அவள் ஒரு பொம்மை.
இத்தாலிய எழுத்தாளரான தொம்மோஸொ லேண்டோல்ஃபி கோகோலின் மனைவி என்றொரு சிறுகதையை எழுதியிருக்கிறார். உலகின் சிறந்த மாய யதார்த்த வகைக் கதைகளில் ஒன்றாக இக்கதை கருதப்படுகிறது. Gogol’s Wife and Other Stories என்ற தொகுப்பில் இக்கதை உள்ளது. இத்தாலியின் காப்கா என்றே லேண்டோல்ஃபியை அழைக்கிறார்கள்.

தொம்மோஸொ லேண்டோல்ஃபி புளோரன்ஸ் பல்கலைக்கழகத்தில் ரஷ்ய மொழி மற்றும் இலக்கியம் பயின்றார், 1932 இல் கவிஞர் அன்னா அக்மதோவாவின் கவிதை பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். சர்ரியலிசம் மீது அதிக விருப்பம் கொண்டிருந்தார். அதன் பாதிப்பை இந்தக் கதையில் காண முடிகிறது. இத்தாலிய இலக்கிய உலகினை விட்டு ஒதுங்கியே வாழ்ந்த லேண்டோல்பி அதிகம் எழுதவில்லை.
நிகோலாய் கோகோல், தஸ்தாயெவ்ஸ்கி மற்றும் புஷ்கின் மீது பெரும் விருப்பம் கொண்டிருந்த லேண்டோல்பி தஸ்தாயெவ்ஸ்கி போலவே சூதாட்டத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். பல பெண்களுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்த போதும் கோகோல் திருமணம் செய்து கொள்ளவில்லை ஒரினச்சேர்க்கையாளர் என்று கருதப்பட்ட கோகோல் அதை மறைத்துக் கொண்டே வாழ்ந்து வந்தார் என்கிறார்கள். The Sexual Labyrinth of Nikolai Gogol என்றொரு புத்தகம் வெளியாகியிருக்கிறது

நாற்பத்திரெண்டே வருஷங்கள் வாழ்ந்த கோகோல் இது போல மூக்கு மட்டுமே தனியே பயணம் செய்வதாக ஒரு வியப்பூட்டும் கதையை எழுதியிருக்கிறார். கோகோலின் பேய்கதைகளும் பிரபலமானவை.
இந்தக் கதையில் கோகோல் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். உண்மையில் அவள் ஒரு ரப்பர் பலூன். தேவையான அளவுக்கு அவள் உடலை ஊதிப் பெருக்க வைத்துக் கொள்ள முடியும். பலூன் என்பதால் அவள் எடையற்றவளாக இருக்கிறாள். அவளை வெளியாட்கள் எவரும் பார்த்தது கிடையாது. எப்போதும் நிர்வாணமாக இருக்கக்கூடிய அந்தப் பலூன் உடல் கொண்டவள் உடலின்பத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறாள்.
பலூன் என்ற போதும் நிஜப்பெண்ணின் உடல் நிறமும் வாளிப்பும் அவளிடமிருந்தது. அவளது தலைமயிர் அவ்வப்போது மாறிக் கொண்டேயிருக்கிறது. தனக்கு எவ்விதமாகக் காண விருப்பமோ அப்படி அவளைத் தயார் செய்து கொள்வார் நிகோலாய். அவளுக்கு ஒரு பெயரும் இருந்தது. பம்ப் மூலம் காற்றடித்து அவள் உடலைப் பெரிதாக்கிக் கொள்வார்.
அவளுடன் நடைபெற்ற இரண்டு நிகழ்வுகளைக் கதை விவரிக்கிறது முதல் நிகழ்வில் அவள் மலஜலம் கழிக்க அவர் உதவி செய்ய வேண்டும் என்று அவள் அழைப்பதைப் பற்றியது. இரண்டாவது அவள் மீது சலிப்புற்று இனி தேவையில்லை என அழிக்க முற்படுவது பற்றியது.
காற்றடைக்கப்பட்ட பலூனாக ஒரு பெண்ணைச் சித்தரிப்பதன் மூலம் அதை ஒரு குறியீடாக மாற்றுகிறார் லேண்டோல்ஃபி. ஒரு பக்கம் கோகோலை விமர்சனம் செய்வதற்காக இப்படி ஒரு குறீயீட்டினை உருவாக்கியிருக்கிறார். இன்னொரு பக்கம் பண்பாடு ஒரு பெண்ணை எப்படி ஒடுக்கியுள்ளது என்பதை அடையாளப்படுத்தவும் இப்படி ரப்பர் பலூனாக உருவாக்கியிருக்கிறார்.
இந்தக் கதையைப் படிக்கும் போது விலா சாரங்கின் ஒரு சிறுகதை நினைவில் வந்து போனது. அதில் பாதி உடல் கொண்ட பெண் வருகிறாள். கற்பனையான தீவு ஒன்றில் மாட்டிக் கொண்ட ஒருவனின் அனுபவத்தை விவரிக்கும் கதையது.
Lars and the Real Girl. என்ற திரைப்படம் 2007ல் வெளியானது. அது இந்தக் கதையின் பாதிப்பில் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.
பகடியான எழுத்தின் மூலம் அறியப்பட்ட கோகோலைப் பற்றி இப்படி ஒரு விசித்திரக் கதையை எழுதியிருக்கிறார் தொம்மோஸொ. இதிலும் நையாண்டி கூடுதலாகவே வெளிப்படுகிறது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
