மதமும் அறமும்

மதம், மரபு, அரசியல்

அன்பிற்கினிய ஜெ,

வணக்கம் ,

நலம் , தங்கள் நலனை விழைகிறேன்.

பல முறை கேள்விகளால் துரத்தப்பட்டு இமெயில் வரை வந்து உங்களுக்கு அனுப்பாதவை பல . எழுதி வைத்து இமெயிலுக்கே வராதது என ஏகப்பட்ட கடிதங்கள். மிகப் பெரும்பாலும் அவைகளுக்கு பதில் இரண்டொரு நாளில் உங்கள் வளைதளத்தில் கேள்வி பதிலாக , கட்டுரையாக வந்துவிடும் .அல்லது எனக்கென இருக்கவே இருக்கிறது 26,000 பக்கங்கள் . எனது தேடலுக்கான் விடைகளை இங்கு எங்காவது கண்டடைந்து கொண்டே இருப்தால் அறுபடாத நீண்ட அகப்பயணத்தில் உங்களுடன் இருப்பதாக நினைக்கிறேன் .

தங்களின் அஜ்மீர் பயணம் மிக அனுக்கமான ஒன்றை கொடுத்திருந்தது. அதற்கு எப்போதும் என் நெஞ்சம் நெகிழும் நன்றிகள்.

ஜெ ,அகக் கொந்தளிப்பான நிலையில் உங்களை கோவையில் , நாகர்கோவிலில் சந்தித்த இந்த ஆறு ஏழு வருடங்களில் அடைந்த அகமாற்றம் வார்த்தைகளில் விவரிக்க இயலாதது, மிக மிக அகவயமானது . இன்று எல்லா கொந்தளிப்புகளும் அடங்கிய நிலையில் இருந்து கொண்டிருக்கிறேன். இருந்தும் இந்த கேள்வியை கேட்டேயாக வேண்டும் எனத் தோன்றியதால் இந்தக் கடிதம் .

தங்களது சமீபத்திய பதிவு “மதம், மரபு, அரசியல்” அதில் தங்கள் கருத்து வரிக்கு வரி உடன்படுகிறேன் .காரணம் கடந்த 25 வருட காலம் நான் மிக விழைந்து பணியாற்றிய ஒரு துறை . அதில் தங்கள் பதிலில் இப்படி கூறியிருந்தீர்கள்“முற்றிலும் மாற்றமே இல்லாமல் நீடிக்கலாமா? இல்லை, அவ்வண்ணம் நீடிக்கும் எந்த அமைப்பும் பழமைகொண்டு அழியும். மாறும் காலத்தில் தன்னை தக்கவைக்கவே அது மாற்றமில்லாமல் இருக்கவேண்டியிருக்கிறது. அதேசமயம் சில மாற்றங்களைச் செய்துகொள்ளாவிட்டால் அது முழுமையாக அழியநேரிடும். அந்த மாற்றங்களை அது செய்துகொண்டே ஆகவேண்டும். அடிப்படை மானுட அறத்துக்கு எதிரானவை, மாறும் காலத்தின் மாறிய அறத்துக்கு ஒவ்வாதவை, மாற்றப்படவேண்டும். அறம் ஒன்றின்பொருட்டு மட்டுமே அந்த மாற்றங்கள் நிகழவேண்டும்”

அதில் இந்த வரிகளை விரித்தெடுத்துக் கொண்டே இருக்கிறேன் .“அடிப்படை மானுட அறத்துக்கு எதிரானவை, மாறும் காலத்தின் மாறிய அறத்துக்கு ஒவ்வாதவை, மாற்றப்படவேண்டும். அறம் ஒன்றின்பொருட்டு மட்டுமே அந்த மாற்றங்கள் நிகழவேண்டும்” அற்புதமான வரிகள் .

இந்தவரியை எழுதும் போது இருந்த உங்கள் அக எண்ணத்தை அறிய விழைகிறேன்.மரபான ஒரு மதம் இன்றைய மானுட அறத்தை நோக்க வேண்டிய விதம் எப்படி இருக்க வேண்டும் என விழைகிறீர்கள்.

ஆழ்ந்த நட்புடன்,

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

அன்புள்ள அரிகிருஷ்ணன் அவர்களுக்கு,

நாம் வாழும் சூழலில் இருந்து பின்னகர்ந்து வரலாற்றை, மானுடப்பரிணாமத்தை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மிக எளிதில் விளங்குவது இது. மானுடம் விலங்குநிலை வாழ்க்கையில் இருந்து உருவானது. அது தனக்கான அறங்களையும், அவ்வறங்களைப் பேணும் நெறிகளையும் உருவாக்கிக்கொண்டு முன்னகர்ந்து வந்திருக்கிறது. ஒரு காலத்தில் வெறும் தசைவல்லமையும், குழுவல்லமையுமே அனைத்தையும் தீர்மானித்திருக்கும். அன்று அதுவே அறம்

அதன்பின்னர் கூட்டுவாழ்க்கைக்கான அறங்கள் உருவாகி வந்தன. பிறரையும் வாழவிடுவது, பிறருடன் ஒத்திசைவது போன்றவை தோன்றின. கருணை, இரக்கம், நீதியுணர்வு என நாம் சொல்வன அனைத்தும் அவ்வாறு உருவானவை. அவை தன்னியல்பாக உருவானவை அல்ல. தகுதி வாய்ந்த மானுடர்களால் கண்டடையப்பட்டு சொல்லிச் சொல்லி நிலைநிறுத்தப்பட்டவை. சொல்லிக்கொண்டே இருக்கவேண்டிய தேவை கொண்டவை. ஏனென்றால் அவை மானுடனின் அடிப்படை இயல்புகளான தன்னலம், வன்முறை ஆகியவற்றுக்கு நேர் எதிரானவை.

அவ்வாறு அறங்களை கண்டடைந்து சொன்னவர்கள், அறங்களை புதுப்பிப்பவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக நாம் ரிஷி என்னும் சொல்லால் குறிப்பிடுகிறோம். அவர்களுக்கிடையே முரண்பாடுகள் இருக்கலாம். ஏனென்றால் அறம் என்பது விவாதங்கள் வழியாக, ஓரு கருத்தின் இடைவெளியை இன்னொரு கருத்து நிரப்புவதன் வழியாக, ஒரு கருத்தை இன்னொன்று எதிர்க்கும் முரணியக்கம் வழியாகவே செயல்படமுடியும், மேம்பட முடியும். ஆனால் அனைவரும் இணைந்து ஒன்றைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். பரத்வாஜரும் ரிஷிதான், பிருஹஸ்பதியும் ரிஷிதான், துர்வாசரும் ரிஷிதான், ஜாபாலியும் ரிஷிதான்.

இன்றைய யுகத்தை நிர்மாணித்தவர்கள் அனைவருமே ரிஷிதான். மார்க்ஸை ஒரு ரிஷி என முன்பு ஜமதக்னி என்னும் மார்க்ஸிய அறிஞர் எழுதினார். முனிவர் என்று கோவை ஞானி சொல்வதுண்டு. ஃப்ராய்டும் தல்ஸ்தோயும் ரிஷிகள்தான். ஷோப்பனோவரும் நீட்சேயும் ரிஷிகளே. அவர்கள் இந்த நூற்றாண்டை சமைத்து நமக்கு அளித்திருக்கிறார்கள். அறங்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மானுடத்தை முன்னகர்த்தியிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான பங்களிப்பு உண்டு.

மானுடத்தின் பரிணாமத்தில் சென்ற முந்நூறாண்டுகளில் படிப்படியாக சில அறங்கள் மேம்பட்டிருக்கின்றன. அவற்றிலொன்று மானுடசமத்துவம். பிறப்பால் எவரும் இழிந்தோரோ மேலோரோ அல்ல என்னும் அறம். வாழ்வுரிமை,ஆன்மிகநிறைவுக்கான உரிமை அனைவருக்கும் நிகராகவே இருக்கவேண்டும் என்னும் அறம். முந்தைய ரிஷிகள் உருவாக்கிய அறங்களுக்கு மேலதிகமாக அடுத்தகட்ட ரிஷிகள் மானுடத்திற்கு அளித்தது அது. அதிலிருந்தே அதிகாரத்தில், ஆட்சியில் அனைவருக்கும் பங்கிருக்கவேண்டும் என்னும் ஜனநாயகப்பார்வை உருவாகி வந்தது. அவையே இருபதாம் நூற்றாண்டை உருவாக்கிய அடிப்படைகள். அவற்றின் மேல்தான் நம் சமூகவாழ்க்கை கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

அவை முன்பிலாதவை. மாபெரும் தத்துவங்களை, மெய்ஞானங்களை முன்வைத்த ரிஷிகள் கூட மானுட சமத்துவம், சாமானியனுக்கும் அதிகாரம் என்னும் அடிப்படைகளை முன்வைத்தவர்கள் அல்ல. அந்தக் காரணத்தைச் சுட்டிக்காட்டி இன்று அவர்களை ஒட்டுமொத்தமாக மறுப்பவர்கள் உண்டு. அது அறிவின்மை. அப்படி நோக்கினால் அடிமைமுறையை ஆதரித்த பிளேட்டோவில் இருந்து ஒட்டுமொத்த மானுட ஞானத்தையும் நிராகரிக்கவேண்டியிருக்கும். மார்க்ஸ் கூட அதைச் செய்யவில்லை.

மறுபக்கம், அந்த கடந்தகால ரிஷிகள் சொல்லவில்லை என்பதனால் இன்றைய அடிப்படை அறங்களை ஏற்க மறுக்கும் மனநிலை உள்ளது. அது மேலும் அறிவின்மை. அதை அறிவுத்தேக்கம் என்று மட்டுமே சொல்வேன். அறிவு விவேகத்துக்கு எதிரான விசையாக ஆகும் நிலை அது. யோசித்துப் பாருங்கள், பிளேட்டோவின் அதிதீவிர பக்தர் ஒருவர் பிளேட்டோ சொல்லியிருப்பதனால் இன்றும் அடிமைமுறை தேவை என்று சொல்லிக்கொண்டு அலைந்தால் அவரை நாம் எப்படி எடுத்துக்கொள்வோம்? அதற்காக பிளேட்டோவை தூக்கி வீசிவிட முடியுமா? அவர் இல்லாமல் மானுடச் சிந்தனை உண்டா?

நேற்றைய ரிஷிகளிடமிருந்து அவர்களின் மெய்ஞானத்தை, சிந்தனையை, கலையை பெற்றுக்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்தமாக ரிஷிகுலத்தால் உருவாக்கப்பட்டு இன்று நமக்கு அளிக்கப்பட்டுள்ள இன்றைய அறத்தின் மேல் நின்றுகொண்டு அவற்றைப் பரிசீலிக்கவேண்டும்.ஆகவே இன்றைய அறத்துடன் முரண்படும் என்றால் நேற்றைய சிந்தனைகள் எவையானாலும் நிராகரிக்கப்படவேண்டியவையே.

ஆனால் உண்மையில் அடிப்படைச் சிந்தனைகள், மெய்யறிதல்கள், கலையழகுகள் அவ்வண்ணம் முரண்படுவதில்லை. ஏனென்றால் பெரும்பாலும் அவை நன்றுதீது என்பதற்கு அப்பாலுள்ளவையாகவே இருக்கும். நேற்றைய அறவியல் [Ethics] மட்டுமே இன்றைய அறவியலுடன் முரண்படும்.

உதாரணமாக, அத்வைதசாரம் இன்றைய அறவியலுடன் முரண்படாது. ஏனென்றால் அது நேற்றைய அறவியலைச் சார்ந்து உருவானது அல்ல. அது ஒரு பிரபஞ்ச தரிசனம் மட்டுமே. ஆனால் அத்வைதத்தை ஒட்டி ஓர் அமைப்போ ஆசாரமோ உருவாக்கப்பட்டிருக்கும் என்றால் அது நேற்றைய அறவியலைச் சார்ந்தே அமைந்திருக்கும். இன்று அது இன்றைய அறவியலுடன் முரண்படும். அந்த அமைப்பு அல்லது ஆசாரம் மாற்றப்பட வேண்டும். அத்வைதம் மாற்றமில்லாதது, ஆகவே அந்த அமைப்பு அல்லது ஆசாரமும் மாற்றமில்லாததே என நினைப்பது மாபெரும் அறியாமை.

இதையே இன்றைய சிந்தனையிலும் காணலாம். மானுடவிடுதலையை, மானுட சமத்துவத்தை முன்வைத்த பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டு நவீன ரிஷிகள் எவரும் பிற உயிர்களின் வாழ்வுரிமையை, இயற்கை என்னும் பேருயியிரியின் இருப்புரிமையை கருத்தில்கொண்டவர்கள் அல்ல. இன்று அந்த அறம் இன்றைய ரிஷிகளால் முன்வைக்கப்படுகிறது. காந்தி முதல் மசானபு ஃபுகுவேகா வரை ஒரு பட்டியலையே நாம் போடமுடியும். அவர்கள் கூட்டாக உருவாக்கிய அறம் அது.

உதாரணமாக, வளர்ப்பு யானைக்கும் தன் வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை உண்டு என இப்போது ஓர் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளது.[லலிதா என்ற யானை] இந்தத் தீர்ப்பு இருபதாண்டுகளுக்கு முன்புகூட வந்திருக்க முடியாது. ஏனென்றால் சென்ற ஐம்பதாண்டுகளில் உருவான அறம் அது. சிம்பன்ஸிகளைப் பற்றி ஆய்வுசெய்து அவற்றின் வாழ்க்கையை, உளவியலை மானுடத்தின் முன்பு வைத்த ஜேன்குடால் முதல் தொடங்கி பல நவீன ரிஷிகளின் கொடையாக உருவாகி வந்தது.

இன்று ஒரு பெருமாள் கோயிலில் சாமியை தன்மேல் ஏற்ற பிடிவாதமாக மறுக்கும் ஓர் யானையை அடித்து, துரட்டியால் நகங்களையும் செவிகளையும் பிய்த்து, கட்டாயப்படுத்தும் பாகனையும் விழாக்குழுவினரையும் பார்த்தால் அவர்களை ஒடுக்குமுறையாளர்கள், அறமிலிகள் என்று ஒருவர் எண்ணுவார் என்றால்தான் அவர் அறத்தில் நிற்பவர். ராமானுஜர் காலத்தில் அவ்வண்ணம் எண்ணியிருக்க மாட்டார்கள். ராமானுஜரே அவ்வாறு எண்ணாமலிருந்திருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் இன்று அவ்வண்ணம் எண்ணாதவர் ராமானுஜருக்கு அணுக்கமானவர் அல்ல.

ராமானுஜர் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் அவ்வாறே கடைப்பிடிப்பவர் ராமானுஜருக்கு அணுக்கமானவர் அல்ல. அவர் எளிய பிடிவாதக்காரர் மட்டுமே. ராமானுஜ தரிசனத்தை அவர் அறியவில்லை, அவர் அறிந்தது உலகியல் ஆசாரங்களை மட்டுமே. ராமானுஜரை இன்றைய அடிப்படை அறத்துக்கு எதிராக நிறுத்துவதன் வழியாக அவர் ராமானுஜ மெய்ஞானத்துக்கு மாபெரும் தீங்கையும் இழைக்கிறார் என்றும் சொல்வேன். ராமானுஜரின் மெய்ஞானத்தை இன்றைய அறத்துடன் இணைப்பவரே ராமானுஜருக்கு நெருக்கமானவர். நாளை உருவாகும் புதிய அறங்களுடன் அதை இணைப்பவரே ராமானுஜரை முன்னெடுத்துச் செல்பவர்.

ஜெ

மெய்த்தேடலும் அரசியல்சரிகளும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2021 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.