மூன்றாம் உலகிலிருந்து வருகிறவன்

நாகிப் மாஃபௌஸ்

(நோபல் பரிசு ஏற்புரையின் ஒரு பகுதி) தமிழில் சா.தேவதாஸ்.

என் பெயர் இப்பரிசிற்காக அறிவிக்கப்பட்டவுடன், அந்த இடம் சட்டென்று நிசப்தமானதாகவும், பலரும் நான் யார் என்பது அறியாமல் வியந்ததாகவும் ஓர் அயல் நாட்டு நிருபர், கெய்ரோவில் என்னிடம் கூறினார். எனவே இயன்றவரையில் சுருக்கமாக என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டுகிறேன்.

சரித்திரத்தின் ஒரு கட்டத்தில் இருவேறு நாகரிகங்களுக்கிடையே நிகழ்ந்த ஒரு சந்தோஷமான திருமணத்தின் மூலம் பிறந்தவன் நான். இவற்றில் முதல் நாகரிகத்திற்கு ஏழாயிரம் வயதாகிறது. அது ஃபேரோனிக் நாகரிகம். அடுத்ததிற்கு ஆயிரத்து நானூறு வயதாகிறது. அது இஸ்லாமிய நாகரிகம். உயர்ந்த அறிஞர்களான உங்களிடம் இவ்விரண்டையும் நான் அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. ஆனால் இப்போது சிலவற்றை நினைவு படுத்துவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

ஃபேரோனிக் நாகரிகத்தைப் பொறுத்தவரை, அதன் ஆக்கிரமிப்புகளைப் பற்றியும், உருவான பேரரசுகள் பற்றியும் பேசப்போவதில்லை. நல்ல வேளையாக இன்றைய யுகத்தின் மனசாட்சி, இவற்றைக் காலாவதியான, பெருமிதமான சங்கடத்துடன் ஒதுக்கிவிடுகிறது. முதல்முறையாகக் கடவுள் என்றதொரு சக்தியை உணர்ந்து மனிதனுக்கு ஆன்மிக உணர்வு அரும்பியதைப் பற்றியும் பேசப்போவதில்லை. இது ஒரு நீண்ட சரித்திரம், உங்களில் ஒருவர் கூடத் தீர்க்கதரிசியான மன்னன் அகெனேடனைப் பற்றி அறியாதிருக்க மாட்டீர்கள். இந்நாகரிகத்தின் கலை இலக்கியச் சாதனைகளைப் பற்றியோ, புகழ்பெற்ற அதன் அதிசயங்கள், பிரமிட்டுகள், ஸ்பிங்ஸ், கமக்கைப் பற்றியோ கூடப் பேசப்போவதில்லை. இந்நினைவுச் சின்னங்களைப் பார்த்திராதவர்கள்கூட இவற்றைப் படித்தும், இவற்றின் வடிவத்தை, பிரம்மாண்டத்தை அறிந்தும் பிரமித்திருப்பார்கள்.

எனவே ஃபேரோனிக் நாகரிகத்தை ஒரு கதையைப் போல – என் சொந்த வாழ்க்கை என்னை ஒரு கதை சொல்லியாக உருவாக்கியிருப்பதால் – அறிமுகப்படுத்தலாமென்றிருக்கிறேன். இதோ ஒரு பதிவு செய்யப்பட்ட வரலாற்று நிகழ்வு: பண்டைய ஓலைச்சுவடி ஒன்றில் அந்தப்புரத்துப் பெண்கள் சிலருடன் தனது அரண்மனை ஊழியர்கள் சிலருக்கு தவறான தொடர்பிருப்பதை அறிந்த மன்னன் ஃபேரோ அக்கால வழக்கப்படி அவர்களுக்கு உடனடியாக மரணதண்டனை விதிக்காமல் தேர்ந்த சில அறிஞர்களை அழைத்து இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறான். உண்மையை அவன் அறிய வேண்டுமென்றும் அதன் பிறகே தனது தீர்ப்பை வழங்குவது நியாயமென்றும் அவ்வறிஞர்களிடம் கூறியிருக்கிறான்.

இந்த நடவடிக்கை, என் அபிப்பிராயத்தில் மாபெரும் பேரரசு ஒன்றை நிறுவியதைவிடவும், பிரமிட்களைக் கட்டியதைவிடவும், மகத்தானதாகும். அந்நாகரிகத்தின் மேன்மைக்கு, அக்காலத்தைய செல்வச் செழிப்பைவிட இதுவே சிறந்த அடையாளமாகும். தற்போது அந்த நாகரிகம் மறைந்து போய், பழங்கதையாகிவிட்டது. ஒரு நாள் அம்மா பெரும் பிரமிட்கூட மறைந்து போகலாம்; ஆனால் மனிதகுலத்திற்குச் சிந்திக்கும் திறனும், உயிர்ப்போடிருக்கும் மனசாட்சியும் உள்ளவரை சத்தியமும், நியாயமுமே நிலைத்திருக்கும்.

இவ்விரு நாகரிகங்களின் மடியில் பிறக்க வேண்டியது என் விதியாகி, இவற்றின் அமுத மருந்தி, இவற்றின் கலைகளையும், இலக்கியங்களையும் உண்டு நான் வளர்ந்தேன். அதன் பின் உங்களது செழிப்பான கலாச்சாரத்தின் தேனைப் பருகினேன். இவை எல்லாவற்றிலிருந்தும் கிடைத்த ஊக்கத்தாலும், எனது சுயகவலைகளாலும் நெகிழ்ந்த வார்த்தைகள் என்னிடமிருந்து புறப்படத் துவங்கின. மேன்மை பொருந்திய தங்கள் அகாதெமியால் இவ்வார்த்தைகள் அங்கீகரிக்கப்பட்டுப் பாராட்டப் பெறும் அதிர்ஷ்டமும் நிகழ்ந்திருக்கிறது. இதற்கான வந்தனங்கள். என் பெயராலும், இவ்விரு நாகரிகங்களை வளர்த்த மாபெரும் ஆத்மாக்களின் பெயராலும் இருக்கட்டும்.

உங்களுக்கு வியப்பாக இருக்கலாம்; மூன்றாம் உலகிலிருந்து வருகிற இம் மனிதனுக்குக் கதை எழுதுவதற்கான மன நிம்மதி எப்படிக் கிடைக்கிற தென்று. நீங்கள் கருதுவது முழுக்கச் சரியே.

கடன் சுமையில் அழுந்திப் போயிருக்கிற, செலவினங்களின் அழுத்ததினால், பசியால் அல்லது ஏறக்குறைய பட்டினியால் வாடிக்கொண்டிருக்கிற உலகத்திலிருந்து தான் நான் வருகிறேன்.

ஆசியாவில் சிலர் வெள்ளத்தால் அழிவதைப் போல, ஆப்பரிக்காவில் மற்றவர்கள் வறட்சியால் அழிந்து கொண்டிருக்கின்றனர். தென் ஆப்பரிக்காவில் இலட்சக்கணக்கானோர் மனிதர்களாகவே மதிக்கப்படாமல் ஒதுக்கப்பட்டு, இக்காலத்திலும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றனர். மேற்குக்கரையிலும், காஸாவிலும் தமது சொந்த மண்ணிலேயே – தமது தந்தையினரின், மூதாதையினரின் மண்ணிலேயே – தங்களது இருப்பைத் தொலைத்து விட்டு இலட்சக்கணக்கானோர் நிற்கின்றனர்.

ஆதிமனிதன் முதலில் கண்டறிந்த ஓர் அடிப்படை உரிமைக்காகத்தான் அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமது சொந்த மண்ணில், கெளரவமாக வாழ மற்றவர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்கிற அடிப்படை உரிமைக்காக. இப்போராட்டத்திற்காக இத்தீரமிக்க மனிதர்கள் – ஆண்களும், பெண்களும், இளைஞர்களும், குழந்தைகளும் பதிலாகப் பெற்றது உடைந்த எலும்புகளையும், துப்பாக்கி குண்டுகளையும், சிதைக்கப்பட்ட வீடுகளையும், சிறையிலும் முகாம்களிலும் சித்திரவதைக்கப்படுவதையும் ஆகும்.

இவர்களைச் சுற்றிலும் பதினைந்து கோடி அராபியர்கள் நிகழ்வதைப் பார்த்து வேதனையிலும், கோபத்திலும் வெந்து கொண்டிருக்கின்றனர். இதனால் இப்பகுதி முழுவதுமே விரைவில் வெடித்துச் சிதறக்கூடிய கொந்தளிப்புப் பிரதேசமாகியிருக்கிறது. நியாய உணர்வும், அமைதிக்கான விழைவும் கொண்ட அறிவாளர்களால் மட்டுமே நிச்சயமானதொரு பிரளயத்திலிருந்து இப்பகுதியைக் காப்பாற்ற இயலும்.

ஆம், மூன்றாம் உலகத்திலிருந்து வருகிற ஒரு மனிதனுக்குக் கதைகள் எழுத மன அமைதி எப்படிக் கிடைக்கும்? அதிர்ஷ்டவசமாகக் கலை தாராளமாகவும், கருணையோடும் இருக்கிறது. பிரச்சினை களற்ற சந்தோஷங்களை மட்டும் கலை ஆகர்ஷிப்பதில்லை; துன்பத்தில் உழல்பவர்களை அது நிராகரித்து ஒதுக்குவதுமில்லை. அவரவர் நெஞ்சிற்குள் பொங்கும் உணர்வுகளை அவர்களுக்கே உரித்தானதொரு தனிமுறையில் வெளிப்படுத்திக் கொள்ளக் கலை அனுமதிக்கிறது.

நாகரிக வரலாற்றின் இந்த அதிமுக்கிய தருணத்தில் மனிதகுலத்தின் துயரக்குரல்கள் பதியப் படாமல் சூன்யமாக மரித்துப் போவதென்பதை நினைத்துப் பார்க்கவே இயலாது; ஏற்றுக் கொள்ளவும் முடியாது. வல்லரசுகளுக்கிடையிலிருந்த பனிப்போர் முடிந்து விட்ட இப்பொழுதில் தான் உண்மையில் மனிதகுலம் முதிர்ச்சியடைந்திருக்கிறதென்று நம்மால் ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிகிறது. இத்தருணத்தில் மனித மனம் தன்னிடம் பொதிந்திருக்கும் பேரழிவுக் கூறுகளையும், யுத்த வெறியையும் முற்றாகக் களைந்தெடுக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது விஞ்ஞானிகள், தொழிற்சாலை கழிவுகள், சுற்றுச்சூழலில் உண்டாக்கும் மாசுகளை அகற்ற முனைவைதப்போல மனித மனத்தின் அறநெறிகளில் பீடித்திருக்கும் மாசுகளையும் அகற்ற வேண்டிய கடமை அறிவு ஜீவிகளுக்கு இருக்கிறது. இந்த யுகத்தின் நல்ல எதிர்காலத்திற்குத் தேவையான தீர்க்க தரிசனமும், தீட்சண்யமான அணுகுமுறையும் நமது நாட்டின் பெருந்தலைவர் களிடமும், பொருளாதார வல்லுநர்களிடமும் தேவையென உரிமையுடன் கேட்கவேண்டியது நமது கடமையாகும்.

பண்டைக்காலங்களில் ஒவ்வொரு தலைவரும் தமது தேசத்திற்காக மட்டுமே கவலைப்பட்டு வந்தனர். தமக்கு எதிரான கருத்துடையவர்கள் விரோதிகளாகவும், தமது நாட்டைச் சுரண்ட வந்தவர்களாகவும் கருதிவந்தனர். தமது தற்பெருமைக்கும், தனிப்பட்ட வெற்றிகளுக்கும் தந்த முக்கியத்துவத்தை வேறெந்த மதிப்பீடுகளுக்கும் தரவில்லை. இதற்காகப் பல தர்ம நியதிகளும், மதிப்பீடுகளும் பலியிடப்பட்டன; அறமற்ற பாதைகள் நியாயப்படுத்தப்பட்டன; கணக்கற்ற ஆத்மாக்கள் அழித்தொழிக்கப்பட்டனர். பொய், ஏமாற்று, களவு, துரோகம் போன்றவை மகத்துவத்தின் அடையளாங்களாய் கோலோச்சி வந்தன.

இன்று இத்தகைய பார்வைகளை அவற்றின் அடிப்படைகளிலிருந்தே திசைதிருப்ப வேண்டிய தேவை வந்துவிட்டது. இன்றைய தேசத்தலைவர் என்பவர், அவரது உலகாளவிய பார்வையாலும், மனித குலத்தின் மேல் அவர் கொண்டிருக்கும் பொறுப்புணர்வாலும் மட்டுமே மதிப்பிடப்படுகிறார். முன்னேறிய நாடுகளும், மூன்றாம் உலக நாடுகளும் ஒரே குடும்பம்தான். அறிவும், ஞானமும், நாகரிகமும் பெற்றுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் இதற்கான பொறுப்பு இருக்கிறது. மூன்றாம் உலகத்தின் சார்பாகக் கூறுகிறேன். அநீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். உமது தகுதிக்கேற்றதொரு பங்கினை நீங்கள் ஆற்றியேயாக வேண்டும். உலகச் சமுதாயத்தின் மேட்டுக் குடியினரான உங்களுக்கு இவ்வுலகத்தின் எத்திசையிலும் இருக்கிற மனிதரோ, தாவரமோ, மிருகமோ புரிகிற தவறுகளில் ஒரு பங்கிருக்கிறது.

உங்களது மன அமைதியை நான் குலைத்து விட்டிருந்தால் தயை கூர்ந்து என்னை மன்னியுங்கள் அன்பர்களே! ஆனால் மூன்றாம் உலக நாடு ஒன்றிலிருந்து வரும் ஒருவனிடமிருந்து வேறு எதனை நீங்கள் எதிர்பார்க்க முடியும்? நிரப்பிவைத்திருக்கும் திரவத்தின் நிறத்தையெல்லவா கண்ணாடிக் கோப்பை பெற்றிருக்கும்? மேலும் மனிதகுலத்தின் அவலங்களை இம்மாமண்டபத்தில் – அறிவியலையும், இலக்கியத்தையும், மென்மையான மனித மதிப்பீடுகளையும் அரியணையில் அமர்த்தி அங்கீகரிக்கும் இம் மகத்தான சபையில் – உங்கள் உயர்ந்த நாகரிக சோலையில் எதிரொலிக்காமல் வேறெங்கே இக்கோரிக்கையை வெளியிடமுடியும்?‘

(அட்சரம் இதழிலிருந்து )

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 15, 2021 04:52
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.