யானையின் சித்திரம்.

ஆ,மாதவனின் புனலும் மணலும் நாவலில் ஒரு அபூர்வமான காட்சி விவரிக்கப்பட்டிருக்கிறது. ஆற்றிலிருந்து மணல் எடுக்கும் தொழில் பற்றிய இந்த நாவல் சூழலியல் பிரச்சனையை அடையாளப்படுத்திய முன்னோடி நாவலாகும். திருவனந்தபுரத்திலுள்ள கோட்டையாறு என்ற ஆற்றிலிருந்து மணல் எடுக்கும் அங்குசாமியின் வாழ்க்கையோடு அந்தத் தொழிலில் ஈடுபடும் மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கை பாடுகளையும் மிக அழகாக மாதவன் எழுதியிருக்கிறார்.

இந்த நாவலில் ஆற்றில் மணல் அள்ளப்பட்ட காரணத்தால் பெரும் பள்ளம் ஏற்படுகிறது. மழைக்காலத்தின் ஒரு நாள் ஆற்றில் தண்ணீர் பெருகியோடும் போது குளிப்பதற்காக வந்த பெண் யானை ஒன்று இந்தப் பள்ளத்தில் சிக்கிக் கொள்கிறது. யானையின் கால் மணலில் மாட்டிக் கொண்டுவிடவே அதை மீட்க உதவி செய்ய வேண்டும் என்று பாகன் கூக்குரலிடுகிறான்

மக்கள் திரளுகிறார்கள். ஆண்யானை ஒன்றின் மூலம் கயிறு கட்டி பெண் யானையை மீட்க முயல்கிறார்கள். ஆனால் மீட்பது எளிதாகயில்லை.

ஆற்றில் குதித்து யானையின் காலடிக்குச் சென்று மணலை அகற்ற வேண்டும் என்று யோசனை சொல்கிறார்கள்.

யானையின் காலடியை நெருங்கிப்போய் மணலை அகற்ற முயன்றால் யானை மிதித்துக் கொல்லவும் கூடும். ஆகவே உயிர் போகும் ஆபத்து அதிகம். ஆயினும் துணிந்து இளைஞர் சிலர் ஆற்றில் குதித்து யானையை மீட்கிறார்கள்.

இந்தக் காட்சியினை மாதவன் மிகவும் நேர்த்தியாக, உணர்வுப்பூர்வமாக எழுதியிருக்கிறார்.

பள்ளத்தினுள் சிக்கிய யானையின் பரிதவிப்பு. மீட்பவர்களின் போராட்டம். வேடிக்கை பார்ப்பவர்களின் ஆர்வம். இந்தப் பள்ளம் இருப்பதை அறியாமல் போன பாகனின் கவலை படிந்த முகம். யானையை மீட்பதை வேடிக்கை பார்க்கும் பெண்கள், சிறார்கள் என அந்தக் காட்சி முழுமையாக ஒரு ஆவணப்படம் போலச் சித்தரிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட யானைக் காலை உதறி எழுந்து கரையேறும் போது தண்ணீரில் தடுமாறி விழுகிறது. அதில் தெறிக்கும் தண்ணீர் அங்கே நின்றிருந்தவர்களை நனைக்கிறது.

இந்தக் காட்சியினை வாசிக்கும் நம் மீதும் அந்த ஆற்றுத் தண்ணீர் அடிக்கிறது. கச்சிதமான வார்த்தைகள், தேர்ந்த நடை மூலம் அந்தக் காட்சியைக் கண்முன்னே உருக் கொள்ள வைக்கிறார் மாதவன்.

ஆற்றில் பள்ளம் ஏற்படக் காரணமாக இருந்த அங்குசாமி அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறார். ஆனால் யானை உருவாக்கிய அதிர்வில் தடுமாறி விழுந்து கையில் அடிபடுகிறார். அவரது குற்றத்திற்கான தண்டனை போலவே அந்தக் காட்சி அமைகிறது

நாவலில் மறக்கமுடியாத கதாபாத்திரம் பங்கி. அவள் அங்குசாமியின் வளர்ப்பு மகள். அவருக்குப் பங்கியைப் பிடிக்கவில்லை. அவளைப் பார்த்தாலே எரிந்து விழுகிறார். அவளோ அவரைத் தந்தையாகவே நினைக்கிறாள். அன்பு செலுத்துகிறாள். என்றாவது ஒரு நாள் தன் அன்பை அங்குசாமி புரிந்து கொள்வார் என்று நம்புகிறாள். நாவலின் முடிவில் பங்கி ஆற்றோடு போய்விடுகிறாள். சந்தோஷமே அறியாத பங்கியின் வாழ்க்கை அவலமானது. அவளது கதாபாத்திரம் மிகவும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

பிழைப்பதற்காகக் கேரளா சென்ற அங்குசாமி எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக கேரள மண்ணில் வேர் ஊன்றி அந்தஸ்து பெறுகிறார். மணல்காண்டிராக்டராக உயருகிறார் என்பதை ஒரு தளத்தில் விவரிக்கிறார் மாதவன். மற்றொரு தளத்தில் தங்கம்மையின் அழகில் மயங்கி அவளுடன் வாழுத்துவங்கி அவளது மகள் பங்கியின் வளர்ப்புத் தந்தையாகிறார் அங்குசாமி என்பதைச் சொல்கிறார்.

தங்கம்மைக்கு முன்னதாகப் போலீஸ்காரனுடன் கல்யாணம் ஆகியிருந்தது. அவளுடன் இரண்டு மாதங்கள் மட்டுமே அந்தப் போலீஸ்காரன் வாழ்ந்து இறந்து போய்விடுகிறான். அவன் இறந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தான் அங்குசாமிக்கு அவள் மீது ஈர்ப்பு உருவாகிறது.

பெரிய பற்களும் கோரையான தலைமுடியும், குள்ளமான தோற்றமும் கொண்ட பங்கியை பார்த்தாலே அங்குசாமிக்குக் கோபம் வந்துவிடுகிறது. அவளோ கடின உழைப்பாளி. தந்தையின் பணிகளுக்கு உடனிருந்து உழைக்கிறாள். அவருக்கான பணிவிடைகளைச் செய்கிறாள். தான் ஒரு போதும் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்கிறாள் பங்கி. தாயை இழந்த அவளுக்கு வளர்ப்புத் தந்தையை விட்டால் வேறு துணை இல்லை.

யானையை மீட்கும் போது ஏற்பட்ட காயத்தில் அங்குசாமி வீட்டிலே இருக்கிறார். பங்கி அவருக்குத் தேவையான உதவிகள் அத்தனையும் செய்கிறாள். மெல்ல அவருக்குப் பங்கியின் மீதான வெறுப்புக் குறைகிறது. ஆனால் அகலவில்லை

ஆற்றின் வெள்ளம் வரும் போது அவர்கள் ஒரு நாட்டுப்படகில் போகிறார்கள். படகு கவிழ்ந்து போகிறது. உயிர்பிழைப்பதற்காகப் போராடுகிறார்கள். அப்போது அங்குசாமியின் கால்களைப் பங்கி பற்றிக் கொள்கிறாள். அவளை உதறித் தள்ளி அங்குசாமி கரையேறுகிறார். அவரது இந்தச் செயல் தான் பங்கியின் மரணத்திற்குக் காரணமாகிறது

மனிதர்கள் தங்களின் சுயலாபங்களுக்காக ஆற்றை அழிக்கிறார்கள். இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை மாதவன் அழுத்தமாகத் தெரிவிக்கிறார்.

திருவனந்தபுரம் சாலைத் தெருவில் செல்வி ஸ்டோர் என்ற பாத்திரக் கடையை நடத்தி வந்தவர் ஆ.மாதவன். இரண்டு முறை அவரை நேரில் சென்று பார்த்திருக்கிறேன். தனது சிறுகதைகள் மற்றும் நாவல்கள் மூலம் வசீகரமான எழுத்தை உருவாக்கியிருந்தார் ஆ.மாதவன்.

சாலைத் தெருவின் சித்திரம் இந்த நாவலிலும் வருகிறது. சொல்லித் தீராத கதைகள் கொண்ட அந்த வீதியைத் தனது எழுத்துகளின் மூலம் அழியா சித்திரங்களாக்குகிறார் மாதவன்.

தமிழும் மலையாளமும் கலந்த நாவலின் உரையாடல்கள் இனிமையாக விளங்குகின்றன. கதாபாத்திரங்களின் நுண்மையான சித்தரிப்பும் ஆற்றின் போக்கையும் கரையோர வாழ்க்கையினையும் விவரிப்பதில் மாதவன் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்.

புரிந்து கொள்ளப்படாத அன்பையும் உறவையும் அதிகம் எழுதியவர் ஆ.மாதவன். இந்த நாவலில் வரும் ஆறும் பாங்கியும் ஒன்று போலானவர்கள். இருவரும் உலகால் புரிந்து கொள்ளபடாதவர்கள். பயன்படுத்தப்பட்டவர்கள். இந்த நாவலை வாசிக்கும் போது மாதவனின் பாச்சி சிறுகதை மனதில் வந்து கொண்டேயிருக்கிறது. மிகச்சிறந்த கதையது. அதில் வரும் பாச்சி பாங்கியின் இன்னொரு வடிவமே

சிறந்த தமிழ் நாவல் வரிசையில் ஆ.மாதவனின் புனலும் மணலும்  என்றும் தனியிடம் கொண்டிருக்கும். 

••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 10, 2021 00:53
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.