நெல்லையில்…கடிதம்

பெருமதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

20 வருடங்களுக்கு முன் ஒரு மாணவனாக நூலகத்தில் தொடராக  வாசித்த கிளர்ச்சியைத் தக்க வைக்க நெல்லை புத்தகத் திருவிழாவில் சங்கச் சித்திரங்கள் நூலில் தங்கள் கையொப்பம் பெற்றதில் மகிழ்ச்சி. எழுத்தாளர்களை அணுகுவதில் எப்போதும் போலவே உண்டான இனிய பதற்றத்தை ,தனது படைப்புகளின் அடியொற்றி, சட்டென  icebreaker போல யுவன் சந்திரசேகர் அவர்கள் தணிய வைத்தார்.உங்கள் உரையாடலை இடை மறித்த பின் ,ஊர் பேர் ஒப்புவித்து, கையொப்பம் பெற்றுத் திரும்பிய பின்பே ஒருவாறு சமநிலையைத் திரட்டிக் கொள்ள முடிந்தது . சென்ற ஞாயிற்றுக்கிழமையிலும் அவ்வாறே வந்து நாஞ்சில் நாடன் அவர்களுடைய உணர்ச்சி மிக்க சிறப்புரையையும் கண்டு திளைத்தேன்.

விழாவில் சிறப்புரையாற்றிய தாங்கள், யுவன் மற்றும் போகன் சங்கர் குறித்த இராயகிரி சங்கர் அவர்களின் பொது வாசக அறிமுகம் சுருக்கமாக செறிவாக  இருந்தது.மரபு/நவீன இலக்கியங்களை வரையறுத்து,மரபிலக்கிய முன்னோடிகள் தங்கள் படைப்பு எல்லையைக் கடந்து செயல்படும் போது  ‘கால் மாறி ஆடின கதை’யை  குறித்தான தங்களின் உரை ,என்றும் போலவே தரவுகளுடன் விவாதப் புள்ளியைச் சுற்றி அமைந்தது.யுவன் அவர்களின் உரை, அணுக்கமும் சரளமும் கூடி வரப் பெற்றதாக இருந்தது.

யுவன் சந்திரசேகர் மற்றும் போகன் சங்கர் அவர்களின் படைப்புலகத்துக்கு சற்றே தாமதமாக நுழைந்தது குறித்த இழப்புணர்வு எனக்கு உண்டு. மொழி அனுபவத்தைக் கை கொள்ள என்னால் சொல் கூடாத போது காட்சியை கொண்டு ஈடு செய்து கொள்வேன். நான் விரும்பி வாசித்த எந்த இலக்கியப் புனைவையும் எப்பொருட்டுமின்றி கண் சிவக்க,பஞ்சடையும் வரை புனலாடி, கரை மீளும் அனுபவமாகவே கொள்வேன். அவ்வகையில் யுவன் அவர்களின் புனைவுலகம் கண்ணாடிக் குவளைகளைக் கொண்டு அமைத்த பிரமிட் கோபுரக்குவையின் உச்சியில் நீர் நிரம்பத் தொடங்கி , கீழ் அடுக்குகள் நிரம்பிக் கொண்டே இருக்கும் பொழுதில், மண்ணில் முளைத்த chandelier  என ஒரு பேரமைப்பு துலக்கம் கொள்வதாக எண்ணிக் கொள்வேன். போகன் சங்கர் அவர்களின் புனைவுகளை வாசிக்கத் துவங்கிய போது ,கோடை விளையாட்டின் பொல்லாக் கணத்தில் சுடு கொட்டையின் வெம்மையை உணரத் தொடங்கி, பின்  அதன் தீண்டலில் தோயத் துவங்கி இருப்பதாகவே எண்ணிக் கொள்வேன்.

போகன் சங்கர் தன் உரையில் வாசிப்பின் படிநிலைகளைச் சுட்டிப் பேசி,கலை அழகியல் உணர்வு மேலோங்கிய homo aestheticus  பற்றி குறிப்பிட்டார். தன் உரை துவக்கத்தில் அவர் எழுத்தாளர்களின் பேச்சின் பெறுமதியை பேசும் முகமாய்,புனைவின் நுண்ணுணர்வை முன் வைத்து , அதன் அவசியத்தைக் கண்டு கொள்ளவும் பேணவும்  வெகு மக்களிடம் எண்ணிப் பார்க்கவும் சொன்ன போது ,எனக்கு  ‘ Horton Hears a who’  நாவலின்   அனிமேஷன் பட வடிவம் நினைவில் எழும்பியது. பறக்க முயலும் சிறகு போல் சுளகுச் செவி  கொண்ட  யானை Horton ,பூவின் தூசி தும்பில் வாழும் நுண்ணிய கூட்டத்தார் குரலுக்கு செவி மடுத்து அவர்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற பெரிதும் பரிதவித்து, சக விலங்குகளின் கேலியைப் பொருட்படுத்தாமல், முன்னெடுத்துச் செல்வதாக  அதன் கதை இருக்கும். கவிஞர் இசையின் ‘பழைய யானைக் கடை’ கட்டுரைத் தொகுப்பு அட்டையிலும் பின் வரிசையில் இறுமாப்பும் சலிப்பும் கவிய நிற்கும் Horton ஐ நாம் கண்டு கொள்ளலாம். நுண்ணுணர்வைப் பேணி,கையளித்து,அதைத் துய்ப்பவர்களை கவனத்தில் கொள்ளும் இலக்கியவாதிகளின் பிரதிநிதியாகவே  Horton எனக்குப் படுகிறது .

மொத்தத்தில் செறிவான தொடர் உரை நிகழ்வுகளை  என் மண்ணில் நேரில் கண்டது நிறைவளித்தது.

வணக்கங்களுடன்

சே. தோ. ரெங்கபாஷ்யம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2022 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.