ஒளிமாசு- பதில்

ஒளிமாசு- லோகமாதேவி

ஒளிமாசு- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சந்தானம் அவர்களின் இந்த (ஒளிமாசு- கடிதம்)கேள்விக்கான பதில்களை ஏறக்குறைய தாவரவியல் வகுப்பு எடுப்பதை போலவே சொல்ல வேண்டி இருக்கிறது.இதே கேள்வியை கத்தாரிலிருந்து நண்பர் பழனி இக்கட்டுரை வெளியான அன்றே அலைபேசியில் அழைத்து கேட்டார்.

ஒளி மாசு என்பது தேவையற்ற, பொருத்தமற்ற, அதிகப்படியான செயற்கை விளக்குகளின் ஒளிப்பொழிவை குறிக்கிறது.இரவு நேர அலங்கார விளக்குகளின் மிகையொளி, இரவுp போக்குவரத்தின் வாகன ஒளி. இரவின் நகர ஒளி (SkyGlow) ஆகியவை தாவரங்களுக்கு உண்டாக்கும் பிரச்சனைகள் ஒளிமாசு கட்டுரையில் சொல்லப்பட்டது.

நீங்கள் கேட்டிருப்பது ஒளி போதாமல் இருக்கும்,  குளிர்காலங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு இயற்கை ஒளிக்கு ஈடாக அளிக்கப்படும் செயற்கை ஒளி விளக்குகள் குறித்து

இது ஒரு சாகுபடி தொழில் நுட்பம்.  தாவரங்களை  பிரியமான செல்லபிராணிகளை போல பழக்கி நமக்கு வேண்டியதை, வேண்டிய அளவில் எடுத்துக் கொள்ளும் வழிகளில் இதுவும் ஒன்று

தாவரங்களில் நடைபெறும் Photosynthesis, photoperiodism, photomorphogenesis, Phototropism  ஆகியவற்றிற்கான வேறுபாட்டை அறிவதன் மூலம் இதை  புரிந்து கொள்ளலாம்.

சூரிய ஒளியின் முழு நிறமாலை என்பது வானவில்லின் அனைத்து வண்ணங்களையும் கொண்டுள்ள  சூரியனின் வெண்ணிற ஒளியை

குறிக்கின்றது. சூரியன் அதன் வேறுபட்ட  நிறங்களை பொருத்து, பல அளவிலான அலைநீளங்களில் கதிர்வீச்சை வெளியிடுகிறது, பூமியின் வளிமண்டலம் அதிலிருக்கும் புற ஊதா (UV) மற்றும் அகச்சிவப்பு (IR) கதிர்வீச்சுகளை தடுக்கிறது.

பூமியின் உயிர்களை நிலைநிறுத்தும் முதன்மை ஆதாரம்  சூரிய  கதிர்வீச்சுதான் அதிலும் தாவாங்களுக்கு சூரிய ஆற்றல் பலவிதங்களில் அத்தியாவசியமானது.

இதில்  Photosynthesis என்பது ஒளியாற்றலைக்கொண்டு அவை உணவை  தயாரித்து மாவுச்சத்தாக சேமித்து வைத்துக்கொள்வது.

Phototropism என்பது ஒளியை நோக்கி திரும்புதல் அல்லது வளர்தல். எளிய உதாரணமாக தென்னந்தோப்புகளில் மதில் ஓரமாக இருக்கும் மரங்கள் வெளியில்  வளைந்து வளர்ந்திருப்பதை பார்த்திருப்போம்.  உள் பகுதிகளில் ஒளிக்கான  போட்டி அதிகமாக இருப்பதால் அவை வெளியிலிருக்கும் ஒளியை நோக்கி வளரும், இந்த ’ஒளி நோக்கி வளருதலை; அடிப்படையாக கொண்டு தான் மியாவாக்கி காடு வளர்ப்பு முறை செயல்படுகிறது. மிகச்சிறிய நிலப்பகுதியில் நெருக்கமாக பல்வேறு உயரங்களில் வளரும் தாவரங்கள் வளருகையில்   அவை பக்கவாட்டில் வளர வாய்ப்பில்லாமல் மேல் நோக்கி ஒளியை தேடி வெகு வேகமாக வளர்கின்றன. 3 வருடங்களில் குறிப்பிட்டு சொல்லும்படியான  உயரத்தில் அங்கு தாவரங்களை காணமுடியும்

Photoperiodism   என்பது  அந்த ஒளிமாசு கட்டுரையில் குறிப்பிட்டிருந்த ஒளி நாட்ட காலக்கணக்கு. ஒவ்வொரு வகை தாவரத்திற்கும் குறிப்பிட்ட அளவு பகல் நேர சூரிய ஒளி தேவைப்படும், சூரிய ஒளிக்கதிரில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து  அதற்கேற்ப  தான் வாழ்வு சுழற்சியை அதாவது  மலரும் காலம், கனி அளிக்கும் காலம் போன்றவற்றை தீர்மானிக்கும்  தாவரங்களின் திறன்.

அதைக் கொண்டுதான் short day plants, long day plants, day neutral plants என்று குறைந்த பகல் நேர ஒளி போதுமானவை, நீண்ட ஒளி நேரம் தேவைப்படுபவை,  இரண்டுக்கும் இடைப்பட்ட, ஒளிக்கால அளவை பொருட்படுத்தாமல் பூத்து காய்க்கும் (நெல், வெள்ளரி) போன்றவை என வேறுபடுகின்றன. இந்த ஒளிக்கால அளவில்  உண்டாகும்  வேறுபாடுகள்  நிழல் மரங்களை   நட்டு இயற்கையாகவும் சரி செய்யப்படுகின்றன.

உதாரணமாக  இதைச் சொல்லலாம்.  சென்ற வாரம் நான் ஏற்காடு இந்திய காபி வாரியத்தின் காபி தோட்டங்களுக்கு சென்றிருந்தேன்.அங்கே வளரும் காபி செடிகளுக்கு 6 மணி நேர பகல் வெளிச்சம் போதுமானதாக இருக்கிறது எனவே காபிச்செடிகளுக்குள்ளும், தோட்ட விளிம்பிலும் சில்வர் ஓக் மற்றும் கல்யாண முருங்கை மரங்களை நட்டு வைத்திருக்கிறார்கள். அவற்றில் உயரமாக கிளைகளதிகமாக இல்லாமல் வளரும் சில்வர் ஒக் மரங்கள் நிரந்தர நிழலுக்கும் அவ்வபோது கத்தரித்து விடப்படும் கல்யாண முருங்கை மரங்கள் தற்காலிக நிழல் அளிக்கவும் பயன்படுகின்றனஅவ்வாறு சரியான கோணத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு  நிழல் அளிக்கும்படியே  அவை வளர்க்கப்படுகின்றன.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் செயற்கை ஒளியில் பயிர் சாகுபடி செய்வதென்பது Photomorphogenesis என்பதை அடிப்படையாகக் கொண்டது. Photomorphogenesis என்பது ஒளிசார்ந்த உடல்வளர்ச்சி குறிப்பாக செல்கள் பிரிந்து  வளர்வதற்கு தாவரங்கள் சார்ந்திருக்கும் குறிப்பிட்ட நிறத்திலிருக்கும் ஒளிக்கற்றையின் நீளம் என்று கொள்ளலாம்.

ஒளிக்கற்றையின் நிறம் மற்றும் நீளம் ஆகியவற்றில் இருக்கும் நுட்பமான மாறுபாட்டை புரிந்துகொண்டால் இதை புரிந்துகொள்ள முடியும். தாவரங்களுக்கு ஒளிச்சேர்க்கைக்கு பெரும்பாலும் சூரிய ஒளியின்  நீலம் மற்றும் சிவப்பு ஒளி தேவைப்படுகிறது, ஆனால் மலர்வதற்கு அகச்சிவப்பு ஒளி தேவைப்படுகிறது. இப்படி தண்டின் நீளம் அதிகமாக ,இலைகளின் பச்சை நிறம் அடர்த்தியாக என்று பிரத்தியேக தேவைகள் அவற்றிற்கு உள்ளது

குளிர்காலங்களில் குறுகிய பகல் நேரமும் நீண்ட இரவு நேரமும் இருப்பதால் பகலின் போதாமையை இரவில் செயற்கை வெளிச்சம் கொண்டு ஈடுகட்டி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

இயற்கை ஒளியில் உண்டாகும் எதிர்பாராமைகள், குளிர்காலங்களில் உண்டாகும் போதாமைகளினால் விவசாய பயிர்களின் மகசூல் பாதிக்கப்படுவது உலகெங்கிலும் ஏற்படும் ஒன்று. துவக்க காலங்களில் இந்த குறைபாட்டை களையத்தான் பசுமைகுடில்களில்  கட்டுப்படுத்தப்பட்ட  காலநிலைகளில் பயிர் வளர்ப்பு செய்யப்பட்டது.

1860களில் செயற்கை ஒளியில் பயிர் சாகுபடி குறித்த ஆய்வுக் கட்டுரைகளை H.Mangon,E.Prilleux ஆகியோர் எழுதினர். எனினும் விரிவான வணிக ரீதியான பயிர் சாகுபடிக்கான செயற்கை வெளிச்ச பயன்பாடு 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் தான் பயன்பாட்டுக்கு வந்தது.

தற்போது கட்டுப்படுத்தப்பட சூழலில் குறிப்பிட்ட கால அளவுகளில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செயற்கை விளக்கொளியில்  பயிர் சாகுபடி என்பது மிக முக்கியமான தொழில் நுட்பமாகி விட்டிருக்கிறது

1809ல் sir Humphry Davy வளைந்த செயற்கை ஒளிரும் மின்வீச்சு விளக்கை இதற்கெனவே உருவாகினார் . 1879 ல் தாமஸ் எடிசன் மின்விளக்குகளுக்கு பிறகு பல வகையில் பயிர் சாகுபடிக்கு பொருத்தமான செயற்கை விளக்குகளின் பயன்பாடு குறித்து சோதனை முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன பல மாதிரி விளக்குகள்  உருவாக்கப்பட்டாலும் வணிகரீதியாக அவற்றை பயன்படுத்த  முடியாத அளவுக்கு செலவு பிடித்த தொழில்நுட்பங்களாயிருந்தன அவையனைத்துமே.

’1901 லிருந்து 1936 வரையில் நடந்த பல ஆய்வுகளுக்கு பின்னர் மெர்குரி வாயு விளக்குகள் இந்த வகை பயன்பாட்டுக்கு பொருத்தமானவை  என சொல்லப்பட்டது, எனினும் அவ்விளக்கொளி  தாவர ஒளிச்சேர்க்கைக்கு பாதகமாயிருந்தது.இறுதியாக LED விளக்குகள் இவ்வாறான கட்டுப்படுத்தப் பட்ட சூழலில் நடைபெறும் விவசாயத்திற்கு பொருத்தமானவை என்று கண்டறியப்பட்டது.1960களில் இவை  சந்தைப்படுத்தப்பட்டு  மேலும் பல தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றங்களுக்கு உள்ளாகி தற்போது ஆகச்சிறந்த சாகுபடிக்கான செயற்கை விளக்குகளாக  உபயோத்தில் இருக்கின்றன

அதிக சிவப்பு, அகச்சிவப்பு மற்றும் குறைந்த நீலநிறக் கற்றைகளை கொண்டவை, அதிக நீலக்கற்றைகளும் குறைந்த அகச்சிவப்பு கற்றைகள் கொண்டவை என பிரத்யேகமாக  வடிவமைக்கப்பட்ட விளக்குகள் தற்போது கிடைக்கின்றன.  சாகுபடி செய்யப்படும் பயிர்களின் தேவைக்கேற்ப இவை தேர்ந்தெடுக்கப்படுகின்றன

இவ்விளக்குகள் இயற்கை ஒளியுடன் கூடுதலாக துல்லியமாகக் காலக் கணக்குகள் கணக்கிடப்பட்டு அந்த நேரத்துக்கு மட்டுமே அளிக்கப்படுபவை.  ஒளியின் தீவிரம், ஒளிக்கற்றையின்  நீளம் ஆகியவற்றின் அடிப்படையில் தாவரத்துக்கும்  செயற்கை விளக்குகளுக்குமான இடைவெளி துல்லியமாக கணிக்கப்பட்டு விளக்குகள்  அமைக்கப்படுகின்றன.

இந்த வகையான செயற்கை விளக்குகள் தேவைப்படும்போது ஒளியின் கோணத்தை மாற்றியமைக்க எதுவாக் திருகு கம்பங்களில் அமைக்கப்படும். தற்போது இளஞ்சிவப்பு LED விளக்குகள் தாவர வளர்ச்சிக்கு மிகவும் உதவுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.

இவ்வொளி தொடர்ந்து அளிக்கப்படுவதில்லை குளிர் நிரம்பிய,  சூரிய ஒளி மிகக்குறைவாக இருக்கும் காலத்துக்கு மட்டும் அளிக்கப்படுகின்றன. இவற்றால் அந்த பயிர்களுக்கோ அல்லது மனிதர்களுக்கோ  இதுவரை  ஆபத்துகள் ஏதும் கவனிக்கும்படி கண்டறியப்படவில்லை.

சாகுபடி தொழில்நுட்பங்களில் ஒன்றான இதன் விளைவுகள்  இதுவரை பெரிதாக ஆய்வுக்கு உள்ளாகவில்லை. சூழல் வெப்பம் அதிகமாகின்றது என்பதை மட்டும் இப்போதைக்கு கருத்தில் கொண்டிருக்கிறார்கள்

இந்த நிகழ்வில்  வேதியியல் மற்றும் இயற்பியல் நுட்பங்களும் இருக்கின்றன. இந்த இணைப்பில் இருக்கும் கட்டுரை  அவற்றை எளிமையாக விளக்குகிறது https://www.valoya.com/artificial-lighting-in-agriculture/

செயற்கை ஒளியில் பயிர் சாகுபடி குறித்து மேலும் அறிய: https://www.agrivi.com/blog/farming-under-artificial-light-as-a-response-to-future-food-demands/

அன்புடன்

லோகமாதேவி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 24, 2022 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.