காரந்தின் உலகம்
மகாகவி ரவீந்திரநாத் தாகூரைத் தனது ஆதர்சமாகக் கொண்டவர் கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த். இளமையில் சாந்தி நிகேதனுக்குச் சென்று கலைகள் மற்றும் புதிய கல்வி முறை பற்றி அறிந்து வந்திருக்கிறார். பின்னாளில் காரந்தின் செயல்பாடுகளைப் பாராட்டி விஸ்வபாரதி பல்கலைக்கழகம் அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டமளித்துச் சிறப்பித்திருக்கிறது.

காரந்தின் பன்முகச் செயல்பாடுகளைப் பற்றி அறியும் போது வியப்பளிக்கிறது. அவர் தொடாத விஷயமேயில்லை. கன்னட இலக்கியம் மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்குப் பெரும்பங்கு வகித்திருக்கிறார். வைதீகமான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த போதும் நாத்திகராக வாழ்ந்திருக்கிறார். தனது சொந்த செலவில் ஐரோப்பாவிற்குச் சென்று அங்குள்ள கலைக்கூடங்களை, இசை, நாடகங்களைக் கண்டு வந்திருக்கிறார். யுனெஸ்கோவோடு இணைந்து ஆரம்பக் கல்வி மேம்பாட்டுப் பணிகளில் செயல்பட்டிருக்கிறார். சிறார் கல்விக்கான நூல்களை எழுதியிருக்கிறார். மரபுக்கலையான யக்ஷகானாத்திற்குப் புத்துயிர்ப்புத் தந்திருக்கிறார். அவரே ஒரு சிறந்த நடிகர். நடனக்கலைஞர். இந்தியாவின் புகழ்பெற்ற நாடக, நடனக்கலைஞர்களுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார். மிசாவை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார். தேர்தலில் போட்டியிருக்கிறார். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
சிவராம காரந்த் பற்றி அவரது பிள்ளைகள் மாளவிகா கபூர், உல்லாஸ் காரந்த், குசுமா ராவ் மூவரும் இணைந்து Growing up Karanth என்றொரு புத்தகம் எழுதியிருக்கிறார்கள். தங்களின் தந்தை மற்றும் தாயின் நினைவுகளையும் அவர்களின் குடும்பச் சூழலையும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
காரந் தனது சுயசரிதையை Ten Faces of a Crazy Mind என்று எழுதியிருக்கிறார். அதிலுள்ள சில தகவல்கள், நிகழ்வுகள் இதில் மாறுபட்ட கண்ணோட்டத்தில் விவரிக்கப்படுகின்றன
உல்லாஸ் காரந்த் இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் அறிஞர். புலிகளைப் பற்றி ஆய்வு செய்வதில் உலக அளவில் தலைசிறந்தவர்.

சிவராம் காரந்த் 1902 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி கர்நாடகாவின் உடுப்பிக்கு அருகிலுள்ள கோட்டாவில் பிறந்தார். குந்தாபுரா மற்றும் மங்களூரில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். கல்லூரியில் படிக்கும் போதே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதால் கல்லூரி படிப்பைப் பாதியிலே கைவிட்டிருக்கிறார். 45 நாவல்களை எழுதியுள்ள காரந் தனது புத்தகங்களின் அட்டை ஓவியங்களைத் தானே வரைந்திருக்கிறார். தானே பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். 31 நாடகங்கள், 4 சிறுகதைத் தொகுப்புகள். 6 கட்டுரை தொகுப்புகள். 13 கலைகள் குறித்த கட்டுரை தொகுதிகள், 240 சிறார் நூல்கள். நான்கு தொகுதி அறிவியல் களஞ்சியங்கள். 6 பயண நூல்கள், இரண்டு பறவையியல் நூல்கள், மூன்று சிறார் கலைக்களஞ்சியத்தொகுதிகள். என 417 புத்தகங்களை எழுதியிருக்கிறார். .இன்றும் கன்னட இலக்கியத்தின் நிகரற்ற படைப்பாளியாகக் கொண்டாடப்படுகிறார்.
தங்கள் அப்பா அம்மாவின் காதல் கதையை மூவரும் மிக அழகாக விவரித்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகள் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தனது அப்பா அம்மாவின் காதல்கதையைப் பற்றி எழுதியதை நினைவுபடுத்துகிறது. காரந்த் மீதான காதலை லீலா தான் வெளிப்படுத்தியிருக்கிறார்.
மும்பையில் பிறந்து வளர்ந்தவர் லீலா. சிறுவயதிலே அம்மாவை இழந்தவர். மங்களூர் வரும் வரை அவருக்குக் கன்னடம் தெரியாது. அவரது குடும்பம் மங்களூருக்கு இடம் பெயர்ந்த போது பள்ளிப்படிப்பிற்காகப் பெசன்ட் பெண்கள் பள்ளியில் சேர்ந்து படித்திருக்கிறார். அந்தப் பள்ளியில் நடைபெறும் நாடகம் மற்றும் நடன நிகழ்வுகளுக்கு ஒருங்கிணைப்பு செய்யும் மாஸ்டராகச் சிவராம காரந்த் இருந்திருக்கிறார்.

அவரது கோபத்தைக் கண்டு ஒதுங்கியிருந்த லீலா ஒரு நாள் நாடக ஒத்திகையின் போது அவர் காகிதத்தில் அலங்கார நகைகள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் செய்யும் மாயத்தைக் கண்டு அந்தக் கைகளைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என முடிவு செய்தார். தன் மனதிலுள்ள காதலைத் தனது தந்தையிடம் தெரிவித்துத் தான் மாஸ்டரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகக் கூறினார்.
லீலாவின் தந்தை அதை ஏற்கவில்லை. ஆனால் மகளின் பிடிவாதம் கண்டு சிவராம காரந்தை வீட்டிற்கு அழைத்து வரும்படி சொன்னார்.
லீலா தங்கள் வீட்டிலுள்ள அழகான தோட்டத்தைக் காணுவதற்காகக் காரந்த்தை அழைத்தார் அவரும் லீலா வீட்டிற்கு வந்து பூந்தோட்டத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது அவரைத் தான் கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாக லீலா கூறினார். அதைக் காரந்த் எதிர்பார்க்கவில்லை. தன்னைப் போன்ற ஒரு முரடனை, வேலையில்லாதவனை, முன்கோபியைத் திருமணம் செய்து கொள்வது பிரச்சனைக்குரியது எனச் சொல்லி மறுத்திருக்கிறார். ஆனால் லீலா விடவில்லை. சம்மதிக்க வைத்திருக்கிறார்
அதன்பிறகு லீலாவின் தந்தையிடம் பேசி சம்மதம் பெற்றிருக்கிறார். இருவரும் வேறு சாதி என்பதால் திருமணத்தை ரிஜிஸ்தர் அலுவலத்தில் வைத்து எளிமையாக முடித்துவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். அப்படித் தான் அவர்களின் திருமணம் நடந்தேறியது.
சம்பளம் வரக்கூடிய எந்த வேலையும் செய்யாத ஒரு மனிதரை நம்பி வந்த அம்மா தன் வாழ்நாள் முழுவதும் தந்தைக்கு உற்ற துணையாக இருந்தார் என்று மூவரும் உணர்ச்சிப்பூர்வமாக விவரிக்கிறார்கள்
திருமணம் நடந்த பிறகும் பள்ளிப்படிப்பை முடிக்க வேண்டும் என்பதற்காக லீலா பள்ளி விடுதியில் தங்கியிருந்தார். வாரம் ஒருமுறை அவரைக் காண கார்ந்த் வருகை தருவார். அப்போது செலவுக்குப் பணம் வேண்டுமா என்று கேட்டு தன் பையிலிருந்த சில்லறை நாணயங்களை அவரது கையில் கொட்டுவார். அது ஐம்பது பைசாவிற்குள் தானிருக்கும். இதனால் லீலா ஏமாற்றம் அடையவில்லை. ஒரு போதும் அவரைக் கோபித்துக் கொள்ளவில்லை..
திருமணத்திற்கு முன்பாகச் சிவராம காரந்த் அநாதைச்சிறுவர்களுக்காகப் பாலவனா என்றொரு பள்ளியைத் தனது வீட்டிலே நடத்தி வந்திருக்கிறார். அந்தப் பள்ளியைக் கவனித்துக் கொண்டு உதவி கேட்டு வருகிறவர்களுக்கு இல்லை எனச் சொல்லாமல் முடிந்த உதவிகளைச் செய்து கொண்டு லீலா திறமையாக வாழ்க்கையை முன்னெடுத்திருக்கிறார்.

அம்மா யாருடைய மனதையும் புண்படுத்தியதில்லை. இருப்பினும் தன் கண்முன்னே ஒரு அநியாயத்தையும் காணும் போது அவருக்குக் கோபம் பொங்கி எழுந்துவிடும். யாராக இருந்தாலும் பயமின்றி உண்மையை நிலைநாட்டக் கடுமையாக வாதிடுவார். அவருக்குக் கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. தனது மகன் ஹர்ஷா 23 வயதில் புற்றுநோய் வந்து இறந்து போனதை மட்டும் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இறந்து போன மகனுக்காக அம்மா கவிதை எழுதியிருக்கிறார். அந்தத் துயரம் அவரது மனதை ஆழமாகப் பாதித்தது என்கிறார் மாளவிகா
அப்பா தனது புதிய திட்டங்கள், செயல்பாடுகள் யாவற்றையும் அம்மாவிடம் விளக்குவார். நிறையக் கடன் வாங்கிப் பொதுசேவைகள் செய்வார். அம்மா எதையும் தடுக்கவில்லை. அப்பாவை அவர் ஆழ்ந்து புரிந்து கொண்டிருந்தார் என்கிறார் உல்லாஸ்
தனது பிள்ளைகள் வீட்டிலே ஆரம்பக் கல்வி பயின்ற பின்பு அரசுப்பள்ளியில் கன்னட மொழி வழியாகவே கல்வி பெற வேண்டும் என்பதில் காரந்த் உறுதியாக இருந்திருக்கிறார். அரசுப்பள்ளியில் தான் அவர்கள் படித்திருக்கிறார்கள்.
பெண் வேஷமிட்டு நடிப்பதில் காரந் திறமைசாலி. அவர் சூர்ப்பனகையாக நடித்த போது மீசையை மறைத்து ஒட்டியிருந்த நாடா அவிழ்ந்து வரவே அதைத் தான் எப்படிச் சரிசெய்தேன் என்பதை மாளவிகா வேடிக்கையாக நினைவு கொள்கிறார்
சாதிக்கட்டுபாடுகளை மீறியவர், கலப்புத் திருமணம் செய்து கொண்டவர் என்பதால் காரந்த்தின் வீட்டில் அவரது இளைய சகோதரர்கள் உணவு உண்பதோ, தண்ணீர் குடிப்பதோ கிடையாது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். உறவினர்களின் எதிர்ப்பை பற்றிக் காரந்த் கவலைப்படவேயில்லை. அவரது உலகம் நண்பர்களால் நிரம்பியது.
இரண்டாம் உலகப் போரின் நெருக்கடியால் இந்தியா முழுவதும் உணவுப் பொருட்கள் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது வீட்டிலிருந்த நாய்களுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காக அம்மா புத்தூரின் உதவி ஆணையர் திம்மப்பாவிடம் வாதாடிக் கூடுதல் ரேஷன்களைப் பெற்றார். என்கிறார் உல்லாஸ் காரந்த்.
தந்தையின் வழியாக அவருக்கு எப்படி வனவிலங்குகள் மீதான ஆர்வம் உருவானது. புலிகளை ஆராய்ச்சி செய்வதற்கு எப்படி அது காரணமாக இருந்தது என்பதையும் விளக்குகிறார் ராஜாஜியின் சுதந்திரா பார்ட்டி சார்பாக வேலை செய்த நிகழ்ச்சிகள். ஆச்சார்யா கிருபளானியின் பிரஜா சோசலிஸட் பார்ட்டி சார்பில் தேர்தலில் போட்டியிட்டது. எமெர்ஜென்சியை எதிர்த்து குரல் கொடுத்தது. பத்மபூஷன் விருதைத் திரும்பிக் கொடுத்த நிகழ்வு. இந்திரா காந்தியை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்டது.. ஓவியர் கே.கே ஹெப்பருடன் ஏற்பட்ட நட்பு என நிறைய நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
நூலில் காரந்த்தின் சித்திரத்தை விடவும் லீலாவின் ஆளுமை சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. நினைவு தவறிய நிலையில் அவரது இறுதி நாட்கள் கழிந்த விதம் பற்றியும் அம்மாவின் இறப்பை அப்பா எதிர்கொண்ட மனநிலை பற்றியும் உணர்ச்சிப்பூர்வமாக எழுதியிருக்கிறார்கள்
தனது எழுத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதையும் பொதுக்காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று காரந்த் உயில் எழுதியிருக்கிறார். இன்றும் அவரது பெயரில் அமைந்த அறக்கட்டளை கல்வி மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களுக்கு உதவி செய்து வருகிறது.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
