கண்மணி குணசேகரனும் சாதியும்

கண்மணி நிழல் நாடுவதில்லை நெடுமரம்

அன்புள்ள ஜெ

கண்மணி குணசேகரன் சமீபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி- வன்னியர் சங்க ஆதரவாக தன்னை வெளிக்காட்டிக்கொண்டதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? ஜெய்பீம் படத்தை தாக்கி அவர் வெளியிட்ட அறிக்கையை ஒட்டி இணையவெளியில் அவர் மேல் மிகக்கடுமையான தாக்குதல் தொடுக்கப்பட்டது. நான் அவருடைய ’அஞ்சலை’ நாவலை வாசித்திருக்கிறேன். உங்கள் தளம் வழியாகவே அவர் எனக்கு அறிமுகம். இந்த சர்ச்சை எனக்கு மிகவும் சங்கடம் அளிக்கிறது

ஆர்.ராகவேந்திரன்.

 

அன்புள்ள ராகவேந்திரன்,

கண்மணி குணசேகரனை எனக்கு இருபத்தைந்தாண்டுகளாகத் தெரியும். தமிழின் முக்கியமான எழுத்தாளர் என நான் அவரை மதிக்கிறேன். அவரைப்பற்றி தொடர்ச்சியாக எழுதியிருக்கிறேன்.எங்கள் ஊட்டி இலக்கியச் சந்திப்பில் அவர் கலந்துகொண்டிருக்கிறார்.

அவரைப்பற்றிய வசைகளை இப்போதுதான் பார்த்தேன். இங்கே எதன் பொருட்டானாலும் எழுத்தாளனை வசைபாட ஒரு பெருங்கும்பல் திரண்டுவிடுகிறது. ஏதோ இவர்களெல்லாம் சாதியொழிப்புக்காக தெருவில் போராடும் தியாகிகள் போல ஒரு பாவனை. இவர்களில் பெரும்பாலானவர்கள் முகமிலிகள். முகங்களுடன் வெளிப்பட்டாலும் பொருட்படுத்தத் தேவையில்லாத சிறுமனிதர். ஐயமே தேவையில்லை, பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்தச் சாதிக்குள் புழுப்போல வசதியாகச் சுருண்டுகொண்டு, அனைத்து லாபங்களையும் அடைந்து வாழ்பவர்கள். அறிவெதிர்ப்பு மனநிலையே அவர்களை இயக்கும் விசை.

கண்மணி குணசேகரன் சாதிய அடையாளத்தை எப்போதும் தன் படைப்பில் மறைத்தவர் அல்ல. முதல் படைப்பு முதல் அப்படித்தான். அவருடைய ‘வந்தாரங்குடி’ நாவலில் பாட்டாளி மக்கள் கட்சியின் இனக்குழு அரசியலை வெளிப்படையாகவே முன்வைத்திருக்கிறார். தன் மக்களைப்பற்றி எழுதவே இலக்கியத்திற்குள் வந்ததாகச் சொல்பவர் அவர். “எங்கள் மக்கள் இங்கே வாழ்ந்தார்கள் என்பதற்கு சான்று என் எழுத்து” என்று அவர் சொல்வதுண்டு.

அத்தகைய எழுத்து உலகம் முழுக்க உண்டு. இனக்குழுத்தன்மையின் ஆழத்திற்குள் இருந்து ஒலிக்கும் குரல் அது. அந்த அந்தரங்கத்தன்மை கலைக்கு மிகமிக முக்கியமானது. அந்தக் குரல் அக்குழுவின் கூட்டுக்குரலாகவே இருக்கும். அது நவீனத்துவ எழுத்தாளனுடையதைப் போல ஒரு தனிமனிதனின் குரல் அல்ல. அவனுடைய தனிப்பட்ட உணர்ச்சிகள், தனிப்பட்ட நம்பிக்கைகள், தனிப்பட்ட நிலைபாடுகள் அவனிடம் வெளிப்படுவதில்லை. ஒரு குலப்பாடகனிடம் அக்குலத்தின் அழகியலும் உணர்ச்சிகளும் நம்பிக்கைகளும் மட்டுமே வெளிப்படும். அதைப்போலத்தான்.

அந்த இனக்குழுவின் உள்ளுண்மையை அந்த படைப்பாளியே வெளிப்படுத்த முடியும். கண்மணி குணசேகரனின் உணர்ச்சிகள், கருத்துக்கள் அனைத்தும் மிகச்சரியாக ஒரு நடுநாட்டு வன்னியருக்குரியவை. எந்தவகையிலும் அவர் மாறானவர் அல்ல. அந்த பலலட்சம்பேரில் ஒருவர் சட்டென்று இலக்கியக்குரல் பெற்று பேச ஆரம்பித்ததுபோன்றவை அவருடைய படைப்புக்கள்

அவர் அம்மக்களை மதிப்பிடவோ, விமர்சிக்கவோ வேண்டும் என்றால் அவர் அவர்களிடமிருந்து வெளியே வந்தாகவேண்டும். அதற்கு அவருக்கு அந்த இனக்குழுவில் இருந்து மாறுபட்ட வலுவான தனியாளுமை வேண்டும். அந்த அடையாளத்தை அடைவதற்கான சமூகவியல், தத்துவ, அழகியல் கல்வியை அவர் அடைந்திருக்கவேண்டும். அத்தகைய எழுத்தாளர்கள் பலர் உண்டு. அவர்களின் எழுத்து வேறுவகையானது. புதுமைப்பித்தனும், க.நா.சுவும் சுந்தர ராமசாமியும் அத்தகையவர்கள். நானோ சாரு நிவேதிதாவோ நாங்கள் பிறந்த சாதிக்குள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள் அல்ல. ஆகவே வெளியே நின்று பார்ப்பவர்கள்.

இந்த இருவகை எழுத்தும் வேறுவேறானவை. அழகியல்ரீதியாக, தத்துவார்த்தமாக மாறுபட்டவை. புதுமைப்பித்தனும் சரி நானும் சரி எங்கள் அழகியலை நாங்களே உருவாக்கிக்கொண்டவர்கள். எங்க கருத்துக்களுக்கு எங்கள் சொந்த அனுபவத்தை, வாசிப்பை, சிந்தனையை ஆதாரமாகக் கொள்பவர்கள். கண்மணி குணசேகரன் ஒரு பெருந்திரளின் குரல்.

புதுமைப்பித்தன் முதல் நான் வரையிலான எழுத்தாளர்களிலேயே பலவகை உண்டு. பொதுவாக இரு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். தங்களை தனிமனிதர்களாக வகுத்துக்கொண்டு, தங்கள் வழியாகவே அனைத்தையும் உருவாக்கி முன்வைப்பவர்கள் நவீனத்துவர்கள். தங்களை ஒரு வரலாற்றுப்புள்ளியாக, பண்பாட்டுத் துளியாக வகுத்துக்கொண்டு தங்கள் வழியாக செயல்படும் வரலாற்றையோ பண்பாட்டையோ முன்வைப்பவர்கள் நவீனத்துவத்திற்கு பின்னர் வந்தவர்கள்.

இலக்கியத்தைப் பற்றிப்பேச  அரசியல்சல்லிகள் முன்வரக்கூடாது, அவர்களின் குரலை வாசகன் ஒரு சொல்கூட செவிமடுக்கக்கூடாது என திரும்பத்திரும்ப ஏன் சொல்லப்படுகின்றது என்றால் இலக்கியம் படைக்கப்படுவதில் உள்ள இந்த நுண்ணிய ஊடாட்டங்கள், வகைமாதிரிகள் எதைப்பற்றியும் தெரியாமல் தாங்கள் கொண்டுள்ள ஒற்றைப்படையான அரசியல் நிலைபாடுகளை அப்படியே இலக்கியவாதியும் எதிரொலிக்கவேண்டும் என அவர்கள் எதிர்பார்ப்பார்கள் என்பதனால்தான்.

அரசியல்சரிநிலைகள் இலக்கியவாதிக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவேண்டியதில்லை. அவன் முற்போக்காகவோ அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அரசியலை முன்வைப்பவனாகவோ இருக்கவேண்டியதில்லை. அவன் பண்பாட்டையோ ஒழுக்கத்தையோ கடைப்பிடிக்கவேண்டியதில்லை. அவன் தன்னுடைய ஆழுள்ளத்துக்கும் அதன் வெளிப்பாடான மொழிக்கும் மட்டும் உண்மையானவனாக இருந்தால்போதும்.

சாதி, மதம் பற்றியெல்லாம் இங்குள்ள அரசியல்வாதிகள் பேசும் மேடைநிலைபாடுகளை அப்படியே திரும்பச் சொல்ல எழுத்தாளர்கள் எதற்கு? அதற்குத்தான் அடிமாட்டுத் தொண்டர்கள் திரண்டு கிடக்கிறார்களே. நன்றோ தீதோ, சரியோ பிழையோ தனக்குத் தோன்றியதைச் சொல்வதே எழுத்தாளனின் வேலை. தன் ஆழுள்ளம் வெளிப்பட எழுதுவதே அவன் கலை.

ஆகவே கண்மணி குணசேகரனின் படைப்புகளில் உள்ள சாதியத்தன்மை எனக்கு எவ்வகையிலும் இலக்கியரீதியாக குறைபாடானதாக தெரியவில்லை. மாறாக அந்தச் சாதிசார் அழகியலும் சாதிசார் வாழ்க்கைநோக்கும், சாதிசார்ந்த வாழ்க்கைச் சித்தரிப்பும் அவருடைய சிறப்பியல்பு, அவருடைய கலைத்தகுதி என்றே தோன்றுகிறது.

கண்மணி குணசேகரன் இந்த அரசியல்குரல்களை ஏற்றுக்கொண்டு, இவர்கள் எல்லா இடத்திலும் காக்காய்ப்பீ போல கழிந்து வைக்கும் முற்போக்குக் கோஷங்களை எழுதி வைத்தால் எனக்கு அவர் எவ்வகையிலும் பொருட்டு அல்ல. இன்று அவரை அம்மக்களின் வாழ்க்கையை, அந்நிலத்தின் உள்ளுண்மையை, அங்கே திரண்டுள்ள அழகியலை அறியும்பொருட்டு நம்பகமான எழுத்தாளராக நினைத்து வாசிப்பேன்.

ஆனால் அவர் சாதிச்சங்கங்களில் உறுப்பினர் ஆவதை நான் ஏற்கவில்லை. அதை கண்டித்து பல ஆண்டுகளுக்கு முன்னரே வலுவாக எழுதியிருக்கிறேன்.[நிழல் நாடுவதில்லை நெடுமரம்]ஏனென்றால் அது இன்னொரு அரசியல். அவர் தன் அகம் சொல்லும் வாழ்க்கையை தன்னிச்சையாக எழுதுவதற்குப் பதிலாக அச்சாதிச்சங்கம் வகுக்கும் அரசியல் கோட்டுக்குள் நின்று எழுதுவார் என்றால் அது மிகப்பெரிய இரும்புச்சட்டை. அவருடைய படைப்பூக்கத்தை அது அழித்துவிடும். எந்த அரசியலமைப்பும் எழுத்தாளனைச் சிறையிடுவதே.

அரசியல் அமைப்புகளுக்கு இலக்கியவாதிகள் மேல் எந்த மதிப்பும் இருப்பதில்லை. கண்மணி குணசேகரன் மிகமிக வறுமையில் வாழ்ந்துகொண்டு எழுதியவர். பல நெருக்கடிகளைச் சந்தித்தவர். அன்று அவருக்கு எந்த சாதியமைப்பும் உதவவில்லை, எந்த அரசியலமைப்பும் உதவவில்லை. அவருடன் இருந்தவர்கள் எவர் என அவர் அறிவார். அவர்கள் அவருடைய இலக்கியத்துக்காக உடன் நின்றவர்கள். எந்த இலக்கியவாதிக்கும் ‘சாதிசனம்’ என்பது அவர்கள்தான். இன்று மீண்டும் அதை அவருக்கு நினைவூட்டுகிறேன்.

இந்தச் சில்லறைப்பூசல்கள் கடந்துபோகும். எதிர்ப்பாளர்களும் ஆதரவாளர்களும் அவரை மறந்துவிடுவார்கள். நினைக்கப்போகிறவர்கள் அவருடைய நாவல்களை வாசிப்பவர்கள் மட்டுமே. அவர்களுக்கு அவர் தமிழின் முதன்மையான இலக்கியவாதிகளில் ஒருவராகவே என்றும் நீடிப்பார்

ஜெ

அழிவிலாத கண்ணீர் – கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’

நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்

கண்மணி குணசேகரன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 27, 2021 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.