காந்தியும் பிராமணர்களும்

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெ அவர்களுக்கு,

வணக்கம். 1940களுக்கு பிறகு காந்தி கலப்பு திருமணங்களை மிகவும் வற்புறுத்தினார் எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். வைதீக தமிழ் பிராமணர்களும் காந்தியை மிகவும் கொண்டாடியதாகத் தெரிகிறது. வர்ணாஸ்ரம தர்மம் இக்காலத்திற்கு ஏற்றதாக இருக்காது என நம்ப ஆரம்பித்த காந்தியை வைதீக தமிழ் பிராமணர்கள் ஏற்றுக்கொள்ள என்ன காரணம்?

ஹேராமில் கூட ஹேமமாலினி காந்திய முறைகளை உயர்த்தி பேசுவார். காந்தியை தமிழ் பிராமணர்கள் போற்றியதற்கு ராஜாஜியின் ஆளுமைக்கும் பங்கு உண்டா? ஒரே சமயத்தில் தலித்துகள், பிராமணர்கள் ஆதரவு காந்திக்கு எவ்வாறு கிடைத்தது? அந்த சமயங்களில் தனி மனித சிந்தனை பெரிதாக இல்லாததால் சாதிய அடையாளங்களை வைத்து இக்கேள்வி. பிழை இருந்தால் மன்னிக்கவும்.

கிருஷ்ணமூர்த்தி.

***

அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,

வைதீகத் தமிழ் பிராமணர்கள்  காந்தியை ஆதரித்தார்கள் என்பது பிழையான புரிதல். உண்மையில் இந்தியாவிலும் தமிழகத்திலும் நிகழ்ந்த முற்போக்கான மாற்றங்களை எதிர்க்கும் விசையாகவே அவர்கள் இருந்தனர். தியோசஃபிக்கல் சொசைட்டியின் அன்னிபெசண்ட் முதல் காந்தி வரை சீர்திருத்தம் பேசிய அனைவரையும் அவர்கள் எதிர்த்தனர். காந்தி முன்வைத்த ஆலயநுழைவு உட்பட அனைத்தையும் அவர்கள் சீரழிவாகவே பார்த்தனர்.

ஆனால் தமிழகத்தில் மதச்சீர்திருத்த எண்ணங்களும், சமூகமாற்றச் சிந்தனைகளும் பிராமணர்களிடையேதான் வலுவாக இருந்தன. தமிழகப் பண்பாட்டு மறுமலர்ச்சியில் முதன்மைப் பங்காற்றியவர்கள் அவர்களே. காங்கிரஸின் முன்னணித் தொண்டர்களாகவும் பிராமணர்களே இருந்தனர். அவர்கள் காந்தியை ஏற்றுக்கொண்டு போற்றினர்.

தமிழ் வைதிகப் பிராமணர்கள் காந்தியை எப்படி அணுகினர் என்பதற்கு ராதா ராஜன் எழுதிய Eclipse Of The Hindu Nation: Gandhi And His Freedom Struggle என்ற நூல் சான்று.  இந்நூல் சமீபத்தில், 2009ல் எழுதப்பட்டது. காந்தியைப் பற்றி அன்றுமுதல் தமிழ் வைதிகப் பிராமணர்களிடையே இருந்துவரும் கருத்துக்களை இந்நூல் தொகுத்துச் சொல்கிறது.

ஒரு நூலை வாசித்து நான் உண்மையாகவே குமட்டல் அடைந்தேன் என்றால், ஒரு மானுட உள்ளம் எந்த எல்லைவரை கீழ்மை அடையமுடியும் என்பதைக் கண்டேன் என்றால், அறிவுச்செயல்பாட்டின் அசிங்கத்தை அறிந்தேன் என்றால் இந்நூலில்தான். சாதிமேட்டிமைத்தனம், ஈவிரக்கமற்ற மானுடமறுப்பு, அறமென்னும் உணர்வே அற்ற மௌடீகம் ஆகியவற்றின் வெளிப்பாடு இந்நூல்.

பல்லாயிரம் பேரை கொன்றொழிக்கும் வெறுப்புகள் எங்கிருந்து ஊறி எழுகின்றன என்பதை இந்நூல் போல இன்னொன்று காட்டுவதில்லை. மானுட உள்ளத்தில் இத்தனை அழுக்கு இருக்கமுடியுமா என்னும் திகைப்பும், வரலாறெங்கும் இத்தகைய கீழ்மைகள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன என்னும் கையறுநிலையும் ஒருங்கே உருவாயின.

எந்த வகையான சரித்திரவுணர்வும் இல்லாமல், எல்லாச் செய்திகளையும் சலிக்காமல் திரித்தும் வளைத்தும் பேசும் இந்நூல் ஏதேனும் ஒருவகையில் அறிவியக்கத்தில் செயல்படும் ஒவ்வொருவரும் அருவருத்துக் கூசிச்சுருங்க வேண்டிய ஒன்று. ஆனால் இங்கே வைதிகப் பிராமணர்களில் எவரும் இந்நூலை வெளிப்படையாகக் கண்டித்து எதையும் எழுதியதில்லை. பலர் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

காந்தி இந்துராஷ்ட்ரம் உருவாகாமல் தடுக்க பிரிட்டிஷாரால் அனுப்பப்பட்ட கைக்கூலி என சித்தரிக்கும் இந்நூல் காஞ்சி சங்கராச்சாரியார் போன்றவர்களின் ஆசியுடன் வன்முறை வழியில் இந்துக்கள் விடுதலைப் போரை நடத்தியிருக்கவேண்டுமென வாதிடுகிறது. தீண்டாமை உள்ளிட்ட அனைத்தையும் ‘தர்மம்’ என நிறுவ முயல்கிறது.

இந்நூலை இந்துத்துவர்களில் ஒருசாரார் வெளிப்படையாகக் கொண்டாடி முன்வைக்க, பலர் ரகசியமாக வழிபடுகிறார்கள். இந்த அம்மையார் இந்துத்துவத் தரப்பாக நெடுங்காலம் தொலைக்காட்சிகளில் தோன்றியிருக்கிறார். இத்தனைக்கும் இந்த அம்மையார் தங்கள் குரலை ஒலிக்கவில்லை என ஆர்.எஸ்.எஸ் நிராகரித்திருக்கிறது.

காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி காந்தியின் ஆலயநுழைவு இயக்கத்தை எதிர்த்தபோது கல்கி கிருஷ்ணமூர்த்தி மிகக்கடுமையாக ஒரு தலையங்கம் எழுதினார். “நீங்கள் உலககுரு ஒன்றும் கிடையாது, ஒரு மடத்தின் தலைவர். உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு வாயைமூடுங்கள்” என்றார்.

தமிழகத்தின் புதுயுகத்தை உணர்ந்த பிராமணர்கள், காங்கிரஸ் ஆதரவாளர்கள், வைதிகத் தரப்புக்கு அளித்த பதிலாகவே அதைக் காணவேண்டும். பின்னாளில் காந்தி பெரும்புகழ்பெற்று, தேசப்பிதாவாக உயர்ந்தபோது காஞ்சி சங்கராச்சாரியாரின் ஆசிபெற்று காந்தி போராடினார் என திரித்து வரலாறு அமைத்துக் கொண்டனர்.

ஆனால் இன்றும் வைதிகப் பிராமணர்கள் காந்தி, நேரு மேல் கடும் கசப்பு கொண்டவர்களே. வெளியே அதை சொல்லிக் கொள்ள மாட்டார்கள். சமீபகாலமாக இந்துத்துவ அலை தோன்றிய பின் மெலிதாக காழ்ப்புகளைப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 09, 2021 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.