அதிகாரமும் கலங்கலும் – கடிதம்

ஆசிரியருக்கு,


பிரிட்டிஷ் வரும் முன் இங்கு கிராமிய சமுதாயங்கள் இருந்தன, ஆனால் அவை ஆண்டான் அடிமை மேல் தானே இருந்தது. அந்த அமைப்பை உடைக்கும் போது, அந்த அமைப்பின் உள்ளே இருந்த வளங்களும் உடைந்து போயின. ஆண்டான் அடிமைக்கு மாற்றாய் ஜனநாயகம் வந்தபொழுது அது வணிக நுகர்வினை முன் வைத்தே வளர்ந்தது. அதில் எதுவும் புனிதம் இல்லை. பல்லாயிரம் கைகள் அடியில் இருந்து தரையைப் பிளந்து மேல் வரும்போது கண்ணால் எதையும் காண இயலவில்லை, கையின் வீச்சில் கிடைத்தவை எல்லாம் நுகர்வின் பசிக்கு உணவு. அங்கு நுகர்வின் பசியே முக்கியம். பிய்த்துத் தின்பது எதுவெனக் கைகளால் காண இயலாது. வளங்கள் முற்றிலும் சுரண்டப்பட்டன. நம்மிடம் இருந்து நாமே சுரண்டுகிறோம். விழிப்புணர்வும், பகுத்தறிவும் காந்திக்குப் பிறகு எடுத்துச் செல்லப்படவில்லை. அதற்குப் பிறகு வந்த காந்தியர்கள் காந்தியின் அளவுக்கு நாடு முழுதும் மக்கள் மனத்தைத் தொட இயலவில்லை.


நிலஉடைமை சமுகமே மேலிருந்து கீழ் என்ற அமைப்பு வழி உள்ளது. கீழ் உள்ளவர் உணர்வும், இருப்பும் பொருளியல் நோக்கில் பார்க்கப்பட்டால் ஒழிய அந்த அமைப்பு நிற்க இயலாது. பிரிட்டிஷ் வரும்போது இங்கு இருந்த சூழல் ஒரு நில உடைமைச் சமூகம். அதை அவர்கள் அப்படியே கையாண்டனர். அவர்கள் வியாபாரிகள். எது குறைந்த முதலீட்டில் லாபமோ அது தேர்ந்தெடுக்கப்பட்டது. துவக்க கால காங்கிரசே நில உடைமை சமூகம் மேல் நின்று இருந்தது. காந்தி ஒரு ஜனநாயக ஆட்சி இங்கு வர மக்களை பயிற்சி கொடுத்தார்.


பூரண மக்களாட்சியின் வெற்றி மக்களின் விழிப்புணர்வில்தான் இருக்கிறது. மக்கள் தங்களை குடிமை சமூகமாய் உணரத் தவறும்போது அது முழுமை அடைவதில்லை. ஆனால் பண்டைய கிராம சமுதாயங்கள் குடிமை உணர்வு கொண்டிருந்தன, ஆனால் அது மேலிருந்து கீழ்தான். அந்த சமுதாயம் சமத்துவ சமுதாயம் இல்லை, அதில் இருந்த சில சமூக மக்கள், மக்களாகவே நினைக்கப்படவில்லை. ஆனால் கிராமிய சமுதாயம் கூட்டாய் இயங்கியது. கிட்டத்தட்ட சீன தேசம் போல. சிறிய அலகில். ஒரு குறிப்பிட்ட அதிகார மட்டம் மேலிருந்து மற்ற அனைவரது நலத்தையும் பேணுவார்கள். அது ஒருவருக்கு ஒரு ஓட்டு எனும் ஜனநாயகத்துக்கு எதிரானது. திண்ணியம், பாப்பா பட்டி போலவும் அது இருக்கவும் நிறைய வாய்ப்பு உள்ளது.


நீங்கள் பல முறை சொன்னது போல எந்த ஒரு ஆதிக்கவாதியின் செயலும் மக்களின் அங்கீகாரதில்தான் உள்ளது. இப்போதைய தனி நபர் நுகர்வின் வெறியும் மக்களின் அங்கீகராதின் மேல்தான் உள்ளது. கூட்டு சமூகம் முதலில் உடைந்தது, கூட்டுக் குடும்பங்கள் குறைந்து போயின. அனைவரும அதிக பட்ச தனி அடையாளம் காண முன் செல்கிறார்கள். எது என் தனி இடம் , இங்கு நான் மட்டுமே என்ற இடம் நோக்கி போகிறோம். இது ஒரு வழியில் வணிக நுகர்வினோடு தொடர்புடையது. அது எப்படி என்று யோசித்து பார்க்கின்றேன். இன்னும் தெளிவு இல்லை.


அண்ணா ஹசாரே சிறிய கிராமத்தில் கொண்டு வந்த மாற்றங்கள் ஜனநாயகத் தன்மை உள்ளது ,ஆனால் அந்த கிராமத்தில் வணிக நுகர்வு மட்டுறுத்தப்பட்டு்ள்ளது. அதைப் பரவலாக நடைமுறைப்படுத்த முடியுமா எனத் தெரியவில்லை. ஒருவர் குடிப்பது என் தனி மனித உரிமை என வாதிடலாம், அதைக் கூட்டு சபை முடிவெடுக்கக் கூடாது என முன் வைக்கலாம், இன்று குடி தடுக்கும் சபை நாளை கலப்பு மணமும் தடுக்கலாம் என்ற வாதம் முன் வைக்கப்படலாம். முழுக்க குடிமை விழிப்புணர்வு இருக்கும் போது அந்த வகைக் கட்டுபாடு கிராம சபையால் நிராகரிக்க படும்.


பிரிட்டிஷ் ஆட்சி இல்லாதிருந்தால் என்னவாக இருந்திருக்கும் என பல நேரம் கேள்வி வருகின்றது. இல்லாதிருந்தால் அரசியல் ரீதியாக இந்த நிலத்தை ஒருங்கிணைக்க காந்தி , காங்கிரஸ் போல அமைப்புகள் எழுந்திருக்குமா? மக்களாட்சியின் விதைகள் விழுந்திருக்குமா? அரசியல் ரீதியாக இந்த நிலம் ஒருங்கிணைக்கப் படாமல் இருந்திருந்தால் இன்னும் கேடுதான் இருந்திருக்குமோ எனக் கேள்வி வருகிறது. நீர் வளம்,நில வளம், கலை வளம் சுரண்டப்படுவது உண்மைதான். ஆனால் பல சமூக அவலங்களும் பெருமளவு குறைந்து இருக்கின்றன . இதுதான் சிறந்தது என சொல்லவில்லை. அதற்கு இது மேல் என படுகின்றது. பண்டைய இந்திய கிராம அமைப்பின் மேல் ஜனநாய தன்மை உண்டாக்கித் தன் நிறைவும்,சமத்துவமும் கொண்ட சமுதாயம் வந்திருந்தால் பூரண நலமே. ஆனால் சாத்தியப்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை.

இன்றைய அறிவியல் உலகத்தையே ஒரு கிராமமாக சுருக்க முயல்கிறது. இந்த அறிவியல் வணிக நுகர்வினை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் தளத்தில் எப்படி விழிப்புணர்வினை உண்டாக்குவது. இந்த அறிவியலை மக்களாட்சித் தத்துவதின் நிறைகளை நோக்கி எப்படி பயன்படுத்துவது? உச்ச பட்ச நுகர்வின் விளிம்புகளின் கேடுகளை மக்களை எப்படி உணரச் செய்வது? இந்த இடத்தில் இந்தியம் என்பதை விட மானுடம் என்ற அளவில் சிந்தையை விரிவாக்குவதே மேலும் பலன் தரும் எனப் படுகின்றது. இதெல்லாம் நீங்கள் பல முறை பல வார்த்தைகளில் சொன்னது தான் , அதைப் பற்றி யோசிக்கையில் இந்தக் கேள்விகள் வருகின்றன.


-

நிர்மல்


தொடர்புடைய பதிவுகள்

கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -3
காந்தியும் கடவுளும்
காந்தியும் லோகியாவும்
கடிதங்கள்
பாரதி விவாதம் 8 — விமர்சனம் எதற்காக ?
காந்தி-சுபாஷ் , கடிதம்
கேள்விகள்
காந்தி,அனந்தமூர்த்தி
காந்தியின் எதிரிகள்
உப்பும் காந்தியும்
உப்பு,மேலும் கடிதங்கள்
உப்பு-கடிதங்கள்
உலகின் மிகப்பெரிய வேலி
காந்தியும் மேற்கும் -குகா
நைபால்
அண்ணா ஹசாரே- காந்திய போராட்டமா?
அண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?
காந்தியின் தேசம்
அண்ணா ஹசாரே மீண்டும்
காந்தியும் அரட்டையும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 07, 2012 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.