கலங்கியநதி – கடிதங்கள்

அன்புள்ள சார்,


"இன்னொருவகையில்கூடப் பார்க்கலாம். ரமேஷ் அவனுடைய தந்தையிடம்தான் தொடங்குகிறான். அவர் தன் காலகட்டத்து இலட்சியவாதமான காந்தியத்தால் ஈர்க்கப்பட்டது போல அவன் தன் காலகட்டத்து இலட்சியவாதமான மார்க்ஸியத்தால் ஈர்க்கப்படுகிறான். ஆனால் அவரைப்போலவே அவனும் நதியில் இறங்காமல் கரையில் கால்நடுங்கக் காத்து நிற்கிறான். அந்தக் கலக்கம்தான் இந்நாவல் முழுக்கப் பலகோணங்களில் விவரிக்கப்படுகிறது. ஆர்வமும் விரக்தியும் எழுச்சியும் கசப்பும் மாறி மாறி வரும் அவன் மனநிலை அதையே காட்டுகிறது.


நேர்மாறானவர் ராஜவன்ஷி. அவர் நதியில் குதித்து நீந்துபவர். கடைசிக் கணம் வரை நம்பிக்கை இழக்காத போராளி அவர். அவரிடம் தன் தந்தை சென்றிருக்கக்கூடிய தூரத்தை அடைந்திருக்கக் கூடிய ஆளுமையை ரமேஷ் சந்திரன் காண்கிறான் போலும். சின்ஹாவிடம் நான் உங்கள் மகனைப்போல என பி.ஏ.கிருஷ்ணன் சொல்லும் இடம் அவரது கட்டுரையில் வருகிறது. தன் தந்தையின் தயக்கத்தில் இருந்து ராஜவன்ஷியின் துணிச்சலை நோக்கித் தாவுவதற்கான யத்தனத்தில் இருக்கும் ரமேஷ் சந்திரனை நாவலில் காண்கிறோம்


அவனுடைய தாவல் இந்நாவலில் அவன் எழுதும் நாவல் வழியாகவே நிகழ்கிறது. தொட முடியாத தூரத்தை எம்பி எம்பிப்பார்த்துவிட்டுக் கற்பனையால் தொட்டுவிடும் குழந்தைபோல அவன் இருப்பதையே அவன் எழுதும் இந்நாவலில் காண்கிறோம். அந்த மயக்கநிலையையே 'கலங்கிய நதி' என வாசிக்கலாம்."


நான் இன்னும் நாவலைப் படிக்கவில்லை. ஆனால் இந்த வரிகள் என்னை மிகவும் பாதித்தன. நாவலாசிரியரின் அகத்தை மட்டும் அல்ல, ஒரு சமகாலப் பிரச்சனையையும் இதன் மூலம் உணர்த்தியிருக்கிறீர்கள். கரையில் கால்நடுங்கக் காத்து நிற்பவனின் சித்திரம் கடந்த இரு தலைமுறை இளைஞர்களின் மன ஒட்டத்தை நன்றாக சுட்டுகிறது. .. ஏனோ எங்களால் எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் சட்டென்று நதியில் குதிக்க முடிவதில்லை… ஏதோ ஒன்று தடுக்கிறது.. குடும்பப் பொறுப்பு, மயிர், மண்ணாங்கட்டி என்று என்னென்னவோ பொய்க் காரணம் சொல்கிறோம். எல்லா உலகியல் பிரச்சனைகளையும் எப்படியாவது சமன் செய்துவிட ஆசைப்படுகிறோம். அப்படி சமன் செய்து முடித்தபின் பிடித்த விஷயங்களுக்குள் இறங்கலாம் என்ற ஆசையையும் வளர்த்துக் கொள்கிறோம். ஆனால் இது முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.. புதிய சிக்கல்கள். புதிய பிரச்சனைகள். புதிய சமன்பாடுகள். மயிரே போச்சு என்று எதையும் விட்டுவிட முடிவதில்லை. மூச்சை இறுக்கிக் கொண்டு எல்லாவற்றையும் தூக்கி நிறுத்த முயல்கிறோம். பாதி ஆற்றலும், பாதி ஆயுளும் இதிலேயே போய்விடும் போல் இருக்கிறது.


அரவிந்த் கருணாகரன்


அன்புள்ள ஜெயமோகன்,


கலங்கியநதி 3-இல் சரத்சந்திர சின்காவின் முதல்வர் பதவிக்காலம் 15 ஆண்டுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் விக்கிப்பீடியா 9 ஆண்டுகள் என்றே சொல்கிறது. எனக்கு வேறு தகவல்கள் தெரியவில்லை. நாம் கோவையில் சந்தித்தது நினைவிருக்கலாம்.


அன்புடன்,

கோ.ஜெயன்


அன்புள்ள ஜெ.,


பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாகப் பெரும்பாலும் நம் மக்கள் கேட்கும் அடிப்படைக் கேள்வி: அவர்கள் வராவிட்டால் நாம் இந்த அளவிலாவது முன்னேறி இருப்போமா?  இந்தக் கேள்வியே பல வகைகளில் மாற்றி மாற்றிக் கேட்கப்படுகிறது. அவர்கள் வந்துதானே ரயிலும் பேருந்தும் கொண்டு வந்தார்கள் என்ற அபத்தத்தில் ஆரம்பித்து, அவர்களால்தான் ஜனநாயகம் வந்தது, நவீன நிர்வாகமும் அரசியல் சட்டமும் வந்தது, இந்தியா என்ற நாடு வந்தது என்று பலவாறாகக் கேட்கப்படுகிறது.


இப்படிக் கேட்பவர்கள் மறந்து விட்டது ஒன்றுதான்: பிரிட்டிஷார் வரும் முன்னரே நாம் பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து மேம்பட்டுக் கொண்டே வந்தோம் என்பதுதான் அது. அவர்கள் வராவிட்டாலும் நாம் ரயிலையும் பேருந்தையும் அறிந்து இருப்போம்… நம் நிர்வாக முறையும் அரசியல் சட்டங்களும் ஒரு காலத்திலும் தேங்கி நின்றிருக்கவில்லை. புதியன புகுதல் என்பது எல்லா நாட்டிலும் காலம் காலமாகவே நடந்துதான் வந்துள்ளது; இந்தியாவும் அதில் விதிவிலக்கல்ல…


நீங்கள் சொன்னது போல, பிரிட்டிஷார் இந்த மாற்றங்களை எல்லாம் ஒருவித மூர்க்கத்தனத்தோடு கொண்டு வந்தார்கள். தானாகக் கனிய வேண்டிய பழத்தை கார்பைடு போட்டுப் பழுக்க வைத்து விட்டார்கள்.


கடைசியாக ஒன்று… இந்தியா அரசியல் ரீதியாக அவர்கள் வராவிட்டால் ஒன்றுபடாமலே போயிருக்கலாம்.. ஆனால் அதனால் ஒன்றும் குடிமுழுகியிருக்காது என்பது என் அபிப்பிராயம்… ஆன்மீக, கலாச்சார ரீதியாக ஒன்றாகவும், அரசியல் ரீதியாக வேறாகவும் இருந்திருப்போம், கிட்டத்தட்ட ஐரோப்பா மாதிரி என்றுதான் நினைக்கிறேன்.


நன்றி

ரத்தன்


தொடர்புடைய பதிவுகள்

கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] — 3
கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -2
கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -1
காங்கிரஸும் அண்ணாவும்
அண்ணா ஹசாரே- ஜனநாயகக் கேள்விகள்
அண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?
பொங்கல்,பண்பாடு -கடிதங்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 13, 2012 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.