அறியப்படாத மார்க்வெஸ்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் வாழ்க்கை வரலாற்றை அவரது நண்பர்கள், ஊர்மக்கள். பதிப்பாளர்கள், வாசகர்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் நேர்காணல் வழியாகத் தொகுத்திருக்கிறார் சில்வானா பேட்னார்ஸ்டோ.

பத்திரிக்கை ஒன்றிற்கான சிறிய நேர்காணலாகத் துவங்கி நூற்றுக்கணக்கானவர்களைத் தேடிச் சென்ற இலக்கியப் பயணமாக மாறியிருக்கிறது.

மார்க்வெஸ் தனது தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலை மரியா லூயிசா எலியோ மற்றும் ஜோமி கார்சியா அஸ்காட்டிற்குச் சமர்பணம் செய்திருக்கிறார். சில்வானா அவர்களைத் தேடிச் சென்று நேர்காணல் செய்திருக்கிறார். அவர்களின் நினைவு வழியாக மார்க்வெஸின் அறியப்படாத முகத்தைக் கண்டறிந்துள்ளார்.

Living to Tell the Tale என்ற தலைப்பில் மார்க்வெஸே தனது வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியை எழுதியிருக்கிறார். ஆகவே இந்த நூலுக்கு Solitude & Company எனத் தலைப்பிட்டதாகச் சில்வானா கூறுகிறார். இந்தத் தலைப்பு தனது திரைப்பட நிறுவனம் ஒன்றுக்காக மார்க்வெஸ் வைத்திருந்த பெயர்.

மார்க்வெஸின் பிறந்த தேதி பதிவேட்டில் ஒருவிதமாகவும் உண்மையில் ஒரு விதமாகவும் உள்ளது. அந்தக் காலத்தில் பள்ளியில் சேரும்போது இப்படி வேறு ஒரு தேதி கொடுத்துச் சேர்த்துவிடுவது வழக்கம். ஆகவே உண்மையான பிறந்த தேதி எது என்பதைச் சில்வானா விசாரித்துக் கண்டறிந்துள்ளார்

தாத்தா வீட்டில் எட்டுவயது வரை மார்க்வெஸ் வளர்க்கப்பட்டவர் என்பதால் அவரது அண்டை வீட்டில் வசித்தவர்கள். அந்த ஊர்வாசிகள். தாத்தா குடும்பத்தின் நண்பர்கள் எனப் பலரையும் சில்வானா சந்தித்து உரையாடியிருக்கிறார்.

மார்க்வெஸின் தாத்தா வீட்டில் மின்சாரம் கிடையாது. அந்த நாட்களில் அரகாடகாவில் மின்சார வசதி செய்யப்படவில்லை. ஆகவே பலரும் மெழுகுவர்த்திகளையும் மண்ணெண்ணெய் விளக்குகளையும் பயன்படுத்தினார்கள். மின்சாரம் வராத நாட்களில் வாழ்ந்தவர்களின் கற்பனையும் பயமும் விநோதமாக இருக்கும் என்கிறார் சில்வானா.

அது உண்மை என்பதை நானே உணர்ந்திருக்கிறேன்

எனது பால்யத்தில் கிராமத்தில் மின்சார வசதியில்லாத வீடுகள் நிறைய இருந்தன. எனது பள்ளி நண்பன் வீட்டில் காடா விளக்கு தான் எரிவது வழக்கம். அவனது வீட்டைத் தேடிப் போகும் போது தெரு இருண்டு போயிருக்கும். கிராமத்தினுள் கவியும் இரவு அடர்த்தியானது.

அந்த இருட்டு பழகிப் போன கண்களுடன் அதற்குள்ளாகவே வீட்டு வேலைகள் செய்வார்கள். சமையல் நடக்கும். சோறு தயாராவதற்குள் பையன்கள் உறங்கியே விடுவார்கள்.

சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் மனிதர்கள் அழகாகத் தோன்றுவார்கள். மின்சாரம் வந்தபிறகு அந்த அழகு காணாமல் போய்விட்டது.

மார்க்வெஸின் பால்ய காலம் அவரது எழுத்திற்கு ஊற்றுக்கண்ணாக இருந்திருக்கிறது. தாத்தாவிடம் வளரும் பிள்ளைகள் அனுபவிக்கும் சுதந்திரத்தைப் பெற்றோருடன் வளரும் பிள்ளைகள் அனுபவிப்பதில்லை.

சேவல் சண்டையில் ஆர்வம் கொண்ட மார்க்வெஸின் தாத்தா அவரது கதையில் மறக்கமுடியாத கதாபாத்திரமாகத் தோன்றுகிறார்.

சிறுவயதில் மரங்களைப் பார்க்கும் போது அது பிரம்மாண்டமாகவும் விநோதமாகவும் தோற்றமளிக்கும். ஆனால் அதே மரங்களை இருபது வயதில் காணும் போது இதைக் கண்டா ஆச்சரியம் அடைந்தோம் என்று தோன்றும். பால்ய வயது இப்படி விநோத மயக்கங்களால் நிரம்பியது.

யானையைப் போல மார்க்வெஸ் நினைவாற்றல் கொண்டிருந்தார். அவருக்குப் பால்ய வயதில் நடந்த எல்லா நிகழ்வுகளும் துல்லியமாக நினைவிலிருந்தன என்கிறார் எட்வர்டோ மார்சலெஸ்.

மார்க்வெஸ் பார்த்த முதல் திரைப்படம் எது. அதை எங்கே பார்த்தார் என்பதைக் கூடச் சில்வானா கண்டறிந்து எழுதியிருக்கிறார். பல்வேறு நினைவின் சதுரங்களைக் கொண்டு மார்க்வெஸின் உருவத்தை உருவாக்கிக் காட்டுகிறார் சில்வானா.

மார்க்வெஸின் நாவல்களில் உள்ள குறியீடுகளைத் திறக்கும் சாவி தன்னிடம் உள்ளதாக அவரது அம்மா கூறுவது வழக்கம். காரணம் எந்தக் கதையில் வரும் கதாபாத்திரத்தையும் நிஜத்தில் அவர் யார் என்று மார்க்வெஸின் அம்மா உடனே சொல்லிவிடுவார்.

யதார்த்தவாத கதைகளில் தான் உண்மை மனிதர்கள் அப்படியே சித்தரிக்கப்படுவது வழக்கம். ஆனால் மாய யதார்த்தக் கதைகளிலும் நிஜமான மனிதர்களே கதாபாத்திரமாக மாறியிருக்கிறார்கள் என்பது வியப்பானதே.

பால்சாக்கையும் வில்லியம் பாக்னரையும் விரும்பிப் படித்த மார்க்வெஸ் ரஷ்ய இலக்கியவாதிகளிடமிருந்தே சொந்த ஊரின் வாழ்க்கையை நுட்பமாகக் காணத்தெரிந்தால் அதற்குள்ளாகவே சகல விஷயங்களும் அடங்கியிருப்பதை அறிய முடியும் என்பதை அறிந்திருக்கிறார்.

உண்மையில் ஒரு திரைப்பட இயக்குநராகவே மார்க்வெஸ் விரும்பினார். பத்திரிக்கையாளராகப் பணியாற்றிய காலத்திலே சினிமா மீது தீவிர விருப்பம் கொண்டு திரைப்பள்ளிகளில் குறுகிய கால வகுப்பில் சேர்ந்து திரைக்கலை பயின்றிருக்கிறார். நேரடியாகத் திரைப்படங்களில் பணியாற்றியதும் உண்டு. அவரது கதைகள் படமாக்கப்பட்டதே அன்றி அவர் திரைப்பட இயக்குநராகவில்லை. ஆனால் தற்போது அவரது மகன் ஹாலிவுட்டில் திரைப்பட இயக்குநராகப் பணியாற்றுகிறார்

மார்க்வெஸின் மனைவி மெர்சிடிஸை பதின்வயதிலிருந்தே அவருக்குத் தெரிந்தது. மெர்சிடிஸிற்க்கு பதினோறு வயதாக இருந்தபோது ஒரு நாள் அவளைத் தேடி சென்றார் மார்க்வெஸ். அவள்  தந்தையின் பார்மசி ஷாப்பில் இருந்தாள். அவளிடம் நான் பெரியவனாகி உன்னைத் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லியிருக்கிறார்.

பதின்வயதில் துவங்கிய அந்தக் காதல் 1958ல் திருமணமாக நிறைவு பெற்றது. பாரீஸில் பத்திரிக்கையாளராக மார்க்வெஸ் வசித்த நாட்களில் அவரது அறையில் மெர்சிடிஸின் புகைப்படம் மட்டுமே இருந்திருக்கிறது. மெர்சிடிஸின் தந்தை மார்க்வெஸ் குடும்பத்தை விடவும் வசதியானவர். அவரது மூதாதையர்கள் துருக்கியில் வாழ்ந்தவர்கள். ஆகவே அந்தக் கலப்பு அவர்கள் ரத்தவழியாகத் தொடர்ந்தது.

One Hundred Years of Solitude நாவலை மார்க்வெஸ் எழுதிக் கொண்டிருந்த நாட்களில் வாரம் தோறும் தனது நண்பர் இம்மானுவேல் கார்பல்லோவை அழைத்துக் கையெழுத்துப் பிரதிகளை வாசிக்கச் செய்வது வழக்கம். அவர் தான் இந்த நாவலின் முதல் வாசகராக இருந்திருக்கிறார். ஒவ்வொரு சனிக்கிழமையும் மார்க்வெஸ் கார்பல்லோவ சந்தித்து நாவலின் பிரதிகளைத் தந்து வாசிக்க வைத்திருக்கிறார். சிறுதிருத்தங்களைச் சொன்னதைத் தவிர வேறு எதையும் நான் சொல்லவில்லை. நாவல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்கிறார் இமானுவேல்.

இந்த நாவலை எழுதுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்று பிரிட்டானியக் கலைக்களஞ்சியத்தை விலை கொடுத்து வாங்கியிருக்கிறார் மார்க்வெஸ். அதன் உதவியைக் கொண்டே நாவலின் பல்வேறு இனங்கள். இடங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.

One Hundred Years of Solitude நாவல் ஒரு நதியைப் போல மகாந்தோவின் நிலப்பரப்பில் ஒடிக் கொண்டிருக்கிறது. இந்த நாவலை வாசிப்பதன் வழியே நிலத்தின் தொன்மை நினைவுகளை, ஊரின் விசித்திர மனிதர்களை, காலமாற்றம் ஏற்படுத்திய அகபுற விளைவுகளைத் துல்லியமாகக் காணமுடிகிறது. மார்க்வெஸ் எழுத்தின் வழியே ஒரு மாயநதியை உருவாக்கியிருக்கிறார் என்பது தான் சாதனை என்கிறார் பாட்ரிசியா

மார்க்வெஸ் நோபல் பரிசு பெறுவதற்காக ஸ்வீடன் சென்ற போது கொலம்பியாவிலிருந்து நடனக்கலைஞர்கள். இசைக்கலைஞர்கள். நண்பர்கள் புகைப்படக்கலைஞர்கள். குடும்ப உறுப்பினர்கள் என 150 பேர் கொண்ட குழு விழாவில் கலந்து கொண்டிருக்கிறது. இவர்களுக்காகத் தனிவிமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களின் மொத்த செலவினையும் கொலம்பியா அரசே ஏற்றுக் கொண்டிருக்கிறது

மார்க்வெஸிற்கு நடந்த கொண்டாட்டங்களைக் கண்ட ஸ்வீடிஷ் பத்திரிக்கைகள் இதுவரை நோபல் பரிசு பெற்ற எவரும் இப்படிக் கொண்டாடப்பட்டதில்லை என்று வியந்து எழுதியிருக்கிறார்கள்.

ஒரு எழுத்தாளராக மார்க்வெஸ் போலச் சகல கௌரவமும் அங்கீகாரமும் விருதுகளும் பெற்ற இன்னொரு எழுத்தாளரைக் காணமுடியாது. இன்று அவர் லத்தீன் அமெரிக்காவின் கலாச்சாரப் பிம்பமாக மாறியிருக்கிறார். அவரது சொந்த ஊர் சுற்றுலா ஸ்தலமாக மாறியுள்ளது. உலகமெங்குமிருந்து பயணிகள் அதைத் தேடி வந்து பார்க்கிறார்கள். அவரது பிறந்தநாளில் ஒன்றுகூடி அவரது கதைகளை வாசிக்கிறார்கள்.

கொலம்பியாவின் ஒரு சிறிய கிராமத்திலிருந்து உலகின் ஒப்பற்ற எழுத்தாளராக உருமாறியது வரையான அவரது வாழ்க்கை பயணத்தைப் பலரது நினைவுகளின் வழியே இந்நூலில் தெரிந்து கொள்கிறோம்.

உண்மையில் அவரது நாவலை விடவும் அதிகத் திருப்பங்கள் கொண்டதாக அவரது வாழ்க்கை உள்ளது. ஏதோ ஒரு மாயக்கம்பளம் அவரைத் தாங்கிக் கொண்டு உலகம் முழுவதும் சுற்றிவரச் செய்திருக்கிறது

அரகாடகாவில் வசித்த மார்க்வெஸ் நோபல் பரிசு வரை சென்றபோது ஏன் இந்திய எழுத்தாளர்களால் முடியவில்லை. முக்கியக் காரணம் அவர்களை முன்னெடுத்துச் செல்லும் கல்வித்துறை, கலாச்சார அமைப்புகள் இல்லை. கொலம்பியா தனது தேசத்தின் முக்கியப் படைப்பாளி என மார்க்வெஸை முன்னிறுத்தியது போல இந்தியாவில் எவருக்கும் நடைபெறவில்லை. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வசித்த லத்தீன் அமெரிக்கப் பேராசிரியர்கள். விமர்சகர்கள். மொழிபெயர்ப்பாளர்கள் இது போன்ற படைப்பாளிகளை உலகின் கவனத்திற்குக் கொண்டு செல்வதைத் தனது கடமையாகக் கருதினார்கள். முன்னணி பதிப்பகங்கள் இதற்குத் துணை நின்றன. ஆனால் இந்திய எழுத்தாளனின் எல்லை என்பது அவனது மாநிலத்தினைத் தாண்டுவதற்குள் அவனது ஆயுள் முடிந்துவிடுகிறது. ஆங்கிலத்தில் நேரடியாக எழுதுகிறவர்கள் மட்டுமே சர்வதேச கவனத்தையும் விருதுகளையும் பெறமுடிகிறது.

இந்தியாவில் நோபல் பரிசிற்கு தகுதியான படைப்பாளிகள் இருக்கிறார்கள். சர்வதேச அளவில் கொண்டாடப்பட வேண்டிய முக்கிய படைப்புகள் நிறையவே இருக்கின்றன. ஆனால் சந்தையால் புத்தகங்களின் விதி தீர்மானிக்கப்படும் சூழலில் இவை அறிந்தே புறக்கணிக்கபடுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசிற்கான பட்டியலில் யார் இருக்கிறார்கள் என்று விவாதிக்கும் இந்திய ஆங்கில இதழ்கள் எந்த இந்திய எழுத்தாளர் கவனிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று எழுதுவதில்லை. யாரை தாங்கள் முன்னிறுத்துகிறோம் என்று அறிமுகம் செய்வதில்லை. தமிழில் நோபல் பரிசு பெற்றது ஒரு செய்தி மட்டுமே. அதுவும் சம்பிரதாயமான வாழ்த்துகள் மற்றும் அறிமுகத்தை தாண்டி எதுவும் நடைபெறுவதில்லை.

சீனாவும் ஜப்பானும் இது போன்ற சூழலிலிருந்த போது தானே முனைந்து தங்களின் சமகாலப் படைப்பாளிகளைச் சர்வதேச அரங்கில் கவனம்பெற பல்வேறு வழிகளைக் கையாண்டன. பெரும் தொழில் நிறுவனங்கள் இதற்கான பொருளாதார உதவிகளைச் செய்தன. இன்று சர்வதேச இலக்கிய அரங்கில் சீன ஜப்பானியப் படைப்புகள் தனியிடம் பிடித்துள்ளன. உலகின் எந்த இலக்கிய விருதாக இருந்தாலும் அதன் நெடும் பட்டியலில் சீன ஜப்பானியப் படைப்புகள் இல்லாத பட்டியலே இல்லை.

லத்தீன் அமெரிக்க முக்கியப் படைப்பாளிகள் பலரும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு தமிழ் எழுத்தாளர் கூட ஸ்பானிய இலக்கிய உலகிற்கு அறிமுகமாகவில்லை. அவர்கள் அறிந்த ஒரே இந்திய இலக்கிய ஆளுமை தாகூர் மட்டுமே.

One Hundred Years of Solitude நாவல் எழுதுகிற நாட்களில் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் மாதம் தோறும் கடன் வாங்கி வாழ்ந்திருக்கிறார். இன்று அவருக்குக் கோடி கோடியாகச் சொத்துகள் இருக்கின்றன. சொந்தமாக ஒரு பத்திரிக்கை இருக்கிறது. நோபல் பரிசு அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது. இந்தப் புத்தகத்தில் பலரும் அதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.

Gregory Rabassa. Edith Grossman போன்ற மொழிபெயர்ப்பாளர்களே மார்க்வெஸ் சர்வதேச அளவில் கவனம் பெறவும் நோபல் பரிசு பெறவும் முக்கியக் காரணமாக இருந்தார்கள். நமக்குத் தேவை இப்படியான மொழிபெயர்ப்பாளர்களே.

ஒரு நாவலின் விதி எழுத்தாளனின் விதியை விடவும் மர்மமானது. அது எங்கே எப்போது அங்கீகரிக்கப்படும். கொண்டாடப்படும். உயரிய கௌரவத்தைப் பெறும் என்று யாராலும் கணித்துச் சொல்லிவிடவே முடியாது. மார்க்வெஸிற்கு நடந்ததும் அது போன்றதே.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 28, 2021 02:22
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.