நமது மாணவர்கள்

வணக்கம் ஜெயமோகன்,

என் கணவரின் பணி மாற்றுதல் காரணமாக, நாங்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒரு கிராமத்தில் வாசித்து வருகிறோம். என்னுடைய பணி எப்போதுமே வீட்டிலிருந்தே செய்யக்கூடிய பணி தான். நேற்று பக்கத்து கிராமத்தில் உள்ள உயர் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் , என் கணவரை சந்திக்க வந்திருந்தார். பள்ளியில் மாணவர்களுக்கு கற்பிக்கும் அரசு ஆசிரியர்கள் போதுமானவர்களாக இல்லை என்றும் தன்னார்வதுடன் பணியாற்ற வருபவர்களுக்கு ஊதியம் வழங்க நிதி வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடங்களை சனிக்கிழமைகளில் தானே எடுப்பதாக என் கணவர் கூறினார். எனக்கும் கணிதத்தில் ஆர்வம் அதிகம். எனவே நானும் கணித வகுப்புகளை எடுப்பதாக கூறினேன். இன்று அந்தப் பள்ளிக்கு சென்றேன். நான் எதிர்பார்த்து சென்ற மாணவர்கள் வேறு. ஆனால் அங்கிருந்த மாணவர்கள் வேறு, ஒரு நிமிடம் கூட தலைமை ஆசிரியரை மாணவர்கள் பேச விடவில்லை. அவரும் என்னிடம் வகுப்பை விட்டு சென்றுவிட்டார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தான், ஆனால் அவர்களின் பேச்சும் நடவடிக்கைகளும் பள்ளி மாணவர்களுக்கு உரித்தானதாக இல்லை. நான் மெல்ல அவர்களிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். ஆனால் ஒருவர் கூட எதற்கும் செவிசாய்க்கவில்லை. தங்களுக்குள் கிண்டல் கேலிகள் என்று நினைத்தவற்றை பேசிக் கொண்டும், வகுப்பில் சண்டையிட்டு கொண்டும் இருந்தனர்.

உண்மையில் எனக்கு மிகப்பெரிய வெறுப்பு வந்துவிட்டது. எதையுமே கேட்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் மதியம் வரை அந்த வகுப்பிலேயே அவர்களிடம் பேச முயற்சி செய்தேன். சிறிது நேரத்திற்கு பிறகு ஒரு மாணவன் எழுந்து என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். ”நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன் அதுக்கு என்னா பண்ணணும்னு சொல்லு” என்றார்.இதைப்போன்ற கேள்விகள் தான் அவர்களிடம் இருந்து வரமுடியும் என்று ஒருவாறு ஊகித்திருந்தேன். ஆனால் பேசுவதற்கான சிறு வாய்ப்பாக கருதி அவரிடம் சற்று பேசினேன்.படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்றேன். ”அப்போ எங்கிட்ட காசு இருந்தா தான் இந்த புள்ளைகளெல்லாம் லவ் பண்ணுவாளுக… அப்படி ஒரு லவ்வு எனக்கு வேணாம்” என்று சொல்லி நண்பர்களுடன் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தார்கள்.

இந்தக் குழந்தைகள் என்னதான் செய்யப் போகிறார்கள் என்று அச்சமாகவே இருக்கிறது. இவர்களுக்காகவா அந்த தலைமை ஆசிரியர் நேற்றிரவு அவ்வளவு பேசினார் என்று தோன்றியது. இன்று மாணவர்களிடம் எதுவுமே உரையாட முடியாமல் வெறுப்பா, அச்சமா இல்லை என்னுடைய இயலாமையா எதுவென்று புரியாத ஒரு கலங்கிய மனநிலையில் வீடு வந்து சேர்ந்தேன்.இந்த மாணவர்களுக்கு எப்படி கற்பிக்க முடியும் என்று தெரியவில்லை. நாளையும், அதற்கடுத்த நாளும் உள்ளூர் தேர்தல் இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை. இரண்டு நாட்கள் கழித்து திரும்பவும் அந்த மாணவர்களுக்கு கணிதம் கற்பிக்க செல்வதாகவே உள்ளேன். இது போன்ற பள்ளிக் குழந்தைகளை பயிற்றுவிக்க  தாங்கள்

ஆலோசனை கூற வேண்டும் என்று வேண்டுகிறேன். நன்றி….

அன்புடன்,

மனோபாரதி விக்னேஷ்வர்

பொருட்செவியின் இலக்கிய ஒலிதம்

 

அன்புள்ள மனோபாரதி,

இந்த விஷயத்தை பலமுறை ஆசிரியப்பணியாற்றும் நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். கிராமங்களில் அரசுப்பள்ளிகள் படிப்படியாக மிகச்சீரழிந்த நிலைக்குச் சென்றுகொண்டிருக்கின்றன. அதற்குக் காரணம் சற்று பொருள்பலம் கொண்ட, ஆர்வம்கொண்ட மாணவர்கள் தனியார்பள்ளிகளுக்குச் சென்றுவிடுகிறார்கள். எஞ்சியகூட்டமே அரசுப்பள்ளிகளில் உள்ளது. அவர்களில் கற்றல் ஆர்வம் கொண்டவர்கள் மிகமிகக்குறைவு. அவர்கள் பொதுநிர்ப்பந்தம் காரணமாக பள்ளிக்கு வருபவர்கள். இன்றைய கல்விமுறையின்படி அவர்கள் எப்படியாவது பள்ளி இறுதியை கடத்திவிடும்படிச் செய்யப்படுவார்கள். அதன்பின் தொழிற்கல்வி போன்ற எதற்காகவாவது செல்வார்கள். சிலர் தேறுவார்கள். பலர் அதன்பின்னர் உடலுழைப்பு பணிக்குச் செல்வார்கள். அங்கும் உதவாக்கரைகளாகவும், குடிகாரர்களாகவும் எஞ்சுவார்கள். இது நம்மைச்சூழ நடந்துகொண்டிருக்கிறது. எந்த தொழிலுக்கும் திறமையும் கட்டுப்பாடும் உடையவர்கள் கிடைக்காமலிருக்கும் நிலை இன்று இப்படித்தான் உருவாகியிருக்கிறது.

இதில் ஆசிரியைகள்தான் அதிகமும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த மாணவர்கள் மிக இளமையிலேயே பலவகையான பெரியவர்களின் உலகுக்குள் வந்துவிட்டவர்கள். போர்ன், மது இரண்டும் சாதாரணம். அவர்களின் பெண்கள் குறித்த பார்வைகள் நம் சினிமாவால் கட்டமைக்கப்பட்டவை. அவை பெண்களை சீண்டுவது, அவமதிப்பது ஆகியவைதான் ‘கெத்து’ என்று காட்டுகின்றன. இவர்களின் நடத்தை பெண்களால் தாளமுடியாததாகவே உள்ளது. நம் சினிமாக்களில் மாணவர்கள் எப்படி காட்டப்பட்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். ஆசிரியையை கேலிசெய்பவர்களாகவே காட்டப்பட்டிருப்பார்கள். ஆசிரியர்கள் கடுமையான தண்டனைகளை அளிப்பவர்களாகவும், விலகிநிற்பவர்களாகவும் இருப்பதனால் தங்கள் கௌரவத்தையும் மனநிலையையும் தக்கவைத்துக்கொள்கிறார்கள். ஆசிரியைகளால் அது இயல்வதில்லை. பல அரசுப் பள்ளிகலில் உயர்நிலைக்கு ஆசிரியைகளை அனுப்புவதில்லை. இன்று பள்ளிகளில் மாணவர்களை எவ்வகையிலும் தண்டிக்க முடியாது. குடி, போர்ன் உட்பட எதைச்செய்தாலும். அடிக்க ஆரம்பித்தால் சமூகவலைத்தளங்களில் வீடியோவாக புகழ்பெற வேண்டியிருக்கும். பள்ளிநீக்கம் செய்யமுடியாது, உள்ளூர் அரசியல்வாதிகள் வந்து நிற்பார்கள். ஒன்றும் செய்யமுடியாது.

ஆனாலும் உங்கள் தலைமையாசிரியரைப் போன்றவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். நான் பலமுறை அவர்களைப் போன்றவர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். இரவு நெடுநேரம் வரை வகுப்புகள் எடுப்பவர்கள், மாணவர்களை பள்ளியிலேயே தங்கி படிக்கவைப்பவர்கள், புரவலர்களை கண்டுபிடித்து மாணவர்களுக்கு தரமான உணவளிக்க ஏற்பாடு செய்பவர்கள், தேர்வுக்காலங்களில் முழுக்கமுழுக்க பள்ளிகளிலேயே தங்கிவிடுபவர்கள் உண்டு. அவர்களால்தான் இன்னமும் கல்வி இங்கே வாழ்கிறது.

இது நிதர்சன நிலை. இதற்கு என்ன செய்யலாமென்பதை நீங்கள் உங்கள் மூத்த ஆசிரியர்களிடம்தான் கேட்கவேண்டும். ஆனால் இங்கே நானறிந்த ஆசிரியர்கள் செய்வதை வைத்து சிலவற்றைச் சொல்கிறேன். முதல் விஷயம், உங்கள் முன் அமர்ந்திருக்கும் எல்லா மாணவர்களும் அத்தகையவர்கள் அல்ல. அவர்களில் ஒரு சிறு பகுதியினரே பொறுக்கித்தனம் கொண்டவர்கள். அதை ஒருவகை கதைநாயகத்தனம் என சினிமாவிலிருந்து கற்று வைத்திருக்கிறார்கள். அவர்களின் துடுக்குத்தனம் சகமாணவர்களால் ரசிக்கவும்படும். அவர்களை கட்டுப்படுத்துவது அடி ஒன்றே. அதை இன்றைய சூழலில் தனியார் பள்ளிகளே செய்யமுடியும். அவர்களிடம் எந்த உரையாடலையும் நிகழ்த்த முடியாது. ஏனென்றால் நீங்கள் ஒருபக்கம் உரையாடலாம், மறுபக்கம் அவர்களிடம் உரையாடும் எதிர்மறை விசைகள் மிகமிக ஆற்றல்கொண்டவை. அவர்களை தவிர்த்துவிடுவதே சிறப்பானது.

அவர்கள் உண்மையிலேயே படிக்கும் ஆர்வம்கொண்ட மாணவர்களுக்கு தடையாக இருக்கக்கூடும். ஆகவே அவர்களை தவிர்த்து ஆர்வம்கொண்ட மாணவர்களை அடைவது எப்படி என்பதுதான் கேள்வி. அதற்கு முறையான அன்றாட வகுப்புகள் உதவாது. அந்த வகுப்பில் வருகைப்பதிவேடு இருப்பதே பிரச்சினை. அது இல்லையேல் பொறுக்கிமாணவர்களுக்கு அங்கே இடமில்லை. ஆர்வம்கொண்ட மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துகிறேன் என்று சொல்லுங்கள். அந்த மாணவர்களின் பெற்றோரிடம் சொல்லி அவர்களை வரச்சொல்லுங்கள். அப்படி வரும் மாணவர்களில் கற்கும் மனநிலை கொண்டவர்களை மட்டும் தக்கவைத்துக்கொள்ளுங்கள். அவர்களுக்கு தீவிரமாக கற்பியுங்கள். அது பயனுள்ளது. பயனுள்ள செயலையே தொடர்ந்து செய்யமுடியும். இல்லாவிட்டால் சட்டென்று சலிப்பு வந்துவிடும்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 22, 2021 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.