இரண்டு யசோதரா
சித்தார்த்த யசோதரா’ என்ற நாவலை வாசித்தேன்

சிங்கள எழுத்தாளர் சோமா ஜயகொடி எழுதிய இந்த நாவலைத் தமிழாக்கம் செய்திருப்பவர் சரோஜினி அருணாசலம். குமரன் புத்தக இல்லம் வெளியிட்டுள்ளது
புத்தரின் மனைவியான யசோதராவின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட இந்த நாவல் அவர்களின் காதல், திருமணம், புத்தரின் துறவு பற்றி மாறுபட்ட கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ளது.
இதில் யசோதராவிற்கும் புத்தருக்குமான பந்தம் ஜென்ம ஜென்மமாகத் தொடர்வது என்பதே மைய இழையாக உள்ளது.
ரோஹிணி நதி நீரைப் பங்கு போடுவதில் சாக்கிய வம்சத்திற்கும் கோலிய வம்சத்திற்கும் இடையில் பிரச்சனை நிலவுகிறது. இந்நிலையில் சாக்கிய வம்சத்தைச் சேர்ந்த புத்தர். கோலிய வம்சத்தைச் சேர்ந்த யசோதராவை எப்படித் திருமணம் செய்ய முடியும் என்ற கேள்வி உருவாகிறது.
யசோதரா மீது கொண்ட காதலால் சுயம்வர போட்டிகளில் கலந்து கொண்டு புத்தர் தனது போர்த்திறனை வெளிக்காட்டி சாதனை செய்கிறார். அவர்களின் காதலை சோம ஜயகொடி அழகாக எழுதியிருக்கிறார்
புத்தரின் துறவை யசோதரா புரிந்து கொண்டு அனுமதிக்கிறாள். என்கிறார் சோம ஜயகொடி
புத்த ஜாதகக் கதைகளில் சொல்லப்படும் நிகழ்வுகள் மற்றும் மகாயானத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்து இந்தப் புனைவை எழுதியிருக்கிறார்.
நாம் அறிந்த கதைகளை உணர்ச்சிப்பூர்வ நாடகமாக விவரித்திருக்கிறார் என்பேன்.
புத்தரின் கால இந்தியாவின் வாழ்க்கை முறை, சடங்குகள் அன்றைய அரசாட்சி, மக்களின் நம்பிக்கைகளை நுட்பமாக எழுதியிருக்கிறார்.

தெலுங்கு எழுத்தாளர் வோல்கா இதே போல் யசோதராவை மையப்படுத்தி ஒரு நாவல் எழுதியிருக்கிறார். தமிழில் யசோதரை என்ற பெயரில் நாகலட்சுமி சண்முகம் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
அதில் புத்தர் ராஜபரிபாலனத்தை விடவும் விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார் என்பது விவரிக்கப்படுகிறது. சித்தார்த்தன் புத்தராக மாறியதற்குப் பின்னால் இருந்த யசோதராவின் பங்கினை வோல்கா தனித்துவத்துடன் விவரிக்கிறார். இதில் வரும் யசோதரா அறியாப்பெண்ணில்லை. ஆழ்ந்து சிந்திக்ககூடியவள். பெண்கள் ஏன் துறவு கொள்ள அனுமதிக்கபடுவதில்லை என்று கேள்விகேட்பவள்.
புத்தரின் வாழ்க்கைச் சரித்திரம் அவர் மறைந்து நூற்றாண்டுகளுக்குப் பின்பு புனையப்பட்டது. அதில் சொல்லப்படும் நிகழ்வுகள் அவரது வாழ்வில் நடந்த உண்மைகள் என்பதற்கு எவ்விதமான நேரடி ஆதாரங்களும் கிடையாது. அவற்றைக் குறியீடுகளாகவும் நம்பிக்கைகளாகவும் கருதுகிறார்கள்.
சோம ஜயகொடி நாவலில் வரும் யசோதரா தியாகம் செய்யும் பெண்ணாகச் சித்தரிக்கபடுகிறாள். அவளுக்குப் புத்தரின் மீது கோபம் கிடையாது. அவரது ஞானத்தேடலுக்கான துணையாக விளங்குகிறாள்.
இரண்டு நாவலும் ஒரே கதைக்கருவைக் கொண்டிருந்தாலும் இரண்டு யசோதராக்களும் வேறுபட்டவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். இருவரில் வோல்காவின் யசோதரா இந்த நூற்றாண்டில் வாழுகிறாள். புதிய பார்வைகளுடன் கேள்விகளை எழுப்புகிறாள்.
இரண்டு நாவல்களிலும் புத்தரின் ஆளுமை முழுமையாக வெளிப்படவில்லை என்பதே பொதுவான குறை.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
