நிமித்தம் கேட்கிறது
நிமித்தம் நாவல் குறித்த வாசிப்பு விமர்சனம்…
மஞ்சுநாத்

சப்தம் என்பது ஒரு வலுவான இருப்பு. இருப்பின் மூலமே அது தன்னை நீட்டித்துக் கொள்வகிறது. மனிதனின் வாழ்வியல் இருப்பும்கூடச் சப்தத்தினால் நிலை நிறுத்தப்படுவது வியப்பானது.
காது கேளாதவர்களுக்கு நிசப்தம் ஒரு வரமாக அமைந்திருக்கும் என்று கருதியிருந்தேன். அது தவறு. வெளிப்புற சப்தங்கள் கேட்காத போதும் பேரிரைச்சலாய் அகத்தின் குரல் அவர்களை தினம்தினம் கொன்று கொண்டிருக்கும் என்பது தான் நெருடலான உண்மை.
வெறுமையின் வேதனை வாழை குருத்திலையின் மீது பதியும் நகத்தின் கீறல் போன்றது. நிமித்தத்தின் பல அத்தியாயங்களை எழுதுகையில் எனதன்பு எஸ்ரா பலமுறை தன்னையுமறியாமல் கண்ணீர் சிந்தியிருப்பார் என்றே நினைக்கிறேன். நிமித்தம் முழுவதும் உப்பின் கரிப்பு. வாசகனின் கண்ணீரையும் அது கேட்கிறது.
மகிழ்ச்சியைவிட மனிதன் துன்பத்தைத் தனக்கு வெகு நெருக்கமாக உணர்கிறான். அதுதான் அவனுக்கு அவனையே அடையாளம் காட்டுகிறது. எஸ்.ராவின் இலக்கியம் துன்பத்தின் நிழலை உருவாக்குவதன் மூலம் நிஜத்தின் பாதையை அமைத்துத் தருகிறது.
பிழையான உடல் பெற்ற மனிதர்களை இந்தச் சமூகம் பார்க்கும் பார்வையில் பெரிய ஊனம் உள்ளது. அகப்பிழைகள் கண்ணுக்கு தெரிவதில்லை. ஒருவேளை மனிதன் தனது அகப்பிழைகளைக் கண்டுணர வேண்டுமென்பதற்காகத் தான் இப்படி உடல்பிழை கொண்டவர்கள் பிறக்கிறார்களோ…?
செவித்திறனற்ற தேவராஜ் மீதான முதல் நிராகரிப்பு அவன் குடும்பத்திடமிருந்தும் குறிப்பாக அவன் தந்தையிடமிருந்தும் பின்பு சமூகத்திடமிருந்தும் வருகிறது. முற்கள் நிறைந்த கைகள் மூலம் நிராகரிப்பின் வலியை இந்தச் சமூகம் தொடர்ந்து அவனது மனதிலும் உடலிலும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.
நிமித்தத்தின் முதல் அத்தியாயத்தைக் கடப்பதற்கு முன்பாகவே தேவராஜீன் வேதனையானது களங்கிய வண்டல் போல் நம் மனதில் தேங்கி விடுகிறது. அதன் சாரத்தில் முளைவிடும் கதைகள் ஒலியற்ற குறிப்புகளாக நம் மீது மோதி ஒளிப்புள்ளியின் மையத்திற்கே நம்மை இழுத்துச் செல்கிறது.
தேவராஜ். வயது 47. அதாவது அவன் அவமானத்திற்குப் பழகிப்போனவன் என்பதற்கான முதல் அடையாளத்தைப் பெற்றுவிட்டான். எஸ்.ரா மனிதனுக்கு அவனது வாழ்வில் மூன்று கொண்டாட்டங்கள் இருப்பதாகக் கூறுகிறார். ஒன்று பிறப்பது இரண்டாவது திருமணம் மூன்றாவது இறப்பு. முதலும் கடைசியிலும் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் திருமணம் என்பது நாமறிய செய்து கொள்ளும் கொண்டாட்டம். இந்தக் கொண்டாட்டம் தேவராஜ் வாழ்வின் பகல் கனவாக நீள்கிறது. இருப்பினும் கனவு நிஜம். அதற்கான போராட்டங்களும் வலிகளும் ஏளனங்களும் அவமானங்களும் உண்மை. இந்த உலகமும் கல்யாணம் ஆகாமல் போன பெண்களைப் பற்றித்தான் எப்போதும் கவலைப்படுகிறது.
ஒருவனின் உடல் பிழையை உதாசினப்படுத்திக் கூர்மையான வார்த்தைகள் மற்றும் பொறுப்பற்ற செயல்கள் மூலம் எவ்வளவு எளிதாகவும் அலட்சியமாகவும் கடந்து போகிறோம். சமூகத்தின் மருதாணி பூசிய விரல் நகங்களுக்குள் மற்றவர்களின் காயத்தைக் குத்திக்கிளறி ஆறாத ரணமாக்கும் குரூரம் ஒளிந்துள்ளது.
தஸ்தாயெவ்ஸ்கியின் ரஷ்ய சமூகத்தில் அவர் காலத்தில் பெண்கள் மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் பெற தேவாலயங்களுக்குச் சென்றனர். இங்கும் நமது சமூகத்தில் பெண்கள் கோவில்களுக்குச் செல்கிறார்கள். அதனால் தான் எஸ்.ரா உறுதியாகக் கூறுகிறார். “கோவில் என்ற ஒன்று மட்டும் இல்லாமல் போயிருந்தால் பெரும்பாண்மை பெண்கள் மனநோயாளி ஆகியிருப்பார்கள்.” ஆண்கள் தங்கள் மன அழுத்தத்தின் விடுதலையை மது அருந்துவதிலும் மனைவியை அடிப்பதிலும் பிள்ளைகளை உதைப்பதிலும் தீர்த்துக் கொள்கிறார்கள்.
மனித உடல் என்பது உணர்வுகளாலும் உணர்சிகளாலும் நிரம்பியது. கண் தெரியவில்லை, காது கேட்கவில்லை , வாய்ப்பேச முடியவில்லை , கை கால்கள் இயங்கவில்லை என்பதால் உணர்வுகளும் உணர்ச்சிகளும் இல்லையென்று ஆகிவிடாது. பசி எடுக்கத்தான் செய்யும், உடல் வளரும் போது தேவைகளும் மாறவே செய்கிறது, உலகம் அவர்கள் மீதும் பாலியல் அத்துமீறல்களை வன்முறைகளைத் தயங்காமல் ஏவுகிறது, அவர்கள் வாழ்விலும் நட்பு, துரோகம், காதல் , தோல்வி, அவமானம் இத்தனையும் நிகழவே செய்கிறது. அதன் எதிரொலிப்பு ஒரு இயல்பான மனிதனுக்கு எப்படியோ அப்படியே இவர்களுக்கும் பொருந்தும்.
கிராமத்தில் மனிதர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு அரளி விதை, எட்டிக்கொட்டை, பூச்சிக்கொல்லிகள் எனக் கசப்பானவைகளையே ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்…? அது அவர்களுக்குக் கசக்கதா என எனது சிறுவயதில் சிந்திப்பதுண்டு… வாழ்வின் பெரும்கசப்பு அவர்களது அடிநாக்கு வரை பரவியதற்கு முன்னால் இந்தச் சிறுகசப்பு அவர்களுக்குச் சாதாரணம் தான்…
தேவராஜ் எங்கே சாவு நடந்தாலும் அந்த வீட்டிற்குச் சென்று இறந்த உடலின் நெருக்கத்தில் உட்கார்ந்து கொள்வான். சாவின் மனத்தை நுகர்வது அவனுக்குப் பிடிக்கத்துவங்கியது. அந்த அழுகை, ஒப்பாரி, மலர்களின் வரிசை, துக்கம் பிடித்த முகங்கள், அசைவற்ற பிரேதம் … அன்பு மறுக்கப்படுபவர்களின் உலகம் மயானமாகி விடுகிறது. நிராகரிப்பின் ஓசை அவனது கபாலத்தின் அதிவர்வலைகளை அதிகப்படுத்தி விடுகிறது. தன்னைச் சுற்றியுள்ள ஒரு சில மனிதர்களின் அன்பு நிறைந்த அபிமானம் அவனை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. ராமசுப்புவின் நட்புக்கூடக் கிடைக்காத தேவராஜ்கள் தான் நடைமுறையில் அதிகம்.
ஒலியை ருசிக்காத்தவனின் உயிர்ப்பின் விகாசிப்பில் எஸ்ரா பெருங்கதைகளின் சூலை திறந்து விடுகிறார். ஒரு காலத்தில் பருத்தி வணிகத்தின் மையமாகத் திகழ்ந்த கிராமம் வீழ்ந்த கதையும் , மதிப்பாக வாழ்ந்த விவசாயி சோற்றுக்கு நாதியற்றுப் போனதும், கோரத்தின் உச்சமான பஞ்சம், அகதிகளின் பரிதாபங்கள், ஆண் கிணறு பெண் கிணறு பற்றிய கதை, வெள்ளை கலயம் கதை, காற்றுக்குக் கிறுக்குப் பிடித்த கதை என மகரந்த பெருவெடிப்பில் பெருந்துயரின் வண்ணத்தை வழியவிடுகிறார்.
காசியின் கங்கை படித்துறையிலும் துயரின் வாசம் மிகுந்த அலைகளைக் காட்சிப்படுத்துகிறார். துயரம் என்பது இருப்பதில்லை. அது ஒருவரால் மற்றவருக்குள் உருவாக்கப்படுவது கடத்தப்படுவது. துயர் எங்கெல்லாம் பரவியுள்ளதோ அங்கு ஒலிகள் மறுக்கப்படுகின்றன. ஒலிகள் மறுக்கப்படும் இருமைக்குள் துயர் அரிதாரம் பூசிக்கொள்கிறது.
ஒலிகள் மறுக்கப்பட்டவனின் ஒட்டு மொத்த வாழ்வும் நிமித்தமாய் நம்முன் நிற்கிறது.
**
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
