பெரு நாவல் – Thus spake Rohini, the scheming confectioner as the curtains are about to come down

Excerpt from my forthcoming novel MiLAGU

நான் ரோகிணி. இன்னும் இருக்கிறேன். இருப்பேன். ஜெருஸூப்பா அழிந்து போகும். ஆனால் நான் இருப்பேன். சென்னபைரதேவி மண்ணுக்குள் மண்ணாவாள். நான் இருப்பேன். அவளுடைய மிர்ஜான் கோட்டை காலத்தின் வேகத்தில் சிதைந்து போகும். நான் இருப்பேன். சென்னா மகாராணி என்ற மிளகு ராணியின் நாட்டில் மிளகு விளையாமல் போகும். ஆனால் நான் இருப்பேன். அவளுடைய வளர்ப்பு மகன், என் ஆசை நாயகன் நேமிநாதன்  செதில் செதிலாகச் சிதைந்து அழுகி மண்ணில் புதைந்து காணாமல் போவான். நான் இன்னும் இன்னும் இன்னும் இருப்பேன். இருக்கிறேன்.

இருப்பை நிலைநிறுத்த நான் எடுத்த நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பலன் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன. அஜீரணம் ஏற்பட்டு வயிறு வலிக்க, சுக்கைத் தட்டிப் போட்டு மென்று உடனே பிருஷ்டத்தைப் ஸ்பரிசித்து வாயு பிரிகிறதா என்று சோதிக்கிற அவசரம் எனக்கு இல்லை. நிதிக்குழு என்ற கார்டெலின் நடவடிக்கையைத்தான் கூறுகிறேன்.

நிதிக்குழு அமைந்து லிஸ்பன் மாநகரப் பெரும் வணிகர்கள் நிதி முதலீடு செய்து பங்களிப்பு ஏற்பட்டபோது ஒரே குறிக்கோள் இது. இந்துஸ்தானத்தில் இருந்து, இன்னும் குறிப்பாகச் சொன்னால், ஜெருஸூப்பா மாநிலத்தில் இருந்து மிகத் தரமான மிளகு இறக்குமதி செய்ய ஏகப்பட்ட தங்கம் கைமாற்றுகிறோம். இந்தச் செலவின் நான்கில் ஒரு பகுதி மதிப்பில் நமக்கு இனி மிளகு கிடைக்கவேண்டும்.

குறிக்கோள் சிறந்ததுதான். அதற்கான தீர்வாகக் கைகாட்டியதும் சரியானதுதான் – மிளகு மகாராணி என்ற சென்னபைரதேவியின் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து நம் சொல் கேட்கக் கூடிய அவளுடைய வளர்ப்பு மகன் நேமிநாதனை அரசனாக்க வேண்டும்.

இந்தத் தீர்வுக்கான வழிமுறையாக எடுத்துப் போனது தான் அரைகுறையாக வெற்றி பெற்று இன்னும் நேமிநாதன் அரியணை ஏற முடியவில்லை.

நிதிக்குழு முடக்கிய பணத்தைக் கொண்டு வைதீக மதக் கோவில்களையும், சமண மத ஆலயங்களான பஸதிகளையும் குறிவைத்து தாக்கி மதக் கலவரத்தை உருவாக்கி சென்னா மகாராணி மேல் வெகுஜன வெறுப்பும் கோபமும் ஏற்படுத்தி அவளைப் பதவி துறக்கச் சொல்லலாம் என்ற யோசனை பாதி பலித்தது.

சென்னா மகாராணி அந்த வெகுஜனக் கோபத்தைத் திசை திருப்ப புதியதாகக் கோவில்களையும் பஸதிகளையும் கட்டுவேன் என்று செலவுக் கணக்கு தொடங்கியது யாரும் எதிர்பாராதது.

pic medieval confectioner’s ware

ack en.wikipedia.org

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2021 05:42
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.