தழல் – மூன்று கவிதைகள்

 

லக்ஷ்மி மணிவண்ணனின் மூன்று கவிதைகள். மூன்றிலும் தழல் இருக்கிறது. பருப்பொருள் என வந்து, நெளிந்தாடி, தன் தடத்தை விட்டுச்செல்லும் தழல். பின் பற்றி எரிந்து வளரத்தொடங்குகிறது. தழலின் இயல்பென்பது அதனால் வளராமல் நிலைகொள்ள முடியாதென்பது. ஓயாமல் வளரத்துடிக்கும் நிகழ்வே தழல்தல்.  தழலென்பது தழல்தலெனும் நிகழ்வு மட்டுமே. இந்நக் கவிதைகளில் தழல் வளர்ந்துகொண்டே இருக்கும் காட்சி உள்ளது. வளர்வதற்கான அதன் வேட்கையை சொல்கின்றன இக்கவிதைகள் என்று நினைக்கிறேன். அச்சத்தில், ஆன்மாவில், ஊழில், அகிலத்தில் என திகழும் தீயை சுட்டிச்செல்லும் கவிதைகள்.

யாரும் பார்க்காத ஒரு பாம்பு

சட்டையை தடயமென

விட்டுச் சென்றது

மீட்டர் பெட்டிக்குள் கிடந்த சட்டை

பாம்பின் நீளம் இதுவென வழங்கியது

மின்சார வயர்களுள் ஒயராக வளைந்து அது படமெடுத்து

ஆடியிருக்கவேண்டும்

இப்போது சட்டையில்லை

எடுத்து அகற்றிவிட்டேன்

பாம்பு இருக்கிறது என்கிறாள் மனைவி

யாரும் பார்க்காத பாம்பு

ஒவ்வொரு நாளும் அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறது

சட்டையை எடுத்து அகற்றியது போல

இல்லாத பாம்பை எடுத்து அகற்றுவதும்

சாத்தியமில்லை

அது வளர்வதைக் குறைப்பதும் சாத்தியமில்லை

இப்போது வந்து சென்றதைக் காட்டிலும் அதிகமாக பூரண இருப்பு கண்டு விட்டது

பாம்பின் சுவையில் திளைக்கிறது

இந்த மழைக்காலத்தில்

என்வீட்டு

மீட்டர் பெட்டி

ஜுவாலை பிறந்தது முதற்கொண்டு

எரியத்

தொடங்கிற்று

சுடலையில் பற்றி

இறுதியில்

அணைகிறது அவ்வளவே

பசியில் எரிந்தது கொஞ்சம்

புணர்வில் எரிந்தது கொஞ்சம்

தாய்ப்பாலில் இருந்து

அருந்தத்தொடங்கிய

ஜுவாலை

கொஞ்சம் கவிதைகளையும்

எழுதிற்று

கடவுள் வழிபாடும் செய்தது

நாக்கின் ஜுவாலை

நாக்கைவிட எவ்வளவு நீளம் ?

நாக்கு பாம்பிலிருந்து பெற்றதுதாமே

பாம்பின் உடல்

ஊர்ந்து அலையும்

ஜுவாலை

இல்லையா ?

அல்லது ஜுவாலைக்கு

பாம்புடல்

அல்லவா?

எத்தனையெத்தனை பாம்பால்

ஆனவன் இந்த

மனிதன் ?

 

தீக்குளித்தவளின் மகள்

வளர்ந்து பெரியவள்

ஆகிவிட்டாள்

தன் வடிவம் அது

சிருங்காரம்

நளினம்

தன் வடிவே தன்னால் குதூகலிக்கிறது

எதன் பொருட்டு இதனை

எரித்தேன்?

எதனையோ

எரிக்க வேண்டி

இதனை

எரித்துவிட்டேன்

எரிக்க வேண்டியது உண்மையில் எரிக்க வேண்டியதுதானா?

எரிக்க வேண்டியதை எரிக்காமல்

விட்டிருந்தால்தான் என்ன ?

எங்கிருந்தோ வந்த எரி

இங்கே எரித்துச் சென்றது

யோனித்தழல் பெருகி

எழுந்து பரவி

அடங்கியது

உடல் உருண்டு

வடுவானது

மகளில் தெரியும் தன் வடிவை

நாவால் வருட நினைத்தவள்

முத்தமிட்டு நகர்ந்தாள்

தடுக்கி விழுந்தது

ஒரு சொட்டு

கண்ணீர்த்துளி

மேற்கொண்டு செய்யமாட்டேன்

என்றது

கண்ணீர்த்துளியில் அகன்ற

ஊழ்

நட்சத்திரம் ஆயிற்றே

 

கவிதை,லக்ஷ்மி மணிவண்ணன் உரை

லக்ஷ்மி மணிவண்ணனின் கவிதைகள்

விஜி வரையும் கோலங்கள்

இறகிதழ் தொடுகை

அய்யா வைகுண்டர் இதிகாசம்

அதற்காகத்தான் இத்தனை நடனமா ?

கவிதைக்குள் நுழைபவர்கள்…

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 19, 2021 10:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.