பனியில் மறையாத காலடிகள்.
ஜான் ஃபோர்டின் புகழ்பெற்ற திரைப்படமான தி சர்ச்சர்ஸ் பாதிப்பில் அதே கதையினைத் துருவப்பகுதியில் நடப்பதாகப் புதிய திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். Maliglutit (searchers) எனும் இப்படத்தை இயக்கியவர் சகரியாஸ் குனுக். 2016ல் வெளியாகியிருக்கிறது.

உலகின் முதற்குடிமக்கள் என்று அழைக்கப்படும் இனூட் பூர்வகுடிகள் துருவப்பகுதியில் வாழுகிறார்கள். உறைபனிப் பிரதேசத்தில் வசிக்கும் இவர்கள் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டவர்கள். உறைபனியில் பயணம் செய்வதற்கு நாய்களால் இழுக்கப்படும் வண்டியைப் பயன்படுத்துகிறார்கள்.
இப்படம் இனூட் குழுக்களுக்குள் உள்ள சண்டை, மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை, உணவு தேடும் முறை. விசித்திர நம்பிக்கைகள். பனிப்பிரதேசத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் என இனூட்டுகளின் வாழ்க்கையைச் சிறப்பாகச் சித்தரித்துள்ளது.
1900களின் முற்பகுதியில் உறைபனிக்காலத்தில் கனேடிய ஆர்க்டிக்கின் நுனாவுட் பிரதேசத்தில். இக்லூ எனும் பனிக்குடில் ஒன்றில் கதை துவங்குகிறது. அடுத்தவன் மனைவியோடு கள்ள உறவு கொண்டிருக்கிறான் என்று ஒருவன் குற்றம்சாட்டப்படுகிறான். தவறான நடத்தை, கொலை மற்றும் குற்றச்செயல்களுக்காகக் குபக் அவுல்லா, துலிமாக் மற்றும் திமாத்தி என்ற நால்வர் இனூட் சமூகத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.
குவானானாவின் குடும்பம் அறிமுகமாகிறது. அவர்கள் ஒன்றுகூடி உண்ணுகிறார்கள். பிள்ளைகள் மீது அவன் கொண்டிருந்த அன்பு அந்தக் காட்சியில் அழகாக வெளிப்படுத்தப்படுகிறது. உலர்ந்த இறைச்சியை அவர்கள் கடித்து இழுத்து சாப்பிடும் முறை வியப்பூட்டுகிறது.
நானூக் ஆப் தி நார்த் என்ற ஆவணப்படம் துருவப்பிரதேச வாழ்க்கையை நுட்பமாக ஆவணப்படுத்தியது. அதில் இது போன்ற வாழ்க்கை முறையைக் கண்டிருக்கிறேன். கனடா போயிருந்தபோது இனூட்களின் ம்யூசியத்திற்குச் சென்று அவர்கள் தொடர்பான பொருட்கள். காட்சிகளைக் கண்டிருக்கிறேன். ஆனாலும் படத்தில் இந்த வாழ்க்கையை நெருக்கமாகக் காணும் போது வியப்பூட்டும் ஒரு வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள முடிகிறது

பனிக்காற்றின் ஓலம். உறைபனி கொண்ட மலைமுகடுகள். முடிவில்லாத பனிப்பாறைகள். பனிக்கட்டிகளைக் கொண்டே உருவாக்கப்படும் சிறிய குடில்கள். அவர்கள் நெருப்பைப் பயன்படுத்தும் விதம். வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சியை உலர வைத்துப் பயன்படுத்தும் முறை. உலர்ந்த மீன்களைச் சூடாக்கிச் சாப்பிடுவது. ஆவிகள் மீது நம்பிக்கை கொண்டிருப்பது, தீவினைகளைப் பற்றி முன்னறிவது என இனூட்களின் வாழ்க்கையைத் துல்லியமாகப் படம் சித்தரிக்கிறது. குவானானா தனது குடும்பத்துடன் அமைதியான நாடோடி வாழ்க்கையை நடத்துகிறான்
ஒரு நாள் அவர்கள் பனிமான் வேட்டைக்குக் கிளம்புகிறார்கள். குவானானாவின் தந்தை பேரன் சிகுவையும் உடன் அழைத்துப் போகச் சொல்கிறார். எந்தப் பக்கம் வேட்டைக்குப் போக வேண்டும் என்று திசையினையும் அடையாளம் காட்டுகிறார். அவர்கள் பனிப்பிரதேசத்தில் வேட்டைக்குக் கிளம்பிப் போகிறார்கள். எதிர்பார்த்தபடி மான் கிடைக்கவில்லை. நீண்ட தூரம் போய்விடுகிறார்கள்.
அவர்கள் வீடு திரும்புவதற்குள் திடீரெனக் கரடி தாக்குவது போல அவர்கள் பனிக்குடிலைத் தாக்கும் குபக் மற்றும் அவனது மூன்று நண்பர்கள் அங்கிருந்த பொருட்களைச் சூறையாடுகிறார்கள். வீட்டிலிருந்த பெண்களைக் கடத்திப் போகிறார்கள். அவர்களை எதிர்க்கும் வயதான தந்தை தாயைக் கொன்றுவிடுகிறார்கள்.
வேட்டைமுடிந்து திரும்பும் குவானானா தனது வீடு சிதைக்கப்பட்டிருப்பதையும் தாய் தந்தையின் இறப்பையும் காணுகிறான். இதற்குக் காரணமாக இருந்த குபக்கை பழிவாங்கத் துடிக்கிறான். கடத்திச் செல்லப்பட்ட தனது மனைவி ஏலாவையும் மகளை டகாக்கையும் மீட்க குவானானா கிளம்புகிறான்
குவானானாவுடன் அவரது மகன் சிகுவும் சறுக்கு வண்டியில் செல்கிறான்.. அடிவானம்வரை உறைந்து கிடக்கும் பனி. முடிவில்லாத பனிப்பிரதேச வெளியில் எங்கே போய்த் தேடுவது என அவர்களுக்குத் தெரியவில்லை. வான் கடவுள் அசரீரி மூலம் வழிகாட்டுகிறார்.
கடத்தப்பட்ட பெண்களை மீட்க அவர்கள் உறைபனியில் நீண்ட தூரம் செல்கிறார்கள். எங்கும் தடயமேயில்லை. ஜான் ஃபோர்டின் பிரம்மாண்டமான நிலக்காட்சிகளைப் போலவே பனிப்பிரதேசத்தின் பெருவெளியும் அதில் செல்லும் மனிதர்களும் சித்தரிக்கப்படுகிறார்கள். கண்ணை விட்டு அகலாத காட்சிகள். படம் பார்க்கும் நம் முகத்திலும் பனிக்காற்று அடிக்கிறது.
குபக் மற்றும் அவனது மூன்று நண்பர்கள் தாங்கள் கடத்திவந்த பெண்களின் கைகால்களைக் கட்டி சறுக்கு வண்டியில் கொண்டு போகிறார்கள். ஒரு இடத்தில் அவர்கள் தங்கி உணவருந்தும் போது அந்தப் பெண்களுக்கும் உணவு தருகிறார்கள். பசியில் அதை ஏற்றுக் கொண்டு எலாவும் டகாக்கும் சாப்பிடுகிறார்கள்.
குபக் ஒரு இடத்தில் பனிக்குடில் அமைத்து அங்கே இரண்டு பெண்களையும் தங்க வைக்கிறான். எலாவோடு உடலுறவு கொள்ள முயல்கிறான். அவளோ அவனை அடித்துவிரட்டுகிறாள்.
தங்களை மீட்க எப்போது வரப்போகிறார்கள் என்று தெரியாத வேதனையில் அப்பெண்கள் தாங்களே தப்பிப் போக முயல்கிறார்கள். ஆனால் பனியில் தப்பியோட முடியவில்லை. அக்காட்சி அடிபட்ட மான் தப்பியோடுவது போலவே இருக்கிறது.

குபக்கின் கூட்டாளிகள் அவர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்து மீண்டும் குடிலுக்குள் கொண்டு வந்து அடைக்கிறார்கள். சித்ரவதை செய்கிறார்கள். படம் முழுவதும் குபக்கால் அந்தப் பெண்கள் விலங்குகள் போலவே நடத்தப்படுகிறார்கள்.
முடிவில் குபக்கின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும் குவானானா தனது மனைவி மற்றும் மகளை மீட்கத் திட்டமிடுகிறான். அதன்படியே அவர்களை மீட்கிறான். அத்தோடு குபக் மற்றும் அவனது கூட்டாளிகளுடன் துப்பாக்கிச் சண்டையிட்டு அவர்களைக் கொல்கிறான். மீண்டும் குவானானாவின் புதிய வாழ்க்கை ஆரம்பமாகிறது.
ஜான் போர்ட் படத்திலிருந்து நிறைய வேறுபாடுகளை இதில் காணமுடிகிறது. சகரியாஸ் குனுக் இரண்டு பெண்கள் கடத்தப்படுகிறார்கள். அதை ஒருவன் தேடுகிறான் என்ற கதைக்கருவை மட்டுமே வைத்துக் கொண்டு தனக்கான திரைக்கதையைத் தனித்துவமாக உருவாக்கியிருக்கிறார். வழிதெரியாத அந்தப் பனிப்பிரதேசத்தில் கடத்தப்பட்ட மனைவியை மீட்க குவானானா அலைவது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது
தனது வீடு தாக்கப்பட்டிருப்பதைக் கண்ட குவானானா வேதனையோடு யார் இதைச் செய்தவர்கள் என்று கேட்கும்போது இப்படிக் குரூரமாக நடந்து கொள்ள அங்கே யார் இருக்கிறார்கள் என்ற பரிதவிப்பு வெளிப்படுகிறது.
பழிவாங்கும் கதை ஒன்றினை இயற்கையின் பிரம்மாண்டமான வெளியோடு இணைத்து உருவாக்கியிருப்பது இதன் தனிச்சிறப்பு. பசியும் காமமும் மட்டுமே அவர்களை வழிநடத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பல காட்சிகளில் நாம் காணுவது பனிபடர்ந்த நிலவெளியை மட்டுமே. அதன் ஊடாகச் செல்பவர்கள் எறும்பு போலச் சிறியதாகத் தோன்றுகிறார்கள். இயற்கையை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. ஆனால் தங்களுடன் இணைந்து வாழ்ந்த மனிதர்களைத் தான் புரியவில்லை. குவானானா அதைத் தான் கேள்வி எழுப்புகிறான். அவனிடம் உள்ளத் துப்பாக்கியில் மூன்றே குண்டுகள் உள்ளன. அதை அவன் கவனமாகச் செலவு செய்ய வேண்டும். கடைசிக்காட்சியில் அவனது தோட்டா தீர்ந்த பிறகு அவனை எலா தான் மீட்கிறாள்.

படத்தில் உரையாடல்கள் மிகவும் குறைவு. குளோசப் காட்சிகள் குறைவு. குவானானா தந்தைக்கும் தாயிற்குமான உறவும் தந்தையின் ஞானமும் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவன் இறந்த குழந்தையைக் கையில் ஏந்தி நிற்கும் காட்சி மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டிருக்கிறது. சிறந்த ஒளிப்பதிவு, நேர்த்தியான உருவாக்கம், இயல்பான நடிப்பு. பூர்வகுடிகளின் குரலொலி போன்றவை படத்தினை சிறப்பாக்குகின்றன
படத்தில் நடித்திருப்பவர்கள் யாவரும் இனூட் சமூகத்தைச் சார்ந்தவர்கள். அவர்களே படப்பிடிப்பிலும் உதவி செய்திருக்கிறார்கள். மைனஸ் 47 °C குளிரில் படம்பிடித்திருக்கிறார்கள். தாங்க முடியாத குளிர் எலும்புகளை நடுங்க வைத்துவிட்டது என்கிறார் இயக்குநர். காட்சிகளில் அதை நாம் நன்றாகவே உணர முடிகிறது
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
