”ஆயன சிறுநவ்வு” – கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

”ஆயன சிறுநவ்வு” (அவரது குறுநகை).  திரு. வீரபத்ருடு அவர்கள் குறிப்பிட்டது போல நம் விக்கிரமாதித்தியன் அண்ணாச்சியின் புன்முறுவல் மிக அழகாக இருந்தது.  தாடி வைத்திருக்கும் வயதானவர்கள் பலர் எனினும் எல்லோருக்கும் அப்படி அமைவதில்லை.  இதற்குமுன் இவ்வொரு அழகை யாரிடமோ கண்டதுண்டு என யோசித்தபோது நினைவுக்கு வந்தது வீட்டின் வாசலில் அமர்ந்துகொண்டு நீரள்ளி வாயைத் துடைத்துக்கொண்டு புகைப்படம் எடுக்க வந்தவரிடம் நாணம் கொண்ட புன்முறுவலுடன் “வேண்டாம்” என மறுத்த யோகி ராம்சுரத்குமார் அவர்களின் முகம் நினைவுக்கு வந்தது.  வயதாக ஆக அழகு மிகுபவர்கள்.  அண்ணாச்சியிடம் கேட்க தவறவிடப்பட்ட கேள்வி ”தங்கள் அழகின் ரகசியம் என்ன?”

அண்ணாச்சி மீதான தங்கள் உரை.  சங்க காலம் முதல் இருந்துவரும் அண்ணாச்சி வரையிலான தொடர்ச்சி.  அவரது கவிதைகளில் சாபமில்லை வாழ்த்தே உள்ளது என்பது எளிய விஷயமல்ல.  எவ்வளவு பெரியமனிதர் திருவள்ளுவர் சட்டென்று இரந்தும் வாழ்தல் வேண்டின் உலகியற்றியவனை ”பரந்து கெடுக” என்று தீச்சொல் இடவில்லையா? ”கெடுக” என்பதே போதுமானது ”பரந்து” என்பதில் திருவள்ளுவருக்கு முன்பிருந்து திருவள்ளுவர் வரையிலான அத்தனை இயற்கலைஞர்களின் அலைச்சலும் துயரும் உள்ளது.  ஆரல்வாய்மொழி என்று ஊரை அல்லது பாரதியைப் போல் ஜகத்தினை அல்லது வள்ளுவர் போல் இறைவனை கடும் தீச்சொல் இடாத விக்கிரமாத்தியன் ஒரு நீண்ட தொடர்ச்சியின் திருப்புமுனையும் கூட.  இனி வேறு என்று ஊரும் உலகும் இறையும் அந்த தெய்வங்களிடம் வணங்கி நிற்கும் இடம்.  அண்ணாச்சியின் இக்கவிதை –

வேளை

சூரியனார் கோயிலுக்கு

போய் வந்தாயிற்று

கடலாடி

மலைபார்த்தாயிற்று

அந்த வனதேவதைகளை

தரிசித்தாயிற்று

மகாமேருவை

வணங்கியாயிற்று

காயத்ரிமந்திரமும்

சொல்லிக்கொண்டேயிருக்கிறோம்

இன்னுமென்ன

இருக்கிறது

வாசலில் வந்துநிற்காதா

வரிசை

வீட்டினுள் வந்து

அமரமாட்டாளா ஸ்ரீநிதி

கலகலகல

பலபலபல

மளமளமள

தளதளதள

– இதன் கேலி.  வள்ளுவரின் கோபம் இங்கில்லை.  எனினும் உலகின் அன்பின்மைக்கும் இறைவரின் அருளாமைக்கும் உலகும் இறையும் மன்னிப்புக் கோரி திருவள்ளுவரை வணங்கி நிற்கும் வேளை.

இரண்டு நாட்கள் போனது தெரியவில்லை.  கோகுல் பிரசாத், எம். கோபாலகிருஷ்ணன், காளிபிரசாத், சுஷீல்குமார், செந்தில் ஜெகன்னாதன், இயக்குனர் வசந்த் சாய், கவிஞர் சின்னவீரபத்ருடு, ஜெயராம் ரமேஷ், நம் கவிஞர் விக்கிரமாதித்யன் அண்ணாச்சி என அமர்வுகள் அனைத்தும் நன்றாக இருந்தன.  அன்புமிகுந்த சோ. தருமன் அவர்கள் தன் நகைச்சுவையான பேச்சால் அதிர வைத்தார்.  ”குளிர்காலத்திற்காக சைபீரியாவிலிருந்து நம் ஊருக்கு வரும் பறவையை கண்மாயில் ஒரு மீனை எடுத்து சாப்பிட விடாமல் விரட்டினால் அது நம்மைப் பற்றி என்ன நினைக்கும்?”

எம். கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் தன் மகனின் கதையை எழுதிவிட்டதாக சொன்ன பெண் வியப்பளிக்கவில்லை.  அறிந்திராதவர்களிள் உள்ளங்களையும் தாமறியாமலே கூட ஊடுருவி அறிபவர்கள் அல்லவா நல்ல கலைஞர்கள்.

கவிஞர் வீரபத்ருடு தெலுங்கு கவிதைகளின் வரலாற்று சித்திரத்தை அளித்தார்.  செவ்வியல் நாட்டார் மரபுகளின் விகிதம் அதன் மாற்றம், கவிதைக்கும் இசைக்குமான உறவு என.  கவிஞர் இஸ்மாயில் அவர்கள் பற்றியும் அவரது கவிதைக் கொள்கை பற்றி அவர் கூறியது முக்கியமானது என்று எண்ணுகிறேன்.  இசை அதன் உச்சத்தில் சொற்களை பொருட்டாக எண்ணாத ஒன்று.  சொற்களை உதரிவிட்டு அதனால் இயங்கமுடியும்.  ஆமாம்தானே ஏசுதாஸ் நினைவுக்கு வந்தார்.  சொற்களே இல்லாமல் சுழன்றாடும் காற்றின் நடனம்.  அவ்வாறேதானே கவிதைக்கும் இசையில்லாமல், இசையை உதறி கவிதை தன் உச்சம் சேர்வது சரிதானே.  அர்தாலங்காரம் – பொருளின் வழியான அழகு, சப்தலங்காரம் – ஒலி அழகு.  நல்லகவிதை மொழிபெயர்ப்பில் இழப்பது தன் ஒலி அழகை மட்டுமே அதன் பொருள் அழகு இழக்கப்படுவதில்லை இழந்தால் அது கவிதை இல்லை.  சுவாரஸ்யமாக இருக்கிறது உலக முழுவதிலும் இருக்கும் நல்ல இசைக் கலைஞர்கள் சொற்களை மீறிதான் நம்மிடம் வரமுடியும்.  உலக முழுவதிலும் இருக்கும் நல்ல கவிஞர்கள் இசையைக் கடந்துதான் நம்மிடம் வரமுடியும்.  இது இங்கே முன்பே பேசித்தீர்க்கப்பட்டு விட்டது சற்றுபிந்தி தெலுங்கில் பேசப்பட்டது என்று எண்ணுகிறேன்.

திரு. வதரேவு வீரபத்ருடு அவர்களிடமும் அண்ணாச்சியிடமும் வைக்கப்பட்ட கேள்விகளில் ஒன்று ஒத்திருந்தது.  உலகியலும் ஆன்மிகமுமாக இரு வேறு தோற்றங்கள் பற்றி வீரபத்ருடு அவர்களிடமும் ஆவேசமும் கனிதலுமான இருநிலைகள் பற்றி அண்ணாச்சியிடமும்.  தைத்ரிய உபநிடதத்தை மேற்கோள் காட்டி அய்ந்துகோசங்கள் போல அவை.  ஒரே நீள்கவிதையின் பகுதிகள் அவை என்றார் வீரபத்ருடு.  அண்ணாச்சி தாமிரபரணி ஆற்றை ஒப்பிட்டு விளக்கினார்.

சண்முகவேல் அவர்களின் அண்ணாச்சியின் ஓவியம் மிகநன்றாக இருந்தது.  அண்ணாச்சியின் ஆளுமையை அறிந்துகொண்டவர்கள் அந்த ஓவியத்தில் அவரது ஆளுமை துலங்கியதை அறிந்திருப்பார்கள்.  வெண்முரசின் தாக்கம் பெற்ற அவ்வகையில் திரு. விஜயசூரியன் அவர்களைக் கூற வேண்டும்.  உணவு சுவையாக இருந்தது.  பீமன், நளன் மற்றும் சமையல் கலைஞர்கள் அனைவரும் வாழ்க.

ஆனந்தகுமார் இயக்கிய அண்ணாச்சி பற்றிய வீடும் வீதிகளும் ஆவணப்படம் மிக நன்றாக இருந்தது.  பகவதி அம்மாவும் விக்கிரமாதித்தியன் அண்ணாச்சியும் செல்லம்மாவும் பாரதியும்.

டவுனுக்கு ஒரு ஜெயமோகன் வேண்டும் என்ற திரு. வீரபத்ருடு அவர்களின் ஆவல் தொலைவிலேனும் நிறைவேற இறைவர் அருள வேண்டும் என்று இறைஞ்சுகிறேன்.

அன்புடன்

விக்ரம்

கோவை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 18, 2022 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.