பல கூறினேன், ரகளைகள் செய்தேன், நண்பர்களை அடித்தேன். இத்தனையும் என் 4 ஆம் வகுப்புக்கு முன்பு. ஒரு restlessness என்னில் குடிகொண்டது. நான்காம்  வகுப்பு நான் வேறு பள்ளியில் சேர்ந்தேன். அங்கும் நான் நான் சந்தித்தவை வேறுவகையான கேள்விகள். அங்கு என்னை என் உருவத்தை வைத்து கேலி செய்தனர், அதனால் சற்று உடைந்து போனேன். கேள்விகள் என் முன் அணிசெய்து நின்றது.

ஒரு வருடம் சென்றது. 5ஆம் வகுப்பு முதல் மாணவர்கள நூலகம் சென்று நூல்களை வாசித்தாக வேண்டும். அங்கு பெரிய நூலகம் உண்டு. நான் முதல் நாள் நூலகம் சென்றேன். நூலக ஆசிரியை நூல்களை எடுத்து அனைவருக்கும் தருவார். எனக்கு அமர் சித்ரா கதாவின் the Buddha, he lit the path, புத்தகம் கிடைத்தது. தற்செயலா அல்லது ஊழின் கணமா என்று அந்த நிகழ்வை சொல்ல முடியாது. புத்தனின்கதையை நான் அதுவரை படித்தது இல்லை கேட்டது இல்லை. மெதுவாக பக்கங்களை புரட்டினேன். தடிமனான காகிதத்தில் புத்தரின் வழக்கை வரலாறு வரையப் பட்டு இருந்தது.

புத்தரின் அம்மாவின் கனவு, அவரின் பிறப்பு, தந்தையின் சூளுரை போன்றவற்றை படித்துக்கொண்டிருந்தேன். சித்தார்த்தன் வீதியில் செல்லும் பிணத்தை பார்த்து கேட்கும் கேள்வியை படித்ததும் I was awestruck. ஏன் எனில் இது என்னுடைய  கேள்வி என்னுள் சொல்லாக மாறாத கேள்வி. அதை ஒருவன் கேட்கிறான், அதற்காக தன் சுக போகங்களை துறந்து செல்கிறான். வேகமாக படித்தேன். சித்தார்த்தனின் பயணத்தில் நானும் பயணித்தேன். ஒரு கட்டத்தில் நானும் புத்தனும் ஒன்று என கண்டேன். அன்று ஒன்றை முடிவெடுத்தேன் என்னுடைய கேள்விகளை நான் நேர்நிலையில் விடை கண்டு பிடிக்க வேண்டும் என. அவனை போல வாழ வேண்டும் என. அவனாக மாறவேண்டும் என. நான் அவனே என. அப்பொழுது அது எனக்கு பெரும் விடுதலையாக இருந்தது. பல வருடங்கள் அவர் என்னை வழிநடத்தினார்.

நான் 10 ஆவது முடிகும்ன்வரை அந்த கேள்வி மீண்டும் எழ வில்லை.எழுந்தாலும் அது என்னை பாதிக்கவில்லை. 11, 12ஆம் வகுப்பில் என்னை மீண்டு உலுக்கிய இரு மரணங்கள், என் நண்பன் சக்தி மற்றும் என் தாத்தாவின் மரணம். சக்தி என் தோழன். நெருங்கிய நண்பன். இன்று வரை தினமும் அவனை நினைத்துகொள்வது அவன் பெற்றோரைத் தவிர  நான்தான். அவன் physically challenged person. சற்று எம்பி எம்பி நடப்பான். அவனால் எடை தூக்க முடியாது. நான் அவன் பையை தூக்கி கொண்டு தினமும் செல்வேன். சற்றுப் பார்வை குறைபாடு இருந்தது. பள்ளி பஸ்ஸில் இருந்து அவனை இறக்கி, வகுப்பிற்கு  சென்று, அவனுடன் அமர்ந்து, அவன் செல்லுமிடம் எல்லாம் அவன் கைகளைப் பிடித்து செல்லுவேன். மீண்டும்  வீட்டுக்கு திரும்பும் பொழுது பஸ்ஸில் ஏற்றி விடுவேன். இரண்டு வருடங்கள் அவனுடன் இருந்தேன். அவன் வேறு பள்ளிக்கு சென்று விட்டான். பின்னர் அவனை பற்றி எதுவும் தெரியவில்லை.

அவன் அம்மா ஆசிரியை அவர்களும் அதே பள்ளியில் தான் வேலை செய்தார். அவன் வேறு பள்ளி சென்றதற்கு அதுவும் காரணம். ஒரு நான் இன்டர் school quiz competition கலந்து கொள்வதற்காக வேறு பள்ளிக்கு சென்றேன். அங்கு அவன் அம்மாவை பார்த்தேன், போய் அவர்களை அழைத்து சக்தி எப்படி இருக்கிறான் எங்கே அவன் இங்கு படிக்கிறானா என்று கேட்டேன். அவர்கள் என் கையை பிடித்து தேம்பி அழ ஆரம்பித்தார், எனக்கு ஒன்றும் புரியவில்லை, டேய் கண்ணா சக்தி நம்ம விட்டு போய்ட்டான் என்று சொன்னார்கள். உடைந்து விட்டேன்.

பின்னர் என் தந்தை வழி தாத்தாவின் மரணம். அவருடன் நான் இருந்தது. இரண்டு வருடங்கள் தான் ஆனால் அவரின் பாதிப்பு என்னில் அதிகமாக உண்டு. அவரின் மரணம் என்னை சற்று அதிரச் செய்தது. அவரின் அந்திம சடங்கின் ஒரு அங்கமாக மோட்ச சடங்கு நடந்தது, அதில் நமக்குத் தெரிந்தவர்களின் பெயரை சொல்லி பிரார்த்தனை செய்யும் ஒரு சடங்கு உண்டு. அதில் குறைந்த பட்சம் ஏழு தலைமுறை பெயர்களை சொல்ல வேண்டும். மூன்று தலைமுறைக்கு மேல் யாராலும் பெயர்களை சொல்ல முடியவில்லை. யாருக்கும் யாருடைய பெயரும் ஞாபகம் இல்லை. சிவன் என்றும் காவேரி என்று எள்ளு தண்ணீர் விட்டனர்.

ஒவ்வொரு பெயருக்கும் ஒரு கரண்டி எள்ளு தண்ணீர், கடைசியில் மூன்று பிண்டம். ஓடி உழன்று செய்த அனைத்தும் இந்த ஒரு கரண்டி எள்ளிற்காகவா, அவளவு தானா? எள் என கூட எஞ்சாது கால நதியில் அடித்துச் செல்லப்படும் வாழ்க்கை. 12 அகவை வாழ்ந்தாலும் சரி 80 அகவை வரை வாழ்ந்தாலும் சரி ஒரு கை நீரோ அல்லது ஒரு கை எள். எதை செய்து என்ன பயன்? அன்று நான் புத்தனால் கைவிடபடவன் என்று உணர்ந்தேன். நாத்திக வாதம் என்று நம்பி புரிதல் இல்லாம பேச ஆரம்பித்தேன். எதை சொன்னாலும் மறுத்து கூறினேன். கசந்து நிறைத்து நின்றேன். ஒரு கட்டத்தில் என்னை நானே வெறுத்தேன், உடை முதல் உண்ணுவது வரை அனைத்தின் மீதும் ஒரு விருப்பமின்மை இருந்தது. நாட்கள்  செல்ல அனைவர் மீதும் அதை திணித்தேன். அனைவரையும் அற்பர் என கண்டேன். இது என் இயல்பு வாழ்க்கையில் மகிழ்ச்சி முற்றும் இல்லாமல் ஆகியது. அமைதி இன்மை குடி ஏறியது.

இந்த நிலையில் நான் ஆங்கில இலக்கியம் சேர்த்தேன். கல்லூரி வாழ்க்கை என்னை மிகவும் மாற்றியது, பல்வேறு புத்தகங்களை படித்தேன், பல மனிதர்களிடம் பேசினேன், பழகினேன், காரணம் இல்லாமல் சந்தோஷமாக இருக முடியும் என்றும் அங்கு தான் கண்டுகொண்டேன். Liveliness, spiritedness போன்றவை என்ன என்று மீண்டும் அங்கு கண்டு கொண்டேன். அப்பொழுது தான் உங்களுடைய எழுத்து எனக்கு அறிமுகமாகியது. முதலில் உங்கள் பூர்ணம் கதை அதை தொடர்ந்து அறம் தொகுதி வாசித்தேன். தற்செயலாக அலைகளென்பவை பதிவை படித்தேன். ஜெ அது ஒரு மாபெரும் திறப்பு, பிறகு உங்கள் புறப்பாடு தன்மீட்சி. வரிசையாக உங்கள் படைப்புகள். இப்பொழுது வெண்முரசு.

உங்களைப் படிக்க ஆரம்பித்த பின்பு அந்த கேள்விகள் பலமுறை வந்துள்ளது. ஆனால் அவற்றை தங்கள் சொற்கள் மூலம் தெளிவுடன் கடந்து சென்றுள்ளேன். சொல்வளர் காடு, இமைக்கணம் கிராதம் மாமலர்  நாவல்கள் பெரும் என்னை தெளிவுபடுத்தின. முக்கியமாக கர்ணன் மற்றும் நீலனுக்கு நடுவில் நடக்கும்னுறையாடல். கோவை புதிய வாசகர் சந்திப்பு என்னை புதிய பரிணாமத்தில் சிந்திக்க வைக்கிறது. ஆனால் மீண்டும் நான் அந்த சுழியின் ஆழத்திற்கு அடித்து செல்லப்பட்டு உள்ளேன். காரணம் வெண்முரசு. குறிப்பாக அந்த நீலன்.

இப்போது கார்கடல் வாசித்து கொண்டிருக்கிறேன். போர் சித்திரங்கள் உயிர் பலிகள் உச்சகட்ட உணர்வுகள் என் மனதை கிளறி விட்டன. இப்போது அதே கேள்விகள் மீண்டும் விசையுடன் முளைத்துள்ளன. முள் சாட்டையை போல என்னை கவ்வுகிறது. நான் இப்பொழுது மெய்யியல் சார்ந்த புத்தகங்களை படித்துப்கொண்டிருக்கிறேன் குறிப்பாக history of western philosophy – Bertrand Russell , தங்களின் இந்திய ஞானம் மற்றும் Sophie’s world புத்தகத்தை வாசித்துக் கொண்டு இருக்கிறேன். இதுவரை நான் வாசித்த அனைத்திலும் இருந்து ஒன்று தெரிகிறது. என்  கேள்விகள் யாவும் புதியவை அல்ல, அவை வாழ்க்கையில் வராத ஒரு மனிதனும் இருக்க முடியாது.

அவரவர் தேர்ந்து எடுகும் பாதை வேறு. அவர கண்டடையும் மெய்மை வேறு. ஒவ்வொரு கண்டடைதலும் ஞானமே, ஒவ்வெறு ஞானமும் மெய்மையே. நான் தனியவன் அல்ல. எனக்கு முன்பும் இந்த கேள்விகள் இருந்தன இனியும் இருக்கும். அனைத்தும் செயலை முன்வைப்பன, ஆனால் இந்த கேள்வியை சந்திக்க நினைப்பவர்கள் பலர் செயல் இன்மையின் பிடியில் ஆட்டுவிக்கபடுகிறார்கள். பலர் இதில் இருந்து விலக, காமம் போன்ற அடிப்படை இசைகளுக்கு தங்களை ஆட்டுவிக்க விடுகின்றனர், பிறர் பொருளியல் இன்ப நிலைகளில் திளைக்கின்றனர், பலர் Fanatic ஆகா ஒன்ற பிடித்து தொங்குகின்றனர் குறிப்பாக மத அடையாளங்கள். காலப்போக்கில் அவர்கள் dogmatic person ஆகமாறுவதை காணமுடிகிறது. நான் அப்படி ஆகிவிடக்கூடாது என்ற பயமும் உறுதியும் எனக்குண்டு. சல்லியாக ஆகிவிடக்கூடாது என பெரும்பயம் எனக்குள் உள்ளது. ஒவ்வொரு முறையும் நான் ஆழத்திற்கு இழுக்கப்படுகிரேன். முழுதாக வெளிப்படாமல் போய்விடுவேனா என  ஐயம் என்னை துரத்துகிறது. சிதறிக்கொண்டே இருக்கிறேன்.

கடிதம் மிகவும் நீண்டு விட்டது. மன்னிக்கவும். இதை எழுதுவதன் காரணம், இதை நான் யாரிடம் சொல்லுவது. யாரிடம் சொன்னாலும்  அது அப்படிதான், உனக்கு இது கூட தெரியாதா?, வாழும் வரை இருந்து விட்டு போ போன்ற பல அறிவுரைகள் கூறுகின்றனர். சாமியாராக ஆக போகிறாயா என கிண்டல் செய்கின்றனர். இந்த கொந்தளிப்பை அறிந்தவருகே அதுந்தெரியும். இதே கேள்விகளுடன் தான் உங்கள் தேடல் தொடங்கியது. நீங்கள் நித்யாவை அடைந்தீர்கள், நான் எனது தேடலை அடைவேனா? ஒவ்வொரு முறையும் நான் அந்த கேள்விக்கு ஏன் வருகிறேன்?

திரு என் வாழ்நாள் முழுதும் நெஞ்சில் நிறைய வேண்டும்,  வண்ண மயமான வாழ்வை கொண்டாட வேண்டும் என் பேராசை உண்டு. கொண்டாட முயல்கிறேன், ஆனால் முழுதாக திளைக்க முடியவில்லை, ஒரு நெருடல் உருத்தி கொண்டே இருக்கிறது.

குந்தி கர்ணனிடம் சொல்வதை போல. “ஆனால் அது உண்மை அல்ல. உண்மை மிகச் சிக்கலானதாகவே இருந்தாகவேண்டும் என்பதில்லை. அது மிகமிக எளிதானதாகவே இருக்கலாம். உச்சநிலை மெய்மைகள் மிகமிக உலகியல் சார்ந்ததாக, மிக அன்றாடத்தன்மை கொண்டதாக இருக்கலாம். அது பெண்களுக்கே புரியும். ஆண்கள் அடுமனைக்குச் செல்லவே ஏழுமலை கொண்ட காட்டுப்பாதையை தெரிவுசெய்வார்கள் என நாங்கள் பெண்கள் சொல்லிக்கொள்வதுண்டு.” இருக்கலாம் நான் எதாவது ஒன்றை தவற விட்டு இருக்கலாம் அல்லது வெறும் ப்ச்ச்வனையா? என்று கேள்வி எழுகிறது. இன்று தெளிவாக தெரிகிறது buddhan என்னை கைவிடவில்லை. நான் அவனை முழுதாக கற்கவில்லை.

நான் ஒன்றை முடிவு செய்துள்ளேன், இனி அந்த கேள்விகளைப் பார்த்து ஓடுவது இல்லை. அதை நேர்பட அணுக வேண்டும், ஒரு துளி அஞ்சாது அதை நோக்க வேண்டும், இனி அந்த கேள்விகளால் அலைகழிக்கப்படக்கூடாது. இவை அனைத்தும் நானே கற்பனை செய்து கொள்வதாகக் கூட இருக்கலாம். எந்த வகையிலும் சென்ற காலத்தை போல என்ன அவை தளர செய்யகூடாது. இது என் அந்தரங்க தேடல் இதை எப்படி நான் அணுகுவது, எப்படி முறை செய்வது? தங்கள் எழுத்துகள் பெரும்பாலானவை இந்த கேள்விகளை பற்றியவை தான், இருந்தாலும் மேலும் நான் விசைபட முன் செல்ல இந்த கடிதத்தை எழுதுகிறேன். கீதா உபதேசம் கேட்ட பின்னரும் அர்ஜூனன் தயங்கினான், நான் கேட்பதில் தவறில்லை என தோன்றியது.

பின் குறிப்பு:

உங்கள் நேரத்தை அதிகமாக எடுத்து கொண்டதற்கும், வேறு ஏதேனும் தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும். என் மனதிற்கு மிக அணுக்கமானவர் நீங்கள். எந்த ஒரு மறைவும் ஆணவமும்  இல்லாமல் என்னையும் என் ஐயங்களையும் முழுதாக முன்வைக்க வேண்டும் என்று நினைத்தேன். முழுதாக முன் வைத்துள்ளேன்.

அன்புடன்

சோழ ராஜா.

***

அன்புள்ள சோழராஜா

நீண்ட உள அலைக்கழிவு கொண்ட கடிதம். கூடவே சில தெளிவுகளும் கொண்டது. நான் விரிவாக பிறகு எழுதுகிறேன்.

ஆனால் இது பொதுவெளிக்குரிய உரையாடல் என நினைக்கிறேன். நாம் நம்மை கூட்டாக புரிந்துகொள்ள உதவுவது. அனைவருக்கும் உரிய அடிப்படைச் சிக்கல்கள் சிலவற்றை விவாதிப்பது

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 19, 2022 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.