அஞ்சலி பா.பிதலீஸ்
பா.பிதலீஸை நான் இருபதாண்டுகளுக்கு முன் எம்.எஸுக்கு 70 ஆண்டு அகவைநிறைவு விழாவை கொண்டாடியபோதுதான் அறிமுகம் செய்துகொண்டேன். “என்னமாம் ஹெல்ப்பு வேணுமா?” என அவரே வந்து அறிமுகம் செய்துகொண்டார். அதன்பின் தொடர்ந்து இலக்கியக் கூட்டங்களில் சந்திப்பேன்.
ஒளிவிளக்கு வெளியாகும் போது ஒரு பிரதியுடன் என் வீட்டுக்கு வந்து இலக்கியம் பேசிவிட்டுச் செல்வார். என் வீட்டிற்கு வந்துசேரும் நூல்களில் நான் அவருக்கு அளிக்க விரும்புவதை கட்டு கட்டாக எடுத்துச் செல்வார். அவர் இளம் வாசகர்களுக்காக தன் இல்லத்தில் ஒரு நூலகம் அமைத்திருந்தார்.
பிதலீஸ் ஓர் இலக்கியப்போராளி. அவர் தனக்கென தேர்ந்த கர்ம மண்டலத்தில் தீவிரமாக இருந்தவர். குமரி மாவட்டத்தில் இந்த மாவட்டத்திற்குள்ளேயே திகழும் ஓர் அறிவியக்கம் உண்டு. கைவிளக்கு, ஒளிவெள்ளம், முதற்சங்கு என ஏராளமான இதழ்கள். நாள்தோறும் நூல்வெளியீடுகள். இங்கேயே உருவாகி வந்த எழுத்தாளர்கள் உண்டு. ஹெஜ்.ஜி.ரசூல் முதல் மலர்வதி, குமரி ஆதவன், சிவனி சதீஷ், குமரிக்கிழவனார் வரை ஒரு நீண்ட நிரை. அவர்களில் ஒருவர் பிதலீஸ். ஒளிவெள்ளம் அவர் விடாப்பிடியாக நடத்திய இதழ். அதில் குமரிமாவட்டச் செய்திகளுடன் எளிய இலக்கிய அறிமுகம் எல்லா இதழிலும் இருந்துகொண்டிருந்தது.
நன்றி காமதேனு15-நவம்பர்-1951 ல் பிறந்த பா.பிதலீஸ் 16-மார்ச் 2022ல் மறைந்தார். இறுதிக்காலத்தில் நோயுற்று நினைவுகள் மறைந்த நிலையில் இருந்தார். பேக்கரி உட்பட பலதொழில்கள் செய்து வந்த பிதலீஸ் குமரிமாவட்ட எழுத்தாளர் சங்க பொறுப்பில் இருந்தார். 2002 முதல் ஒளிவெள்ளம் என்னும் சிற்றிதழை நடத்தி வந்தார். தன் இல்லத்திலேயே ஓர் இலவச நூலகத்தையும் நடத்திவந்தார்.
https://kamadenu.hindutamil.in/literature/literary-personality-death
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

