தூரதேசவாதியின் நெடும்பயணக் குறிப்பு

 ( ‘ உப பாண்டவம் நாவலை முன்வைத்து )

முனைவர் ப. சரவணன்

      எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய நாவல்களுள் முதன்மையானதும் முக்கியமானதுமான நாவல் ‘உப பாண்டவம்’. அதன் கதைக்களம் மகாபாரதம். இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் மகாபாரதம் பற்றிய அடிப்படைப் புரிதல் இருக்கும். காரணம், மகாபாரதம் இந்தியத் தொல் மரபில் நீக்கமுடியாத ஓர் அடுக்கு அடித்தளம். ஒட்டுமொத்த இந்தியக் குடிமக்களையும் நரம்பில் கோத்த மணிகளாக மாற்றி, மணிமாலையாக உருவாக்கி, ஒளிரச் செய்வது  மகாபாரதம் அன்றி வேறேது?

அத்தகைய இந்தியக் குடிமக்களை நான் இரண்டு வகையாகப் பிரிக்கிறேன். ஒருவகையினர்:– மகாபாரதத்தை முழுமையாகப் படித்தறிந்தவர்கள் அல்லது கேட்டறிந்தவர்கள். பிறிதொரு வகையினர்:– மகாபாரதக் கதையோட்டத்தையும் கதைமாந்தர்களையும் தெரிந்து வைத்திருப்பவர்கள்.

முதல்வகையினரின் நெஞ்சில் மகாபாரதம் பெருநதியென நகர்ந்து கொண்டிருக்கும். இரண்டாம் வகையினரின் மனத்தில் மகாபாரதம் பாறைக்கோட்டோவியமாக நிலைபெற்றிருக்கும்.  

     முதல்வகையினர் தம்முடைய லட்சிய வாழ்வில் மகாபாரதக்கதை விழுமியங்களை இயல்பாகவே பொருத்திப் பார்த்து, அவற்றுக்கு ஏற்ப வாழ்பவர்கள். இரண்டாம் வகையினர் தம் அன்றாட வாழ்வில் மகாபாரதக் கதைக் கருத்துகளையும் கதைமாந்தர்களையும் தனிநபர் எள்ளலுக்காகவோ, பொது மதிப்பீட்டுக்காகவோ பயன்படுத்துபவர்கள்.

     ‘உப பாண்டவம்’ நாவல், இந்த இரண்டு தரப்பினருக்கும் எந்த வகையில் உதவுகிறது என்பதை நான் விளக்க விரும்புகிறேன். அதற்காகவே இந்தக் கட்டுரை.

     இந்த ‘உப பாண்டவம்’ நாவல், இரண்டு கரைகளுக்கு இடையில் ஓடும் நதியென எழுதப்பட்டுள்ளது. ஒருகரையில் முதல்வகையினரும் மறுகரையில் இரண்டாம் வகையினரும் அமர்ந்து, நதியை ரசித்து, வியந்து, அதைப் பல்வேறு வகையில் பயன்படுத்தி, அதனருகில் இளைப்பாறலாம்.

முதல்வகையினர் இந்த நாவலில் காட்டப்படும் கதைமாந்தர்களின் மனநிலைகளையும் அவற்றின் மாற்றங்களையும் அவை அடையும் ஊசலாட்டங்களையும் தாம் அறிந்துள்ள மகாபாரதத்தோடு ஒப்பிட்டும் மதிப்பிட்டும் தங்களுக்குள் விவாதத்தை உருவாக்கிக்கொள்வார்கள். அல்லது தங்களின் மனத்தோடு உரையாடிக்கொள்வார்கள். அவற்றிலிருந்து தாம் கண்டடையும் கருத்துகளைத் தம்முடைய லட்சியவாழ்வுக்கு உரமாக்கிக்கொள்வார்கள்.

இரண்டாம் வகையினர் இந்த நாவலில் வழியாகத் தாம் அறிந்து கொள்ளும் புதிய கதைமாந்தர்களைப் பற்றியும் மறுவிமர்சனத்துக்கு உள்ளாகும் தாம் அறிந்த கதைமாந்தர்களைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்குவார்கள். அந்தச் சிந்தனையின் வெளிப்பாடாக அவர்களின் எள்ளல் வளரத் தொடங்கும்.    

விமர்சனம் இல்லாமல் எள்ளல் இல்லை. ஒருவகையில் எள்ளல் என்பதேகூட ஒரு விமர்சனம்தான். இருப்பினும், முதல்வகையினர் விமர்சன நோக்கிலும் இரண்டாம் வகையினர் எள்ளல் நோக்கிலும் மகாபாரதத்தைத் தம் வாழ்நாள் முழுக்கச் சுமப்பார்கள்.

‘உப பாண்டவம்’ நாவலைத் தாங்கிப் பிடிப்பவை இரண்டு தூண்கள். ஒன்று – கதைமாந்தர், கதைநிகழ்வுகள் சார்ந்த எழுத்தாளரின் ஆழமான, கூர்மையான விமர்சனக் கருத்துகள். இரண்டு – கதைமாந்தர்களின் மனவோட்டங்களை அப்படியே நாவலின் வரிகளாக்கியுள்ள எழுத்தாளரின் எழுத்துத்திறம்.

கற்றோர், கல்லாதோ அல்லது படித்தவர், பாமரர் என்ற இரண்டு எதிர்நிலையினருக்கும் ஒரு நாவல் உவப்பானதாக இருக்கிறது என்றால், அந்த நாவலின் பெறுமதிப்பு எத்தகையதாக இருக்கும்? இத்தன்மையில் எந்த நாவலாவது தமிழில் எழுதப்பட்டிருக்கிறதா?

குறிப்பாக, தொல்கதையை மீட்டுருவாக்கம் செய்து எழுதப்படும் நாவல்களில் இத்தகைய சாத்தியத்தைப் பயன்படுத்தி எழுத வாய்ப்புகள் மிகுதி. ஆனால், எந்த எழுத்தாளரும் அவ்வாறு முயற்சி செய்யவில்லை. அந்த வகையில் ‘உப பாண்டவம்’ தமிழின் மிகச் சிறந்த மீட்டுருவாக்க நாவல் என்பேன்.

ஒரு மீட்டுருவாக்க நாவலைத் தூக்கி நிறுத்துவது அதுசொல்லப்பட்டிருக்கும் விதம்தான். ‘உப பாண்டவம்’ நாவலின் கதைகூறும்முறை மிகச் சிறப்பானதாக இருக்கிறது.

ஒரு தூரதேசவாதி விரிந்த இந்திய நிலப்பரப்பில் நடந்தலைகிறான். அவன் செல்லும் பாதைகள் அவனை மகாபாரதம் தொடர்புடைய நிலங்களை நோக்கியே அழைத்துச் செல்கின்றன.

அவன் எதிர்கொள்ளும் மனிதர்களும் பிற இன உயிர்களும் இயற்கையமைப்புகளும் அவனுக்கு மகாபாரதக் கதையினைப் பல்வேறு தளங்களில் நினைவூட்டுகின்றனர்.

அவன் அஸ்தினாபுரத்தை நோக்கிச் செல்ல நினைக்கும்போது, ஒரு படகோட்டி அவனை நதியைக் கடந்து கரையேற்றிவிடுவதாகக் கூறுகிறான். நாவல் முடியும் வரை அந்தப் படகோட்டி அவனைக் கரையேற்றவில்லை. அவர்களின் பயணம் முழுக்க முழுக்க நதியின் நீரோட்டத்திலேயே இருக்கிறது.

ஆனால், அவன் அஸ்தினாபுரத்தைப் பலமுறை வலம்வந்துவிடுகிறான். மகாபாரதம் முழுவதுமாக நடந்து முடிந்த ஒட்டுமொத்த நிலப்பரப்பையும் சுற்றிவந்துவிடுகிறான். அவற்றுள் நிலங்களும் பெருநதிகளும் அடர்ந்த வனங்களும் பள்ளத்தாக்குகளும் மலைச்சிகரங்களும் உள்ளடங்கியுள்ளன.

இத்தகைய ஒரு பெருங்கற்பனைவெளிக்குள் வாசகரை அழைத்துச் சென்று, மகாபாரதத்தை விமர்சனக் கண்ணோட்டத்தோடும் மிகு எள்ளலோடும் உணர்த்திக்காட்டி அவர்களைப் பெருந்திகைப்போடு திருப்பி அனுப்புகிறார் எழுத்தாளர். உப பாண்டவத்தின் வெற்றிக்கு அடிப்படையே இத்தகைய கதைகூறும்முறைதான் என்பேன்.   

இந்த ‘உப பாண்டவம்’ நாவலில் இடம்பெற்றுள்ள எண்ணற்ற கதைமாந்தர்களுள் எனக்குப் பிடித்தவர்கள் மூவர்தான். மயன், சஞ்சயன், வெண்பசு வேண்டிய அந்தணர். இந்த மூவருமே வஞ்சிக்கப்பட்டவர்கள்,  தனியர்கள் என்ற இரண்டு கோடுகளுக்குக் கீழ் இணையத்தக்கவர்கள். இவர்கள் மூவரும்தான் ஒட்டுமொத்த நாவலின் உள்கதையோட்டத்திற்கும் ஊடுபாவாகத் திகழ்கின்றனர். 

     மயன் மாயசபாவை அமைக்கவில்லை எனில், சஞ்சயன் தொலையுணர்ந்து உரைக்காவிட்டால், அந்தணர் சொல்உச்சரித்துச் சூதாடாவிட்டால் என்ற இந்த மூன்று நிலைகளையும் வாசகர்கள் தம் மனத்துள் சிந்தித்துப் பார்த்தால், இந்த உப பாண்டவத்துக்கே இந்த மூவர்தான் ‘துணைக்கால்கள்’ என்பதை உணர்வர்.

     கதையில் வரும் மீநிகழ்வுகளை ஏதாவது ஒருவகையில் அமைதிகொள்ளச் செய்யும் நுட்பம் எழுத்தாளருக்குக் கைக்கூடியுள்ளது. அந்த அமைதியை வாசகர்கள் உள்ளன்போடு ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் உள்ளது. ப்ரீதா என்ற குந்தி நியோக முறைப்படி முதற்குழந்தையைப் பெற்றெடுக்கிறார். அவர் தாம் மீண்டும் கன்னியாதலைப் பற்றிச் சிந்திக்கும்போது அசரீதியாக ஒளியுருவம் குரல் கொடுக்கிறது. அந்தக் குரல்செய்தியில்தான் எழுத்தாளரின் நுட்பம் மிளிர்கிறது.

  இந்த நிகழ்வுகள் உனக்குள் நினைவுகளாகச் சேகரமாகாது . நினைவு மட்டுமே கன்னிமையை அழிக்கக் கூடியது . நீ இஷ்ட சொப்பனத்தில் இருந்து விடுபடுவது போல இந்தக் கர்ப்பத்தின் பிறப்பு அன்று யாவும் உன் நினைவிலிருந்து மறைந்து போகும் . நீ காண்பது கனவிலிருந்து பறிக்கப்பட்ட ஒரு மலரைக் கையில் வைத்திருப்பது போல குழந்தையை வைத்திருப்பதுதான்

தாயை எவ்வாறு கன்னியாகக் கருதுவது? என்ற இடர்ப்பாடு துளியளவும் வாசகருக்கு ஏற்படாதவாறு இந்தக் குரல் செய்தியை அமைத்துள்ளார் எழுத்தாளர்.

     முதன்மைக் கதைமாந்தரின் மனவோட்டத்தைப் பின்தொடர்ந்து வரும் வாசகருக்கு, அந்தக் கதைமாந்தர் எதிர்க்கொள்ளும் சாத்தியமற்ற ஒரு சூழல் மிரட்சியைத் தரும். அந்த இக்கட்டான சூழலை வெகு இயல்பாகத் தன் எழுத்தில் வழியாகக் கடந்துசெல்ல வைத்துவிடுகிறார் எழுத்தாளர்.

திருதராஷ்டிரனுக்கும் வைசிய பெண்ணுக்கும் பிறந்த யுயுத்சுவைப் பார்க்கச் செல்கிறார் விதுரன். அவர் தன்னுடைய பிறப்பினையும் அந்தக் குழந்தையின் பிறப்பினையும் ஒப்பிட்டுக் கொள்கிறார்.

விதுரனைப் போலவே பணிப்பெண்ணின் மூலமாக இன்னொரு பிள்ளை குரு வம்சத்தினுள் பிறந்திருக்கிறது . மகாமுனி வியாசருக்கும் அம்பிகாவின் பணிப் பெண்ணிற்கும் பிறந்த விதுரனின் புறக்கணிப்பும் அவமானமும் கொண்ட பாதையில் இன்னொரு சிசுவும் அதே வழியில் நடக்கப் போகிறது . அவன் நிசப்தத்தின் சுருளில் மிதந்து கொண்டிருந்தான் .  

விதுரன் தன் பிறப்பைத் தானே காணச் செல்லும் மனிதனைப் போல ஆவலும் பயமும் கொண்டவனாகத் தனியே புறப்பட்டுச் சென்றான் .”

      இந்தப் பகுதியில், தன் பிறப்பைத் தானே காணச் செல்லும் மனிதனைப் போல என்ற உவமைதான் வாசகரை அந்த இக்கட்டான மனநெருக்கடியிலிருந்து தப்பிவித்து, இலகுவாக்கிவிடுகிறது. இது, இந்த எழுத்தாளரின் எழுத்து நடைச் சிறப்புக்கு மகுடமாக அமைந்துள்ளது.

ஆணின் மனவோட்டம் வேறு பெண்ணின் மனவோட்டம் வேறு. இவற்றுக்கு இடையில் பொதுவான மனித மனவோட்டம் என்பது வேறு. ஒரு மனிதன் ஆண் நிலையிலிருந்து பெண்ணிலைக்கோ அல்லது பெண் நிலையிலிருந்து ஆண் நிலைக்கோ மாறும்போது, அவருக்குள் ஏற்படும் மனவோட்டம் எத்தகையதாக இருக்கும்?.

மாற்றுருகொண்ட அர்சுணனின் மனநிலை பற்றி எழுத்தாளர்,    

உடலின் துயரமும் போகமும் நெடிய தனிமைவெளியும் கொண்ட ஸ்திரிகளின் பகலைப் பிருக்கன்னளை ருசிக்கப் பழகிவிட்டாள் . அவளுக்கும் அந்த நிதான சுதி போதுமானதாக இருந்தது . நாட்களின் சுழற்சியில் தனது சகோதரர்களையும் வசீகரமான பாஞ்சாலியையும் விடுத்து இரு உடலாளனாக , மாவீரன் அர்ச்சுணன் தலை மாற்றி வைக்கப்பட்ட மணற்குடுவையெனப் பெண் உருவின் துகள்களைத் தன்னிடமிருந்து வடியச் செய்து கொண்டிருந்தான் .

என்று எழுதியுள்ளார்.

இன்னும் சிலர் ஆண், பெண் என்ற இரண்டு கூறுகளையும் தம் உடலில் கொண்டிருக்கிறார்களே, அவர்களின் மனவோட்டம் எத்தன்மையதாக இருக்கும்? இந்த நாவலில் உலவும் தூரதேசவாசி இரு உடலாளர்களைச் சந்திக்கும் காட்சியை விவரிக்கும் எழுத்தாளர்,   

நான் இரு உடலாளர்களின் விசித்திர கதைகளை இந்த நிலவியலில் கேட்டேன் . உருக்களைக் கலைத்துக் கொண்டும் ஞாபகத்தைத் தன் இதயத்தில் ஏந்திய படியும் பிறக்கும் இவர்களின் சுவடுகளைப் பின்தொடர முடியாதவனாக இருந்தேன் . பெண் , ஆண் என்ற பேதம் கலைந்த இவர்கள் இரு நாவு கொண்டவர்கள் போல வேறுவேறு முனைகளில் ஒரே திரவத்தைப் பருகிக் கொண்டிருந்தார்கள் .

என்று உளவியல் நோக்கில் குறிப்பிட்டுள்ளார்.

     மகாபாரதத்தின் திருப்புமுனையாக அமையும் இடம் பகடைக்களம். அதுதான் அவர்களை வனவாசத்தை நோக்கியும் பின்னர் போர்க்களம் நோக்கி அழைத்துச் செல்கிறது. அதைக் குறிப்புணர்த்தும் விதமாக அந்தக் பகடைக்களத்தைப் பற்றிய வர்ணனையில்,

கௌரவசபையை நிர்மாண்யம் செய்திருந்தார்கள் . வசீகரமும் அழகும் கூடிய சபையாக இருந்தது . விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்திருந்தன . யுதிஷ்ட்ரன் அரசரின் அழைப்பை ஏற்று தனது சகோதரர்களோடு வர சம்மதித்திருந்தான் . சகுனியும் துரியோதனனும் சபையின் கொண்டாட்டத்தை அதிகப்படுத்தும் யாவையும் செய்துகொண்டிருப்பதை விதுரன் கண்டு கொண்டிருந்தான் . விதுரன் மனம் முன்கூட்டியே உணர்ந்து கொண்டது . அவன் அந்த சபாவைப் பார்த்தபடியிருந்தான் . கொண்டாட்டமும் அவமானமும் இரட்டையர்போல ஒருவர் தோளில் ஒருவர் கைப்போட்டபடி அந்தச் சபையின் அலைந்து திரிவதை விதுரன் கண்டுகொண்டேயிருந்தான் .”

என்று எழுத்தாளர் காட்டியுள்ளார்.

     இந்த நாவலில் மிகவும் உணர்ச்சிகரமான ஒரு சந்திப்பு என்று எடுத்துக்கொண்டால் அது அம்புப் படுக்கையிலிருக்கும் பீஷ்மருடன் கர்ணனின் சந்திப்புதான். அதில் இதுநாள் வரை ஒளித்துவைத்த அனைத்து ரகசியங்களும் கசியத் தொடங்குகின்றன.

ஓர் இரவில் தனியே புலம்பி சிறகடிக்கும் பட்சியென கர்ணன் அவர் எதிருக்கு வந்து சேர்ந்தான் . பீஷ்மர் தான் மனமறிந்து அவமதித்த வீரர்களில் அவனும் ஒருவன் என்பதை உணர்ந்தவர் போல நிசப்தமாக இருந்தார் . கர்ணன் தனது பிறப்பின் ரகசியம் அறிந்திருந்தான் . தன் ரகசியம் அறிந்த மனிதர் பீஷ்மர் என்பதும் அவனுக்குப் புரிந்திருந்தது . அவர் ஸ்திரிகளின் மனோலோகம் அறிந்திருக்கக் கூடும் . பீஷ்மர் கர்ணனைத் தனக்கு நெருக்கமாக இருக்கச் செய்தார் . கர்ணன் அவரது அவமதிப்பை மறந்திருந்தான் . பீஷ்மர் அவனிடம் , ‘ தான் யுத்தகளம் விலக்கிவிட்டேன் . இனி , யுத்தம் உன் வசம் என்றார் . கர்ணன் அப்போது , அந்த முதிய மனிதனிடம் கேட்க விரும்பியதெல்லாம் , ‘ பீஷ்மரே ! எதற்காக , எதன் பொருட்டு , நீங்கள் இத்தனை அலைக்கழிப்புக் கொள்கிறீர்கள் ?’ என்ற கேள்வியே . அவன் கேட்கும் முன்பே அவர் அதை அறிந்துகொண்டார் போலும் . அவர் கர்ணனின் கண்களை நோக்கியபடி சொன்னார் , “ வாக்கினாலே பீஷ்மர் நடமாடுகிறான் . என் வாக்கின் சுற்று வலைகள்தான் என்னை இந்த நகரத்தோடு பிணைத்திருக்கின்றன . நான் விடுபட முடியாத துயராளி ”. கர்ணன் அவரைப் புரிந்துகொண்டவன் போலச் சொன்னான் , “ இந்த அம்புப் படுக்கை உங்கள் வாழ்வின் துவக்கத்தில் இருந்தே சயனத்தில் பழகிவிட்டிருப்பீர்கள் . ரகசியங்களின் கூர்நுனிகளில்தான் இத்தனை நாட்களும் படுத்திருக்கிறீர்கள் . இந்த சரதல்பத்தின் ஓர் அம்பு நானும்தானே !”

      அம்புப் படுக்கையிலிருக்கும் பீஷ்மர் கர்ணனின் பிறப்பு குறித்த ரகசியத்தைக் கூறுதல் புதுமையாக உள்ளது.

கர்ணா , நீ உன் பிறப்பால் அல்ல ; செயல்களாலே அறியப்படுபவனாகிறாய் . உன்னை அவமதிப்பது நானல்ல . உன்னைச் சுற்றிப் படர்ந்த தனிமை . ராதேயா ! நீ உன்னை எப்போதும் விலக்கிக் கொண்டே வந்திருக்கிறாய் . உன் பிரியம் அளவிட முடியாதது . உன் ஸ்நேகத்தால் பீடிக்கப்பட்ட துரியோதனன் மட்டுமே உன்னை அறிவான் . அவன் உன் பாதங்களைக் கண்டிருக்கிறான் . ராதேயா ! உன் பாதங்கள் உன் தாயின் சாயலைக் கொண்டிருக்கின்றன . அவள் பாதங்களின் மறுதோற்றம் போல உன் கால்விரல்கள் தெரிகின்றன . இதை யுதிஷ்டிரன்தான் என்னிடம் கண்டு சொன்னவன் . அவன் தன் மனத்தால் உன்னை அறிந்திருப்பான் . நீ யாருடைய மகன் என்பது ரகசியமல்ல ; அது ஒளிக்கப்பட்ட நிஜம்

      என்று எழுத்தாளர் கர்ணனின் பிறப்பு குறித்த ரகசியம் முக்கியமான கதைமாந்தர்கள் அனைவருக்கும் முன்பே அறிந்த ஒன்றுதான் என்பதைப் புலப்படுத்திவிடுகிறார். கர்ணனின் பிறப்பு பற்றி அறிந்த அவர்கள் ஏன் மௌனம் காத்தனர்? அந்த ரகசியம் குந்தியின் வாய்வழியாகவே வெளிப்படட்டும் என்பதற்குத்தானா? ஆனால், நாம் இங்குக் கர்ணனின் பிறப்பு குறித்துக் கேள்வி எழுப்பிக்கொண்டு இருக்கும்போது அங்குச் சகுனி பாண்டவர் ஐவரின் பிறப்பு குறித்தும் கேள்விகளை எழுப்பிக்கொண்டுதான் இருந்தார். “பாண்டவர்கள் ஐவரும் பாண்டுவின் மகன்கள் அல்லர்; அவர்கள் குந்திபுத்திரர்கள்” என்று அவர் உரக்கக் கூவிக்கொண்டிருந்தார். விதுரர் வழக்கமான தன் சொற்திறத்தால் சகுனியின் குரலை மழுங்கச் செய்துவந்தார். அதனையும் எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.  

     இந்த ‘உப பாண்டவம்’ நாவலில் உப பாண்டவர்களும் உப கௌரவர்களும் இடம்பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி, மகாபாரதத்தில் உதிரிக் கதைமாந்தர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர். அதுபோலவே, ‘உப பாண்டவம்’ நாவலைப் பற்றி முக்கிய எழுத்தாளர்களும் தேர்ந்த விமர்சகர்களும் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளனர். நான் அவற்றை விலக்கி, வாசகர்களும் விமர்சகர்களும், ‘இந்த நாவலைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?’ என்பதை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ‘உப பாண்டவம்’ நாவல் குறித்த இவர்களின் கருத்தை உப வாசகர்களின் கருத்துக்களாகவும் உப விமர்சகர்களின் மதிப்பீடுகளாகவும் நாம் கருதலாம்.

அவந்திகா என்ற வாசகி, ‘குட்ரீடர்ஸ் டாட் காம்’ என்ற தளத்தில் 10.07.2016 ஆம் நாள் ‘உப பாண்டவம்’ பற்றிய எழுதிய குறிப்பு பின்வருமாறு:–

பாரதத்தில் சஞ்சயன் பக்கம் சாராதவன். சஞ்சயன் ஒரு போர்ச் சாட்சி. சஞ்சயனைப் போல ஒரு வழிப்போக்கனாய் நாமிருந்து மாயநகரான அத்தினாபுரத்தின் நிகழ்வுகள் அனைத்தையும் நிழலைப் போல காண நேரிட்டால் ? ஒரு வழிப்போக்கன் , அவனுடைய மன பிரதிபலிப்பு – இதைத் தாண்டிய எந்த ஆதரவையும் யாருக்கும் நீடிக்கவில்லை எஸ்.ரா. ஒரு பெரும் வெற்றியைத் தாண்டி , இந்த வெற்றியெல்லாம் மாய பிம்பம் என்னும் கோரமான வெறுமையின் முகத்தை எளிமையாகக் காட்டியுள்ளார் எஸ்.ரா.

நானறிந்த வரையில், ‘உப பாண்டவம்’ நாவலுக்கு எழுதப்பட்ட மிகச் சுருக்கமான, மிகத் தெளிவான குறிப்பு இது. உண்மைதான். வாசகர்கள் சஞ்சயனின் மனநிலையில் இல்லாமல் இந்த நாவலை அணுகுவது எளிதல்ல. எல்லா வெற்றிகளுக்குப் பின்னாலும் ஒளிந்திருக்கும் வெறுமையை, குறிப்பாக வென்றவர் மட்டுமே அறியத்தக்க அந்த வெறுமையை இந்த உப பாண்டவத்தின் வழியாக நமக்குக் காட்டியுள்ளார் எழுத்தாளர்.

இந்த நாவலில் வரும் தூரதேசவாசியையும் அவரின் பயணத்தையும் நாம் சஞ்சயனைப்போல இருந்தால் மட்டுமே உள்வாங்கிக் கொள்ள இயலும். 

– – –

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 15, 2021 21:44
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.